Skip to content

குடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்

குடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்

குடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்

ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்க வேண்டிய டோனியின் வாழ்க்கை, ரொம்ப கசப்பானதாக மாறிவிட்டது. காரணம்? குடிப்பழக்கம்தான்! ஆனால், குடிப்பழக்கத்துக்கு தான் அடிமை என்பதை அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஏனென்றால், எவ்வளவு குடித்தாலும் தள்ளாடும் நிலைக்கு அவர் போகவில்லை. அதனால், ‘எல்லாமே என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு, நான் நல்லாதான் இருக்கேன்’ என்று டோனி நினைத்தார். அவர் யோசித்தது சரியா?

அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் அவரால் சரியாக யோசிக்க முடியாமல் போய்விட்டது. டோனிக்கே தெரியாமல் அவருடைய மூளை மழுங்கிவிட்டது. பொதுவாக, ஒருவரின் உடல்நிலை… எண்ணங்கள்… உணர்ச்சிகள்… என எல்லாமே நல்ல நிலையில் இருக்க மூளைதான் உதவுகிறது. ஆனால், டோனி அதிகமாகக் குடித்ததால், அவர் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார் என்பதை அவருடைய மூளையால் கணிக்க முடியவில்லை.

டோனி தன்னையே ஏமாற்றிக்கொண்டதற்கு இரண்டாவது காரணம், குடியை நிறுத்த வேண்டும் என்ற விருப்பம் இல்லாததுதான்! ஆலன் என்ற ஒருவருக்கும் இதே பிரச்சினைதான் இருந்தது. இவரும் ஆரம்பத்தில், தான் குடிக்கு அடிமை என்பதை ஒத்துக்கொள்ளவே இல்லை. “நான் யாருக்கும் தெரியாம குடிச்சேன். குடிக்குறதுக்காக நொண்டி சாக்கு சொல்வேன். நான் அதிகமா குடிச்சாலும் வெளிய காட்டிக்க மாட்டேன். எனக்கு இருந்ததெல்லாம் ஒரே லட்சியம்தான்—குடிக்குறத விட்டுடகூடாது!” என்கிறார் ஆலன். டோனியும் ஆலனும் “குடி-மகன்கள்” என்பது மற்றவர்களுக்கு பளிச்சென்று தெரிந்தது. ஆனால், அவர்கள் இருவருக்கும் அப்படித் தோன்றவில்லை. குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் இருவருமே ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டியிருந்தது. அது என்ன?

உடனே மாற்றம் செய்யுங்கள்!

குடிப்பழக்கத்தை விட்டுவிட நிறைய பேருக்கு, இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் உதவியிருக்கின்றன: “உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.”—மத்தேயு 5:29.

நம்மை நாமே காயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. அதற்குப்பதிலாக, யெகோவாவோடு இருக்கிற நட்பைக் கெடுக்கும் எந்தவொரு விஷயத்தையும் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதைப் புரிய வைக்கத்தான் இயேசு இப்படிச் சொன்னார். உண்மைதான், ஒரு உடல் உறுப்பை பிடுங்கி எறியும்போது எந்தளவுக்கு வலிக்குமோ, அந்தளவுக்கு குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கும்போதும் வலிக்கும். இருந்தாலும் இப்படிச் செய்வது, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடாமல் இருக்க உதவும். நீங்கள் அதிகமாகக் குடிக்கிறீர்கள் என்று மற்றவர்கள் உங்களிடம் சொன்னால், குடிக்கும் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். * ஒருவேளை, அப்படிச் செய்வது கஷ்டமாக இருந்தால், அந்தப் பழக்கத்தை ஒரேயடியாக விட்டுவிட முடியுமா என்று பாருங்கள். அது கஷ்டமாகத்தான் இருக்கும்! ஆனால், வாழ்க்கையே நாசமாக ஆவதற்கு அந்த வலியை தாங்கிக்கொள்ளலாம், இல்லையா?

ஒருவேளை, நீங்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்கலாம். ஆனால், நிறைய குடிக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும்! அவை என்ன?

நீங்கள் செய்ய வேண்டியவை…

1. அடிக்கடி மனம்விட்டு ஜெபம் செய்யுங்கள். யெகோவா தேவனைப் பிரியப்படுத்த ஆசைப்படுகிறவர்கள், பைபிள் கொடுக்கும் இந்த ஆலோசனையின்படி கண்டிப்பாக செய்வார்கள்: “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.” (பிலிப்பியர் 4:6, 7) இந்த வசனத்தில் சொல்லியிருக்கிற சமாதானம் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால், எதைப் பற்றியெல்லாம் நீங்கள் ஜெபம் செய்யலாம்?

ஜெபம் செய்யும்போது, நீங்கள் குடிக்கு அடிமையாகி இருக்கிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வர மற்றவர்கள் அல்ல, முதலில் நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் ஒத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னென்ன முயற்சிகளை எடுக்கப்போகிறீர்கள் என்பதைக் கடவுளிடம் சொல்லும்போது, அவர் அந்த முயற்சிகளை ஆசீர்வதிப்பார். “ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது. ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 28:13) இயேசுவும்கூட இப்படி ஜெபம் செய்ய சொன்னார்: “சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள், பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.” (மத்தேயு 6:13) ஆனால், நீங்கள் ஜெபம் செய்வதோடு நிறுத்திக்கொள்ள கூடாது. பைபிளின் மூலம் கடவுள் என்ன பதில் கொடுக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

2. கடவுளுடைய வார்த்தை கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது. அது . . . இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும் சக்தி கொண்டது.” (எபிரெயர் 4:12) ஒருகாலத்தில் மொடாக் குடிகாரர்களாக இருந்தவர்களுக்கும் பைபிள் உதவி செய்திருக்கிறது. அவர்கள் பைபிளை தினமும் படித்து அதில் இருக்கும் விஷயங்களை ஆழமாக யோசித்தார்கள். இப்படிச் செய்ததால், குடிப்பழக்கத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. கடவுள்பக்தியுள்ள ஒரு கவிஞர் இப்படி எழுதினார்: “பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமல், . . . இருக்கிறவன் சந்தோஷமானவன். அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். . . . அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.”—சங்கீதம் 1:1-3.

நாம் ஏற்கெனவே பார்த்த ஆலனுக்கு யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படித்தது உதவியது. அவர் சொல்கிறார்: “பைபிளும் பைபிள்ல இருக்குற நியமங்களும்தான் குடிப்பழக்கத்த விடுறதுக்கு எனக்கு உதவி செஞ்சுது. அதுமட்டும் இல்லனா, இன்னைக்கு நான் செத்தே போயிருப்பேன்.”

3. சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ சபையில் இருக்கும் சிலர், ஒருகாலத்தில் குடிகாரர்களாகவும் மற்றவர்களைச் சபித்துப் பேசுகிறவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள், ‘கடவுளுடைய சக்தியால் சுத்தமாகக் கழுவப்பட்டார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9-11) எப்படி? சுயக்கட்டுப்பாடு என்ற குணத்தை வளர்த்துக்கொண்டது அவர்களுக்கு உதவியது. கடவுளுடைய சக்தி நம்மிடம் இருந்தால் இந்தக் குணத்தை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். அதனால்தான், ‘உங்களைச் சீரழிக்கிற குடிவெறியை விட்டுவிட்டு, எப்போதும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:18; கலாத்தியர் 5:21-23) “பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை . . . கொடுப்பார்!” என்ற வாக்குறுதியை இயேசுவும் கொடுத்திருக்கிறார். அதனால், “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்.”—லூக்கா 11:9, 13.

யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நினைக்கிறவர்கள் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள முடியும். தினமும் பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசிப்பதன் மூலமும், அடிக்கடி மனம்விட்டு ஜெபம் செய்வதன் மூலமும் உங்களால் அதை வளர்த்துக்கொள்ள முடியும். ஒருவேளை, நிறைய முயற்சி எடுத்தும் உங்களால் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் சோர்ந்துவிடாதீர்கள். பைபிளில் இருக்கும் இந்த வாக்குறுதியை யோசித்துப்பாருங்கள். “கடவுளுடைய சக்திக்காக விதைக்கிறவன் கடவுளுடைய சக்தியால் முடிவில்லாத வாழ்வை அறுவடை செய்வான். அதனால், நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல் இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.”—கலாத்தியர் 6:8, 9.

4. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) நீங்கள் அளவோடு குடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பதை உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். ‘குடித்து வெறிப்பது, குடித்துக் கும்மாளம் போடுவது, போட்டி போட்டுக்கொண்டு குடிப்பது’ போன்ற பழக்கங்களை நீங்கள் விடும்போது உங்கள் நண்பர்கள் சிலர் உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘எப்போதும் பழித்துப் பேசுவதற்குக்கூட’ வாய்ப்பிருக்கிறது என்று பைபிள் எச்சரிக்கிறது. (1 பேதுரு 4:3, 4) அதனால், அளவோடு குடிக்க வேண்டும் என்று நீங்கள் எடுத்திருக்கிற முடிவைக் கெடுக்கிற நண்பர்களோடு பழகுவதை நிறுத்திவிடுங்கள்.

5. எவ்வளவு குடிக்கப் போகிறீர்கள் என்பதை முன்பே முடிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் சொல்வதை வைத்தோ, இந்த ‘உலகத்தின் பாணியின்படியோ’ அந்த முடிவை எடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக, பைபிள் நியமங்களின் அடிப்படையில் அந்த முடிவை எடுங்கள். ஏனென்றால், பைபிள் இப்படிச் சொல்கிறது: “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.” (ரோமர் 12:2) பைபிள் நியமங்களின்படி முடிவு எடுத்தால், கடவுளுக்குப் பிடித்த மாதிரியும் வாழ்வீர்கள், சந்தோஷமாகவும் இருப்பீர்கள். சரி அப்படியென்றால், எது சரியான அளவு என்று எப்படி முடிவு செய்வது?

நீங்கள் குடிக்கும் அளவு, உங்களைத் தெளிவாக யோசிக்க முடியாமல் செய்கிறதா? அப்படியென்றால், அந்த அளவு ரொம்ப அதிகம். நீங்கள் எவ்வளவு குடித்தால் நிதானத்தை இழப்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அந்த எல்லைவரை போய்விடாதீர்கள். அதற்கு முன்பே நிறுத்திக்கொள்ளுங்கள். அந்த எல்லை என்னவென்பதை நேர்மையாக முடிவு செய்யுங்கள்.

6. வேண்டாம் என்று சொல்ல பழகிக்கொள்ளுங்கள். “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 5:37) நீங்கள் முடிவு செய்திருக்கும் எல்லையைத் தாண்டி ஒருவர் உங்களுக்கு மதுபானம் கொடுத்தால், அவரிடம் மரியாதையோடு வேண்டாம் என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். அப்படிச் சொல்லும்போது, பைபிளில் இருக்கும் இந்த நியமத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: “உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.”—கொலோசெயர் 4:6.

7. குடும்பத்திடமும் நண்பர்களிடமும் உதவி கேளுங்கள். யெகோவாவை நேசிக்கும் நண்பர்கள், கம்மியாக குடிக்க வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவை மதிப்பார்கள். அதனால், குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவச் சொல்லி அவர்களிடம் கேளுங்கள். “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. அப்போது, அவர்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும்.” (பிரசங்கி 4:9, 10; யாக்கோபு 5:14, 16) அமெரிக்காவில் இருக்கிற தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆன் ஆல்கஹால் அப்யூஸ் அண்டு ஆல்கஹாலிசம் இப்படிச் சொல்கிறது: “குடிப்பழக்கத்தைக் குறைத்துக்கொள்வது சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், குடும்பத்தில் இருப்பவர்களும் நண்பர்களும் கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொண்டால் உங்களால் முடியும்.”

8. முன்வைத்த காலைப் பின்வைக்காதீர்கள். “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். . . . விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.”—யாக்கோபு 1:22, 25.

குடிக்கு நீங்கள் அடிமையா—மீண்டுவர என்ன செய்யலாம்?

சிலர் அளவுக்கு அதிகமாகக் குடிப்பார்கள், ஆனால் குடிக்கு அடிமையாக இருக்க மாட்டார்கள். வேறு சிலர், அடிக்கடி அதிகமாகக் குடித்து அதற்கு அடிமையாகவே ஆகிவிடுவார்கள். குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவர்கள் ‘அது இல்லாம என்னால இருக்கவே முடியாது’ என்ற நிலைமையில் இருப்பார்கள். அதனால், அவர்களுடைய உடல்நிலையும் மனநிலையும்கூட பாதிக்கப்படலாம். இப்படிப்பட்டவர்களுக்கு, மனவலிமையோ ஆன்மீக உதவியோ இருந்தால் மட்டும் போதாது. டாக்டர்களின் உதவியும் தேவைப்படலாம். ஆலன் சொல்கிறார்: “குடிப்பழக்கத்த விடுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. குடிக்காம இருக்குறதுனால எனக்கு உடம்பு வலி இருந்துச்சு. அந்த வலி ரொம்ப கொடூரமா இருக்கும். அப்பதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுச்சு: எனக்கு கிடைச்ச ஆன்மீக உதவியோட சேத்து டாக்டர்களோட உதவியும் தேவைனு!”

குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வருவதற்கும், மதுபானம் பக்கமே திரும்பாமல் இருப்பதற்கும் நிறைய பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படும். * மதுபானம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் இவர்களுக்கு சில பின்விளைவுகள் வரலாம். அதனால், அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கலாம். வேறு சிலர், மதுபானத்தின்மேல் இருக்கும் ஏக்கத்தைக் குறைப்பதற்கும், அதைத் தொடாமல் இருப்பதற்கும் சில மருந்துகள்கூட எடுக்க வேண்டியிருக்கலாம். ஒருதடவை இயேசு இப்படிச் சொன்னார்: “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.” (மாற்கு 2:17) அற்புதங்களைச் செய்த இயேசுவே இதைச் சொல்லியிருக்கிறார் என்றால், மருத்துவ உதவியை எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்று யோசித்துப்பாருங்கள்!

கடவுள் தரும் ஆலோசனையால் வரும் பலன்கள்

குடிப்பழக்கத்தைப் பற்றி இதுவரை நாம் பார்த்த எல்லா ஆலோசனைகளும் கடவுள் தந்தவை. எப்போதும் நமக்கு சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். குடிப்பழக்கத்தை அடியோடு விட்டு 24 வருஷங்கள் கழித்து ஆலன் இப்படிச் சொல்கிறார்: “என்னாலயும் மாற முடியும்னு நினைக்கும்போது, என்னை சரிப்பண்ணனும்னு யெகோவா யோசிச்சிருக்காருனு நினைக்கும்போது, . . .” இதைச் சொல்லச்சொல்ல ஆலனுக்கு பழைய நினைவுகள் வந்தன. கண் கலங்கி கொண்டே தொண்டையை சரிசெய்துவிட்டு, “ம்ம், . . . யெகோவா என்னை புரிஞ்சுக்கிறாரு, என்மேல அக்கறை வெச்சிருக்காரு, எனக்கு தேவையான உதவியெல்லாம் செய்றாருனு தெரிஞ்சுக்கும்போது, எனக்கு சந்தோஷம் தாங்கல!”

நீங்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமையா? அப்படியென்றால், ‘அத என்னால விடவே முடியாது’ என்று நினைத்து சோர்ந்துவிடாதீர்கள். ஆலனும் அவரைப் போன்ற இன்னும் நிறைய பேரும், ஒருகாலத்தில் உங்களைப் போல்தான் இருந்தார்கள். ஆனால், குடிப்பழக்கத்தைக் குறைத்துக்கொள்ளவோ மொத்தமாக விட்டுவிடவோ அவர்களால் முடிந்திருக்கிறது. அதை நினைத்து இப்போது அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்! நீங்களும் கண்டிப்பாகச் சந்தோஷப்படுவீர்கள்!!

நீங்கள் கம்மியாக குடிக்க முடிவு எடுத்திருந்தாலும் சரி, சுத்தமாக குடிக்கவே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தாலும் சரி, கடவுள் உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான், இப்படி வாக்குக் கொடுத்திருக்கிறார்: “நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”—ஏசாயா 48:18.

[அடிக்குறிப்புகள்]

^ குடியின் பிடியில் சிக்கியிருக்கிறேனா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ இதுபோன்ற சிகிச்சைகளைக் கொடுப்பதற்கு நிறைய மருத்துவமனைகளும் மறுவாழ்வு மையங்களும் இருக்கின்றன. ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையையும் காவற்கோபுரம் சிபாரிசு செய்வது கிடையாது. எந்த மாதிரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். பைபிள் நியமங்களுக்கு எதிராக இல்லாத சிகிச்சைகளை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

[பெட்டி/படம்]

 குடியின் பிடியில் சிக்கியிருக்கிறேனா?

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

எப்போதும் குடிப்பதைவிட அதிகமாக குடிக்கிறேனா?

இப்போதெல்லாம் அடிக்கடி குடிக்கிறேனா?

இப்போதெல்லாம் அதிகமாக போதை ஏற்றும் மதுபானங்களை குடிக்கிறேனா?

கவலையையும் பிரச்சினையையும் மறப்பதற்காக குடிக்கிறேனா?

என்னுடைய ஃபிரெண்டோ குடும்பத்தில் இருக்கிறவர்களோ நான் அதிகமாகக் குடிப்பதாகச் சொல்லியிருக்கிறார்களா?

நான் குடிப்பதால் வீட்டிலோ, வேலையிலோ, பயணம் செய்யும்போதோ ஏதாவது பிரச்சினை ஆகியிருக்கிறதா?

ஒரு வாரம்கூட என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லையா?

குடிப்பழக்கம் இல்லாதவர்களோடு பழகுவது எனக்குக் கஷ்டமாக இருக்கிறதா?

நான் எவ்வளவு குடிக்கிறேன் என்பதை மற்றவர்களிடமிருந்து மறைக்கிறேனா?

இதில் ஏதாவது ஒரு கேள்விக்கோ நிறைய கேள்விகளுக்கோ ஆம் என்று நீங்கள் பதில் சொன்னால், குடிப்பழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அர்த்தம்!

[பெட்டி/படம்]

குடிப்பது சம்பந்தமாக எப்படி நல்ல முடிவுகள் எடுக்கலாம்?

குடிப்பதற்கு முன்பு இவற்றையெல்லாம் யோசித்துப்பாருங்கள்:

அவ்வப்போது நான் மதுபானத்தை எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா?

ஆலோசனை: குடிப்பதை உங்களால் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது என்றால் நீங்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது.

நான் எவ்வளவு குடிக்க வேண்டும்?

ஆலோசனை: குடிப்பதற்கு முன்பே எவ்வளவு குடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடுங்கள்; ஏனென்றால், குடிக்க ஆரம்பித்தப் பிறகு நிதானமாக யோசிக்க முடியாது.

எப்போதெல்லாம் நான் குடிப்பதை தவிர்க்க வேண்டும்?

ஆலோசனை: வண்டி ஓட்டுவதற்கு முன்போ, முழு கவனத்தோடு செய்ய வேண்டிய வேலையைச் செய்வதற்கு முன்போ, ஆன்மீக விஷயங்களைச் செய்வதற்கு முன்போ குடிக்காதீர்கள்; கர்ப்பமாக இருக்கும்போது அல்லது ஏதாவது சிகிச்சைக்காக சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது குடிக்காதீர்கள்.

நான் எங்கெல்லாம் குடிக்கக் கூடாது?

ஆலோசனை: பொதுவாக, குடித்துவிட்டு கும்மாளம் போடுகிற மாதிரியான இடங்களில் குடிக்காதீர்கள்; யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு இடத்துக்குப் போய் குடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். குடிப்பது தவறு என்று நினைக்கும் ஆட்களோடு இருக்கும்போது குடிக்காதீர்கள்.

யாரோடு நான் குடிக்கலாம்?

ஆலோசனை: குடும்பத்தில் இருப்பவர்களோடு அல்லது நல்ல நண்பர்களோடு குடிக்கலாம்; கெட்ட நண்பர்களோடு அல்லது அதிகமாகக் குடிக்கிறவர்களோடு குடிக்காதீர்கள்.

[பெட்டி/படம்]

ஒரு குடிகாரரை பைபிள் மாற்றியது

சுப்பாட் என்பவர் தாய்லாந்தில் இருக்கிறார். அவர் மொடாக்குடியனாக இருந்தார். ஆரம்பத்தில், சாயங்காலத்தில் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தார். ஆனால் நாட்கள் போகப்போக, காலை… மதியம்… ராத்திரி… என எல்லா நேரத்திலும் குடிக்க ஆரம்பித்துவிட்டார். வெறுமனே போதை ஏறுவதற்காகவே குடித்தார். கொஞ்ச நாட்களில், யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். யெகோவா தேவனுக்கு குடிகாரர்களைப் பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டார். அதனால், குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார். ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், கொஞ்ச நாட்களில் பழைய மாதிரி குடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் ரொம்ப வருத்தப்பட்டார்கள்.

இருந்தாலும், சுப்பாட்டுக்கு யெகோவாமேல் ரொம்ப அன்பு இருந்தது. யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் அவரை வணங்கவும் சுப்பாட் ஆசைப்பட்டார். சுப்பாட்டின் நண்பர்கள் அவருக்குத் தொடர்ந்து உதவி செய்தார்கள். அவரோடு நிறைய நேரம் செலவு செய்ய சொல்லி அவருடைய குடும்பத்தில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்கள். அவர்மேல் நம்பிக்கை இழந்துவிடாமல், அவருக்கு தொடர்ந்து உதவி செய்ய சொன்னார்கள். அந்தச் சமயத்தில் 1 கொரிந்தியர் 6:10-ல் இருக்கிற விஷயம் சுப்பாட்டின் கண்ணில்பட்டது. “குடிகாரர்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று வெளிப்படையாகவே அதில் சொல்லப்பட்டிருந்தது. அவர் எவ்வளவு மோசமான நிலைமையில் இருந்தார் என்று அந்த வசனத்தைப் பார்த்து புரிந்துகொண்டார். அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தே ஆக வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டார்.

இந்தத் தடவை, குடிப்பழக்கத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட முடிவு செய்திருந்தார். கடவுளுடைய சக்தி கொடுத்த பலத்தோடும், குடும்பத்திலும் சபையில் இருந்தவர்களும் செய்த உதவியோடும் சுப்பாட்டால் மதுபானத்தின் பிடியிலிருந்து வெளியே வர முடிந்தது. இப்போது, அவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார். அதை நினைத்து அவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். சுப்பாட் ஆசைப்பட்டபடியே இப்போது யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தில் இருக்கிறார். மற்றவர்களுக்கும் கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்.