Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் மனம் புண்படுகையில்

உங்கள் மனம் புண்படுகையில்

உங்கள் மனம் புண்படுகையில்

‘பழிக்குப் பழி வாங்கினால்தான் நிம்மதி’ என்று அநேகர் சொல்கிறார்கள். யாராவது நம்மைப் புண்படுத்திவிட்டால் அல்லது நமக்குத் தீங்கு செய்துவிட்டால் இயல்பாகவே கோபம் பொத்துக்கொண்டு வருகிறது; அதனால் அப்படிச் சொல்லிவிடுகிறோம். எது நியாயம், எது அநியாயம் என்ற உணர்வை நாம் இயல்பாகவே பெற்றிருப்பதால் அநியாயத்தைச் சரிக்கட்டத் துடிக்கிறோம். ஆனால், அதை எப்படிச் சரிசெய்வது?

பொதுவாக, அறைவது, தள்ளிவிடுவது, மட்டம்தட்டுவது தொடங்கி, வாய்க்கு வந்தபடி திட்டுவது, அடித்து உதைப்பது, திருடுவது வரை பல விதங்களில் அநியாயம் இழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஏதாவது ஒன்று உங்களுக்கு நேரிட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? ‘பழிக்குப் பழிவாங்குவேன்!’ என்ற எண்ணம்தான் பலருக்கும் வருகிறது.

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பலர், தங்களைக் கண்டித்த ஆசிரியர்களைப் பழிவாங்க நினைத்தார்கள்; ஆகவே, அவர்கள் தங்களைக் கொடூரமாக நடத்தியதாகப் பொய் வழக்குத் தொடுத்தார்கள். “ஒரு ஆசிரியர் ஒருமுறை குற்றஞ்சாட்டப்பட்டாலே அவருடைய பெயர் கெட்டுவிடுகிறது” என்கிறார் நியூ ஆர்லியன்ஸில் உள்ள ஆசிரியர் சங்கத் தலைவர் பிரென்டா மிஷல். அந்தக் குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு இழுக்கு ஏற்பட்டது ஏற்பட்டதுதான்.

வேலை செய்யுமிடத்தில் ஏதோ வெறுப்பு காரணமாக அநேகர் தங்கள் முதலாளிகளைப் பழிதீர்க்கப் பார்க்கிறார்கள்; அதற்காக, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் உள்ள முக்கியத் தகவல்களைச் சிலர் அழித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், கம்பெனியின் ரகசியத் தகவல்களைத் திருடி மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள் அல்லது விற்றுவிடுகிறார்கள். இப்படித் தகவல்களைத் திருடும் நவீனகால யுத்தியைத் தவிர, “பொருட்களைத் திருடும் பழங்கால யுத்தியையும் பயன்படுத்தி பணியாளர்கள் வஞ்சம் தீர்த்துவருகிறார்கள்” என த நியூ யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட பழிவாங்கும் போக்கைச் சமாளிப்பதற்காக ஒரு பாதுகாப்பு அதிகாரியை அநேக கம்பெனிகள் நியமித்திருக்கின்றன. பணியிலிருந்து நீக்கப்பட்டவர் தன்னுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறும் வரையில் கூடவே நிற்பதற்காகத்தான் அவரை நியமித்திருக்கின்றன.

நெருங்கிய நண்பர்கள், சக பணியாளர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் நமக்கும் மத்தியில்தான் பழிவாங்குதல் அதிகமாக நடக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் கடுகடுப்பாகப் பேசிவிட்டால் அல்லது யோசிக்காமல் ஏதாவது செய்துவிட்டால் மற்றவர் உடனடியாகப் பழிதீர்க்க நினைக்கிறார். உங்கள் நண்பர் கடுகடுவென பேசினால் நீங்களும் பதிலுக்கு அதேபோல் பேசுகிறீர்களா? உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டால், அவரைப் பழிவாங்கத் திட்டம் போடுகிறீர்களா? புண்படுத்தியவர் நமக்கு மிக நெருங்கியவராக இருக்கும்போது அவரைப் பழிவாங்குவது எவ்வளவு சுலபமாகிவிடுகிறது!

பழிவாங்குவதன் பாதிப்புகள்

பொதுவாக, புண்பட்டவர் தன்னுடைய மனம் ஆறுவதற்காகவே பழிவாங்குகிறார். உதாரணமாக, பூர்வகாலத்தில் வாழ்ந்த யாக்கோபுவின் மகன்களை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர்களுக்கு தீனாள் என்ற சகோதரி இருந்தாள்; அவளை சீகேம் என்ற கானானியன் கற்பழித்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் “மனங்கொதித்து மிகவும் கோபங் கொண்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 34:1-7) யாக்கோபின் இரண்டு மகன்களான சிமியோனும் லேவியும், தங்கள் சகோதரிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு வஞ்சம் தீர்க்க சதித்திட்டம் போட்டார்கள்; சீகேமையும் அவனுடைய குடும்பத்தாரையும் தீர்த்துக்கட்ட அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அவர்களுடைய சூழ்ச்சி பலிக்கவே, கானானியரின் பட்டணத்திற்குள் நுழைந்து சீகேமையும் எல்லா ஆண்மக்களையும் கொன்றுபோட்டார்கள்.ஆதியாகமம் 34:13-27.

அத்தனை பேரையும் அவர்கள் கொன்று குவித்ததால் பிரச்சினை ஓய்ந்ததா? தன்னுடைய மகன்கள் செய்த காரியத்தை யாக்கோபு அறிந்தபோது அவர்களைக் கண்டித்து, ‘நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்தில் . . . என்னை இழிவுபடுத்திவிட்டீர்கள். . . . அவர்கள் ஒன்றுசேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்துபோவோம்’ என்றார். (ஆதியாகமம் 34:30, பொது மொழிபெயர்ப்பு) ஆம், அவர்கள் வஞ்சம் தீர்த்ததால் பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்தது; கொதித்துப் போயிருந்த சுற்றுவட்டாரத்து மக்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது. அவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்காகத்தான், குடும்பமாக அந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து பெத்தேலுக்குச் செல்லும்படி கடவுள் யாக்கோபுக்குக் கட்டளையிட்டிருக்கலாம்.—ஆதியாகமம் 35:1, 5.

தீனாள் கற்பழிக்கப்பட்டதை ஒட்டி நடந்த சம்பவங்கள் ஒரு முக்கியப் பாடத்தை வலியுறுத்திக் காட்டுகின்றன. பழிவாங்குவது, அடுத்தடுத்து பழிவாங்குவதற்கே வழிவகுக்கிறது, அது மாறி மாறி நடந்துகொண்டே இருக்கும். ஆகவே, பழிவாங்குதல் ஒரு தொடர்கதை என்று ஒரு ஜெர்மானிய பழமொழி சொல்வது முற்றிலும் சரியே.

வேதனைமேல் வேதனை

நமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டிப்பதில் குறியாய் இருப்பது ஆபத்தானது. மன்னிப்பு—பழையதை மறந்து புதிய வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது எப்படி (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கோபவெறி உங்களை உருக்கிவிடுகிறது. உங்கள் நேரத்தையும் சக்தியையும் அது உறிஞ்சிவிடுகிறது. எப்படியென்றால், கசப்பான அனுபவங்களை அடிக்கடி நினைக்க வைக்கிறது, புண்படுத்தியவர்களை உள்ளத்தில் சபிக்க வைக்கிறது, அவர்களைப் பழிவாங்குவதற்காகத் திட்டம் போட வைக்கிறது.” ஆம், பைபிள் தத்ரூபமாக விளக்குகிறபடி, ‘பொறாமை நோய்களுக்குக் காரணமாகிறது.’நீதிமொழிகள் 14:30, ERV.

உண்மையில், பகையும் பழிவாங்கும் எண்ணமும் மனதிலிருந்தால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்? உரையாசிரியர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘பழிவாங்கினால்தான் நிம்மதி’ என நீங்கள் நினைத்தால், பழிவாங்குவதே வாழ்க்கையென வருடக்கணக்காக வாழ்ந்துகொண்டிருப்போரின் முகத்தில் நிம்மதி தெரிகிறதா என்று தேடிப் பாருங்கள்.”

இனக் கலவரமும் மதக் கலவரமும் அதிகமாக வெடிக்கிற உலகின் பல பாகங்களில் என்ன நடக்கிறதென கவனியுங்கள். பெரும்பாலும், ஒரு கொலை மற்றொரு கொலைக்கு வித்திடுகிறது; அதனால், பகையும் சாவும் ஓய்வதில்லை. உதாரணமாக, தீவிரவாதிகள் நடத்திய ஒரு குண்டுவீச்சில் 18 இளைஞர்கள் உயிரிழந்தபோது பொறுக்க முடியாத வேதனையில் ஒரு பெண், “நம்மைத் துடிதுடிக்க வைத்தவர்களை ஆயிரம் மடங்காக நாம் துடிதுடிக்க வைக்க வேண்டும்!” என்று கூச்சலிட்டாள். ஆனால், இப்படிப்பட்ட மனப்பான்மையால் கொடூரச் செயல்கள்தான் அதிகரிக்கின்றன; அதோடு, அதிகமதிகமானோர் சண்டைகளில் சேர்ந்துகொள்கிறார்கள்.

“கண்ணுக்குக் கண்”

சிலர் தங்களுடைய பழிவாங்கும் மனப்பான்மையை பைபிள் ஆதரிப்பதாக நினைக்கிறார்கள். “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என பைபிள் குறிப்பிடுவதில்லையா?” என அவர்கள் கேட்கிறார்கள். (லேவியராகமம் 24:20) மேலோட்டமாக வாசித்தால், “கண்ணுக்குக் கண்” என்ற சட்டம் பழிவாங்குவதை ஆதரிப்பதாகத் தோன்றலாம். ஆனால், அச்சட்டம் உண்மையில், பழிவாங்கும் எண்ணத்தோடு செய்யப்படுகிற அறிவற்ற செயல்களைத் தடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது. எப்படி?

ஓர் இஸ்ரவேலன் மற்றொரு இஸ்ரவேலனை தாக்கி அவனுடைய கண்ணைக் குருடாக்கினால் அவனுக்கு நியாயமான தண்டனை வழங்கலாமென திருச்சட்டம் சொன்னது. என்றாலும், பாதிக்கப்பட்ட இஸ்ரவேலன் பிரச்சினையைத் தன் கையில் எடுத்துக்கொண்டு அவனையோ அவனுடைய குடும்பத்தினரையோ பழிதீர்க்க அச்சட்டம் அனுமதிக்கவில்லை. மாறாக, நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம், அதாவது நியாயாதிபதிகளிடம், அந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது; அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டியிருந்தது. இவ்வாறு, தாக்கியவன் தக்க தண்டனை பெறலாம் என்பதைத் தெரிந்திருந்தது, பழிவாங்குதலை முற்றிலும் தடுத்தது. அதேசமயத்தில், இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டத்தைக் கொடுப்பதற்கு முன், யெகோவா தேவன் மோசே மூலமாக இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: ‘உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; . . . பழிக்குப்பழி வாங்காமலும், . . . பொறாமைகொள்ளாமலும் இருப்பாயாக.’ (லேவியராகமம் 19:17, 18) ஆம், திருச்சட்ட ஒப்பந்தத்தின் முழு சூழமைவையும் புரிந்துகொண்டால்தான் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்ற சட்டத்தின் நோக்கத்தை சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இயேசு அந்தத் திருச்சட்டத்தை இரண்டு கட்டளைகளாகச் சுருக்கி இவ்வாறு குறிப்பிட்டார்: “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்”; “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:37-40) அப்படியானால், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சமாதானத்தை நாடுங்கள்

யெகோவா, “சமாதானத்தின் கடவுள்” என பைபிள் விவரிக்கிறது; ஆகவே, அவரை வழிபடுவோர் ‘சமாதானத்தைத் தேடி அதை நாடிச்செல்லும்படி’ அது அறிவுறுத்துகிறது. (எபிரெயர் 13:20; 1 பேதுரு 3:11) ஆனால், சமாதானத்தை நாடுவது, உண்மையில் சரிப்பட்டு வருமா?

இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில், எதிரிகள் அவர்மீது துப்பினர், சாட்டையால் அடித்தனர், கொடுமைப்படுத்தினர்; அவரோடு நெருங்கிப் பழகிய ஒருவனே அவரைக் காட்டிக்கொடுத்தான், அவருடைய சீடர்களும் அவரைக் கைவிட்டனர். (மத்தேயு 26:48-50; 27:27-31) அப்போது அவர் என்ன செய்தார்? “அவர் சபித்துப் பேசப்பட்டபோது பதிலுக்குச் சபித்துப் பேசவில்லை; துன்புறுத்தப்பட்டபோது மிரட்டவில்லை; மாறாக, நீதியாய்த் தீர்ப்பு வழங்குகிறவரிடம் தம்மையே ஒப்படைத்தார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.—1 பேதுரு 2:23.

“கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்” என பேதுரு குறிப்பிட்டார். (1 பேதுரு 2:21) ஆம், அநீதியைச் சகிப்பதிலும் பிற விஷயங்களிலும் இயேசுவைப் பின்பற்றும்படி கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் சம்பந்தமாக, மலைப் பிரசங்கத்தில் இயேசுவே இவ்வாறு சொன்னார்: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தகப்பனின் பிள்ளைகளாக இருப்பீர்கள்.”—மத்தேயு 5:44, 45.

கிறிஸ்துவைப் போல் அன்பு காட்டுகிறவர்கள், அநியாயமாக நடத்தப்படுகையில் அல்லது அப்படி நடத்தப்படுவதாக உணருகையில் எப்படி நடந்துகொள்கிறார்கள்? நீதிமொழிகள் 19:11 இவ்வாறு பதிலளிக்கிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” அவர்கள் பின்வரும் அறிவுரையையும் பின்பற்றுகிறார்கள்: “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.” (ரோமர் 12:21) இந்த அருமையான மனப்பான்மைக்கும் இன்று உலகெங்கும் காணப்படுகிற பழிவாங்கும் மனப்பான்மைக்கும் எவ்வளவு வித்தியாசம்! உண்மையான கிறிஸ்தவ அன்பு, பழிவாங்கும் எண்ணத்தைச் சமாளித்து, ‘குற்றத்தை மன்னிக்க’ நமக்கு உதவுகிறது; ஏனெனில், அன்பு “தீங்கைக் கணக்கு வைக்காது.”1 கொரிந்தியர் 13:5.

அப்படியென்றால், நாம் குற்றச்செயலுக்கு ஆளாகியிருந்தாலோ வேறு ஏதாவது விதத்தில் அச்சுறுத்தப்பட்டிருந்தாலோ பேசாமல் அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? இல்லவே இல்லை! “தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று பவுல் சொன்னபோது, ஒரு கிறிஸ்தவர் எல்லாத் தீமையையும் தாங்கிக்கொண்டு உயிரைத் தியாகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டுமென அவர் அர்த்தப்படுத்தவில்லை. உண்மையில், தாக்கப்படும்போது நம்மைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது. ஒருவேளை, உங்களுக்குக் கெடுதல் செய்யப்படுகையில் அல்லது உங்களுடைய சொத்துக்கள் பறிக்கப்படுகையில் நீங்கள் போலீஸை அழைக்கலாம். பணியிடத்திலோ பள்ளியிலோ பிரச்சினை என்றால் உயர் அதிகாரிகளின் உதவியை நாடலாம்.ரோமர் 13:3, 4.

என்றாலும், இந்த உலகில் நீதி நியாயம் கிடைப்பது அரிது என்பதை நினைவில் வையுங்கள். சொல்லப்போனால், அநேகர் வாழ்நாளெல்லாம் நீதி நியாயத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிறார்கள்; அவர்களுக்கு மனக்கசப்பும் வன்மமுமே மிஞ்சுகின்றன.

மக்கள் கொஞ்சமும் ஒற்றுமை இல்லாமல் ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டும் பழிவாங்கிக்கொண்டும் இருக்க வேண்டுமென்றே சாத்தான் விரும்புகிறான். (1 யோவான் 3:7, 8) ஆகவே, பைபிளிலுள்ள பின்வரும் வார்த்தைகளை மனதில் வைப்பது மிகச் சிறந்தது: “அன்புக் கண்மணிகளே, ‘பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலடி கொடுப்பேன் என்று யெகோவா சொல்கிறார்’ என எழுதப்பட்டுள்ளதால், நீங்கள் பழிக்குப் பழிவாங்காமல் அதைக் கடவுளுடைய கடுங்கோபத்திற்கு விட்டுவிடுங்கள்.” (ரோமர் 12:19) பிரச்சினையை யெகோவா பார்த்துக்கொள்ளும்படி விட்டுவிட்டால், வேதனை, வன்மம், வன்முறை ஆகியவற்றிலிருந்து நாம் விடுபெறலாம்.நீதிமொழிகள் 3:3-6. (w09 09/01)

[பக்கம் 12-ன் சிறுகுறிப்பு]

“உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்”; “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்”

[பக்கம் 13-ன் படங்கள்]

அன்பு “தீங்கைக் கணக்கு வைக்காது.”—1 கொரிந்தியர் 13:5.