Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்

கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்

கடவுளுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்துக்கு அது கொடிய காலமாக இருந்தது. அப்போதுதான் அகசியா ராஜா கொல்லப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருடைய அம்மா என்ன செய்தாள் என்பதை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. அவள் அகசியாவின் மகன்களை, அதாவது தன் சொந்தப் பேரன்களை, கொலை செய்தாள்! ஏன் என்று உனக்குத் தெரியுமா?— a பேரன்கள் யாரும் ராஜாவாகக் கூடாது, தானே ஆட்சி செய்ய வேண்டுமென அவள் நினைத்தாள்.

ஆனால், அவளுடைய பேரன்களில் ஒருவனான யோவாஸ் கொல்லப்படவில்லை; இது அத்தாலியாளுக்கே தெரியவில்லை. அவன் எப்படிக் காப்பாற்றப்பட்டான் எனத் தெரிந்துகொள்ள நீ ஆசைப்படுகிறாயா?— யோவாசுக்கு யோசேபாள் என்ற அத்தை இருந்தாள்; அவள் அவனைக் கடவுளுடைய ஆலயத்தில் மறைத்து வைத்தாள். அவளுடைய கணவர் யோய்தா ஆலயத்தில் தலைமைக் குருவாக இருந்ததன் காரணமாக அவளால் அப்படிச் செய்ய முடிந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து, யோவாசைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

ஆறு வருடங்கள் யோவாஸ் ஆலயத்தில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தான். அங்கே யெகோவா தேவனையும் அவருடைய சட்டங்களையும் பற்றிய எல்லா விஷயங்களும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. அவனுக்கு ஏழு வயதானபோது, அவனை ராஜாவாக்க யோய்தா நடவடிக்கை எடுத்தார். யோய்தா உண்மையில் என்ன செய்தார், கெட்ட ராணியான அத்தாலியாளுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாயா?—

அந்தச் சமயத்தில் எருசலேமிலிருந்த ராஜாக்களுக்கு விசேஷக் காவலர்கள் இருந்தார்கள்; அவர்கள் எல்லாரையும் யோய்தா ரகசியமாக வரவழைத்தார். தானும் தன் மனைவியும் அகசியா ராஜாவின் மகனை எப்படி உயிரோடு காப்பாற்றினார்கள் என்பதை அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அவர்கள்முன் யோவாசைக் கொண்டு வந்து நிறுத்தினார்; அந்தச் சிறுவனே ராஜாவாவதற்கு உரிமையுள்ளவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால் அவர்கள் ஒரு திட்டம் போட்டார்கள்.

யோய்தா எல்லா மக்கள் முன்பாகவும் யோவாசை அழைத்து வந்து, அவன் தலையில் கிரீடம் வைத்து ராஜாவாக்கினார். அந்தச் சமயத்தில் மக்கள், “ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.” யோவாசுக்குப் பாதுகாப்பாய் அந்தக் காவலர்கள் சூழ்ந்து நின்றார்கள். அந்தச் சந்தோஷ ஆரவாரத்தையெல்லாம் அத்தாலியாள் கேட்டபோது அங்கு ஓடிவந்து, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள். அப்போது, யோய்தாவின் கட்டளைப்படி அந்தக் காவலர்கள் அவளைக் கொன்று போட்டார்கள்.—2 இராஜாக்கள் 11:1-16.

யோவாஸ் தொடர்ந்து யோய்தாவின் பேச்சைக் கேட்டு, சரியானதைச் செய்தாரா?— யோய்தா உயிரோடு இருக்கும்வரை அப்படிச் செய்தார். அவருடைய அப்பா அகசியாவும், தாத்தா யோராமும் கடவுளுடைய ஆலயத்தை அசட்டை செய்திருந்தார்கள்; யோவாசோ அதைப் பழுதுபார்க்கும் பணிக்காக மக்கள் நன்கொடை அளிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், தலைமைக் குரு யோய்தா இறந்த பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.—2 இராஜாக்கள் 12:1-16.

யோய்தா இறந்தபோது யோவாசுக்குச் சுமார் 40 வயது. அவர் யெகோவாவுக்குச் சேவை செய்தவர்களுடன் தொடர்ந்து சகவாசம் வைத்துக்கொள்ளாமல், பொய்க் கடவுள்களை வணங்கியவர்களோடு நட்பு வைத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் யோய்தாவின் மகன் சகரியா ஆலயகுருவாகச் சேவை செய்து வந்தார். யோவாஸ் கெட்ட காரியங்கள் செய்து வந்ததைச் சகரியா கேள்விப்பட்டபோது என்ன செய்திருப்பாரென நீ நினைக்கிறாய்?—

சகரியா, யோவாசையும் மக்களையும் பார்த்து, ‘நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார்’ என்று சொன்னார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் யோவாசுக்கு பயங்கரக் கோபம் வந்தது; அதனால் அவர் சகரியாவைக் கல்லெறிந்து கொலை செய்வதற்குக் கட்டளையிட்டார். இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: யோவாஸ் கொலை செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டார்; இப்போதோ, சகரியா கொலை செய்யப்பட யோவாசே காரணமானார்!—2 நாளாகமம் 24:1-3, 15-22.

இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாமென நீ நினைக்கிறாய்?— மற்றவர்களிடம் வெறுப்போடும் கொடூரமாகவும் நடந்துகொண்ட அத்தாலியாளைப் போல் நாம் இருக்கவே கூடாது. இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்ததுபோல், நாம் யெகோவாவை வழிபடுகிறவர்களையும் எதிரிகளையும்கூட நேசிக்க வேண்டும். (மத்தேயு 5:44; யோவான் 13:34, 35) யோவாசைப் போல் நாமும் நல்லது செய்ய ஆரம்பித்திருந்தால் தொடர்ந்து நல்லதையே செய்ய வேண்டும்; யெகோவாவை நேசிக்கிறவர்களையும் அவருக்குச் சேவை செய்ய நம்மை ஊக்கப்படுத்துகிறவர்களையுமே எப்போதும் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும். (w09 4/1)

a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.