Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் ‘கிறிஸ்துவை’ பின்பற்ற வேண்டும்?

ஏன் ‘கிறிஸ்துவை’ பின்பற்ற வேண்டும்?

ஏன் ‘கிறிஸ்துவை’ பின்பற்ற வேண்டும்?

“எவராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே அர்ப்பணம் செய்து, . . . நாள்தோறும் என் பின்னால் வரவேண்டும்.”—லூக். 9:23.

1, 2. நாம் ‘கிறிஸ்துவை’ பின்பற்றுவதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

 யெகோவா இந்தப் பூமியில் திரண்டிருக்கிற தம் வணக்கத்தார் மத்தியில் புதியவர்களாகவும் இளையவர்களாகவும் இருக்கிற உங்களைப் பார்க்கும்போது எவ்வளவாய் மனமகிழ்கிறார்! நீங்கள் தொடர்ந்து பைபிளைப் படித்து, கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சென்று, கடவுளுடைய வார்த்தையிலுள்ள உயிர்காக்கும் சத்தியத்தைக் கற்றுக்கொள்கையில், இயேசு விடுத்த இந்த அழைப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்: “எவராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே அர்ப்பணம் செய்து, தன் கழுமரத்தைச் சுமந்துகொண்டு நாள்தோறும் என் பின்னால் வரவேண்டும்.” (லூக். 9:23) நீங்கள் உங்களையே அர்ப்பணம் செய்து அவரைப் பின்பற்ற விரும்புவீர்களென இயேசு சொன்னார். ஆகவே, நாம் ஏன் ‘கிறிஸ்துவை’ பின்பற்ற வேண்டுமெனத் தெரிந்துகொள்வது முக்கியம்.—மத். 16:13-16.

2 நாம் ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிறவர்களாக இருந்தால் என்ன? “அதை இன்னும் முழுமையாய்ச் செய்யும்படி” அறிவுறுத்தப்படுகிறோம். (1 தெ. 4:1, 2) நாம் உண்மை வணக்கத்தைச் சமீபத்தில் ஏற்றிருந்தாலும்சரி பல வருடங்களுக்கு முன்பே ஏற்றிருந்தாலும்சரி, கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டியதற்கான காரணங்களைச் சிந்திப்பது பவுலின் அறிவுரைக்கேற்ப நடக்க நமக்கு உதவும்; அதாவது, நம்முடைய தினசரி வாழ்க்கையில் இன்னுமதிகமாகக் கிறிஸ்துவைப் பின்பற்ற நமக்கு உதவும். ஆகவே, நாம் ஏன் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களைக் கவனிக்கலாம்.

யெகோவாவிடம் இன்னும் நெருங்கிவர

3. என்ன இரண்டு வழிகளில் நாம் யெகோவாவை அறிந்துகொள்ளலாம்?

3 அப்போஸ்தலன் பவுல் ‘அரியோபாகுவின் நடுவே எழுந்துநின்று’ அத்தேனே நகர மக்களிடம் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்: “[கடவுள்] குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு [அதாவது, மனிதர்களுக்கு] வரையறுத்திருக்கிறார். உண்மையில் அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும், அவரை நாம் நாடித்தேட வேண்டும் என்பதற்காக, தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.” (அப். 17:22, 26, 27) ஆகவே, நாம் கடவுளை நாடித்தேடி அவரை உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு, படைப்புகளைக் கவனிக்கையில் கடவுளுடைய குணங்களையும் திறமைகளையும் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியும். படைப்பாளருடைய கைவண்ணங்களைக் குறித்து நன்றியுணர்வோடு சிந்தித்துப் பார்க்கும்போது அவரைப் பற்றி எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். (ரோ. 1:20) யெகோவா தம்முடைய புத்தகமாகிய பைபிளிலும் தம்மைப் பற்றிய விவரங்களை அளித்திருக்கிறார். (2 தீ. 3:16, 17) ‘அவருடைய கிரியைகளையெல்லாம்’ நாம் அதிகமதிகமாகத் ‘தியானித்து, அவருடைய செயல்களை யோசிக்கும்போது’ நாம் அவரைப் பற்றி அதிகமதிகமாகத் தெரிந்துகொள்வோம்.சங். 77:12.

4. கிறிஸ்துவைப் பின்பற்றுவது யெகோவாவுடன் இன்னுமதிகமாகப் பரிச்சயமாவதற்கு நமக்கு எப்படி உதவும்?

4 நாம் யெகோவாவுடன் இன்னுமதிகமாகப் பரிச்சயமாவதற்குச் சிறந்த வழி, கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகும். “உலகம் உண்டாவதற்கு முன்பு” பரலோகத் தகப்பனின் அருகே இயேசுவுக்கு இருந்த மகிமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (யோவா. 17:5) அவர் “கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிறார். (வெளி. 3:14) “படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற அவர் தம்முடைய தகப்பனாகிய யெகோவாவுடன் கோடானுகோடி வருடங்களாக பரலோகத்தில் வாழ்ந்திருந்தார். பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசு தம் தகப்பனோடு வெறுமனே நேரத்தைப் போக்கவில்லை. அவர் சர்வவல்லமையுள்ள கடவுளின் நெருங்கிய நண்பராக, அவருடன் சேர்ந்து சந்தோஷமாக வேலை செய்து வந்தார்; கடவுளுக்கும் அவருக்கும் உள்ள பாசப்பிணைப்பு ஈடிணையற்றது. தகப்பன் செயல்படுகிற விதத்தையும் தகப்பனுடைய உணர்ச்சிகளையும் குணங்களையும் அவர் கவனித்தது மட்டுமல்லாமல், தகப்பனைப் பற்றி கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் மனதில் பதித்து அப்படியே பின்பற்றினார். இதனால், கீழ்ப்படிதலுள்ள மகனாகிய அவர் தம் தகப்பனைப் போலவே ஆனார்; அதனால்தான், “அவர் காணமுடியாத கடவுளுடைய சாயலாக” இருக்கிறாரென பைபிள் சொல்கிறது. (கொலோ. 1:15) ஆகவே, நாம் கிறிஸ்துவை நெருக்கமாகப் பின்பற்றுவதன் மூலம், யெகோவாவுடன் இன்னுமதிகமாகப் பரிச்சயமாகலாம்.

யெகோவாவை இன்னும் முழுமையாகப் பின்பற்ற

5. என்ன செய்வது யெகோவாவை இன்னும் முழுமையாகப் பின்பற்ற நமக்கு உதவும், ஏன்?

5 நாம் ‘கடவுளுடைய சாயலாகவும் அவரது ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டிருப்பதால்’ அவருடைய குணங்களை நம்மால் வெளிக்காட்ட முடியும். (ஆதி. 1:26) அதனால்தான், “அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (எபே. 5:1) கிறிஸ்துவைப் பின்பற்றுவது நம் பரலோகத் தகப்பனைப் பின்பற்ற நமக்கு உதவுகிறது. ஏனென்றால், பரலோகத் தகப்பனுடைய சிந்தையையும் உணர்ச்சிகளையும் குணாதிசயத்தையும் வேறு எவராலும் வெளிக்காட்ட முடியாத அளவுக்கு கிறிஸ்து வெளிக்காட்டினார்; தம் தகப்பனைப் பற்றி வேறு எவராலும் விரிக்க முடியாத அளவுக்கு விவரித்தார். இயேசு பூமியில் இருந்தபோது யெகோவாவின் பெயரை மட்டுமே அறிவிக்கவில்லை. அந்தப் பெயரைத் தாங்கிய நபர் எப்படிப்பட்டவர் என்பதையும் வெளிப்படுத்தினார். (மத்தேயு 11:27-ஐ வாசியுங்கள்.) அதைத் தம்முடைய சொல்லிலும் செயலிலும் போதனையிலும் வாழ்க்கையிலும் வெளிப்படுத்தினார்.

6. இயேசுவின் போதனைகள் யெகோவாவைப் பற்றி என்ன தெரிவிக்கின்றன?

6 கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதையும் தம் வணக்கத்தாரைக் குறித்து எப்படி உணருகிறார் என்பதையும் இயேசு தம் போதனைகளின் மூலம் எடுத்துக்காட்டினார். (மத். 22:36-40; லூக். 12:6, 7; 15:4-7) உதாரணத்துக்கு, பத்துக் கட்டளைகளில் ஒன்றை, அதாவது “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது” என்ற கட்டளையை, அவர் மேற்கோள் காட்டிய பிறகு, அச்செயலைச் செய்வதற்கு முன்னரே ஒரு நபரின் இருதயத்தில் சம்பவிப்பதைக் கடவுள் எப்படிக் கருதுகிறாரென விளக்கினார்; “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்” என்றார். (யாத். 20:14, NW; மத். 5:27, 28) அவ்வாறே, “சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்க வேண்டும்” என்று பரிசேயர்கள் திருச்சட்டத்தைத் திரித்துச் சொன்னதை அவர் குறிப்பிட்ட பிறகு, யெகோவாவின் எண்ணத்தை இவ்வாறு தெரியப்படுத்தினார்: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.” (மத். 5:43, 44; யாத். 23:4; லேவி. 19:18) கடவுள் எப்படி யோசிக்கிறார், எப்படி உணருகிறார், நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் புரிந்துகொண்டால் அவரை இன்னும் முழுமையாகப் பின்பற்ற முடியும்.

7, 8. இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

7 இயேசு நடந்துகொண்ட விதமும் அவருடைய தகப்பன் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியது. கஷ்டத்தில் இருந்தவர்கள்மீது அவர் கருணை காட்டியதையும், துன்பப்பட்டவர்கள்மீது அனுதாபப்பட்டதையும், சிறு பிள்ளைகளைக் கண்டித்த தம் சீடர்கள்மீது கோபங்கொண்டதையும் பற்றி சுவிசேஷப் பதிவுகளில் நாம் வாசிக்கும்போது, அவருடைய தகப்பனும் அதே உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதைக் கற்பனை செய்ய முடிகிறதுதானே? (மாற். 1:40-42; 10:13, 14; யோவா. 11:32-35) இயேசுவின் செயல்கள் எவ்வாறு கடவுளுடைய தலைசிறந்த குணங்களைப் பறைசாற்றுகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள். கிறிஸ்து செய்த அற்புதங்கள் அவருக்கு அபார சக்தி இருந்ததைக் காட்டுகின்றன, அல்லவா? இருந்தாலும், அவர் அந்தச் சக்தியைச் சொந்த லாபத்துக்காகவோ மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதற்காகவோ ஒருபோதும் பயன்படுத்தவில்லை. (லூக். 4:1-4) பேராசைபிடித்த வியாபாரிகளை ஆலயத்திலிருந்து அவர் விரட்டியடித்தது அவரது நீதிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு! (மாற். 11:15-17; யோவா. 2:13-16) அவரது போதனைகளும், மக்களுடைய இருதயங்களை எட்டுவதற்காக அவர் பயன்படுத்திய இனிய வார்த்தைகளும் அவர் ஞானத்தில் ‘சாலொமோனிலும் பெரியவராக’ இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. (மத். 12:42) அதோடு, மனிதர்களுக்காக உயிரையே கொடுத்த இயேசுவின் “அன்பைவிட மேலான அன்பு வேறு இல்லை” என்று பைபிள் அவருடைய அன்பை அருமையாக வர்ணிக்கிறது!—யோவா. 15:13.

8 இயேசு தம் சொல்லிலும் செயலிலும் யெகோவாவை அப்படியே பிரதிபலித்ததால், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என்று சொன்னார். (யோவான் 14:9-11-ஐ வாசியுங்கள்.) ஆகவே, இயேசுவைப் பின்பற்றுவது, யெகோவாவைப் பின்பற்றுவதற்குச் சமம்.

இயேசு—யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்

9. இயேசு எப்போது கடவுளால் நியமிக்கப்பட்டு மேசியாவாக ஆனார், எப்படி?

9 பொ.ச. 29 இலையுதிர் காலத்தில், 30 வயது நிரம்பிய இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்காக யோவான் ஸ்நானகரிடம் சென்றபோது என்ன நடந்ததெனக் கவனியுங்கள். “இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது; கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மீது இறங்குவதை யோவான் கண்டார்.” அப்போது இயேசு, கிறிஸ்துவாக அல்லது மேசியாவாக ஆனார். அச்சமயத்தில் யெகோவா, “இவர் என் அன்பு மகன், நான் இவரை அங்கீகரிக்கிறேன்” என்று சொல்லி, இயேசுவே தம்மால் நியமிக்கப்பட்டவர் என்பதைத் தெரியப்படுத்தினார். (மத். 3:13-17) நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு இது ஒரு சிறந்த காரணம், அல்லவா?

10, 11. (அ) “கிறிஸ்து” என்ற பட்டப்பெயர் எவ்விதங்களில் இயேசுவுக்குப் பயன்படுத்தப்படுகிறது? (ஆ) நாம் ஏன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றாமல் இருந்துவிடக் கூடாது?

10 பைபிள், “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரை இயேசுவுக்குப் பயன்படுத்துகையில், இயேசு கிறிஸ்து என்றும், கிறிஸ்து இயேசு என்றும், வெறுமனே கிறிஸ்து என்றும் பலவிதமாகக் குறிப்பிடுகிறது. “இயேசு கிறிஸ்து” என்பதில் பெயருக்குப் பின்பு பட்டப்பெயர் வருகிறது; இந்தப் பட்டபெயரை முதன்முதலில் குறிப்பிட்டவர் இயேசுதான்; அவர் தம் தகப்பனிடம் ஜெபம் செய்தபோது, “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்” என்று குறிப்பிட்டார். (யோவா. 17:3) “இயேசு கிறிஸ்து” என்று சொல்வது அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும் அவரால் நியமிக்கப்பட்டவர் என்பதையும் வலியுறுத்துகிறது. ஆனால், அவருடைய பெயருக்கு முன்பாகப் பட்டப்பெயரைச் சொல்லி “கிறிஸ்து இயேசு” என்று குறிப்பிடுவது, ஒரு நபராக அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக அவர் வகிக்கும் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. (2 கொ. 4:5) இயேசு என்ற பெயர் இல்லாமல் வெறுமனேகிறிஸ்துஎன்று சொல்வதும்கூட மேசியாவாக அவர் வகிக்கும் ஸ்தானத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது.—யோவா. 4:29.

11 “கிறிஸ்து” என்ற பட்டப்பெயர் எவ்விதத்தில் இயேசுவுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் சரி, அது இந்த முக்கிய உண்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது: கடவுளுடைய மகன் மனிதனாக இந்தப் பூமிக்கு வந்து தம் தகப்பனின் சித்தத்தைத் தெரியப்படுத்தியபோதிலும், அவர் ஒரு சாதாரண மனிதராகவோ தீர்க்கதரிசியாகவோ இருக்கவில்லை; அவர் யெகோவாவால் நியமிக்கப்பட்டவராக இருந்தார். ஆகவே, நாம் அவரைப் பின்பற்றாமல் இருந்துவிடக் கூடாது.

இயேசு—மீட்புக்கு ஒரே வழி

12. அப்போஸ்தலன் தோமாவிடம் இயேசு சொல்லிய என்ன வார்த்தைகள் நமக்கு முக்கியமானவையாக இருக்கின்றன?

12 மேசியாவாகிய இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது; அதை, இறப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு இயேசுவே தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் குறிப்பிட்டார். தாம் போகப்போவதாகவும் அப்போஸ்தலர்களுக்கு ஓர் இடத்தைத் தயார்ப்படுத்தப்போவதாகவும் அவர் சொன்னதைக் குறித்து தோமா கேள்வி கேட்டபோது, “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்றார். (யோவா. 14:1-6) அப்போது அவர் உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்களுக்குப் பரலோகத்தில் ஓர் இடம் அளிப்பதாக அவர் வாக்குறுதி தந்தார்; அவருடைய வார்த்தைகள், பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் நம்பிக்கை உள்ளோருக்கும் முக்கியமானவையாக இருக்கின்றன. (வெளி. 7:9, 10; 21:1-4) எப்படி?

13. இயேசு எவ்விதங்களில் ‘வழியாக’ இருக்கிறார்?

13 இயேசு கிறிஸ்து ‘வழியாக’ இருக்கிறார். அதாவது, அவர் மூலமாக மட்டுமே நம்மால் கடவுளை அணுக முடியும். ஜெபத்தைக் குறித்ததில் இதுவே உண்மை; ஏனென்றால், இயேசு மூலமாக நாம் ஜெபம் செய்யும்போது மட்டுமே, தகப்பனுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் கேட்கிற எதையும் அவர் தருவார் என்ற உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது. (யோவா. 15:16) அதேசமயத்தில், இயேசு இன்னொரு அர்த்தத்திலும் ‘வழியாக’ இருக்கிறார். பாவமானது மனிதர்களைக் கடவுளிடமிருந்து பிரித்திருக்கிறது. (ஏசா. 59:2) இயேசு ‘அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுத்தார்.’ (மத். 20:28) இதனால், ‘இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைத் தூய்மையாக்குகிறது’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 1:7) இவ்வாறு, மனிதர்கள் கடவுளோடு சமரசமாவதற்கான வழியை கடவுளுடைய மகன் திறந்து வைத்தார். (ரோ. 5:8-10) இயேசுமீது விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகத்தான் நம்மால் கடவுளுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க முடியும்.—யோவா. 3:36.

14. இயேசு எவ்விதங்களில் ‘சத்தியமாக’ இருக்கிறார்?

14 இயேசு ‘சத்தியமாகவும்’ இருக்கிறார்; ஏனென்றால், அவர் எப்போதுமே சத்தியத்தைப் பேசினார், சத்தியத்தின்படி வாழ்ந்தார்; அதுமட்டுமல்ல, மேசியாவைப் பற்றி எழுதப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களுமே இயேசுவில் நிறைவேறின. “கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொ. 1:20) மோசேயின் திருச்சட்டத்தில் ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாக’ இருந்தவைகூட கிறிஸ்து இயேசுவில் நிஜமாயின. (எபி. 10:1; கொலோ. 2:17) எல்லா தீர்க்கதரிசனங்களும் இயேசுவையே மையமாகக் கொண்டிருக்கின்றன; யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதில் அவர் வகிக்கும் முக்கிய பங்கைப் புரிந்துகொள்ள அவை நமக்கு உதவுகின்றன. (வெளி. 19:10) அவருடைய நோக்கத்தின் நிறைவேற்றத்திலிருந்து நன்மையடைய, நாம் மேசியாவைப் பின்பற்றுவது அவசியம்.

15. இயேசு எவ்விதங்களில் ‘வாழ்வாக’ இருக்கிறார்?

15 இயேசு ‘வாழ்வாகவும்’ இருக்கிறார்; ஏனென்றால், தம்முடைய இரத்தத்தையே தந்து, அதாவது தமது வாழ்வையே தந்து, மனிதகுலத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்; அதோடு, “நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம்” கடவுள் முடிவில்லா வாழ்வு எனும் பரிசைத் தரப்போகிறார். (ரோ. 6:23) இறந்தவர்களுக்கும்கூட இயேசு ‘வாழ்வாக’ இருக்கிறார். (யோவா. 5:28, 29) ஆயிரவருட ஆட்சியில் அவர் தலைமைக் குருவாக என்னென்ன செய்வார் என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். உண்மையில், பூமியில் வாழப்போகும் தம் குடிமக்களுக்கு அவர் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நிரந்தர மீட்பை அளிக்கப்போகிறார்!—எபி. 9:11, 12, 28.

16. என்ன காரணத்திற்காக நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்?

16 ஆகவே, தோமாவுக்கு இயேசு சொன்ன பதில் நமக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது. இயேசுவே வழியும், சத்தியமும், வாழ்வுமாக இருக்கிறார். இந்த உலகம் மீட்பு பெறும்படி அவரையே கடவுள் இந்த உலகத்திற்கு அனுப்பினார். (யோவா. 3:17) அவர் மூலமாக மட்டுமே எவராலும் தகப்பனை அணுக முடியும். “அவரைத் தவிர வேறு எவராலும் மீட்பு இல்லை; ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி வானத்தின் கீழுள்ள மனிதர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்று பைபிள் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறது. (அப். 4:12) முன்பு நமக்கு என்ன கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, இயேசுமீது விசுவாசம் வைத்து, அவரைப் பின்பற்றி, இறுதியில் முடிவில்லா வாழ்வைப் பெறுவதுதான் ஞானமானது.—யோவா. 20:31.

கிறிஸ்துவுக்குச் செவிகொடுக்கும்படி கட்டளையிடப்படுகிறோம்

17. கடவுளுடைய மகனுக்கு நாம் செவிகொடுப்பது ஏன் முக்கியம்?

17 இயேசு ரூபம் மாறிய காட்சியைப் பேதுருவும் யோவானும் யாக்கோபும் கண்டார்கள். அச்சமயத்தில் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவரே என் மகன், நான் தேர்ந்தெடுத்திருப்பவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொன்னதை அவர்கள் கேட்டார்கள். (லூக். 9:28, 29, 35) ஆகவே, மேசியாவுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்ற கட்டளைக்கு நாம் கீழ்ப்படிவது மிக முக்கியம்.அப்போஸ்தலர் 3:22, 23-ஐ வாசியுங்கள்.

18. நாம் எவ்வாறு இயேசு கிறிஸ்துவுக்குச் செவிகொடுக்கலாம்?

18 இயேசுவுக்குச் செவிகொடுப்பது, ‘அவர்மீதே கண்களை ஒருமுகப்படுத்தி . . . அவரைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பதை’ உட்படுத்துகிறது. (எபி. 12:2, 3) அதனால், அவரைப் பற்றி நாம் பைபிளிலும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வழங்குகிற பிரசுரங்களிலும் வாசிக்கிறபோதும்சரி, கிறிஸ்தவக் கூட்டங்களில் கேட்கிறபோதும்சரி “வழக்கத்தைவிட அதிக கவனம் செலுத்துவது அவசியம்.” (எபி. 2:1; மத். 24:45) ஆகவே, இயேசுவின் ஆடுகளாக நாம் அவருக்குச் செவிகொடுக்கவும் அவரைப் பின்பற்றவும் ஆவலாயிருப்போமாக.—யோவா. 10:27.

19. கிறிஸ்துவைத் தொடர்ந்து பின்பற்ற நமக்கு எது உதவும்?

19 எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் நம்மால் தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்ற முடியுமா? ஆம், முடியும்; ஆனால், ‘பயனளிக்கும் வார்த்தைகளை மாதிரியாக வைத்து பின்பற்றிக்கொண்டே இருந்தால்’ மட்டும்தான் அது முடியும்; அதற்காக, “கிறிஸ்து இயேசு மீதுள்ள விசுவாசத்தினாலும் அன்பினாலும்” நாம் கற்றுக்கொள்கிற விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.—2 தீ. 1:13.

என்ன கற்றுக்கொண்டீர்கள்?

‘கிறிஸ்துவை’ பின்பற்றுவது யெகோவாவிடம் இன்னும் நெருங்கிவர நமக்கு உதவுகிறது என ஏன் சொல்லலாம்?

இயேசுவைப் பின்பற்றுவது ஏன் யெகோவாவைப் பின்பற்றுவதற்குச் சமம்?

இயேசு எவ்வாறு “வழியும் சத்தியமும் வாழ்வுமாக” இருக்கிறார்?

யெகோவாவால் நியமிக்கப்பட்டவருக்கு நாம் ஏன் செவிகொடுக்க வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 29-ன் படம்]

இயேசுவின் போதனைகள் யெகோவாவின் உயர்ந்த சிந்தையைப் படம்பிடித்துக் காட்டின

[பக்கம் 30-ன் படம்]

யெகோவாவால் நியமிக்கப்பட்டவரை நாம் உண்மையோடு பின்பற்ற வேண்டும்

[பக்கம் 32-ன் படம்]

“இவரே என் மகன், . . . இவருக்குச் செவிகொடுங்கள்” என்று யெகோவா சொன்னார்