Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்

நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்

யோசுவா 1:6-9

தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றே, அதாவது திருப்தியும் சந்தோஷமும் காண வேண்டும் என்றே, பாசமுள்ள பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். நம்முடைய பரலோகத் தகப்பனான யெகோவாவும்கூட அவ்வாறே ஆசைப்படுகிறார்; பூமியிலுள்ள அவருடைய பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறார். வெற்றிக்கான வழியைச் சொல்வதன் மூலம் தம்முடைய கனிவான அக்கறையை வெளிக்காட்டுகிறார். யோசுவாவிடம் அவர் சொன்ன வார்த்தைகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை யோசுவா 1:6-9-ல் நீங்கள் பார்க்கலாம்.

இந்த வசனங்களின் பின்னணியைப் புரிந்துகொள்வதற்கு இங்குள்ள படத்தைப் பாருங்கள். மோசே இறந்த பிறகு, லட்சக்கணக்கான இஸ்ரவேலருக்கு யோசுவா தலைவரானார். அவர்களுடைய முன்னோர்களுக்குக் கடவுள் வாக்குறுதியளித்த தேசத்திற்குள் நுழைய அவர்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில், யோசுவாவுக்குக் கடவுள் சில அறிவுரைகளை வழங்கினார். அவற்றைக் கடைப்பிடித்தால் யோசுவா வெற்றி பெறுவார் என்றும் சொன்னார். அந்த அறிவுரைகள் யோசுவாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்துகின்றன. அவற்றைக் கடைப்பிடித்தால் நாமும்கூட வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.ரோமர் 15:4.

பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி யோசுவாவிடம் யெகோவா சொன்னார்—ஒரு முறை மட்டுமல்ல, மூன்று முறை சொன்னார். (வசனங்கள் 6, 7, 9) அப்படியானால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை வெற்றிகரமாக வழிநடத்த யோசுவா பலத்தோடும் திடமனதோடும் செயல்பட வேண்டியிருந்தது. என்றாலும், இந்த அருமையான குணங்களை வளர்த்துக்கொள்ள அவர் என்ன செய்ய வேண்டியிருந்தது?

கடவுளுடைய சக்தியால் அருளப்பட்ட வார்த்தையிலிருந்து தைரியத்தையும் பலத்தையும் அவர் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிரு” என யெகோவா சொன்னார். (சனம் 7) அந்தச் சமயத்தில், பைபிளின் சில புத்தகங்களே யோசுவாவிடம் இருந்தன. a அவர் வெற்றி பெறுவதற்கு அந்தப் புத்தகங்களை வைத்திருப்பது மட்டுமே போதுமானதாய் இருக்கவில்லை; இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

முதலாவதாக, யோசுவா தன் இருதயத்தைக் கடவுளுடைய வார்த்தையினால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. “இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக” என்று அவரிடம் யெகோவா சொன்னார். (வசனம் 8) ‘தியானி’ என்பதற்கு மூல மொழியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையைப் பற்றி ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நியாயப்பிரமாணத்தை ‘தாழ்ந்த குரலில்’ வாசிக்கும்படி யோசுவாவிடம் கடவுள் கட்டளையிட்டார்.” கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிப்பதும் தியானிப்பதும் வரவிருந்த சவால்களைச் சமாளிக்க யோசுவாவுக்கு உதவும்.

இரண்டாவதாக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை யோசுவா கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ‘இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிரு; . . . அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் [அதாவது, வெற்றி பெறுவாய்]’ என்று யெகோவா அவரிடம் சொன்னார். (வசனம் 8) கடவுளுடைய சித்தத்தின்படி நடந்ததால்தான் யோசுவா வெற்றி பெற்றார். ஆம், கடவுளுடைய சித்தம் எப்போதுமே வெற்றி பெறும்!ஏசாயா 55:10, 11.

யெகோவா சொன்ன அறிவுரைக்கு யோசுவா கீழ்ப்படிந்தார். இதனால், யெகோவாவின் உண்மை ஊழியனாக வாழ்க்கையில் திருப்தியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தார்.யோசுவா 23:14; 24:15.

யோசுவாவைப் போலவே நீங்களும் வாழ்க்கையில் திருப்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க விரும்புகிறீர்களா? வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார். ஆனால், நீங்கள் அவருடைய வார்த்தையான பைபிளை வைத்திருந்தால் மட்டும் போதாது. யெகோவாவுக்கு நீண்டகாலமாகச் சேவை செய்கிற ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “பைபிளில் உள்ள வார்த்தைகளை எடுத்து, உங்கள் இருதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.” எனவே, கடவுளுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் தவறாமல் நிரப்புங்கள், கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்; அப்போது, யோசுவாவைப் போலவே நீங்களும் ‘உங்கள் வழியை வாய்க்கப் பண்ணுவீர்கள்.’ ஆம், உங்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றி பெறுவீர்கள்! (w09-E 12/01)

[அடிக்குறிப்பு]

a மோசேயின் ஐந்து புத்தகங்கள் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்), யோபு புத்தகம், ஓரிரு சங்கீதங்கள் ஆகியவை மட்டுமே யோசுவாவின் காலத்தில் எழுதப்பட்டிருந்தன.