Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா?

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா?

வாசகரின் கேள்வி

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா?

நாம் எப்போது சாவோம் என்பதை விதி தீர்மானிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். கடவுள்தான் நம் மரண நாளைக் குறிக்கிறார் என்று இன்னும் சிலர் நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள், ‘வாழ்க்கையில் என்னென்ன நடக்க வேண்டுமோ அதெல்லாம் நடந்தே தீரும், எதுவும் நம் கையில் இல்லை’ என்கிறார்கள். நீங்களும் அவர்களைப் போலவே நினைக்கிறீர்களா?

அப்படியென்றால், இந்தக் கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நம் தலையெழுத்தை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாதென்றால், நடக்க வேண்டியதைக் கடவுளோ விதியோ ஏற்கெனவே முன்தீர்மானித்திருந்தால், கடவுளிடம் பிரார்த்தனை செய்வதில் என்ன பிரயோஜனம்? எல்லாமே விதிப்படிதான் நடக்குமென்றால் நாம் ஏன் நம்முடைய பாதுகாப்புக்கென்று பல காரியங்களைச் செய்ய வேண்டும்? உதாரணத்திற்கு, காரில் போகும்போது ஏன் சீட்பெல்ட் அணிந்துகொள்ள வேண்டும்? வாகனம் ஓட்டும்போது ஏன் குடிக்காமல் இருக்க வேண்டும்?’

அப்படிப்பட்ட அலட்சியப் போக்கை பைபிள் எவ்விதத்திலும் ஆதரிப்பதில்லை. எல்லாம் விதி விட்ட வழியென விட்டுவிடுவதற்குப் பதிலாகப் பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டுமென இஸ்ரவேலருக்கு பைபிள் கட்டளையிட்டது. உதாரணத்திற்கு, அவர்களுடைய வீட்டின் மொட்டை மாடிகளுக்குக் கைப்பிடிச் சுவர்களைக் கட்ட வேண்டுமெனக் கட்டளையிட்டது. யாரும் மாடியிலிருந்து தவறி விழுந்துவிடக் கூடாது என்பதே அதன் நோக்கம். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: ஒருவர் மாடியிலிருந்து விழுந்து சாக வேண்டுமெனக் கடவுள் முன்தீர்மானித்திருந்தால் ஏன் அப்படிப்பட்ட ஒரு கட்டளையைக் கொடுக்க வேண்டும்?—உபாகமம் 22:8.

இயற்கைப் பேரழிவுகளிலோ கைமீறிய விபரீத சம்பவங்களிலோ உயிரிழப்பவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் இன்ன நாளில் சாக வேண்டுமென ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை; “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன” என்று பைபிள் எழுத்தாளர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா குறிப்பிட்டார். (பிரசங்கி 9:11, NW) ஆகவே, விபரீதங்கள் எவ்வளவுதான் விநோதமாக இருந்தாலும், எவ்வளவுதான் அதிர்ச்சி அளித்தாலும், அவை முன்தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால், “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு” என்று சாலொமோன் முன்பு குறிப்பிட்டதால், அவர் முன்னுக்குப்பின் முரணாகச் சொல்கிறாரெனச் சிலர் நினைக்கிறார்கள். (பிரசங்கி 3:1, 2) சாலொமோன் உண்மையிலேயே விதியை ஆதரித்துத்தான் இதைக் குறிப்பிட்டாரா? அவருடைய வார்த்தைகளைச் சற்று கூர்ந்து ஆராயலாம்.

பிறப்பும் இறப்பும் முன்தீர்மானிக்கப்படுவதாகச் சாலொமோன் குறிப்பிடவில்லை. மாறாக, வாழ்க்கையில் நடக்கிற மற்ற காரியங்களைப் போலவே பிறப்பும் இறப்பும் முடிவில்லாமல் நடந்துகொண்டிருப்பதாகவே குறிப்பிட்டார். வாழ்க்கையில் சுகதுக்கங்கள் ஏற்படுவது சகஜம்தான். “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு” என்று சாலொமோன் சொன்னார். திரும்பத் திரும்ப நடக்கிற இப்படிப்பட்ட செயல்களும் எதிர்பாராத விபரீதங்களும் வாழ்க்கையில் சகஜமென அவர் காட்டினார்; “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும்” இது பொருந்துமெனக் காட்டினார். (பிரசங்கி 3:1-8; 9:11, 12) ஆக, அவர் என்ன சொல்ல வந்தார்? நம் படைப்பாளரையே நாம் அலட்சியம் செய்யுமளவுக்கு அன்றாட அலுவல்களில் மூழ்கிவிடக் கூடாதென்றுதான் சொல்ல வந்தார்.—பிரசங்கி 12:1, 13.

பிறப்பையும் இறப்பையும் நம் படைப்பாளரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமென்றாலும் அவற்றை அவர் முன்தீர்மானிப்பதில்லை. என்றென்றும் வாழும் வாய்ப்பை நம் எல்லாருக்கும் அவர் அளிப்பதாக பைபிள் கற்பிக்கிறது. அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி கடவுள் நம்மை வற்புறுத்துவதில்லை. மாறாக, “விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளட்டும்” என்று தம்முடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.—வெளிப்படுத்துதல் 22:17.

ஆம், ‘வாழ்வளிக்கும் தண்ணீரை வாங்கிக்கொள்ள’ நாம் விரும்ப வேண்டும். அப்படியென்றால், நம் எதிர்காலத்தை விதி தீர்மானிப்பதில்லை. நம்முடைய தீர்மானங்களும் மனப்பான்மைகளும் நடவடிக்கைகளும்தான் உண்மையில் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. (w09 4/1)