Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவதூதர்கள்—‘மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள்’

தேவதூதர்கள்—‘மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள்’

தேவதூதர்கள்—‘மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள்’

“அவர்கள் அனைவரும் தொண்டு செய்கிற தூதர்கள்தானே? மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்தானே?”—எபி. 1:14.

1. மத்தேயு 18:10, எபிரெயர் 1:14 ஆகிய வசனங்கள் நமக்கு என்ன ஆறுதலை அளிக்கின்றன?

 இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்களை யாரும் இடற வைக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு எச்சரித்தார்: “இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட இழிவாகக் கருதாதபடி கவனமாயிருங்கள்; நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுடைய தேவதூதர்கள் பரலோகத்தில் என் தகப்பனுடைய முகத்திற்கு முன்பாக எப்போதும் இருக்கிறார்கள்.” (மத். 18:10) நீதியான தேவதூதர்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் அனைவரும் தொண்டு செய்கிற தூதர்கள்தானே? மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்தானே?” (எபி. 1:14) இந்த வார்த்தைகள் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன; ஏனென்றால், மனிதர்களுக்கு உதவுவதற்காக கடவுள் தமது பரலோகச் சிருஷ்டிகளைப் பயன்படுத்துகிறார் என்று காட்டுகின்றன. தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அவர்கள் நமக்கு எப்படி உதவுகிறார்கள்? அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

2, 3. கடவுளுடைய பரலோகக் குமாரர்கள் செய்யும் சில பணிகள் என்ன?

2 பரலோகத்தில் உண்மையுள்ள தேவதூதர்கள் கோடானுகோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘மகா பலம் படைத்தவர்களாகவும் கடவுளுடைய வசனத்தின்படி செய்கிறவர்களாகவும்’ இருக்கிறார்கள். (சங். 103:20, NW; வெளிப்படுத்துதல் 5:11-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய பரலோகக் குமாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சுபாவமும், தெய்வீகக் குணங்களும், சுயமாகத் தீர்மானங்களை எடுப்பதற்கான சுதந்திரமும் இருக்கின்றன. அவர்கள் மிக அருமையாக ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறார்கள், கடவுளுடைய ஏற்பாட்டில் உயர்ந்த ஸ்தானங்களை வகிக்கிறார்கள். அவர்களில் தலைமைத் தூதராக இருப்பவர் மிகாவேல்; இது இயேசுவின் பரலோகப் பெயர். (தானி. 10:13; யூ. 9) ‘படைப்புகளிலேயே முதல் படைப்பான’ இவர் ‘வார்த்தையாக,’ அதாவது கடவுளுடைய சார்பில் பேசுபவராக, இருக்கிறார்; எல்லாவற்றையும் படைக்க இவரையே யெகோவா பயன்படுத்தினார்.—கொலோ. 1:15-17; யோவா. 1:1-3.

3 தலைமைத் தூதருக்குக்கீழ் சேவை செய்கிறவர்கள் சேராபீன்கள். இவர்கள் யெகோவாவின் பரிசுத்தத்தை அறிவிக்கிறார்கள், அவருடைய மக்கள் ஆன்மீக ரீதியில் சுத்தமாக இருக்க உதவுகிறார்கள். கேருபீன்கள், இவர்கள் அவருடைய பேரரசாட்சிக்கு ஆதரவு காட்டுகிறார்கள். (ஆதி. 3:24; ஏசா. 6:1-3, 6, 7) மற்ற தேவதூதர்கள், அதாவது தூதுவர்கள், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு பணிகளைச் செய்கிறார்கள்.—எபி. 12:22, 23.

4. கடவுள் பூமியை அஸ்திபாரப்படுத்தியபோது தேவதூதர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள், சுயமாகத் தீர்மானங்களை எடுப்பதற்கான சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்?

4 கடவுள் ‘பூமியை அஸ்திபாரப்படுத்தியபோது’ தேவதூதர்கள் எல்லாருமே மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள். விண்வெளியில் ஓர் இரத்தினமாக ஜொலித்துக்கொண்டிருந்த பூமியை மனிதர்களின் வீடாக மாற்றுவதில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் ஆசை ஆசையாகச் செய்தார்கள். (யோபு 38:4, 7) மனிதனை ‘தேவதூதர்களைவிடச் சற்றுச் சிறியவனாக’ யெகோவா படைத்தார், ஆனால் தம்முடைய ‘சாயலில்’ படைத்தார்; எனவே, படைப்பாளருடைய உன்னத குணங்களை மனிதர்களால் வெளிக்காட்ட முடியும். (எபி. 2:7; ஆதி. 1:26) ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய பிள்ளைகளும் சுயமாகத் தீர்மானங்களை எடுப்பதற்கான சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், யெகோவாவின் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அடங்கிய சர்வலோகக் குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருந்திருக்கலாம்; அதோடு, பூங்காவன பூமியில் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.

5, 6. பரலோகத்தில் என்ன கலகம் தலைதூக்கியது, அப்போது கடவுள் என்ன செய்தார்?

5 கடவுளுடைய குடும்பத்தில் கலகம் தலைதூக்கியதைப் பார்த்தபோது பரிசுத்த தேவதூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களில் ஒருவன் மட்டும் யெகோவாவைத் துதிப்பதில் திருப்தி அடையவில்லை; மாறாக, எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென்று விரும்பினான். இப்படி யெகோவாவின் ஆட்சியுரிமையை எதிர்த்து சவால்விட்டதாலும் அவருடைய பேரரசதிகாரத்திற்குப் போட்டியாக நின்றதாலும் அவன் சாத்தானாக (அதாவது, “எதிர்ப்பவனாக”) மாறினான். பைபிள் பதிவின்படி சாத்தான்தான் முதன்முதலில் பொய் சொல்லி, அன்பான படைப்பாளருக்கு எதிராகத் தன்னோடு சேர்ந்து கலகம் செய்ய ஆதாமையும் ஏவாளையும் தூண்டினான்.—ஆதி. 3:4, 5; யோவா. 8:44.

6 யெகோவா உடனடியாகச் சாத்தானுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கி, பைபிளின் இந்த முதல் தீர்க்கதரிசனத்தைச் சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதி. 3:15) சாத்தானுக்கும் தம்முடைய “ஸ்திரீக்கும்” இடையே விரோதம் தொடரும் என்று கடவுள் சொன்னார். ஆம், உண்மையுள்ள தேவதூதர்கள் அடங்கிய பரலோக அமைப்பை யெகோவா ஒரு ஸ்திரீயாக, தம் அன்பு மனைவியாக, பாவித்தார். அந்தத் தீர்க்கதரிசனம், படிப்படியாக வெளிப்படுத்தப்படவிருந்த ‘பரிசுத்த ரகசியமாக’ இருந்தபோதிலும் நம்பிக்கைக்குப் பலமான ஆதாரமாக இருந்தது. எல்லாக் கலகக்காரர்களையும் தம்முடைய பரலோக அமைப்பில் உள்ள ஒருவர் ஒழித்துக்கட்ட வேண்டுமென கடவுள் நோக்கம் கொண்டிருந்தார். அவர் மூலமாக ‘பரலோகத்தில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும்’ கூட்டிச் சேர்க்கவும் நோக்கம் கொண்டிருந்தார்.—எபே. 1:8-10.

7. நோவாவின் காலத்தில் சில தூதர்கள் என்ன செய்தார்கள், அதனால் என்ன விளைவைச் சந்தித்தார்கள்?

7 நோவாவின் காலத்தில் அநேக தேவதூதர்கள் ‘தங்களுக்கு ஏற்ற குடியிருப்பை விட்டுவிட்டு’ தங்கள் சுயநல இச்சைகளைத் திருப்தி செய்வதற்காக மனித உடலில் பூமிக்கு வந்தார்கள். (யூ. 6; ஆதி. 6:1-4) இந்தக் கலகக்காரர்களை யெகோவா காரிருளில் தள்ளினார்; இவ்வாறு அவர்கள் சாத்தானோடு சேர்ந்து ‘பொல்லாத தூதர் கூட்டமாகவும்’ கடவுளுடைய ஊழியர்களின் கொடூர எதிரிகளாகவும் ஆனார்கள்.—எபே. 6:11-13; 2 பே. 2:4.

தேவதூதர்கள் நமக்கு எப்படி உதவுகிறார்கள்?

8, 9. மனிதர்களுக்கு உதவ யெகோவா எப்படித் தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார்?

8 ஆபிரகாம், யாக்கோபு, மோசே, யோசுவா, ஏசாயா, தானியேல், இயேசு, பேதுரு, யோவான், பவுல் போன்றவர்களுக்குத் தேவதூர்கள் பணிவிடை செய்தார்கள். நீதியுள்ள தேவதூதர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றினார்கள், தீர்க்கதரிசனங்களையும் மோசேயின் திருச்சட்டம் உட்பட மற்ற சட்டதிட்டங்களையும் தெரிவித்தார்கள். (2 இரா. 19:35; தானி. 10:5, 11, 14; அப். 7:53; வெளி. 1:1) இன்று கடவுளுடைய புத்தகம் நமக்கு முழுமையாகக் கிடைப்பதால், தேவதூதர்கள் தெய்வீக செய்திகளைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. (2 தீ. 3:16, 17) ஆனாலும், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதிலும் அவருடைய ஊழியர்களை ஆதரிப்பதிலும் தேவதூதர்கள் திரைக்குப் பின்னாலிருந்து மிக மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

9 “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” என்று பைபிள் உறுதியளிக்கிறது. (சங். 34:7; 91:11) மனிதர்களுடைய உத்தமத்தைப் பற்றி சாத்தான் எழுப்பிய விவாதத்தின் காரணமாக அவன் நம்மை பல விதங்களில் சோதிக்க யெகோவா அனுமதிக்கிறார். (லூக். 21:16-19) என்றாலும், நம்முடைய உத்தமத்தை நிரூபிப்பதற்குப் போதுமானளவு மட்டுமே நம்மைச் சோதிக்க அனுமதிக்கிறார். (1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாகச் செயல்பட தேவதூதர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, தானியேல், பேதுரு ஆகியோரைக் காப்பாற்றினார்கள்; ஆனால், ஸ்தேவானும் யாக்கோபும் எதிரிகளின் கையில் மடிவதை அவர்கள் தடுக்கவில்லை. (தானி. 3:17, 18, 28; 6:22; அப். 7:59, 60; 12:1-3, 7, 11) ஒவ்வொருவருடைய சூழ்நிலைகளும் பிரச்சினைகளும் வேறுபட்டிருந்தன. அதுபோலவே, நாசி சித்திரவதை முகாமில் சில சகோதரர்கள் கொலை செய்யப்பட்டார்கள், எனினும் பெரும்பாலானவர்களை யெகோவா காப்பாற்றினார்.

10. தேவதூதர்களின் உதவியைப் பெறுவதோடு வேறு யாருடைய உதவியையும் நாம் பெறலாம்?

10 பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காவல் தூதர் இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” என்ற நம்பிக்கையோடு நாம் ஜெபிக்கிறோம். (1 யோ. 5:14) நமக்கு உதவ யெகோவாவால் ஒரு தேவதூதரை அனுப்ப முடியும் என்பது உண்மைதான், என்றாலும், அவர் நமக்கு வேறு விதத்திலும் உதவலாம். நமக்கு உதவியையும் ஆறுதலையும் அளிக்க சக கிறிஸ்தவர்களைத் தூண்டலாம். நம் ‘உடலில் ஒரு முள் குத்திக்கொண்டிருந்தாலும்,’ அது நம்மை அடித்துக்கொண்டே இருக்க ‘சாத்தான் அனுப்பிய கையாளைப் போல்’ இருந்தாலும், அதைத் தாங்கிக்கொள்ள அவர் நமக்கு ஞானத்தையும் மனோபலத்தையும் தரலாம்.—2 கொ. 12:7-10; 1 தெ. 5:14.

இயேசுவைப் பின்பற்றுங்கள்

11. இயேசுவுக்கு உதவ தேவதூதர்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டார்கள், அவர் கடவுளுக்குக் கடைசிவரை உண்மையாக இருந்ததன் மூலம் எதை நிரூபித்தார்?

11 இயேசுவின் விஷயத்தில் யெகோவா எப்படித் தேவதூதர்களைப் பயன்படுத்தினார் என்பதைச் சிந்திப்போம். இயேசு பிறந்ததையும் உயிர்த்தெழுப்பப்பட்டதையும் தேவதூதர்கள் அறிவித்தார்கள்; அவர் பூமியில் இருந்தபோது அவருக்குப் பணிவிடை செய்தார்கள். அவர் கைது செய்யப்பட்டதையும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதையும் அவர்களால் தடுத்திருக்க முடியும், ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஒரு தேவதூதர் அவரைப் பலப்படுத்துவதற்கு அனுப்பப்பட்டார். (மத். 28:5, 6; லூக். 2:8-11; 22:43) யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக, இயேசு தம்முடைய உயிரைப் பலியாகக் கொடுத்தார்; அதன் மூலம், ஒரு பரிபூரண மனிதனால் சோதனையின் உச்சத்திலும் கடவுளுக்கு உத்தமமாய் இருக்க முடியும் என்பதை நிரூபித்தார். ஆகவே, யெகோவா இயேசுவுக்குச் சாவாமையுள்ள உயிரைக் கொடுத்து பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பினார். அவருக்கு ‘எல்லா அதிகாரத்தையும் கொடுத்து,’ தேவதூதர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்தார். (மத். 28:18; அப். 2:32; 1 பே. 3:22) இந்த விதத்தில் இயேசு, கடவுளது ‘ஸ்திரீயினுடைய’ ‘சந்ததியின்’ முக்கிய பாகமாக இருப்பதை நிரூபித்தார்.—ஆதி. 3:15; கலா. 3:16.

12. இயேசு சமநிலையோடு நடந்துகொண்டதை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

12 தேவதூதர்கள் உதவுவார்கள் என்று நினைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக எதையாவது செய்வதன் மூலம் யெகோவாவைச் சோதிப்பது தவறென இயேசு அறிந்திருந்தார். (மத்தேயு 4:5-7-ஐ வாசியுங்கள்.) நாம் இயேசுவின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்? நாம் கண்மூடித்தனமாக எதையும் செய்யக்கூடாது; அதே சமயத்தில், துன்புறுத்தலைத் தைரியமாகச் சந்திக்க வேண்டும், இவ்வாறு ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாக’ நடந்துகொள்ள வேண்டும்.—தீத். 2:12.

உண்மையுள்ள தேவதூதர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்பவை

13. இரண்டு பேதுரு 2:9-11 குறிப்பிடும் நீதியுள்ள தேவதூதர்களின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 அப்போஸ்தலன் பேதுரு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் ‘பழித்துப் பேசியோரை’ கண்டித்த சமயத்தில் நீதியுள்ள தேவதூதர்களின் நல்ல உதாரணத்தைப் பற்றி குறிப்பிட்டார். அவர்கள் மகா சக்தி படைத்தவர்களாக இருக்கிறபோதிலும் “யெகோவாமீது வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக” யாரையும் நியாயந்தீர்க்காமல் மனத்தாழ்மையோடு நடந்துகொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார். (2 பேதுரு 2:9-11-ஐ வாசியுங்கள்.) நாமும் யாரையும் நியாயந்தீர்க்காமல், சபையிலுள்ள கண்காணிகளுக்கு மரியாதை கொடுத்து, மாபெரும் நீதிபதியான யெகோவாவின் கையில் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும்.—ரோ. 12:18, 19; எபி. 13:17.

14. மனத்தாழ்மையோடு சேவை செய்வதற்கு தேவதூதர்கள் நமக்கு எப்படி உதாரணங்களாகத் திகழ்கிறார்கள்?

14 மனத்தாழ்மையோடு சேவை செய்வதற்கு யெகோவாவின் தூதர்கள் நமக்கு அருமையான உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். சில தேவதூதர்கள் தங்களுடைய பெயரை மனிதர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. (ஆதி. 32:29; நியா. 13:17, 18) பரலோகத்தில் கோடானுகோடி தேவதூதர்கள் இருந்தாலும் மிகாவேல், காபிரியேல் ஆகிய இருவருடைய பெயர்களை மட்டுமே பைபிள் குறிப்பிடுகிறது. தேவதூதர்களுக்கு மட்டுக்குமீறிய கனத்தைச் செலுத்தாதபடி இது நம்மைக் காக்கிறது. (லூக். 1:26; வெளி. 12:7) ஒரு தேவதூதரை வணங்குவதற்காக அப்போஸ்தலன் யோவான் அவருடைய காலில் விழுந்தபோது அந்தத் தூதர்: “இப்படிச் செய்யாதபடி கவனமாக இரு! உன்னைப் போலவும் . . . உன் சகோதரர்களைப் போலவும் . . . நானும் ஓர் அடிமைதான்” என்று சொன்னார். (வெளி. 22:8, 9) நாம் கடவுளை மட்டுமே வணங்க வேண்டும்; அவரிடம் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.மத்தேயு 4:8-10-ஐ வாசியுங்கள்.

15. பொறுமையாய் இருப்பதில் தேவதூதர்கள் எப்படி நமக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள்?

15 தேவதூதர்கள் பொறுமைக்கும் இலக்கணமாகத் திகழ்கிறார்கள். கடவுளுடைய பரிசுத்த ரகசியங்களைத் தெரிந்துகொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தாலும் அவர்களுக்கு அவை அனைத்தும் தெரியப்படுத்தப்படுவதில்லை. “அந்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதற்குத் தேவதூதர்களும் ஆவலோடு இருக்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 1:12) அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? ‘பற்பல விதங்களில் வெளிப்படுகிற கடவுளுடைய ஞானம் . . . சபையின் மூலம் தெரியப்படுத்தப்படும்’ உரிய காலத்திற்காக அவர்கள் பொறுமையோடு காத்திருக்கிறார்கள்.—எபே. 3:10, 11.

16. நம்முடைய நடத்தை தேவதூதர்களை எப்படிப் பாதிக்கலாம்?

16 சோதனைக்கு ஆளாகும் கிறிஸ்தவர்கள் ‘தேவதூதர்களுக்கு . . . காட்சிப் பொருளாக’ இருக்கிறார்கள். (1 கொ. 4:9) நாம் உண்மைத்தன்மையோடு நடந்துகொள்வதைப் பார்த்து அவர்கள் அளவில்லா திருப்தியடைகிறார்கள்; ஒரேவொரு பாவி மனந்திரும்பினால்கூட மிகுந்த சந்தோஷப்படுகிறார்கள். (லூக். 15:10) கிறிஸ்தவ பெண்களின் பயபக்தியான நடத்தையைத் தேவதூதர்கள் கவனிக்கிறார்கள். “தேவதூதர்களை முன்னிட்டும், பெண் தன்னுடைய தலையில் கீழ்ப்படிதலின் அடையாளமாகிய முக்காட்டைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (1 கொ. 11:3, 10) ஆம், கிறிஸ்தவ பெண்களும் பூமியிலுள்ள கடவுளுடைய மற்ற ஊழியர்களும் தேவராஜ்ய ஒழுங்கிற்கும் தலைமைத்துவத்திற்கும் மதிப்புக் கொடுத்து நடப்பதைப் பார்க்கும்போது தேவதூதர்கள் அகமகிழ்கிறார்கள். இப்படிப்பட்ட கீழ்ப்படிதல், கடவுளுடைய பரலோகக் குமாரர்களுக்குச் சிறந்த நினைப்பூட்டுதலாக இருக்கிறது.

தேவதூதர்கள் பிரசங்க வேலையை முழுமூச்சாக ஆதரிக்கிறார்கள்

17, 18. தேவதூதர்கள் நம்முடைய பிரசங்க வேலையை ஆதரிக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?

17 ‘நம் எஜமானருடைய நாளில்’ நடக்கிற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சிலவற்றில் தேவதூதர்களுக்கும் பங்கு இருக்கிறது. உதாரணத்திற்கு, 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட சம்பவத்திலும், “மிகாவேலும் அவருடைய தூதர்களும்” சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிய சம்பவத்திலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது. (வெளி. 1:10; 11:15; 12:5-9) ஒரு “தேவதூதர் நடுவானத்தில் பறப்பதை” அப்போஸ்தலன் யோவான் பார்த்தார்; அந்தத் தேவதூதர் ‘பூமியில் குடியிருக்கிற எல்லாருக்கும் . . . நித்திய நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருந்தார்.’ அதாவது, “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு அளிக்கும் வேளை வந்துவிட்டது; அதனால், வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்” என்று அறிவித்துக்கொண்டிருந்தார். (வெளி. 14:6, 7) ஆகவே, பிசாசின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் வேலைக்கு தேவதூதர்களின் ஆதரவு இருக்கும் என்ற உறுதி யெகோவாவின் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது.—வெளி. 12:13, 17.

18 எத்தியோப்பிய மந்திரியைச் சந்திக்கும்படி ஒரு தேவதூதன் பிலிப்புவிடம் நேரடியாகச் சொன்னதுபோல் இன்று தேவதூதர்கள் ஆர்வமுள்ளவர்களைப் போய் சந்திக்கும்படி நம்மிடம் நேரடியாகச் சொல்வதில்லை. (அப். 8:26-29) என்றாலும், தேவதூதர்கள் திரைக்குப் பின்னாலிருந்து நம்முடைய ராஜ்ய பிரசங்க வேலைக்கு ஆதரவு காட்டுவதையும் ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களிடம்’ நம்மை வழிநடத்துவதையும் நவீன நாளைய அனுபவங்கள் பல காட்டுகின்றன. * (அப். 13:48) ஆகவே, நாம் ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம்! அப்போதுதான் “பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க” விரும்புகிறவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நம் பங்கைச் செய்ய முடியும்.—யோவா. 4:23, 24.

19, 20. ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்’ நடக்கப்போகும் சம்பவங்களில் தேவதூதர்களுக்கு என்ன பங்கு இருக்கும்?

19 நம் நாளில், அதாவது ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்’ தேவதூதர்கள் ‘நீதிமான்களின் மத்தியிலிருந்து பொல்லாதவர்களைத் தனியே பிரிப்பார்கள்’ என்று இயேசு சொன்னார். (மத். 13:37-43, 49) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை முடிவாகக் கூட்டிச் சேர்ப்பதிலும் முத்திரையிடுவதிலும் தேவதூதர்கள் பங்கு வகிக்கிறார்கள். (மத்தேயு 24:31-ஐ வாசியுங்கள்; வெளி. 7:1-3) அதுமட்டுமல்ல, இயேசு தேவதூதர்களோடு சேர்ந்துதான் ‘செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பார்.’—மத். 25:31-33, 46.

20 ‘நம் எஜமானராகிய இயேசு . . . தமது வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படுகையில் . . . கடவுளை அறியாதவர்களும் நம் எஜமானராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களும்’ அழிக்கப்படுவார்கள். (2 தெ. 1:6-10) இதே சம்பவத்தை யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தபோது, இயேசுவும் அவருடைய பரலோக வீரர்களாகிய தேவதூதர்களும் நீதியாய்ப் போர்புரிவதற்காக வெள்ளைக் குதிரைகள்மீது சவாரி செய்வதாக விவரித்தார்.—வெளி. 19:11-14.

21. “அதலபாதாளத்தின் சாவியையும் மிகப் பெரிய சங்கிலியையும் தன் கையில் பிடித்துக்கொண்டு” இருக்கிற தேவதூதர் சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார்?

21 “ஒரு தேவதூதர் அதலபாதாளத்தின் சாவியையும் மிகப் பெரிய சங்கிலியையும் தன் கையில் பிடித்துக்கொண்டு பரலோகத்திலிருந்து இறங்கி வருவதை” யோவான் பார்த்தார். அந்தத் தேவதூதர் தலைமைத் தூதரான மிகாவேல்தான். அவர் பிசாசையும் அவனுடைய தூதர்களையும் கட்டி அதலபாதாளத்தில் தள்ளிவிடுவார். கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் அவர்கள் கொஞ்சக் காலத்திற்கு விடுதலை செய்யப்படுவார்கள்; அப்போது, பரிபூரண மனிதர்கள் கடைசியாகப் பரீட்சிக்கப்படுவார்கள். அதன் பின்பு, சாத்தானும் மற்ற கலகக்காரர்கள் எல்லாரும் அழிக்கப்படுவார்கள். (வெளி. 20:1-3, 7-10; 1 யோ. 3:8) கடவுளுக்கு எதிரான எல்லாக் கலகமும் துடைத்தழிக்கப்படும்.

22. வெகு சீக்கிரத்தில் நடக்கப்போகும் சம்பவங்களில் தேவதூதர்களுக்கு என்ன பங்கு இருக்கும், அவர்களுடைய பங்கைக் குறித்து நாம் எவ்வாறு உணர வேண்டும்?

22 நமக்குச் சாத்தானுடைய பொல்லாத உலகத்திலிருந்து மகத்தான விடுதலை வெகு சீக்கிரத்தில் கிடைக்கப்போகிறது. யெகோவாவின் அரசதிகாரமே சரியானதென நிரூபிக்கப்படும்; பூமிக்கும் மனிதருக்குமான அவருடைய நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படும்; இந்தக் குறிப்பிடத்தக்க சம்பவங்களில் தேவதூதர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நீதியுள்ள தேவதூதர்கள் ‘தொண்டு செய்கிற தூதர்களாகவும், மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்களாகவும்’ இருப்பது முற்றிலும் உண்மை. ஆகவே, கடவுளுடைய சித்தத்தைச் செய்யவும் முடிவில்லா வாழ்வைப் பெறவும் நமக்கு உதவ தேவதூதர்களைப் பயன்படுத்துவதற்கு நாம் யெகோவா தேவனுக்கு நன்றி சொல்வோமாக.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 18 யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 549-51-ஐப் பாருங்கள்.

என்ன பதில் சொல்வீர்கள்?

• கடவுளுடைய பரலோகக் குமாரர்கள் எப்படி வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்?

• நோவாவின் நாட்களில் சில தேவதூதர்கள் என்ன செய்தார்கள்?

• நமக்கு உதவிசெய்ய கடவுள் எப்படித் தேவதூதர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்?

• நீதியுள்ள தேவதூதர்கள் நம் நாளில் என்ன பங்கு வகிக்கிறார்கள்?

[கேள்விகள்]

[பக்கம் 21-ன் படம்]

தேவதூதர்கள் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் மகிழ்கிறார்கள்

[பக்கம் 23-ன் படம்]

தானியேலின் உதாரணம் காட்டுவதுபோல், கடவுளுடைய சித்தத்தின்படி செயல்பட தேவதூதர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்

[பக்கம் 24-ன் படங்கள்]

தேவதூதர்கள் பிரசங்க வேலையை ஆதரிக்கிறார்கள், ஆகவே தைரியமாயிருங்கள்!

[படத்திற்கான பாராட்டு]

கோளம்: NASA photo