Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாந்தம் யெகோவாவுக்குப் பிடித்த குணம்

சாந்தம் யெகோவாவுக்குப் பிடித்த குணம்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

சாந்தம் யெகோவாவுக்குப் பிடித்த குணம்

எண்ணாகமம் 12:1-15

பெருமை, பொறாமை, பதவி மோகம். இவ்வுலகில் கொடிகட்டிப் பறக்க ஆசைப்படுகிறவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிற குணங்களே இவை. இப்படிப்பட்ட குணங்கள் நம்மிடம் இருந்தால், யெகோவா தேவனோடு நாம் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடியுமா? முடியவே முடியாது! மாறாக, தம்மை வணங்குகிறவர்கள் சாந்தகுணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். எண்ணாகமம் 12-ஆம் அதிகாரத்தில் உள்ள சம்பவத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி சீனாய் என்ற பாலைவனத்தில் தங்கியிருக்கையில் இந்தச் சம்பவம் நடக்கிறது.

அக்கா மிரியாமும் அண்ணன் ஆரோனும் தங்களுடைய சொந்த தம்பியான மோசேக்கு ‘விரோதமாகப் பேச’ ஆரம்பித்தார்கள். (வசனம் 1) தங்களுடைய மனக்குறைகளை மோசேயிடம் நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக அவருக்கு விரோதமாகப் பேசினார்கள்; ஒருவேளை பாளயத்திலிருந்த மற்ற எல்லாரிடமும் சொல்லியிருப்பார்கள். மிரியாமுடைய பெயர் முதலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவள்தான் முக்கியமாகக் குறை சொல்லித் திரிந்திருப்பாளெனத் தெரிகிறது. அவள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்ததற்கு முதல் காரணம், அவர் எத்தியோப்பியா தேசத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதுதான். தன்னுடைய ஸ்தானம் வேறொரு பெண்ணுக்கு, அதுவும் இஸ்ரவேல் ஜனத்தைச் சேராத ஒரு பெண்ணுக்கு, போய்விடுமோ என்ற பொறாமையில் அவள் அப்படிச் செய்திருப்பாளா?

அவர்கள் முறுமுறுத்ததற்கு இன்னும் பல காரணங்கள் இருந்தன. மிரியாமும் ஆரோனும், “கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். (வசனம் 2) அப்படியென்றால், மிகுந்த அதிகாரமும் நன்மதிப்பும் பெற வேண்டுமென்ற ஆசையே அப்படி முறுமுறுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்திருக்குமா?

அந்தச் சம்பவத்தில், முறுமுறுத்தவர்களுக்கு விரோதமாக மோசே எதுவும் பேசவில்லை. அவர்கள் அவமரியாதையாகப் பேசியதையெல்லாம் சகித்துக்கொண்டு அவர் அமைதியாக இருந்தாரெனத் தெரிகிறது. அவர் பதிலுக்கு முறுமுறுக்காமல் இப்படிப் பொறுமையாக இருந்தது, அவரைப் பற்றி பைபிள் கொடுக்கிற விவரிப்பு உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது; ஆம், மோசே பூமியிலுள்ள “சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” என்று அது சொல்கிறது. a (வசனம் 3) யெகோவா ஏன் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று எல்லோரிடமும் போய் மோசே விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. யெகோவா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தார், அவர் மோசேக்கு ஆதரவாக இருந்தார்.

அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்ததைத் தமக்கே விரோதமாக முறுமுறுத்ததாக யெகோவா கருதினார். ஏனென்றால் அவர்தான் மோசேயை நியமித்திருந்தார். யெகோவா அவர்களைக் கடுமையாகக் கண்டித்து, தாம் மோசேயோடு விசேஷித்த பந்தம் வைத்திருந்ததை நினைப்பூட்டி, ‘நான் அவனுடன் முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்’ என்று சொன்னார். “இப்படியிருக்க, நீங்கள் . . . மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன” என்று மிரியாமிடமும் ஆரோனிடமும் யெகோவா கேட்டார். (வசனம் 8) ஆம், அவர்கள் மோசேக்கு விரோதமாக அல்ல, யெகோவாவுக்கு விரோதமாகவே பேசினார்கள். இப்படி அவர்கள் யெகோவாவையே அவமதித்ததால் அவருடைய கடுங்கோபத்திற்கு ஆளானார்கள்.

இந்தப் பிரச்சினையைத் தூண்டிவிட்ட மிரியாமை குஷ்டரோகம் பீடித்தது. உடனடியாக, மிரியாமை மன்னிக்கும்படி யெகோவாவிடம் கேட்குமாறு மோசேயிடம் ஆரோன் கெஞ்சினார். சற்று யோசித்துப் பாருங்கள்: மிரியாம் அதுவரை யாருக்கு விரோதமாக பேசிக்கொண்டிருந்தாளோ அவருடைய உதவியே இப்போது அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது. ஆரோன் சொன்னபடியே மோசே சாந்தத்தோடு செய்தார். அதுவரை எதுவும் பேசாதிருந்த மோசே, அப்போது தன் அக்காவைக் குணப்படுத்தும்படி யெகோவாவிடம் உருக்கமாக மன்றாடினார். மிரியாம் குணமடைந்தாள்; ஆனாலும், ஏழு நாட்கள் ஒதுக்கி வைக்கப்படும் அவமானத்தை அவள் சகிக்க வேண்டியிருந்தது.

இந்தச் சம்பவம், யெகோவாவுக்குப் பிடித்த குணங்களையும் பிடிக்காத குணங்களையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. நாம் கடவுளிடம் நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ள விரும்பினால், பெருமை, பொறாமை, பதவி மோகம் போன்ற எதுவும் நம்மில் துளிர்விடாதபடி அவற்றைப் பிடுங்கியெறிய முயல வேண்டும். சாந்தகுணமுள்ளவர்களையே யெகோவா நேசிக்கிறார். அவர்களுக்கு இவ்வாறு வாக்குக் கொடுக்கிறார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”சங்கீதம் 37:11; யாக்கோபு 4:6. (w09 08/01)

[அடிக்குறிப்பு]

a சாந்தகுணம் என்பது, பதிலுக்கு பதில் செய்யாமல் பொறுமையோடு அநீதியைச் சகிக்க ஒருவரைப் பலப்படுத்தும் குணமாகும்.