Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு’

‘மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு’

‘மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு’

“பேச்சு வெள்ளி என்றால் மௌனம் பொன்” என்பது கிழக்கத்திய பழமொழி. “ஒரு வார்த்தை ஒரு ஷேக்கல் மதிப்புள்ளது என்றால் மௌனம் இரண்டு ஷேக்கல் மதிப்புள்ளது” என்பது அதற்கு ஒப்பான எபிரெய பழமொழியென ஒரு அகராதி (ப்ரூயர்ஸ் டிக்ஷ்னரி ஆஃப் ஃப்ரேஸ் அண்டு ஃபாபில்) சொல்கிறது. பூர்வ இஸ்ரவேலின் ஞானமுள்ள ராஜாவான சாலொமோன் இவ்வாறு எழுதினார்: ‘ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. . . . மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.’—பிர. 3:1, 7.

ஆனால், எந்தச் சமயத்தில் மௌனமாக இருப்பது உகந்தது? பைபிளில் “மௌனம்,” “அமைதி” என்ற வார்த்தைகள் பல இடங்களில் காணப்படுகின்றன. இவை பயன்படுத்தப்பட்டுள்ள சூழமைவைப் பார்க்கும்போது, வாழ்க்கையில் குறைந்தபட்சம் மூன்று அம்சங்களில் நாம் மௌனமாய் இருப்பது நாகரிகமானதெனத் தெரிகிறது. இப்போது, மௌனம் எப்படி மரியாதைக்கு அடையாளமாகவும், விவேகத்திற்கு அறிகுறியாகவும், தியானத்திற்கு அத்தியாவசியமாகவும் இருக்கிறதெனக் கவனமாக ஆராயலாம்.

மரியாதைக்கு அடையாளம்

மௌனம், மதிப்புக்கும் மரியாதைக்கும் அடையாளம். தீர்க்கதரிசியான ஆபகூக் இவ்வாறு சொன்னார்: “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.” (ஆப. 2:20) ஆம், உண்மை வணக்கத்தார் “ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்.” (புல. 3:26, பொது மொழிபெயர்ப்பு) சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரை . . . பார்த்து எரிச்சல் கொள்ளாதே.”—சங். 37:7, பொ.மொ.

வார்த்தைகளின்றி யெகோவாவை நம்மால் துதிக்க முடியுமா? சிலசமயம், படைப்பில் மிளிரும் அழகைக் கண்டு வாயடைத்துப் போகிறோம், அல்லவா? படைப்பின் அதிசயங்களைப் பற்றி யோசிப்பது படைப்பாளரை நம் மனதுக்குள் துதிப்பதற்கு ஒரு வழி, அல்லவா? தாவீது பாடிய சங்கீதங்களில் ஒன்று இப்படி ஆரம்பிக்கிறது: “கடவுளே, சீயோனில் உமக்குமுன் மௌனமும் துதியும் இருக்கும். பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.”—சங். 65:1, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு (திருத்தியது).

யெகோவா நம்முடைய மதிப்பு மரியாதைக்கு உரியவர்; அவருடைய வார்த்தைகளும் நம்முடைய மதிப்பு மரியாதைக்கு உரியவை. உதாரணத்திற்கு, கடவுளுடைய தீர்க்கதரிசியான மோசே இஸ்ரவேல் தேசத்தாரிடம் கடைசியாகப் பேச்சு கொடுத்த சமயத்தில், அவரும் ஆசாரியர்களும் கூடியிருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள்: “நீங்கள் மௌனமாக இருந்து . . . உங்கள் கடவுளாகிய யெகோவாவின் குரலுக்குச் செவிகொடுக்க வேண்டும்.” கடவுளுடைய சட்டங்களை வாசிக்க இஸ்ரவேலர்கள் கூடிவந்தபோது அவர்களுடைய பிள்ளைகள்கூட கவனமாகக் கேட்பது அவசியமாய் இருந்தது. ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கற்றுக்கொள்ளும்படிக்கு ஜனத்தைக் கூட்ட வேண்டும்’ என மோசே சொன்னார்.—உபா. 27:9, 10, NW; 31:11-13.

யெகோவாவின் நவீன நாளைய வணக்கத்தார்கூட, பெரிய மாநாடுகளிலும் சரி சபைக் கூட்டங்களிலும் சரி, சொல்லப்படும் விஷயங்களை மரியாதையோடு கவனித்துக் கேட்பது எவ்வளவு சிறந்தது! முக்கியமான பைபிள் சத்தியங்களைப் பேச்சாளர் விளக்கும்போது அருகில் இருப்பவர்களோடு நாம் அநாவசியமாகப் பேசினால் கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய அமைப்பையும் அவமதிப்பதாய் இருக்கும், அல்லவா? நிகழ்ச்சிகள் நடக்கும் நேரம் அமைதியாக கேட்க வேண்டிய நேரமாகும்.

மற்ற சமயங்களில் உரையாடும்போதுகூட, ஒருவர் பேசுவதை மற்றவர் காதுகொடுத்துக் கேட்பது மரியாதைக்கு அடையாளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, முற்பிதாவான யோபு தன்மீது குற்றம்சாட்டியவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மௌனமாயிருப்பேன்.’ அவர்கள் பேசியபோது அவர் அமைதியாகக் காதுகொடுத்துக் கேட்டார். அவர் பேச வேண்டிய சமயம் வந்தபோது, ‘நீங்கள் மௌனமாயிருங்கள், நான் பேசுகிறேன்’ என்று சொன்னார்.—யோபு 6:24; 13:13.

விவேகத்திற்கு அறிகுறி

“தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்” என்றும் “நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதி. 10:19, பொ.மொ.; 11:12, பொ.மொ.) இயேசு மௌனமாக இருந்ததன் மூலம் எவ்வளவு சிறப்பாக விவேகத்தைக் காட்டினார் என்பதைக் கவனியுங்கள். எதிரிகள் பகைமையையும் விரோதத்தையும் காட்டிய சமயத்தில் அவர்களிடம் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு ‘இயேசு பேசாமலிருந்தார்.’ (மத். 26:63) பின்பு, விசாரணைக்காக பிலாத்துவிடம் வந்தபோது அவர் “ஒன்றும் சொல்லவில்லை.” மாறாக, மக்கள் அறிந்த உண்மைகளே தனக்காகப் பேசட்டும் என்று அவர் விவேகத்தோடு விட்டுவிட்டார்.—மத். 27:11-14.

நாமும் மௌனமாக இருப்பது, அதுவும் யாராவது நம்மை எரிச்சலூட்டும்போது மௌனமாக இருப்பது ஞானமானது. “நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்” என ஒரு நீதிமொழி சொல்கிறது. (நீதி. 14:29) இறுக்கமான சூழ்நிலையில் யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால் அதற்காகப் பிற்பாடு வருத்தப்படுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் எதையாவது முட்டாள்தனமாகப் பேசிவிடலாம்; இதனால், மனநிம்மதியை இழக்கலாம்.

பொல்லாதவர்களுக்குமுன் நாவை அடக்குவது விவேகத்தின் அறிகுறியாக இருக்கிறது. இன்றும்கூட, ஊழியத்தில் யாராவது நம்மைக் கேலி கிண்டல் செய்தால் மௌனமே சிறந்த பதிலாக இருக்கலாம். சக மாணவர்கள் அல்லது சக பணியாளர்கள் இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகளைச் சொல்லும்போதோ ஆபாசமாகப் பேசும்போதோ அதை நாம் எவ்விதத்திலும் ரசிக்காததைக் காட்ட சிலசமயங்களில் மௌனமாக இருப்பது ஞானமானது, அல்லவா? (எபே. 5:3) “துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்” என்று சங்கீதக்காரன் எழுதினார்.—சங். 39:1.

‘விவேகமுள்ளவர்’ ரகசியங்களைக் கசியவிடமாட்டார். (நீதி. 11:12, பொ.மொ.) ஓர் உண்மைக் கிறிஸ்தவர், முன்பின் யோசிக்காமல் ரகசியங்களை உளறிவிடமாட்டார். முக்கியமாக, கிறிஸ்தவ மூப்பர்கள் இந்த விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அப்போதுதான் அவர்களால் சபையாரின் நம்பிக்கையைச் சம்பாதிக்க முடியும்.

மௌனத்தில் வார்த்தைகள் இல்லாவிட்டாலும் பலன்கள் உண்டு. 19-ஆம் நூற்றாண்டு ஆங்கில எழுத்தாளரான சிட்னி ஸ்மித் என்பவர் தன் காலத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர் அவ்வப்போது மௌனமாக இருந்துவிடுவார்; அதுவே அவருடைய உரையாடலை மிகுந்த சுவாரஸ்யமாக்குகிறது.” உண்மைதான், நண்பர்கள் இருவர் அன்றாடம் உரையாடும்போது இருவருமே பேசிக்கொள்ள வேண்டும். நன்கு உரையாடுபவர் நன்கு கேட்கிறவராகவும் இருக்க வேண்டும்.

“மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்” என்று சாலொமோன் எச்சரித்தார். (நீதி. 10:19, பொ.மொ.) எனவே, எந்தளவிற்குக் குறைவாகப் பேசுகிறோமோ அந்தளவிற்கு உளறாமல் இருப்போம். சொல்லப்போனால், “பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.” (நீதி. 17:28) ஆகவே, “என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” என்று யெகோவாவிடம் ஜெபம் செய்வோமாக.—சங். 141:3.

தியானத்திற்கு அத்தியாவசியம்

நீதியின் வழியில் நடப்பவர், “இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருப்பார்” என்று பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது. (சங். 1:2) தியானிப்பதற்கு ஏற்ற சூழல் எது?

முற்பிதாவான ஆபிரகாமின் மகன் ஈசாக்கு, ‘சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தார்.’ (ஆதி. 24:63) தியானிப்பதற்கு அவர் அமைதியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்தார். நிசப்தமான இரவு வேளைகளில் தாவீது ராஜா தியானித்தார். (சங். 63:6) பரிபூரண மனிதரான இயேசு தனிமையில் இருப்பதற்கும் தியானிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குவதில் தீர்மானமாய் இருந்தார்; அதற்காக மக்கள் அலைமோதாத மலைப்பகுதிகளுக்கும் வனாந்தரங்களுக்கும் மற்ற தனிமையான இடங்களுக்கும் சென்றார்.—மத். 14:23; லூக். 4:42; 5:16.

மௌனம் ஓர் அருமருந்து என்றால் மிகையாகாது. மௌனம், நியாயமான முறையில் நம்மையே சீர்தூக்கிப் பார்ப்பதற்கான ஒரு சூழலைத் தருகிறது; தனிப்பட்ட முறையில் முன்னேறுவதற்கு இது மிகவும் அவசியம். மௌனம் மன அமைதியைத் தருகிறது. அமைதியான வேளைகளில் தியானிப்பது, நம்மில் பணிவையும் மனத்தாழ்மையையும் வளர்க்கலாம்; வாழ்க்கைக்கு உண்மையிலேயே அவசியமான காரியங்களின்மீது நம் போற்றுதலை அதிகரிக்க உதவலாம்.

மௌனம் சிறந்த பண்பாக இருக்கிறபோதிலும், ‘பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.’ (பிர. 3:7) இன்று உண்மை வணக்கத்தார் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் ‘பூலோகமெங்கும்’ மும்முரமாகப் பிரசங்கித்து வருகிறார்கள். (மத். 24:14) அதனால் உண்டாகும் மகிழ்ச்சி ஆரவாரம் ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. (மீ. 2:12) ஆகவே, நற்செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் அறிவித்து, கடவுளுடைய அற்புதமான செயல்களைப் பற்றிப் பேசுவோரில் ஒருவராக நாமும் இருப்போமாக. இந்த முக்கியமான வேலையில் நாம் ஈடுபடும்போது, சில சமயங்களில் மௌனம் பொன்னானது என்பதைப் புரிந்து நடந்துகொள்வோமாக.

[பக்கம் 3-ன் படம்]

சபைக் கூட்டங்களில் நாம் கவனித்துக் கேட்டு கற்றுக்கொள்ள வேண்டும்

[பக்கம் 4-ன் படம்]

ஊழியத்தில் யாராவது நம்மை வார்த்தைகளால் தாக்கினால் மௌனமே சிறந்த பதிலாக இருக்கலாம்

[பக்கம் 5-ன் படம்]

மௌனம் தியானிப்பதற்கு அத்தியாவசியம்