Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

ராஸ்தஃபாரி மதத்தைச் சேர்ந்த ஒருவர், ஜடை ஜடையாகத் தொங்கிய அவருடைய நீளமான முடியை வெட்டி எறிந்தார். வெள்ளைக்காரர்களை வெறுப்பதையும் விட்டுவிட்டார். அவர் ஏன் இந்த மாற்றங்களைச் செய்தார்? அவரே சொல்வதைக் கேளுங்கள்.

“மற்ற இனத்தவரை வெறுப்பதைக்கூட நான் விட்டுவிட்டேன்.”​—ஹஃபேனி டாமா

வயது: 34

பிறந்த நாடு: ஜாம்பியா

என்னைப் பற்றி: ராஸ்தஃபாரி மதத்தைச் சேர்ந்தவன்

என் கடந்தகால வாழ்க்கை: ஜாம்பியாவில் இருந்த அகதிகள் முகாமில் நான் பிறந்தேன். நமிபியாவில் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் என் அம்மா அங்கிருந்து தப்பித்து இங்கே வந்திருந்தார். தென் மேற்கு ஆப்பிரிக்க மக்களின் அமைப்பிலும் (SWAPO) சேர்ந்திருந்தார். அந்த அமைப்பில் இருந்தவர்கள், நமிபியாவை ஆட்சி செய்துவந்த தென் ஆப்பிரிக்க அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருந்தார்கள்.

முதல் 15 வருஷம், நான் நிறைய அகதிகள் முகாம்களில் மாறிமாறி தங்கினேன். SWAPO முகாம்களில் இருந்த இளைஞர்களுக்கு அந்த அமைப்பை முன்நின்று வழிநடத்த பயிற்சி கொடுத்தார்கள். அதன் கொள்கைகளைச் சொல்லிச் சொல்லி எங்கள் மனதில் பதிய வைத்தார்கள், வெள்ளைக்காரர்கள்மேல் வெறுப்பையும் வளர்த்துவிட்டார்கள். அந்த அமைப்புதான் எங்களுக்கு விடுதலை கொடுக்கும் என்று நம்பினோம்.

எனக்கு 11 வயது இருக்கும்போது, முகாமில் இருந்த சர்ச்சில் சேர்ந்து கிறிஸ்தவனாக ஆக நினைத்தேன். ரோமன் கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள், ஆங்கிலிக்கன்கள் போன்ற எல்லா கிறிஸ்தவர்களும் அந்த சர்ச்சில் இருந்தார்கள். நானும் அதில் சேருவதைப் பற்றி ஒரு பாதிரியிடம் பேசினேன். ஆனால், அவர் என் விருப்பத்துக்குத் தடை போட்டார். அதுமுதல், எனக்குக் கடவுள் நம்பிக்கையே போய்விட்டது. ஆனாலும், எனக்கு 15 வயதானபோது ராஸ்தஃபாரி மதத்தில் சேர்ந்தேன். ஏனென்றால், எனக்கு ரெக்கே இசை ரொம்பப் பிடித்திருந்தது. அதோடு, ஆப்பிரிக்காவில் இருந்த கறுப்பு இனத்தவர்கள் அனுபவித்த அநியாயங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் ஆசைப்பட்டேன். அதனால், ராஸ்தஃபாரி நம்பிக்கையின்படி என் முடியை நீளமாக வளர்த்து ஜடை ஜடையாகத் தொங்கவிட்டேன், மரிஹுவானா புகைத்தேன், அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன், கறுப்பு இனத்தவர்களுடைய சுதந்திரத்துக்காகவும் போராடினேன். இருந்தாலும், தொடர்ந்து ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டும், வன்முறையான சினிமாக்களைப் பார்த்துக்கொண்டும், கெட்ட வார்த்தைகளைப் பேசிக்கொண்டும் இருந்தேன்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது: 1995-ல், எனக்குக் கிட்டத்தட்ட 20 வயது இருக்கும்போது, வாழ்க்கையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பற்றி ரொம்ப யோசிக்க ஆரம்பித்தேன். ராஸ்தஃபாரி மத புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்தேன், கையில் கிடைத்த எதையும் விட்டுவைக்கவில்லை. அதில் சில புத்தகங்களில், பைபிள் விஷயங்களைப் பற்றி சொல்லியிருந்தது. ஆனால், அதெல்லாம் எனக்குப் புரியவில்லை. அதனால், நானே பைபிளைப் படித்துப் பார்க்க முடிவு செய்தேன்.

பிற்பாடு, பைபிளை விளக்கும் ஒரு புத்தகத்தை என்னுடைய ராஸ்தஃபாரி நண்பர் ஒருவர் கொடுத்தார். அது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருந்த புத்தகம். அந்தப் புத்தகத்தை பைபிளோடு சேர்த்துப் படித்தேன். அதன்பின், யெகோவாவின் சாட்சிகளை சந்தித்து அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன்.

சிகரெட் பிடிப்பதையும் குடிப் பழக்கத்தையும் ரொம்பக் கஷ்டப்பட்டு நிறுத்தினேன். (2 கொரிந்தியர் 7:1) நான் டிரஸ் பண்ணும் விதத்தை மாற்றிக்கொண்டேன், நீளமான முடியை வெட்டி எறிந்தேன், ஆபாசத்தையும் வன்முறையான படங்களையும் பார்ப்பதை நிறுத்தினேன், கெட்ட வார்த்தைகள் பேசுவதை விட்டுவிட்டேன். (எபேசியர் 5:3, 4) கடைசியில், வெள்ளைக்காரர்களை வெறுப்பதையும் விட்டுவிட்டேன். (அப்போஸ்தலர் 10:34, 35) இந்த எல்லா மாற்றங்களையும் செய்ய நான் முதலில் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஒன்று, இனப்பகையைத் தூண்டும் இசையை வெறுத்து ஒதுக்க வேண்டியிருந்தது. அடுத்ததாக, என்னை பழையபடி மாற்ற நினைத்த நண்பர்களுடைய சகவாசத்தை விட வேண்டியிருந்தது.

இதையெல்லாம் செய்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தைத் தேடிப்போனேன். ஏனென்றால், நானும் அவர்களோடு சேர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். பிறகு, நான் ஞானஸ்நானம் எடுக்க முடிவு செய்தபோது, என் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு அது பிடிக்கவில்லை. ‘எந்த சர்ச்சில் வேணாலும் சேர்ந்துக்கோ, ஆனா யெகோவாவின் சாட்சியா மட்டும் ஆயிடாத’ என்று என் அம்மா சொன்னார். பிரபல அரசியல் புள்ளியாக இருந்த என் சொந்தக்காரர் ஒருவரும், நான் தப்பான முடிவு எடுத்துவிட்டதாகச் சொல்லி என்னைக் குத்திக்காட்டிக்கொண்டே இருந்தார்.

ஆனாலும், இந்த எல்லா எதிர்ப்பையும் கேலி கிண்டலையும் என்னால் சமாளிக்க முடிந்தது. ஏனென்றால், இயேசு எப்படி மக்களிடம் நடந்துகொண்டார் என்று கற்றுக்கொண்டு, அதேபோல் நானும் நடந்துகொள்ள முயற்சி செய்தேன். யெகோவாவின் சாட்சிகள் கற்றுத்தரும் விஷயங்களையும் பைபிளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர்கள்தான் உண்மை மதம் என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது. உதாரணத்துக்கு, பைபிள் கட்டளைப்படியே அவர்கள் மற்றவர்களிடம் பிரசங்கிக்கிறார்கள். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 15:14) அவர்கள் அரசியலிலும் தலையிடுவதில்லை.—சங்கீதம் 146:3, 4; யோவான் 15:17, 18.

எனக்குக் கிடைத்த நன்மைகள்: பைபிள் எனக்கு நிறைய விதங்களில் உதவி செய்திருக்கிறது. உதாரணத்துக்கு, மரிஹுவானா புகைப்பதை நான் விட்டுவிட்டதால் ஆயிரக்கணக்கில் பணம் மிச்சமாகியிருக்கிறது. இப்போதெல்லாம் எனக்குப் பிரமை ஏற்படுவது இல்லை. என்னுடைய மனநலமும் சரி, உடல்நலமும் சரி, ரொம்ப முன்னேறியிருக்கிறது.

என் வாழ்க்கை சந்தோஷமாக மாறியிருக்கிறது, அர்த்தமுள்ளதாகவும் ஆகியிருக்கிறது. டீனேஜ் வயதிலிருந்தே இதற்காகத்தான் நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும்விட முக்கியமாக, இப்போது கடவுளோடு எனக்கு நெருக்கமான நட்பு கிடைத்திருக்கிறது.—யாக்கோபு 4:8.