Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு கிறிஸ்து அவரது செய்தியின் தாக்கம்

இயேசு கிறிஸ்து அவரது செய்தியின் தாக்கம்

இயேசு கிறிஸ்து அவரது செய்தியின் தாக்கம்

“கப்பர்நகூமைச் சேர்ந்த ஞானி, அநேகருடைய இதயங்களிலும் மனங்களிலும் தொடர்ந்து இடம் பிடித்துவருகிறார். இதுவே அவரைக் குறித்துக் காலமெல்லாம் பறைசாற்றும் சான்று.” a —நூலாசிரியரான க்ரெக் ஈஸ்டர்புரூக்.

வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. நன்கு யோசித்துப் பேசப்படுகிற ஞானமான வார்த்தைகள் இதயத்தைத் தூண்டுகின்றன, நம்பிக்கையை ஊட்டுகின்றன, வாழ்க்கையை மாற்றுகின்றன. இயேசு கிறிஸ்து பேசியது போல் அதிக வலிமைமிக்க வார்த்தைகளை யாருமே பேசியது கிடையாது. இயேசுவின் பிரசித்திபெற்ற சொற்பொழிவுகளில் ஒன்றான மலைப் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர், பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைக் கண்டு மக்கள் மலைத்துப்போனார்கள்.”—மத்தேயு 7:28.

இயேசு சொன்ன நிறைய விஷயங்களை இன்றும்கூட உலகெங்குமுள்ள மக்கள் அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, அவர் கூறிய அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் சிலவற்றைக் கவனியுங்கள்.

“கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.”மத்தேயு 6:24.

“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”மத்தேயு 7:12.

“அரசனுக்குரியதை அரசனுக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்.”மத்தேயு 22:21.

“பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.”அப்போஸ்தலர் 20:35.

இயேசு சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் நீங்கா இடம் பிடிப்பவையாய் மட்டுமே இருக்கவில்லை. அவர் அறிவித்த செய்தி வலிமைமிக்கதாய் இருந்ததற்குக் காரணம், அது கடவுளைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியது, வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க மக்களுக்குக் கற்பித்தது, கடவுளுடைய அரசாங்கம் மனித கஷ்டங்களையெல்லாம் தீர்க்குமென தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அந்தச் செய்தியைக் குறித்துப் பின்வரும் பக்கங்களில் நாம் ஆராய்கையில், லட்சக்கணக்கானோரின் ‘இதயங்களிலும் மனங்களிலும் இயேசு தொடர்ந்து இடம் பிடித்துவருவதற்கான’ காரணத்தை அறிந்துகொள்வோம். (w10-E  04/01)

[அடிக்குறிப்பு]

a கலிலேயா மாகாணத்திலுள்ள கப்பர்நகூம், இயேசுவின் ஊராகக் கருதப்பட்டது.—மாற்கு 2:1.