Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் எவ்வளவு நன்கொடை கொடுப்பது?

நான் எவ்வளவு நன்கொடை கொடுப்பது?

வாசகரின் கேள்வி

நான் எவ்வளவு நன்கொடை கொடுப்பது?

“சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார். (2 கொரிந்தியர் 9:7) இவை, உலகிலுள்ள லட்சக்கணக்கானோர் நன்கறிந்த வார்த்தைகள். என்றாலும், மதப்பற்றுள்ள சிலர் தங்களுடைய சக்திக்கு மிஞ்சி நன்கொடை தர வேண்டுமென்று நினைக்கலாம். சொல்லப்போனால், சில மதப்பிரிவுளில் குறிப்பிட்ட ஒரு தொகையை காணிக்கையாகக் கொடுக்க வேண்டுமென்ற கெடுபிடி உண்டு. அதன்படி, தசமபாகத்தை, அதாவது ஒருவருடைய வருவாயில் 10 சதவீதத்தை சர்ச்சுக்குக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுக்கும்படி பைபிள் நம்மைக் கட்டாயப்படுத்துகிறதா? நான் எவ்வளவு நன்கொடை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதிலும் எழுந்திருக்கலாம்.

கட்டளைப்படியும் மனமுவந்தும் அளிக்கப்பட்ட நன்கொடைகள்

இஸ்ரவேலர் எவ்வளவு நன்கொடை அளிக்கும்படி கடவுள் எதிர்பார்த்தாரென பைபிளில் தெள்ளத்தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (லேவியராகமம் 27:30-32; எண்ணாகமம் 18:21, 24; உபாகமம் 12:4-7, 11, 17, 18; 14:22-27) அவர்களுடைய சக்திக்கு மிஞ்சி அளிக்கும்படி கடவுள் எதிர்பார்க்கவில்லை. தம்முடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அதற்குக் கைமாறாக அவர்களுக்கு ‘பரிபூரண நன்மை’ உண்டாகும்படிச் செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்தார்.உபாகமம் 28:1, 2, 11, 12.

இன்னும் சில சந்தர்ப்பங்களில், இஸ்ரவேலர் மனமுவந்து நன்கொடை அளித்தார்கள்; அதைத் தங்கள் விருப்பப்படி அதிகமாகவோ குறைவாகவோ அளித்தார்கள். உதாரணத்திற்கு, தாவீது ராஜா யெகோவாவுக்காக ஓர் ஆலயத்தைக் கட்டத் தீர்மானித்தபோது அவரது குடிமக்கள் ‘ஐயாயிரம் தாலந்து பொன்னை’ நன்கொடையாகக் கொடுத்தார்கள். a (1 நாளாகமம் 29:7) அவர்கள் கொடுத்ததையும் இயேசு பூமியில் இருந்தபோது ஒரு விதவை கொடுத்ததையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் அந்த ‘ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளைப் போடுவதை’ அவர் கண்டார். அவள் கொடுத்த நன்கொடையின் மதிப்பு என்ன? ஒரு நாள் கூலியில் 1.5 சதவீதம் மட்டுமே. ஆனாலும், அந்தளவு குறைந்த பணமும்கூட ஏற்றுக்கொள்ளப்படும் என்று இயேசு சொன்னார்.லூக்கா 21:1-4.

கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுக்க வேண்டுமா?

இஸ்ரவேலருக்கு வழங்கப்பட்ட திருச்சட்டத்தைக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. ஆகவே, குறிப்பிட்ட தொகையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. என்றாலும், உண்மையான கிறிஸ்தவச் சபையில் நன்கொடை கொடுப்பது சந்தோஷத்தை அள்ளித் தருகிறது. “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு கிறிஸ்துவே குறிப்பிட்டார்.—அப்போஸ்தலர் 20:35.

யெகோவாவின் சாட்சிகள் மனமுவந்து நன்கொடைகளை வழங்கி உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்கிறார்கள். இந்த நன்கொடைகள், நீங்கள் இப்போது வாசிக்கிற பத்திரிகைகளைப் போன்ற பிரசுரங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன; வழிபாட்டிற்காக அவர்கள் கூடிவரும் இடங்களான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும்கூட பயன்படுத்தப்படுகின்றன. யாருக்கும் சம்பளம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. சீடராக்கும் வேலையில் முழுமையாய் ஈடுபடுகிற சிலர் போக்குவரத்துச் செலவுகளுக்காகவும் கைச்செலவுகளுக்காகவும் கொஞ்சம் உதவி பெறுகிறார்கள். என்றாலும், அப்படி உதவும்படி யாரும் வற்புறுத்திக் கேட்பதில்லை. சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலானோர் பிரசங்க வேலைக்காக எந்தப் பண உதவியும் பெறுவதில்லை. மாறாக, பவுலைப் போல அநேகர் தங்களுடைய செலவுகளுக்காக வேலை செய்கிறார்கள்; பவுல் தன்னுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்வதற்காக கூடாரம் கட்டும் தொழிலைச் செய்தார்.2 கொரிந்தியர் 11:9; 1 தெசலோனிக்கேயர் 2:9.

யெகோவாவின் சாட்சிகள் செய்துவருகிற வேலைக்குப் பண உதவி செய்ய ஒருவர் விரும்பினால், அவர் எவ்வளவு தர வேண்டும்? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும்; ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்.2 கொரிந்தியர் 8:12; 9:7. (w09 08/01)

[அடிக்குறிப்பு]

a 2008-ல் கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் சராசரி விலை 871 டாலர் என்றால் அந்த நன்கொடையின் மதிப்பு சுமார் 479,48,55,000 டாலர்.