Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?

ஏன் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?

ஏன் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?

“என்மேல் உரிமையுள்ளவரும் நான் பரிசுத்த சேவை செய்கிறவருமான கடவுள் தம்முடைய தூதரை அனுப்பினார்.”—அப். 27:23.

1. ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன படிகளை ஏற்கெனவே எடுத்திருக்கிறார்கள், என்ன கேள்விகள் எழுகின்றன?

 “இ யேசு கிறிஸ்துவுடைய பலியின் அடிப்படையில், உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி, யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி உங்களை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறீர்களா?” ஞானஸ்நானம் பெறுகிற நபர்களிடம் கேட்கப்படும் இரண்டு கேள்விகளில் இது ஒன்று. கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்? அப்படி அர்ப்பணிப்பதால் கிடைக்கும் பயன்கள் யாவை? கடவுளுக்கு நம்மை அர்ப்பணிக்காவிட்டால் அவர் ஏன் நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்காண, அர்ப்பணிப்பது என்றால் என்னவென்பதை நாம் முதலில் சிந்திப்போம்.

2. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பது என்றால் என்ன?

2 கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பது என்றால் என்ன? அப்போஸ்தலன் பவுல், புயலில் சிக்கிய கப்பலில் இருந்தபோது யெகோவாவுடன் தனக்கிருந்த பந்தத்தைக் குறித்து அங்கிருந்தவர்களிடம் எப்படி விவரித்தார் என்பதைக் கவனியுங்கள். ‘என்மேல் உரிமையுள்ள கடவுள்’ என அவர் விவரித்தார். (அப்போஸ்தலர் 27:22-24-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் கடவுளாகிய யெகோவாவுக்கு உரியவர்கள். இந்த உலகமோ “பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது.” (1 யோ. 5:19) உண்மைக் கிறிஸ்தவர்கள் ஜெபத்தில் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கிறார்கள்; யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் அர்ப்பணிக்கும்போது அவருக்கு உரியவர்களாய் ஆகிறார்கள். அர்ப்பணிப்பது என்பது ஞானஸ்நானத்திற்கு முன் ஒருவர் எடுக்கிற தனிப்பட்ட உறுதிமொழியாகும்.

3. இயேசுவின் ஞானஸ்நானம் எதற்கு அடையாளமாக இருந்தது, உண்மைக் கிறிஸ்தவர்கள் அவருடைய முன்மாதிரியை எவ்வாறு பின்பற்றுகிறார்கள்?

3 கடவுளுடைய சித்தத்தைச் செய்ய இயேசு சொந்தமாகத் தீர்மானம் எடுத்தார்; இவ்வாறு அவர் நமக்கு முன்மாதிரி வைத்தார். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களில் ஒருவராக இருந்ததால், அவர் ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தார். ஆகையால், அவர் ஞானஸ்நானம் பெற்றது அர்ப்பணம் செய்ததற்கு அடையாளமாக இருக்கவில்லை. ஏனென்றால், “கடவுளே, இதோ! உங்கள் சித்தத்தைச் செய்வதற்கு வந்திருக்கிறேன்” என அவர் சொன்னதாகக் கடவுளுடைய வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. (எபி. 10:7; லூக். 3:21) எனவே, இயேசுவின் ஞானஸ்நானம் அவரது தகப்பனின் சித்தத்தைச் செய்வதற்காக அவர் தம்மையே அளித்ததற்கு அடையாளமாய் இருந்தது. அவரது முன்மாதிரியைப் பின்பற்றியே உண்மைக் கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். என்றாலும், ஜெபத்தில் தங்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய ஞானஸ்நானம் வெளிப்படையாகக் காட்டுகிறது.

அர்ப்பணிப்பதால் வரும் பயன்கள்

4. தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த இணைபிரியா நட்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4 கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பது மிக முக்கியம். அர்ப்பணிப்பது என்பதில் பல விஷயங்கள் உட்பட்டிருந்தாலும், குறிப்பாகக் கடமை உணர்வு உட்பட்டுள்ளது. அர்ப்பணிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன? இதைப் புரிந்துகொள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடமை உணர்வோடு செயல்படுவதால் கிடைக்கும் பயன்களை உதாரணங்களோடு சிந்திப்போம். ஓர் உதாரணம், நட்பு. மற்றவர்களுடைய நட்பைச் சம்பாதிக்க வேண்டுமென்றால் நண்பருக்குரிய பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அதில் கடமை உணர்வு, அதாவது இன்ப துன்பங்களில் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்ற உணர்வு உட்பட்டுள்ளது. தாவீதும் யோனத்தானும் இப்படிப்பட்ட நட்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்கள். அவர்கள் இருவரும் நட்புக்காக ஒப்பந்தம்கூடச் செய்துகொண்டார்கள். (1 சாமுவேல் 17:57; 18:1, 3-ஐ வாசியுங்கள்.) இந்தளவு ஈடுபாட்டோடு பழகும் நண்பர்களைக் காண்பது அபூர்வமே. என்றாலும், நண்பர்கள் இன்ப துன்பங்களில் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்ற கடமை உணர்வுடன் செயல்படும்போது பெரும்பாலும் அவர்களுடைய நட்பு பலப்படும்.—நீதி. 17:17; 18:24.

5. தன்னுடைய எஜமானருடன் நிரந்தரமாக இருக்க விரும்பிய அடிமை என்ன செய்ய வேண்டியிருந்தது?

5 இன்னொரு உதாரணத்தைச் சிந்திப்போம். இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டம் அதை விளக்குகிறது. ஓர் அடிமை தன்னுடைய எஜமானரை விட்டுப் பிரியாமல் காலமெல்லாம் அவருடன் பாதுகாப்பாய் இருக்க விரும்பினால், நிரந்தரமான ஒப்பந்தத்தை அவரோடு செய்துகொள்ள வேண்டியிருந்தது. திருச்சட்டம் இப்படிச் சொல்கிறது: ‘“என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். விடுதலை பெற்றுப்போக எனக்கு மனதில்லை” என்று ஓர் அடிமை மனப்பூர்வமாய்ச் சொல்வானானால், அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.’—யாத். 21:5, 6.

6, 7. (அ) கடமை உணர்வால் மக்கள் எப்படிப் பயனடைகிறார்கள்? (ஆ) யெகோவாவுடன் உள்ள நம் உறவைப் பற்றி இது எதைச் சுட்டிக்காட்டுகிறது?

6 மற்றொரு உதாரணம், திருமண பந்தம்; இதில் கடமை உணர்வு ரொம்பவே முக்கியம். திருமணம் என்பது எழுத்தில் மட்டுமே செய்யப்படும் ஒப்பந்தம் அல்ல, ஒரு நபரோடு கடமை உணர்வுடன் செய்யப்படுகிற ஒப்பந்தமாகும். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களும் சரி, அவர்களுடைய பிள்ளைகளும் சரி, நிஜமான பாதுகாப்பை அனுபவிக்க முடியாது. இணைபிரியாமல் வாழ உறுதிபூண்டிருக்கும் தம்பதியர் தங்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் வரும்போது மதிப்புமிக்க திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதில்லை; மாறாக, பைபிளின் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து அவற்றை அன்பினால் சரிசெய்துகொள்ளக் கடும் முயற்சி எடுக்கிறார்கள்.மத். 19:5, 6; 1 கொ. 13:7, 8; எபி. 13:4.

7 பைபிள் காலங்களில், வியாபாரம் மற்றும் வேலை சம்பந்தமாக ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பயனடைந்தார்கள். (மத். 20:1, 2, 8) இன்றும் அதுவே உண்மை. உதாரணமாக, கூட்டுச் சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு முன்போ ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேருவதற்கு முன்போ எழுத்தில் ஒப்பந்தம் செய்துகொள்வதால் நாம் பயனடைகிறோம். நட்பு, திருமணம், வேலை போன்ற விஷயங்களில், சம்பந்தப்பட்டவர்களோடு கடமை உணர்வுடன் செயல்படுவதே அவர்களுடன் உள்ள உறவைப் பலப்படுத்தும் என்றால், நிபந்தனையற்ற விதத்தில் யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்வது அவருடன் உள்ள உறவை இன்னும் எந்தளவு பலப்படுத்தும்! முற்காலங்களில் வாழ்ந்தவர்கள் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்ததால் எப்படிப் பயனடைந்தார்கள் என்பதையும், அப்படி அர்ப்பணித்தது ஏன் வெறுமனே கடமை உணர்வுடன் செயல்படுவதைவிடச் சிறந்தது என்பதையும் இப்போது சிந்திப்போம்.

கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்ததால் இஸ்ரவேலர் பெற்ற பயன்கள்

8. கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்தது இஸ்ரவேலருக்கு எதை அர்த்தப்படுத்தியது?

8 இஸ்ரவேலர் ஒரு தேசமாக யெகோவாவுக்குமுன் உறுதிமொழி எடுத்தபோது அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களாக ஆனார்கள். சீனாய் மலைக்கு அருகில் யெகோவா அவர்களைக் கூடிவரச் செய்து, “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் [“விசேஷ சொத்தாக இருப்பீர்கள்,” NW]” என்று வாக்குறுதி கொடுத்தார். அதற்கு அந்த மக்கள் எல்லாரும், ‘யெகோவா சொன்னவற்றையெல்லாம் செய்வோம்’ என்று ஏக குரலில் உறுதி அளித்தார்கள். (யாத். 19:4-8) இஸ்ரவேலர் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்தது, ஏதோவொன்றைச் செய்வதாக உறுதிமொழி அளித்ததை மட்டுமே அர்த்தப்படுத்தவில்லை. அவர்கள் யெகோவாவுக்கே உரியவர்கள் என்பதையும், யெகோவாவின் “விசேஷ சொத்தாக” இருந்தார்கள் என்பதையுமே அர்த்தப்படுத்தியது.

9. கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்திருந்ததால் இஸ்ரவேலர் எப்படிப் பயனடைந்தார்கள்?

9 இஸ்ரவேலர் யெகோவாவுக்கு உரியவர்களாக இருந்ததால் பல விதங்களில் பயனடைந்தார்கள். யெகோவா அவர்களிடம் பற்றுமாறாமல் நடந்துகொண்டார்; அன்புள்ள தகப்பன் தன் பிள்ளையைக் கண்ணும்கருத்துமாகக் கவனிப்பதுபோல் அவர்களைக் கவனித்துவந்தார். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் . . . மறப்பதில்லை” என்று அவர்களிடம் சொன்னார். (ஏசா. 49:15) அவர்களுக்கு வழிகாட்ட திருச்சட்டத்தைக் கொடுத்தார், ஊக்கமளிக்க தீர்க்கதரிசிகளை அனுப்பினார், பாதுகாப்பளிக்க தேவதூதர்களை அனுப்பினார். “யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங். 147:19, 20; சங்கீதம் 34:7, 19-ஐயும் 48:14-ஐயும் வாசியுங்கள்.) கடந்த காலத்தில், யெகோவா தமக்கு உரிய மக்களைக் காத்ததைப் போலவே, இன்றும் தமக்கு அர்ப்பணித்த மக்களைக் கண்மணியாகக் காப்பார்.

நம்மை ஏன் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?

10, 11. நாம் பிறக்கும்போதே கடவுளுடைய சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக இருக்கிறோமா? விளக்கவும்.

10 கடவுளுக்குத் தங்களை அர்ப்பணிப்பதைப் பற்றியும் ஞானஸ்நானம் பெறுவதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிற சிலர், ‘கடவுளுக்கு என்னை அர்ப்பணிக்காமலேயே அவரை நான் வழிபட முடியாதா?’ என்று ஒருவேளை நினைக்கலாம். கடவுளுக்குமுன் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டால் இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும். ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக, நாம் யாரும் பிறக்கும்போதே கடவுளுடைய குடும்பத்தின் பாகமாக இருப்பதில்லை. (ரோ. 3:23; 5:12) கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்தால்தான் அவருடைய சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக நாம் ஏற்றுக்கொள்ளப்படுவோம். அதற்கான காரணத்தை இப்போது பார்க்கலாம்.

11 கடவுள் தர நினைத்திருந்த முடிவில்லா வாழ்வு நம் யாருக்குமே நம்முடைய பெற்றோரிடமிருந்து கிடைக்கவில்லை. (1 தீ. 6:19) மனிதர்கள் யாருமே கடவுளுடைய பிள்ளைகளாகப் பிறக்கவில்லை; முதல் பெற்றோர் பாவம் செய்ததால், மனிதர்கள் அனைவரும் தங்களைப் படைத்த அன்புள்ள தகப்பனிடமிருந்து விலக்கப்பட்டார்கள். (உபாகமம் 32:5-ஐ ஒப்பிடுங்கள்.) அது முதற்கொண்டு, மனிதர்கள் யெகோவாவிடமிருந்து பிரிந்தே இருப்பதால் அவருடைய குடும்பத்தின் பாகமாக இல்லை.

12. (அ) அபூரண மனிதர்கள் எவ்வாறு கடவுளுடைய குடும்பத்தின் பாகமாய் ஆக முடியும்? (ஆ) ஞானஸ்நானம் பெறுவதற்குமுன் நாம் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?

12 என்றாலும், கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் அடங்கிய அவருடைய குடும்பத்தின் பாகமாக நம்மை ஏற்றுக்கொள்ளும்படி நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக அவரிடம் மன்றாடலாம். * ஆனால், பாவிகளாகிய நாம் எவ்வாறு அவருடைய குடும்பத்தின் பாகமாய் ஆக முடியும்? “நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவரது மகனுடைய மரணத்தின் மூலம் அவருடன் சமரசம் செய்யப்பட்டோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 5:10) ஞானஸ்நானம் பெறும்போது நல்மனசாட்சியைத் தரும்படி நாம் கடவுளிடம் வேண்டுகிறோம். அவர் நம்மை ஏற்றுக்கொள்வதற்காக அப்படிச் செய்கிறோம். (1 பே. 3:21) என்றாலும், ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு நாம் சில படிகளை எடுக்க வேண்டும். கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும், அவர்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும், மனந்திரும்பி நம் வழிகளை மாற்றிக்கொள்ளவும் வேண்டும். (யோவா. 17:3; அப். 3:19; எபி. 11:6) அதோடு, இன்னொன்றையும் நாம் செய்ய வேண்டும். அது என்ன?

13. கடவுளுடைய குடும்பத்தின் பாகமாய் ஆவதற்கு ஒருவர் ஏன் அவருக்குத் தன்னை அர்ப்பணிப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்?

13 ஒருவர் யெகோவாவுடைய குடும்பத்தின் பாகமாய் ஆக வேண்டுமானால், முதலில் அவர் யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாய் உறுதிமொழி அளிக்க வேண்டும். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். மரியாதைக்குரிய தகப்பன் ஒருவர், ஓர் அநாதைச் சிறுவன்மீது பரிவுகாட்டி அவனைத் தத்தெடுத்து, தன் குடும்பத்தின் பாகமாக ஆக்கிக்கொள்ள நினைக்கிறார். அந்தத் தகப்பன் மிகவும் நல்லவர். என்றாலும், அந்தச் சிறுவனைத் தன் மகனாகத் தத்தெடுப்பதற்கு முன்பு, “என்னை அப்பாவாக நேசித்து எனக்கு மதிப்புக் கொடுப்பதாக நீ வாக்குக் கொடுத்தால்தான் நான் உன்னை என் மகனாக ஏற்றுக்கொள்வேன்” என்று அவனிடம் சொல்கிறார். அந்தச் சிறுவன் இப்படி வாக்குக் கொடுக்கத் தயாராய் இருந்தால் மட்டுமே அவனைத் தன் குடும்பத்தின் பாகமாக ஏற்றுக்கொள்வார். அது நியாயம்தானே? அந்தத் தகப்பனைப் போலவே யெகோவாவும் தமக்கு அர்ப்பணிப்பதாக உறுதிமொழி அளிக்கிறவர்களை மட்டுமே தம் குடும்பத்தின் பாகமாக ஏற்றுக்கொள்வார். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்.”ரோ. 12:1.

அர்ப்பணிப்பது அன்பிற்கும் விசுவாசத்திற்கும் அத்தாட்சி

14. அர்ப்பணிப்பது நம் அன்பின் வெளிக்காட்டாக இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்?

14 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பதாக உறுதிமொழி அளிப்பது அவர்மீது நாம் வைத்திருக்கும் உள்ளப்பூர்வமான அன்பை வெளிக்காட்டுகிறது. இது திருமண உறுதிமொழிக்கு இணையாக இருக்கிறது. என்ன வந்தாலும் சரி, தன்னுடைய வருங்கால மனைவிக்கு உண்மையுள்ளவராக இருப்பாரென மணமகன் உறுதிமொழி அளிக்கிறார். இவ்வாறு தன் அன்பை வெளிக்காட்டுகிறார். இந்த உறுதிமொழி ஏதோவொரு காரியத்தைச் செய்வதற்காக எடுக்கப்படும் உறுதிமொழி மட்டுமே அல்ல, ஒரு நபருக்கு அளிக்கப்படும் உறுதிமொழியாகும். மணமகன் திருமண உறுதிமொழி அளிக்காவிட்டால் தன் வருங்கால மனைவியோடு சேர்ந்து வாழ முடியாது. அதுபோலவே, யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்வதாக உறுதிமொழி அளிக்காவிட்டால் நாம் அவருடைய குடும்பத்தின் பாகமாய் ஆக முடியாது, அதனால் கிடைக்கும் பலன்களை அனுபவிக்கவும் முடியாது. எனவே, நாம் அபூரணராக இருந்தாலும், கடவுளுக்கு உரியவர்களாக இருக்க விரும்புகிறோம்; என்ன வந்தாலும்சரி, அவருக்கு உண்மையுடன் இருக்கத் தீர்மானமாய் இருக்கிறோம், அவருக்கு நம்மை அர்ப்பணிக்கிறோம்.மத். 22:37.

15. அர்ப்பணிப்பது எப்படி விசுவாசத்தின் வெளிக்காட்டாக இருக்கிறது?

15 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, நம் விசுவாசத்தை வெளிக்காட்டுகிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அவர்மீது நமக்கு விசுவாசம் இருப்பதால், அவரிடம் நெருங்கி வருவது நமக்கு நன்மை அளிக்குமென்று உறுதியாய் நம்புகிறோம். (சங். 73:28) “சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறையின் நடுவே” நாம் வாழ்வதால் கடவுளிடம் நெருங்கி வருவது எப்போதும் சுலபமாய் இருக்காது என்று அறிந்திருக்கிறோம்; இருந்தாலும், நம்முடைய முயற்சிகளை ஆதரிப்பதாகக் கடவுள் தந்திருக்கும் வாக்குறுதியில் நம்பிக்கை வைக்கிறோம். (பிலி. 2:15; 4:13) நம்முடைய அபூரணத்தின் காரணமாகத் தவறுகள் செய்கிறோம் என நமக்குத் தெரியும்; என்றாலும், யெகோவா நம்மீது இரக்கம் காட்டுவார் என்று விசுவாசிக்கிறோம். (சங்கீதம் 103:13, 14; ரோமர் 7:21-25 ஆகியவற்றை வாசியுங்கள்.) நாம் உத்தமமாய் நடந்தால் யெகோவா நமக்குப் பலனளிப்பார் என்றும் விசுவாசிக்கிறோம்.யோபு 27:5.

அர்ப்பணிப்பது சந்தோஷத்தை அள்ளித் தருகிறது

16, 17. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பது நமக்கு ஏன் சந்தோஷத்தை அள்ளித் தருகிறது?

16 யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை சந்தோஷத்தை அள்ளித் தருகிறது; ஏனென்றால், அர்ப்பணிப்பது நம்மையே அவருக்குக் கொடுப்பதை உட்படுத்துகிறது. “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (அப். 20:35) அவர் பூமியில் ஊழியம் செய்தபோது, கொடுப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தை முழுமையாக அனுபவித்தார். வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையை மக்கள் கண்டடைய வேண்டுமென விரும்பியதால் சில சமயங்களில் ஓய்வில்லாமல், உணவில்லாமல் ஊழியம் செய்தார்; தமது சொந்த சௌகரியத்தையும் பொருட்படுத்தாமல் சேவை செய்தார். (யோவா. 4:34) தம்முடைய தகப்பனின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவதில் இன்பம் கண்டார். ‘நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்று அவர் சொன்னார்.யோவா. 8:29; நீதி. 27:11.

17 அதனால்தான், ‘எவராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே அர்ப்பணம் செய்ய வேண்டும்’ என்று அவர் சொன்னார்; இதுவே திருப்தியளிக்கும் வாழ்க்கை முறை என்று தம் சீடர்களிடம் சுட்டிக்காட்டினார். (மத். 16:24) அவ்வாறு நம்மை அர்ப்பணம் செய்தோமென்றால், யெகோவாவிடம் நம்மால் நெருங்கி வர முடியும். உள்ளங்கையில் வைத்து நம்மைத் தாங்குகிற அவரைவிட வேறு யாருடைய கையில் நாம் நம்மை ஒப்படைக்க முடியும்?

18. வேறு எதற்கோ அல்லது வேறு எவருக்கோ நம்மை அர்ப்பணிப்பதைவிட யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பது ஏன் அதிகச் சந்தோஷத்தைத் தருகிறது?

18 வேறு எதற்கோ அல்லது வேறு எவருக்கோ நம்மை அர்ப்பணிப்பதைவிட யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பதும், அதற்கு இசைவாக வாழ்வதும் அதிகச் சந்தோஷத்தைத் தரும். உதாரணமாக, அநேகர் செல்வத்தை நாடித் தேடுவதற்கே தங்களை அர்ப்பணிக்கிறார்கள்; என்றாலும், உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவதில்லை. ஆனால், யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்கள் நிலையான சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். (மத். 6:24) “கடவுளுடைய சக வேலையாட்களாக” இருக்கிற பாக்கியம் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது; இருந்தாலும், அவர்கள் ஏதோவொரு வேலைக்குத் தங்களை அர்ப்பணிப்பதில்லை, தங்களை உயர்வாய்க் கருதுகிற கடவுளுக்கே அர்ப்பணிக்கிறார்கள். (1 கொ. 3:9) அவர்களுடைய சுய தியாகத்தை இந்தளவுக்கு உயர்வாய்க் கருதுவோர் அவரைத் தவிர வேறு யாருமே இல்லை. தமக்கு உண்மைப்பற்றுடன் இருப்பவர்களை அவர் மீண்டும் இளமையாக்குவார் என்பதால், காலமெல்லாம் அவருடைய இதமான கவனிப்பை அவர்கள் பெறுவார்கள்.யோபு 33:25; எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.

19. யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணம் செய்கிறவர்கள் எதை அனுபவிக்க முடியும்?

19 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதன் மூலம் அவருடன் நெருங்கிய பந்தத்தை உங்களால் அனுபவிக்க முடியும். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 4:8; சங். 25:14) அப்படியானால், யெகோவாவுக்கு உரியவர்களாய் ஆக வேண்டுமென்ற தீர்மானத்தை நாம் ஏன் தைரியமாய் எடுக்கலாம்? அடுத்த கட்டுரை இதற்குப் பதிலளிக்கும்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 12 இயேசுவின் ‘வேறே ஆடுகள்’ ஆயிர வருட ஆட்சியின் முடிவுவரை கடவுளுடைய பிள்ளைகளாய் ஆக மாட்டார்கள். என்றாலும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதால், அவரை ‘தகப்பன்’ என்று அவர்கள் இப்போது அழைப்பது சரியே. அதோடு, அவருடைய வணக்கத்தார் அடங்கிய குடும்பத்தின் பாகமாகக் கருதப்படுவதும் சரியே.யோவா. 10:16; ஏசா. 64:8; மத். 6:9; வெளி. 20:5.

உங்கள் பதில்?

• கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பது என்றால் என்ன?

• கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பதால் கிடைக்கும் பயன்கள் யாவை?

• கிறிஸ்தவர்கள் தங்களை ஏன் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 6-ன் படம்]

கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து அதற்கு இசைவாக வாழ்வது சந்தோஷத்தை அள்ளித் தருகிறது