Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள் புராட்டஸ்டன்ட் மதத்தவரா?

யெகோவாவின் சாட்சிகள் புராட்டஸ்டன்ட் மதத்தவரா?

வாசகரின் கேள்வி

யெகோவாவின் சாட்சிகள் புராட்டஸ்டன்ட் மதத்தவரா?

யெகோவாவின் சாட்சிகள் தங்களை புராட்டஸ்டன்ட் மதத்தவராகக் கருதுவதில்லை. ஏன்?

16-ஆம் நூற்றாண்டின்போது, ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக ஐரோப்பாவில் உருவானதே புராட்டஸ்டன்ட் மதம். “புராட்டஸ்டன்ட்” என்ற இந்தப் பெயர், 1529-ல் ஷ்பையர் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் மார்டின் லூதரின் ஆதரவாளர்களுக்கு முதன்முதலில் சூட்டப்பட்டது. அது முதற்கொண்டு, இந்த மதச் சீர்திருத்த இயக்கத்தின் கொள்கைகளையும் லட்சியங்களையும் பின்பற்றுகிற அனைவரும் இப்பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். மெரியாம்-வெப்ஸ்டர்ஸ் கொலிஜியேட் டிக்ஷ்னரியின் 11-ஆம் பதிப்பின்படி, புராட்டஸ்டன்ட் ‘பிரிவினர், போப் சகல அதிகாரத்தையும் பெற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பர், சீர்திருத்த கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பர். உதாரணத்திற்கு, விசுவாசத்தினாலேயே இரட்சிப்பு கிடைக்கும், எல்லா விசுவாசிகளும் குருக்களே, பைபிள் சொல்வது மட்டும்தான் உண்மை, அதுவே தலைசிறந்த நூல் ஆகிய கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பர்.’

யெகோவாவின் சாட்சிகளும்கூட, போப் சகல அதிகாரத்தையும் பெற்றவர் என்பதை மறுக்கிறார்கள், பைபிள்தான் தலைசிறந்த நூல் என்பதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறார்கள்; என்றாலும், புராட்டஸ்டன்ட் மதத்தினரிலிருந்து பல முக்கிய விஷயங்களில் அவர்கள் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் யெகோவாவின் சாட்சிகளை “தனித்தன்மை வாய்ந்தவர்கள்” என குறிப்பிடுகிறது. இப்போது, அவர்கள் எந்த மூன்று விஷயங்களில் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

முதலாவதாக, புராட்டஸ்டன்ட் மதத்தவர் கத்தோலிக்கருடைய சில வழிபாட்டு முறைகளை நிராகரித்தபோதிலும் அவர்களுடைய சில நம்பிக்கைகளைத் தக்கவைத்துக் கொண்டார்கள்; உதாரணமாக, திரித்துவம், எரிநரகம், அழியாத ஆத்துமா போன்ற நம்பிக்கைகளைத் தக்கவைத்துக் கொண்டார்கள். என்றாலும், அந்த நம்பிக்கைகள் பைபிளுக்கு முரணாக இருப்பதோடு கடவுளைப் பற்றிய தவறான கருத்தைப் பரப்புவதாகவும் யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்கள்.

இரண்டாவதாக, யெகோவாவின் சாட்சிகளுடைய குறிக்கோள் ‘புராட்டஸ்ட்’ செய்வதல்ல, அதாவது எதிர்ப்பு தெரிவிப்பதல்ல, மாறாக பிரயோஜனமானதைப் போதிப்பதே. அவர்கள் பைபிளின் பின்வரும் ஆலோசனைக்கு மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்: “ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்; அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும், மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும்.” (2 தீமோத்தேயு 2:24, 25, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவின் சாட்சிகள், பைபிள் சொல்வதற்கும் அநேக மத அமைப்புகள் கற்பிப்பதற்கும் இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவது உண்மைதான். ஆனாலும், பிற மத அமைப்புகளைச் சீர்திருத்துவது அவர்களுடைய குறிக்கோள் அல்ல. மாறாக, கடவுளையும் அவருடைய புத்தகமாகிய பைபிளையும் பற்றித் திருத்தமாக அறிந்துகொள்ள நல்மனமுள்ள ஆட்களுக்கு உதவுவதே அவர்களுடைய குறிக்கோள். (கொலோசெயர் 1:9, 10) யெகோவாவின் சாட்சிகள் சொல்வதைப் பிற மதத்தவர் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளாதபோது அவர்கள் வீண் வாக்குவாதம் செய்வதில்லை.—2 தீமோத்தேயு 2:23.

மூன்றாவதாக, புராட்டஸ்டன்ட் இயக்கத்தில் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உருவாகியிருப்பதுபோல் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இல்லை; அவர்கள் உலகெங்கும் ஒன்றுபட்ட ஒரே குடும்பமாக இருந்து வந்திருக்கிறார்கள். பைபிள் போதனை என்று வருகையில், 230-க்கும் அதிகமான நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், ‘முரண்பாடில்லாமல் பேசும்படி’ அப்போஸ்தலன் பவுல் சொன்ன அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள், ‘ஒரே மனதுடனும் ஒரே யோசனையுடனும் முழுமையாக ஒன்றுபட்டிருக்கிறார்கள்.’ (1 கொரிந்தியர் 1:10) அவர்கள் தங்களுடைய சக வணக்கத்தாரோடு சேர்ந்து, ‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும்’ பாடுபடுகிறார்கள்.—எபேசியர் 4:3. (w09-E 11/01)