Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?

யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?

உபாகமம் 10:12, 13

கீழ்ப்படிவதா வேண்டாமா எனத் தீர்மானிப்பது எப்போதுமே சுலபம் அல்ல. ஒரு முதலாளி கடுகடுவென்று நடந்துகொண்டாலோ அளவுக்குமீறி அதிகாரம் செய்தாலோ வேலையாட்கள் வேண்டாவெறுப்போடுதான் அவருக்குக் கீழ்ப்படிவார்கள். ஆனால், யெகோவா தேவன் அதற்கு நேர்மாறானவர்; அவரை வணங்குவோர் மனப்பூர்வமாக அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஏன்? இதற்குப் பதிலைத் தெரிந்துகொள்ள, உபாகமம் 10:12, 13-ல் உள்ள மோசேயின் வார்த்தைகளைச் சற்று ஆராய்ந்து பார்க்கலாம். a

கடவுள் எதைக் கேட்கிறார் என்பதை மோசே சுருக்கமாகக் குறிப்பிட்டபோது, “எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” என்ற சிந்தனையைத் தூண்டும் கேள்வியைக் கேட்டார். (வசனம் 13) நம்மிடம் எதை வேண்டுமானாலும் கேட்கக் கடவுளுக்கு உரிமை இருக்கிறது. அவர்தான் சர்வலோகப் பேரரசரும் உயிர் அளிப்பவரும் உயிர் காப்பவரும் ஆயிற்றே! (சங்கீதம் 36:9; ஏசாயா 33:22) நம்மிடம் கீழ்ப்படிதலைக் கேட்டு வாங்க யெகோவாவுக்குச் சகல உரிமையும் இருக்கிறது; என்றாலும், கட்டாயத்தினால் நாம் கீழ்ப்படியும்படி அவர் எதிர்பார்ப்பதில்லை. அப்படியென்றால், அவர் எதை எதிர்பார்க்கிறார்? ‘இருதயப்பூர்வமான கீழ்ப்படிதலை’ எதிர்பார்க்கிறார்.—ரோமர் 6:17.

அவருக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிய எவை நம்மைத் தூண்டும்? முதல் அம்சத்தைச் சுட்டிக்காட்டி மோசே இவ்வாறு சொன்னார்: ‘உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்பட’ வேண்டும். b (வசனம் 12) இந்தப் பயம், தண்டனை கிடைத்துவிடுமோ என்று அஞ்சி நடுங்குவதைக் குறிப்பதில்லை; மாறாக, கடவுள் மீதும் அவருடைய நெறிமுறைகள் மீதும் பயபக்தி காட்டுவதைக் குறிக்கிறது. கடவுள்மீது நமக்கு ஆழ்ந்த பக்தி இருந்தால், அவருக்குப் பிடிக்காததைச் செய்ய மாட்டோம்.

என்றாலும், கடவுளுக்குக் கீழ்ப்படிய எது நம்மை முக்கியமாகத் தூண்ட வேண்டும்? “அவரிடத்தில் [யெகோவாவிடத்தில்] அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவி” என்று மோசே குறிப்பிட்டார். (வசனம் 12) கடவுள்மீதான அன்பு வெறும் ஓர் உணர்ச்சியைக் குறிப்பதில்லை. ஒரு புத்தகம் விளக்குகிறபடி, “உணர்ச்சிகளைக் குறிக்கும் எபிரெய வினைச்சொற்கள் சிலசமயங்களில் அந்த உணர்ச்சிகளால் விளைகிற செயல்களையும்கூட குறிக்கின்றன.” கடவுள்மீது அன்பு காட்டுவதென்பது, அவரிடம் “அன்பாக நடந்துகொள்வதை” அர்த்தப்படுத்துவதாக அதே புத்தகம் சொல்கிறது. ஆக, நாம் உண்மையிலேயே கடவுள்மீது அன்பு வைத்திருந்தால், எப்போதும் அவரது விருப்பப்படி நடந்துகொள்வோம்.—நீதிமொழிகள் 27:11.

நாம் கடவுளுக்கு எந்தளவு கீழ்ப்படிய வேண்டும்? ‘அவரது வழிகளிலெல்லாம் நடக்க’ வேண்டுமென மோசே சொன்னார். (வசனம் 12) ஆகவே, யெகோவா நம்மிடம் கேட்பதையெல்லாம் நாம் செய்ய வேண்டும்; இதையே அவர் எதிர்பார்க்கிறார். இவ்வாறு முழுமையாகக் கீழ்ப்படிவதால் நமக்கு நன்மை கிடைக்காமல் போய்விடுமா? அதற்கு வாய்ப்பே இல்லை.

நாம் மனப்பூர்வமாகக் கீழ்ப்படியும்போது ஆசீர்வாதங்களைப் பெறுவோம். “நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளை . . . உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும்” என்று மோசே சொன்னார். (வசனம் 13) ஆம், யெகோவாவின் ஒவ்வொரு கற்பனையும், அதாவது அவர் நம்மிடம் கேட்கிற அனைத்தும், நம் நன்மைக்கே! இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) எனவே, நமக்கு நிரந்தர நன்மை அளிக்கும் கட்டளைகளை மட்டுமே அவர் தந்திருக்கிறார். (ஏசாயா 48:17) யெகோவா நம்மிடம் கேட்கிற அனைத்தையும் நாம் செய்யும்போது, இக்காலத்தில் பல வேதனைகளைத் தவிர்ப்போம், எதிர்காலத்திலும் அவரது அரசாங்கத்தில் முடிவில்லாத ஆசீர்வாதங்களைப் பெறுவோம். c

யெகோவா நம்மிடம் கேட்கிற விஷயங்களைப் பொறுத்ததில், கீழ்ப்படிவதா வேண்டாமா என்ற தயக்கத்திற்கே இடமில்லை; கீழ்ப்படிவதுதான் ஒரே ஞானமான செயல். முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் கீழ்ப்படிவது எப்போதுமே சிறந்தது. அப்படி உண்மையோடு கீழ்ப்படிந்து நடப்பது, நம்முடைய நலனில் அக்கறையுள்ள அன்பான கடவுளாகிய யெகோவாவிடம் இன்னும் நெருங்கிவர உதவுகிறது. (w09-E 10/01)

[அடிக்குறிப்புகள்]

a மோசே இந்த வார்த்தைகளைப் பூர்வ இஸ்ரவேலருக்குச் சொன்னபோதிலும், அதிலுள்ள நியமம் இன்று கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் அனைவருக்குமே பொருந்துகிறது.—ரோமர் 15:4.

b தேவபயமே கடவுளுடைய ஊழியர்களுக்கு வழிகாட்டும் நெறியாக இருக்க வேண்டுமென உபாகமப் புத்தகம் முழுவதிலும் மோசே வலியுறுத்துகிறார்.—உபாகமம் 4:9; 6:13, 24; 8:6; 13:4; 31:12, 13.

c கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் மூன்றாம் அதிகாரத்தைப் பாருங்கள்; அதன் தலைப்பு, “பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?