Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப வாழ்க்கையைப் பற்றி . . .

குடும்ப வாழ்க்கையைப் பற்றி . . .

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்

குடும்ப வாழ்க்கையைப் பற்றி . . .

திருமணத்தைக் குறித்த என்ன கண்ணோட்டம் குடும்பத்தில் சந்தோஷம் காண வழிசெய்கிறது?

திருமணம் ஒரு புனித பந்தம். விவாகரத்து செய்வது சரியா என இயேசுவிடம் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்: “கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதனால், அவர்கள் இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பார்கள். எனவே, கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும். . . . பாலியல் முறைகேட்டைத் தவிர, வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்.” (மத்தேயு 19:4-6, 9) கணவனும் மனைவியும் இயேசுவின் இந்த ஆலோசனையைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது குடும்பத்தில் எல்லாருமே பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் உணருவார்கள்.

கடவுள் மீதுள்ள அன்பு குடும்ப சந்தோஷத்திற்கு வழிசெய்வது ஏன்?

இயேசு இவ்வாறு சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் தலைசிறந்த கட்டளை, முதலாம் கட்டளை.” இரண்டாவது முக்கிய கட்டளை என்ன? “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:37-39) சக மனிதர் என்பது உங்களோடு வாழும் குடும்பத்தாரையும் குறிக்கிறது. ஆகவே, கடவுளோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதுதான் குடும்ப மகிழ்ச்சிக்கு வழி; ஏனென்றால், கடவுள்மீது அன்பு காட்டுவது ஒருவருக்கொருவர் அன்பு காட்டத் தூண்டுகிறது.

கணவனும் மனைவியும் எப்படி ஒருவரையொருவர் சந்தோஷப்படுத்தலாம்?

இயேசுவின் முன்மாதிரியைக் கணவன் பின்பற்றும்போது தன் மனைவியைச் சந்தோஷப்படுத்தலாம். இயேசு அடையாள அர்த்தமுடைய தம் மனைவியிடம், அதாவது சபையிடம், சுயதியாக அன்பைக் காட்டினார். (எபேசியர் 5:25) தாம் ‘மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு வந்தார்’ என்று சொன்னார். (மத்தேயு 20:28) அவர் தம்முடைய சீடர்களின் மீது சர்வாதிகாரம் செய்யவில்லை, அவர்களிடம் கடுகடுப்பாகவும் நடந்துகொள்ளவில்லை; மாறாக, அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்தார். (மத்தேயு 11:28) ஆகவே, கணவர்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் பயனடையும் விதத்தில் தங்களுடைய அதிகாரத்தை அன்புடன் செலுத்த வேண்டும்.

மனைவிகளும்கூட இயேசுவின் உதாரணத்திலிருந்து பயனடையலாம். “கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்” என பைபிள் சொல்கிறது. “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்” என்றும் அது குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 11:3) கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை இயேசு மட்டமாக நினைக்கவில்லை. தம்முடைய தகப்பன்மேல் அவருக்கு மிகுந்த மதிப்புமரியாதை இருந்தது. ‘நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என அவர் சொன்னார். (யோவான் 8:29) கடவுள் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் தன் கணவரின் தலைமை ஸ்தானத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிற மனைவி, தன் குடும்பத்தின் சந்தோஷத்திற்காக மிகவும் பாடுபடுகிறாள்.

பிள்ளைகளை இயேசு கருதிய விதத்திலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பிள்ளைகளோடு இயேசு நேரம் செலவிட்டார்; அவர்களுடைய எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் அக்கறை காட்டினார். ஒருமுறை, இயேசுவிடம் கைக்குழந்தைகள் கொண்டுவரப்பட்டபோது அவர்களை “தம்மிடம் கொடுக்கும்படி” சொன்னார்; பின்பு சீடர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்” என்று சொன்னார். (லூக்கா 18:15, 16) ஒருசமயம், இயேசு மீதிருந்த விசுவாசத்தைப் பற்றி சிறுவர்கள் சிலர் வெளிப்படையாகச் சொன்னதை அங்கிருந்த மக்கள் குறைகூறினார்கள். ஆனால், இயேசு அந்தச் சிறுவர்களைப் பாராட்டும் விதத்தில், “‘குழந்தைகளுடைய வாயினாலும் பால்மறவாப் பிஞ்சுகளுடைய வாயினாலும் உமக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்’ என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என அம்மக்களிடம் கேட்டார்.—மத்தேயு 21:15, 16.

இயேசுவிடமிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பிள்ளைகள் ஆன்மீகக் காரியங்களில் ஆர்வமாயிருப்பதன் அவசியத்தை இயேசுவின் சிறந்த உதாரணம் காட்டுகிறது. அவருக்கு 12 வயது இருந்தபோது, அவரைத் தேடி வந்த பெற்றோர் “அவரை ஆலயத்தில் கண்டுபிடித்தார்கள்; அவர் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டும் அவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் இருந்தார்.” அதன் விளைவு? “அவருடைய புத்திக்கூர்மையைக் கண்டும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த எல்லாருமே மலைத்துப்போனார்கள்.” (லூக்கா 2:42, 46, 47) ஆனாலும், இயேசுவுக்கு இருந்த அறிவு அவரைத் தலைக்கனம் பிடித்தவராக ஆக்கிவிடவில்லை. மாறாக, பெற்றோரிடம் மரியாதையோடு நடந்துகொள்ளத் தூண்டியது. அவர் “தொடர்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்” என பைபிள் சொல்கிறது.—லூக்கா 2:51. (w09-E 11/01)

கூடுதல் தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? a புத்தகத்தில் 14–ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.