Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் அக்கறையுள்ளவரே நமக்கு எப்படித் தெரியும்?

கடவுள் அக்கறையுள்ளவரே நமக்கு எப்படித் தெரியும்?

கடவுள் அக்கறையுள்ளவரே நமக்கு எப்படித் தெரியும்?

கடவுளுக்கு நம்மீது அன்பு இருந்தால், நாம் ஏன் இந்தளவு துன்பப்படுகிறோம்? ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் எழுந்திருக்கிற இந்தக் கேள்வி, பழமையானது மட்டுமல்ல முக்கியமானதும்கூட. உங்களுக்கு ஒருவர்மீது அன்பு இருந்தால் அவர் துன்பப்படுவதைக் காண விரும்ப மாட்டீர்கள், அல்லவா? ஒருவேளை அவர் கஷ்டத்திலிருந்தால் அவருக்கு உதவ முயற்சி செய்வீர்கள், அல்லவா? இன்று உலகில் நிறைந்திருக்கும் துன்பத்தைப் பார்க்கும்போது மக்கள்மீது கடவுளுக்கு அக்கறையே இல்லை என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அதனால், கடவுள் அன்பும் அக்கறையும் உள்ளவர்தான் என்பதற்கான அத்தாட்சியை நாம் முதலில் தெரிந்துகொள்வது முக்கியம்.

படைப்புகள் கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி

யெகோவா தேவனே, ‘பரலோகத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்.’ (அப்போஸ்தலர் 4:24) அவருடைய படைப்புகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, நம்மீது அவருக்கு அக்கறை இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் நிச்சயம் வருவோம். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் காரியங்களைச் சிந்தித்துப் பாருங்கள். ருசியான உணவு உங்களுக்குப் பிடிக்குமா? நாம் உயிர்வாழ யெகோவா ஒரேவொரு உணவு வகையைக் கொடுத்திருக்கலாம். ஆனால், நாம் ருசியாகச் சாப்பிடுவதற்காக, அவர் கணக்கு வழக்கில்லாத உணவு வகைகளைப் படைத்தார். அதேபோல், நாம் வாழ்க்கையை ரசித்து மகிழ்வதற்கு, மனதைக் கொள்ளை கொள்ளும் மரங்களாலும், பூக்களாலும், இயற்கைக் காட்சிகளாலும் இந்தப் பூமியை அலங்கரித்திருக்கிறார்.

நாம் படைக்கப்பட்ட விதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். நாம் உயிர்வாழ்வதற்கு, நகைச்சுவை உணர்வும், இசையை ரசிக்கும் திறனும், அழகைப் பாராட்டும் திறமையும் அவசியமில்லைதான்; ஆனால், நம் வாழ்க்கையை இனிமையாக்குவதற்கு அவற்றையெல்லாம் கடவுள் பரிசாகக் கொடுத்திருக்கிறார். இப்போது, மற்றவர்களுடன் உங்களுக்குள்ள உறவை எண்ணிப் பாருங்கள். நல்ல நண்பர்களின் அன்பான தோழமையை யார்தான் விரும்ப மாட்டார்? அல்லது, உயிருக்கு உயிராய் நேசிக்கிற ஒருவர் கட்டித் தழுவுவதை யார்தான் விரும்ப மாட்டார்? அன்பு காட்டுகிற கடவுள் தந்திருக்கும் பரிசுதான், அன்பு காட்டும் திறன்! அந்தத் திறனுடன் மனிதரைக் கடவுள் படைத்திருப்பதால், அன்பு அவருடைய பண்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

கடவுள் அன்பானவர் —பைபிள் உறுதியளிக்கிறது

கடவுள் அன்பாகவே இருக்கிறாரென பைபிள் நமக்குச் சொல்கிறது. (1 யோவான் 4:8) படைப்பில் மட்டுமல்ல, அவருடைய புத்தகமான பைபிளிலும் அவருடைய அன்பு வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு, அது நல்லாரோக்கியத்திற்கு உதவும் அறிவுரைகளைக் கொடுக்கிறது; எந்தக் காரியத்திலும் மிதமிஞ்சிப் போகாதிருக்க உற்சாகப்படுத்துகிறது; குடிவெறியையும் பெருந்தீனியையும் தவிர்க்கும்படி எச்சரிக்கிறது.—1 கொரிந்தியர் 6:9, 10.

அதோடு, அது மற்றவர்களுடன் எப்படி ஒத்துப்போவது என்பதற்கான ஞானமான அறிவுரையைக் கொடுக்கிறது; மற்றவர்களிடம் அன்பு காட்டும்படியும், அவர்களை மதிப்பு மரியாதையோடும் கண்ணியத்தோடும் கருணையோடும் நடத்தும்படியும் உற்சாகப்படுத்துகிறது. (மத்தேயு 7:12) துன்பத்திற்குக் காரணமான பேராசை, பொறாமை போன்ற மனப்பான்மைகளையும் வம்பளத்தல், மணத்துணைக்குத் துரோகம், கொலை போன்ற செயல்களையும் அது கண்டனம் செய்கிறது. பைபிளில் காணப்படும் அருமையான அறிவுரைக்கு இசைய வாழ்வதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்தால், இந்த உலகில் நிச்சயம் இந்தளவு துன்பம் இருக்காது.

கடவுள் தம்முடைய மகன் இயேசுவை மனிதருக்கு மீட்பு பலியாகக் கொடுப்பதன் மூலம் தம்முடைய அன்பை மிகப் பெரிய அளவில் வெளிக்காட்டியிருக்கிறார். “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று யோவான் 3:16 சொல்கிறது. இவ்வாறு, மரணத்திற்கும் எல்லா விதமான துன்பத்திற்கும் நிரந்தரமாக முடிவுகட்ட யெகோவா ஏற்கெனவே ஏற்பாடு செய்திருக்கிறார்.—1 யோவான் 3:8.

ஆகவே, யெகோவா நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால், நாம் துன்பப்படுவதைக் காண அவர் விரும்புவதில்லை என்ற முடிவுக்கு வருவதுதான் நியாயமாக இருக்கும். துன்பத்தைத் தீர்ப்பதற்கு அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். அதைக் குறித்து நாம் ஊகிக்க வேண்டியதில்லை; ஏனென்றால், கடவுள் துன்பத்தை எப்படித் தீர்க்கப்போகிறார் என பைபிள் நமக்குத் திட்டவட்டமாகச் சொல்கிறது. (w09-E 12/01)

[பக்கம் 4-ன் படம்]

அன்பு காட்டுகிற கடவுள் தந்திருக்கும் பரிசுதான், அன்பு காட்டும் திறன்