Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தினந்தோறும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்!

தினந்தோறும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்!

தினந்தோறும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்!

“அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (சங். 143:8) காலையில் கண்விழிக்கும்போது அந்தப் புதிய நாளைக் காணச் செய்ததற்காக, தாவீதைப் போல நீங்கள் தினந்தோறும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறீர்களா? அந்த நாள் முழுக்க நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும் சரியான காரியங்களைச் செய்வதற்கும் உதவும்படி அவரிடம் மன்றாடுகிறீர்களா? அப்படிச் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களாகிய நாம் “சாப்பிட்டாலும் குடித்தாலும் வேறெதைச் செய்தாலும், எல்லாக் காரியங்களையும் கடவுளுடைய மகிமைக்கென்றே” செய்யப் பெருமுயற்சி எடுக்கிறோம். (1 கொ. 10:31) நம்முடைய அன்றாட வாழ்க்கை யெகோவாவுக்கு மதிப்பையோ அவமதிப்பையோ கொண்டுவரலாம் என்பதை அறிந்திருக்கிறோம். சாத்தான் “இரவும் பகலும்” நம்முடைய சகோதரர்கள்மீது, சொல்லப்போனால், கடவுளுடைய அனைத்து ஊழியர்கள்மீதும் குற்றம் சுமத்துகிறான் என பைபிள் சொல்வதையும் நினைவில் வைத்திருக்கிறோம். (வெளி. 12:10) எனவே, சாத்தானுடைய பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கவும் நம் பரலோகத் தகப்பனுக்கு “இரவும் பகலும்” பரிசுத்த சேவை செய்து அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தவும் நாம் திடத்தீர்மானமாய் இருக்கிறோம்.வெளி. 7:15; நீதி. 27:11.

தினந்தோறும் கடவுளுக்கு மகிமை சேர்க்க உதவுகிற அத்தியாவசியமான இரண்டு வழிகளை இப்போது சுருக்கமாகச் சிந்திப்போம். முதலாவதாக, முக்கியமானவற்றுக்கு முதலிடம் கொடுப்பது எப்படியென்று பார்ப்போம்; இரண்டாவதாக, மற்றவர்களுக்குக் கரிசனை காட்டுவது எப்படியென்று பார்ப்போம்.

நம் அர்ப்பணிப்புக்கு இசைவாக வாழ்தல்

யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது அவருக்கு உள்ளப்பூர்வமாகச் சேவை செய்வதற்கான நம் ஆசையை வெளிப்படுத்தினோம். ‘தினந்தோறும்,’ ஆம், என்றென்றும், அவருடைய வழிகளிலேயே நடப்போம் என வாக்குறுதியும் அளித்தோம். (சங். 61:5, 8) அப்படியானால், நாம் அந்த வாக்குறுதியை எந்தளவுக்கு நிறைவேற்றி வருகிறோம்? யெகோவாமீது நமக்குள்ள இருதயப்பூர்வமான அன்பை எப்படித் தினந்தோறும் வெளிக்காட்டி வருகிறோம்?

யெகோவா நமக்குத் தந்துள்ள பொறுப்புகள் எவையென பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (உபா. 10:12, 13) அவற்றில் சில, பக்கம் 22-ல், “கடவுள் தந்துள்ள பொறுப்புகள்” என்ற பெட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புகளைக் கடவுளே தந்திருப்பதால் அவை முக்கியமானவை. ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளை ஒரே சமயத்தில் நிறைவேற்ற வேண்டியிருந்தால் அவற்றில் எதற்கு முதலிடம் தருவது என நாம் எப்படித் தீர்மானிப்போம்?

பரிசுத்த சேவைக்கே நாம் முதலிடம் கொடுக்கிறோம்; பைபிள் வாசிப்பு, ஜெபம், கிறிஸ்தவக் கூட்டங்கள், ஊழியம் ஆகியவை இதில் அடங்கும். (மத். 6:33; யோவா. 4:34; 1 பே. 2:9) என்றாலும், நாள் முழுக்க ஆன்மீகக் காரியங்களில் மட்டுமே நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்க முடியாது. தொழிலைக் கவனிக்கவும், பள்ளிக் காரியங்களில் ஈடுபடவும், பலதரப்பட்ட வீட்டுவேலைகளைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. சபைக் கூட்டங்களுக்குப் போவது போன்ற பரிசுத்த சேவையில் நம் தொழிலோ மற்ற காரியங்களோ குறுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ள நாம் அரும்பாடுபடுகிறோம். உதாரணமாக, விடுமுறையில் செல்லத் திட்டமிடும்போது, வட்டாரக் கண்காணியின் சந்திப்போ, விசேஷ மாநாடோ, வட்டார மாநாடோ, மாவட்ட மாநாடோ நடக்கவிருந்தால், அதைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றாலும் சில சமயம், நம்முடைய பொறுப்புகள் சிலவற்றை ஒரே நேரத்தில் நம்மால் செய்து முடிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிற வேலையைக் குடும்பமாகச் சேர்ந்து செய்யலாம் அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ பள்ளியிலோ கிடைக்கிற மதிய இடைவேளையில் சக பணியாளர்களுக்கு அல்லது மாணவர்களுக்குச் சாட்சி கொடுக்கலாம். தீர்மானம் எடுக்க வேண்டிய சமயங்களில், அதாவது நண்பர்கள், படிப்பு, வேலை போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சமயங்களில், அன்புத் தகப்பனாகிய யெகோவாவின் வழிபாட்டுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.—பிர. 12:13.

மற்றவர்களுக்குக் கரிசனை காட்டுங்கள்

நாம் மற்றவர்களுக்குக் கரிசனை காட்ட வேண்டும், நன்மை செய்ய வேண்டும் என்றெல்லாம் யெகோவா எதிர்பார்க்கிறார். ஆனால், இந்த உலகத்தில் சாத்தான் சுயநலத்தையே ஊட்டி வளர்க்கிறான். இதனால் மக்கள் “சுயநலக்காரர்களாக,” “சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக,” ‘பாவத்திற்கென்று விதைக்கிறவர்களாக’ இருக்கிறார்கள். (2 தீ. 3:1-5; கலா. 6:8) தங்களுடைய செயல்கள் மற்றவர்கள்மீது ஏற்படுத்துகிற பாதிப்பைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம்கூட அக்கறையில்லை. ‘பாவ இயல்புக்குரிய செயல்களே’ எங்கும் காணப்படுகின்றன.—கலா. 5:19-21.

யெகோவாவின் சக்தியால் வழிநடத்தப்படுகிறவர்களோ மற்றவர்களிடம் பழகும்போது அன்பு, கருணை, நல்மனம் ஆகியவற்றை வெளிக்காட்டுகிறார்கள்; உலக மக்களோடு ஒப்பிடுகையில் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! (கலா. 5:22) நம்முடைய நலனைவிட மற்றவர்களுடைய நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென பைபிள் சொல்வதால், நாம் ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுகிறோம். ஆனாலும், மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் தலையிடாதவாறு கவனமாய் இருக்கிறோம். (1 கொ. 10:24, 33; பிலி. 2:3, 4; 1 பே. 4:15) சக வணக்கத்தாரிடம் நாம் விசேஷமாகக் கரிசனை காட்டினாலும், விசுவாசத்தில் இல்லாதவர்களுக்கும் உதவ பெருமுயற்சி எடுக்கிறோம். (கலா. 6:10) இன்று நீங்கள் சந்திக்கப்போகிற ஒரு நபரிடம் கரிசனையாக நடந்துகொள்ள உங்களால் முயற்சி எடுக்க முடியுமா?—பக்கம் 23-ல், “இவர்களுக்குக் கரிசனை காட்டுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

ஏதோவொரு விசேஷ சந்தர்ப்பத்திலோ சூழ்நிலையிலோ மட்டுமே மற்றவர்கள்மீது கரிசனை காட்ட வேண்டும் என்றில்லை. (கலா. 6:2; எபே. 5:2; 1 தெ. 4:9, 10) மற்றவர்களுடைய சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, தினந்தோறும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்; ஒருவேளை நமக்குச் சௌகரியமாக இல்லாவிட்டாலும்கூட அப்படிச் செய்ய வேண்டும். நம் வசம் உள்ளவற்றை, அதாவது நேரம், பொருளுடைமை, அனுபவம், ஞானம் ஆகியவற்றை, மற்றவர்களுடன் தாராளமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மற்றவர்களிடம் நாம் தாராள குணத்தைக் காட்டினால், நம்மிடம் யெகோவா தாராள குணத்தைக் காட்டுவதாக உறுதி அளித்திருக்கிறார்.நீதி. 11:25; லூக். 6:38.

“இரவும் பகலும்” பரிசுத்த சேவை

யெகோவாவுக்கு “இரவும் பகலும்” நம்மால் பரிசுத்த சேவை செய்ய முடியுமா? முடியும். நம்முடைய வழிபாட்டின் எல்லா அம்சங்களையும் தவறாமல், சிரத்தையுடன் செய்யும்போது! (அப். 20:31) தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையை வாசித்து அதைத் தியானிப்பது, இடைவிடாமல் ஜெபம் செய்வது, எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொள்வது, சாட்சி கொடுப்பதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வது ஆகியவற்றின் மூலம் நம் வாழ்க்கையில் பரிசுத்த சேவைக்கு முதலிடம் கொடுக்க முடியும்.சங். 1:2; லூக். 2:37; அப். 4:20; 1 தெ. 3:10; 5:17.

நாம் ஒவ்வொருவருமே யெகோவாவுக்கு அப்படிப் பரிசுத்த சேவை செய்கிறோமா? செய்கிறோம் என்றால், அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற நம் ஆசையும், சாத்தானுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமும் நம் அன்றாட வாழ்வின் எல்லா அம்சங்களிலும் வெளிப்படும். நாம் செய்கிற எல்லாக் காரியங்களிலும், நாம் எதிர்ப்படுகிற எல்லாச் சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கக் கடும் முயற்சி எடுப்போம். நம்முடைய பேச்சும் நடத்தையும் தீர்மானங்களும் அவருடைய நியமங்களுக்கு இசைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். அவருடைய அன்பான கவனிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவர்மீது நாம் முழு நம்பிக்கை வைப்போம், அதோடு, நம்முடைய சக்தியையெல்லாம் அவருடைய சேவையில் செலவிடுவோம். அபூரணத்தின் காரணமாக நாம் அவருடைய நெறிமுறைப்படி வாழத் தவறிவிடும்போது அவர் தருகிற அறிவுரையையும் கண்டிப்பையும் ஏற்றுக்கொள்வோம்.சங். 32:5; 119:97; நீதி. 3:25, 26; கொலோ. 3:17; எபி. 6:11, 12.

ஆகவே, ஒவ்வொரு நாளும் யெகோவாவின் மகிமைக்கென்றே வாழ்வோமாக! அப்படி வாழ்ந்தால், நாம் புத்துணர்ச்சி அடைவோம்; அதோடு, நம் பரலோகத் தகப்பனின் அன்பான அரவணைப்பை என்றென்றும் அனுபவிப்போம்.மத். 11:29; வெளி. 7:16, 17.

[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]

கடவுள் தந்துள்ள பொறுப்புகள்

• அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்.ரோ. 12:12.

• பைபிளை வாசியுங்கள், கருத்தூன்றிப் படியுங்கள், வாழ்க்கையில் பொருத்துங்கள்.சங். 1:2; 1 தீ. 4:15.

• சபையில் யெகோவாவை வழிபடுங்கள். சங். 35:18; எபி. 10:24, 25.

• குடும்பத்தாரின் பொருளாதார, ஆன்மீக, உணர்ச்சி ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.1 தீ. 5:8.

• நற்செய்தியை அறிவியுங்கள், சீடராக்குங்கள்.மத். 24:14; 28:19, 20.

• உடல், ஆன்மீக, உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள், தரமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.மாற். 6:31; 2 கொ. 7:1; 1 தீ. 4:8, 16.

• சபைப் பொறுப்புகளைச் சரிவர கையாளுங்கள்.அப். 20:28; 1 தீ. 3:1.

• வீட்டையும் ராஜ்ய மன்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.1 கொ. 10:32.

[பக்கம் 23-ன் பெட்டி/படம்]

இவர்களுக்குக் கரிசனை காட்டுங்கள்

• வயதான சகோதரர் அல்லது சகோதரி.—லேவி. 19:32.

• உடல் அல்லது உணர்ச்சி சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுபவர்.நீதி. 14:21.

• அவசர உதவி தேவைப்படுகிற சகோதரர் அல்லது சகோதரி.ரோ. 12:13.

• குடும்ப உறுப்பினர்.1 தீ. 5:4, 8.

• துணையைப் பறிகொடுத்த சகோதரர் அல்லது சகோதரி.1 தீ. 5:9.

• உங்கள் சபையில் கடுமையாக உழைக்கும் ஒரு மூப்பர்.1 தெ. 5:12, 13; 1 தீ. 5:17.