Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோயுற்ற நண்பருக்கு உதவ...

நோயுற்ற நண்பருக்கு உதவ...

நோயுற்ற நண்பருக்கு உதவ...

தீராத நோயால் அவதிப்படும் நண்பரைப் பார்க்கப்போய், அவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறியிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! இந்தச் சவாலை உங்களால் சமாளிக்க முடியும். எப்படி? நோயாளியிடம் இப்படித்தான் பேச வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. ஏனென்றால், கலாச்சாரம் இடத்திற்கு இடம் வேறுபடலாம். மக்களின் சுபாவங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஒருவருக்கு ஆறுதலாக இருக்கிற வார்த்தைகள் இன்னொருவருக்கு அபத்தமாகப் படலாம். அதோடு, சூழ்நிலைகளும் உணர்வுகளும் எல்லா நாளும் ஒன்றுபோல் இருக்காது.

ஆகவே, உங்கள் நண்பருடைய இடத்தில் உங்களை வைத்துப்பார்த்து, அவர் உங்களிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதே மிக முக்கியமான விஷயம். இதை நீங்கள் எப்படிச் செய்யலாம்? பைபிள் நியதிகளின் அடிப்படையில் இதோ சில ஆலோசனைகள்:

காதுகொடுத்துக் கேளுங்கள்

பைபிள் நியதிகள்:

“ஒவ்வொருவரும் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும் . . . இருக்க வேண்டும்.”யாக்கோபு 1:19.

“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.”பிரசங்கி 3:1, 7.

◼ சுகவீனமான ஒரு நண்பரைப் பார்க்கப் போகையில், அவர் சொல்வதை அனுதாபத்தோடு கவனமாய்க் கேளுங்கள். அவசரப்பட்டு ஆலோசனையாக எதையாவது சொல்லிவிடாதீர்கள்; அவருடைய பிரச்சினைக்கு நீங்கள்தான் தீர்வுசொல்ல வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள். ஏனென்றால், யோசிக்காமல் கொள்ளாமல் நீங்கள் தெரியாத்தனமாக எதையாவது சொல்லி அவரைப் புண்படுத்திவிட வாய்ப்புண்டு. சுகவீனமான நண்பருக்குப் பெரும்பாலும் தேவை... ஆலோசனை அல்ல, அன்பு கனிந்த நெஞ்சமும் கவனம் சிதையாமல் கேட்கிற காதும்தான்!

உங்கள் நண்பரை மனம்திறந்து பேசவிடுங்கள். அவருக்கு வந்திருக்கிற நோயின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிடுகிற பாணியில், வழக்கமான ‘ரெடிமேட்’ வார்த்தைகளைச் சொல்லி அவர் பேசுவதைத் தடுக்கப் பார்க்காதீர்கள். “எனக்குப் பூஞ்சை சம்பந்தப்பட்ட மூளையுறை அழற்சி (fungal meningitis) ஏற்பட்டதால் என் பார்வை பறிபோய்விட்டது” என்கிறார் எமில்யூ. a “சில சமயங்களில் மனதிலும் உடலிலும் ரொம்பவே சோர்ந்துவிடுவேன்; என்னை ஆறுதல்படுத்துவதாக நினைத்து என் நண்பர்கள், ‘உங்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக நினைத்துக்கொள்ளாதீர்கள், உங்களைவிட மோசமான பிரச்சினை உள்ளவர்களும் இருக்கிறார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் அப்படியெல்லாம் சொல்வது... என் வேதனையைத் தணிப்பதில்லை, வேதனையைக் கூட்டவே செய்கிறது! அதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை” என்றும் அவர் சொல்கிறார்.

மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயப்படாமல் தன் மனதிலுள்ளதைத் தாராளமாய்ச் சொல்ல உங்கள் நண்பருக்கு இடமளியுங்கள். தான் பயப்படுவதாகச் சொன்னால், ‘அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை’ என்று உபதேசிப்பதற்குப் பதிலாக, அவர் சொல்வதையெல்லாம் பொறுமையோடு கேட்டுக்கொள்ளுங்கள். புற்றுநோயோடு போராடிவருகிற எலியானா என்பவர் கூறுவதாவது: “என் நிலைமையை நினைத்துப் பயந்து அழும்போது, எனக்குக் கடவுள்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம் இல்லை.” உங்கள் நண்பர் எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படிப் பார்க்காமல், அவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே அவரைப் பார்க்க முயலுங்கள். நீங்கள் விரும்புவதுபோல் அவர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். மனதளவில் அவர் முன்புபோல் திடமாக இருக்க மாட்டார், அதனால் எளிதில் புண்பட்டுவிடலாம் என்பதையும் மறவாதீர்கள். பொறுமையாக இருங்கள்! அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாலும் அதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். (1 இராஜாக்கள் 19:9, 10, 13, 14) தன் வேதனையையெல்லாம் உங்களிடம் கொட்டித் தீர்க்க அவர் விரும்பலாம்.

அனுதாபமும் கரிசனையும் காட்டுங்கள்

பைபிள் நியதிகள்:

“சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.”—ரோமர் 12:15.

“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”மத்தேயு 7:12.

◼ உங்கள் நண்பருடைய இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். அறுவை சிகிச்சைக்காக அல்லது பரிசோதனை முடிவுகள் வருவதற்காக அவர் காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அவருடைய மனம் நிலைகொள்ளாமல் இருக்கலாம்; அந்தச் சமயத்தில் நாம் என்ன சொன்னாலும் அவர் சீக்கிரம் புண்பட்டுவிடலாம். அதைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். இந்த மாதிரியான நேரத்தில் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்காதீர்கள்—குறிப்பாக அவருடைய சொந்த விஷயங்கள் பற்றி!

“தங்களுடைய வியாதியைக் குறித்து நோயாளிகள் பேச விரும்பும் சமயத்தில் அவர்களைப் பேசவிடுங்கள், அதுவும் அவர்களுக்கே உரிய வேகத்தில் பேசவிடுங்கள்” என்கிறார், அனா காடாலீஃபாஸ் என்ற உளவியல் மருத்துவர். “அவர்கள் உங்களிடம் எந்த விஷயத்தைப் பற்றிப் பேச விரும்புகிறார்களோ அதைப் பற்றியே அவர்களிடம் பேசுங்கள். ஆனால், அவர்களுக்கு உங்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக இருந்துவிடுங்கள். அன்போடு அவர்களுடைய கையைப் பிடித்தாலே அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாய் இருக்கும். சில சமயங்களில், தலைசாய்த்து அழ ஒரு தோள் இருந்தாலே போதும்” என்றும் அவர் சொல்கிறார்.

நண்பர் உங்களிடம் சொன்னதையெல்லாம் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். நூலாசிரியர் ரோஸான் கேலிக் இரண்டு முறை புற்றுநோய்க்கு ஆளாகி மீண்டவர்; அவருடைய ஆலோசனை: “நோயாளியிடமிருந்து நீங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். அவர் சார்பாகப் பேசும்படி கேட்டுக்கொண்டால் தவிர அவர் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். எதையெல்லாம் மற்றவர்களிடம் சொல்ல விரும்புகிறாரென்று அவரிடமே கேளுங்கள்.” புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பித்த எட்ஸன் என்பவர் சொல்வதாவது: “எனக்குப் புற்றுநோய் இருப்பதாகவும் நான் இனி ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன் என்பதாகவும் என் நண்பர் எல்லாரிடமும் சொல்லிவிட்டார். ஆனால், எனக்கு அப்போதுதான் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது; ‘பயாப்ஸி’ ரிசல்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். எனக்கிருந்தது, பரவுகிற வகையான புற்றுநோய் அல்ல எனத் தெரியவந்தது. என்ன பிரயோஜனம், அதற்குள் அவர் எல்லாரிடமும் அப்படிச் சொல்லிவிட்டார்! அதைக் கேட்டு மற்றவர்கள் என்னவெல்லாமோ பேச ஆரம்பித்தார்கள், கேள்விமேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்; இதனால் என் மனைவி நொறுங்கிப் போய்விட்டாள்.”

உங்கள் நண்பர் எந்த மாதிரியான சிகிச்சை முறையை எடுப்பது என யோசித்துக்கொண்டிருக்கும்போது, ‘நான் உங்களுடைய இடத்தில் இருந்தால்... இன்னின்ன சிகிச்சை முறையைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன்’ என்று சட்டெனச் சொல்லாதீர்கள். புற்றுநோயின் பிடியிலிருந்து மீண்டுவந்த எழுத்தாளர் லாரீ ஹோப் இவ்வாறு சொல்கிறார்: “புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அல்லது அதிலிருந்து மீண்டு வந்த ஒருவருக்கு ஏதாவது கட்டுரைகளையோ செய்திகளையோ அனுப்பும் முன் அப்படிப்பட்ட தகவல்களைப் படிக்க அவருக்கு விருப்பமா... எனக் கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியில்லையென்றால், நீங்கள் நல்லெண்ணத்தோடு செய்கிற உதவியும் அவருக்கு உபத்திரவமாய் இருக்கலாம்; அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாமலேகூட போகலாம்.” உலகில் உள்ள வித்தியாசமான மருத்துவ சிகிச்சைகளைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென எல்லாருமே விரும்பமாட்டார்கள்.

நீங்கள் நோயாளிக்கு நெருங்கிய நண்பராக இருந்தாலும் நிறைய நேரம் அவரோடு இருக்காதீர்கள். நீங்கள் அவரோடு இருப்பது முக்கியம் என்றாலும், உங்களோடு சகஜமாகப் பேசவோ பழகவோ அவரால் முடியாதிருக்கலாம். களைப்பின் காரணமாகப் பேசவே அவருக்குத் தெம்பில்லாமல் இருக்கலாம்; சொல்லப்போனால், நீங்கள் பேசுவதை நீண்டநேரம் கேட்டுக்கொண்டிருக்கவும்கூட அவருக்குச் சக்தியில்லாமல் இருக்கலாம். மறுபட்சத்தில், உங்களுக்கு வேறு ஏதோ அவசர வேலை இருப்பதுபோல் நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்மேல் நீங்கள் எந்தளவு அக்கறையாய் இருக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள்.

அவருக்குக் கரிசனை காட்டும் விஷயத்தில் நீங்கள் முன்யோசனையோடு நடந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, அவருக்கு உணவு ஏதாவது சமைத்துக் கொடுப்பதற்கு முன், அல்லது மலர்ச்செண்டு கொடுப்பதற்கு முன் அவருக்கு ஏதாவது ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு ஜலதோஷம் போன்று ஏதாவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது குணமாகும்வரை காத்திருந்து, பின்னர் அவரைப் பார்க்கச் செல்வது அன்புக்கு அடையாளம்.

அருமருந்தாய் இருங்கள்

பைபிள் நியதிகள்:

‘ஞானிகளின் சொற்கள் புண்களை ஆற்றும்.’நீதிமொழிகள் 12:18.

“உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்.”கொலோசெயர் 4:6.

◼ சுகவீனமான நண்பரைப் பற்றி நல்லதாகவே உங்கள் மனதுக்குள் நினைத்தீர்களென்றால் அது உங்கள் சொல்லிலும் செயலிலும் தெரியவரும். ஆரம்பத்தில் உங்கள் நண்பர் எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் இருப்பதாகவும்... அவரிடம் உங்களை நெருங்கி வரச் செய்த குணங்கள் இன்னமும் அவரிடம் இருப்பதாகவும்... நினைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் பேசும்போது, அவருடைய நோயையே மனதில் வைத்துப் பேசாமல் எப்போதும்போல் சகஜமாகப் பேசுங்கள். தேற முடியாத ஒரு நோயாளியிடம் பேசுவதைப்போல் உங்கள் நண்பரிடம் பேசினீர்கள் என்றால், அவரும் அப்படியே நினைக்க ஆரம்பித்துவிடலாம். மரபியல் கோளாறால் அபூர்வமாக ஏற்படும் எலும்பு நோயால் அவதிப்படுகிற ரோபெர்ட்டா சொல்கிறார்: “என்னை ஒரு சாதாரண நபராகப் பாவித்து என்னிடம் நடந்துகொள்ளுங்கள். நான் ஊனமுற்றிருப்பது என்னவோ உண்மைதான், ஆனாலும் எனக்கென்று அபிப்பிராயங்களும் ஆசைகளும் இருக்காதா? என்னைப் பரிதாபமாகப் பார்க்காதீர்கள். ஒன்றும் தெரியாத நபரிடம் பேசுவதுபோல் என்னிடம் பேசாதீர்கள்.”

என்ன விஷயத்தை நீங்கள் சொல்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல் அதை எப்படிச் சொல்கிறீர்கள்... என்ன தொனியில் சொல்கிறீர்கள்... என்பதும் முக்கியம்; இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள். எர்னெஸ்டூ என்பவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, வெளிநாட்டிலிருந்த அவருடைய நண்பர் ஃபோன் பேசி... “உங்களுக்குப் புற்றுநோயா, என்னால் நம்பவே முடியவில்லை!” என்று சொல்லியிருக்கிறார். “உங்களுக்குப் புற்றுநோயா” என்று அவர் கேட்ட தோரணையில் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்!” என்கிறார் எர்னெஸ்டூ.

இன்னொரு உதாரணத்தை ஆசிரியர் லாரீ ஹோப் குறிப்பிடுகிறார். “ஒரு நோயாளியிடம், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்பது அவருக்குப் பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கலாம். கேட்பவருடைய தொனி... அவருடைய உடலசைவு... நோயாளிமீது அவருக்கிருக்கிற அனுதாபம்... அவரோடுள்ள நெருக்கம்... கேள்வியைக் கேட்கிற சந்தர்ப்பம்... ஆகியவற்றைப் பொறுத்து, நோயாளிக்கு அந்தக் கேள்வி அருமருந்தாக அமையலாம் அல்லது ஆளையே கொல்கிற மாதிரி அமையலாம்... ஏன், அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த பயத்தைத் தட்டியெழுப்பவும் செய்யலாம்.”

சுகவீனமாய் இருக்கும் ஒரு நண்பர், தன்மீது மற்றவர்கள் அக்கறை காட்ட வேண்டும்... தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும்... மதிக்க வேண்டும்... என்றெல்லாம் விரும்புவது சகஜமே. ஆகையால், உங்கள் நண்பர் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர் என்பதையும் அவருக்கு உதவ நீங்கள் எப்போதும் தயார் என்பதையும் அவரிடம் தெரியப்படுத்துங்கள். மூளைக் கட்டியால் அவதிப்படுகிற ரோஸிமரீ என்பவர் சொல்கிறார்: “என் நண்பர்கள், ‘நாங்கள் உன்னை நேசிக்கிறோம்... என்ன ஆனாலும் சரி, உனக்கு உதவ ஓடி வருவோம்...’ என்றெல்லாம் சொன்னதே எனக்கு உற்சாகம் தந்தது.”—நீதிமொழிகள் 15:23; 25:11.

உதவியாய் இருங்கள்

பைபிள் நியதி:

“சொல்லினாலும் நாவினாலும் மட்டுமல்ல, செயலினாலும் சத்தியத்தினாலும் அன்பு காட்டுவோமாக.”1 யோவான் 3:18.

◼ உங்கள் நண்பருடைய மருத்துவப் பரிசோதனை முடிந்து அவருக்குச் சிகிச்சை ஆரம்பமாகும்போது அவருடைய தேவைகள் வித்தியாசப்படலாம். அந்தக் காலகட்டம் முழுவதிலுமே அவருக்கு உதவி தேவைப்படலாம். “உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னைக் கூப்பிடுங்கள்” என்று பொதுவாகச் சொல்லாமல், என்ன உதவி வேண்டுமெனக் குறிப்பாகக் கேளுங்கள். சாப்பாடு தயாரிப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது, அவற்றுக்கு இஸ்திரி போடுவது, வெளி வேலைகளைச் செய்து தருவது, கடைக்குச் சென்று வருவது, கிளினிக் அல்லது ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போவது போன்ற நடைமுறை உதவிகளைச் செய்து, அவர்மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுங்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவராய் இருங்கள், நேரம் தவறாதீர்கள்.—மத்தேயு 5:37.

நூலாசிரியர் ரோஸான் கேலிக் சொல்வதாவது: “நோயாளி குணமடையும் வரை நீங்கள் அவருக்குச் செய்கிற உதவிகளெல்லாம்... அவை சிறிதோ பெரிதோ... அவருக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கும்.” இரண்டு முறை புற்றுநோயில் சிக்கி, பின்னர் குணமடைந்த சில்வியா இதை ஒத்துக்கொள்கிறார். அவர் சொல்வதாவது: “கதிர்வீச்சு (ரேடியேஷன்) சிகிச்சைக்காக தினமும் வெவ்வேறு நண்பர்கள் என்னைப் பக்கத்து ஊருக்கு காரில் அழைத்துச் செல்வார்கள்; அது எனக்கு மிகவும் ஆறுதலாகவும் சௌகரியமாகவும் இருந்தது! வழியில் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்; எப்போதுமே சிகிச்சை முடிந்து வீடுதிரும்பும்போது காரை நிறுத்தி ஓட்டலில் காபி குடிப்போம். இப்படியெல்லாம் செய்யும்போது எனக்கு நோய் இருப்பதையே நான் மறந்துவிடுவேன்.”

ஆனால்... உங்கள் நண்பருக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது என உங்களுக்குத் தெரியுமென்று நினைத்துக்கொள்ளாதீர்கள். முன்னர் குறிப்பிடப்பட்ட கேலிக் தருகிற ஆலோசனை இதுதான்: “கேளுங்கள்... கேளுங்கள்... கேளுங்கள்...” அவர் மேலும் சொல்வதாவது: “உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையில்... நீங்களாகவே எல்லாவற்றையும் எடுத்துச் செய்யாதீர்கள். அது, நோயாளியை விரக்தியடையச் செய்துவிடும். என்னை எதுவுமே செய்ய விடாவிட்டால், ‘உன்னால் எதுவுமே செய்ய முடியாது’ என்று சொல்வதைப் போல் இருக்கும். என்னை நானே பார்த்துப் பரிதாபப்படாமல், என்னால்கூட எதையாவது செய்ய முடிகிறது என உணர வேண்டும். ஆகவே, என்னால் செய்ய முடிந்ததைச் செய்யவிடுங்கள்.”

ஆகவே, தன்னால்கூட எதையாவது செய்ய முடியும் என உங்கள் நண்பர் உணர வேண்டும். எய்ட்ஸ்-க்கு ஆளான ஆடில்சன் சொல்கிறார்: “நமக்குச் சுகமில்லாமல் போகும்போது, யாரும் நம்மை உதவாக்கரையாக, எதற்கும் லாயக்கற்றவராக ஒதுக்கித்தள்ள விரும்ப மாட்டோம். சிறுசிறு வேலையாய் இருந்தாலும் சரி, மற்றவர்களுக்கு உதவியாக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்புவோம். நம்மால் இன்னமும் ஏதாவது செய்ய முடிகிறது என்பதை நினைக்கும்போது மனதுக்குச் சந்தோஷமாக இருக்கும்! இன்னும் கொஞ்சநாள் வாழ வேண்டுமென்று மனதுக்குள் ஓர் உற்சாகம் பிறக்கும். மற்றவர்கள், என்னைத் தீர்மானம் எடுக்க அனுமதிக்க வேண்டும்... என் தீர்மானங்களை மதிக்க வேண்டும்... என்றே விரும்புகிறேன். சுகமில்லாமல் போனபிறகு ஒருவர் தகப்பனாகவோ தாயாகவோ வேறு எந்த உறவுக்காரராகவோ முன்புபோல் செயல்படவே முடியாது என்று அர்த்தமாகாது.”

நட்பைத் தொடருங்கள்

பைபிள் நியதி:

“[உண்மையான] சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”நீதிமொழிகள் 17:17.

◼ தூரம் காரணமாக அல்லது வேறு ஏதோ சூழ்நிலை காரணமாக உங்கள் நண்பரை நேரில் போய்ப் பார்க்க முடியவில்லை என்றால், ஃபோன் செய்து அவரிடம் அன்பாகப் பேசலாம்... ஆறுதலாக நாலு வரி எழுதலாம்... ஏன், ஈ-மெயில்கூட அனுப்பலாம். சரி, எதைப் பற்றி எழுதுவீர்கள்? மனநல ஆலோசகர், ஆலன் டி. உல்ஃபெல்ட் கூறுவதாவது: “நீங்கள் இருவரும் சேர்ந்து கழித்த இனிய பொழுதுகளை அவருக்கு ஞாபகப்படுத்துங்கள். சீக்கிரத்தில் மீண்டும் . . . எழுதுவீர்கள் எனச் சொல்லுங்கள். பின்னர் அந்த வாக்கைக் காப்பாற்றுங்கள்.”

‘தெரியாத்தனமாக எதையாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு ஏன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும்’ என நினைத்து, சுகவீனமாய் இருக்கும் நண்பரை ஆறுதல்படுத்தாமல் இருந்துவிடாதீர்கள். அநேக அனுபவங்கள் காட்டுகிறபடி, நீங்கள் அவர் பக்கத்தில் இருப்பதே அவருக்குப் பெரிய உதவியாய் இருக்கும். தனது புத்தகத்தில் லாரீ ஹோப் இவ்வாறு எழுதியுள்ளார்: “சில சமயம், மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிற விதத்தில் நாம் எதையாவது சொல்லிவிடுகிறோம், செய்துவிடுகிறோம். அதே மாதிரி, நம்மை அறியாமலேயே ஏதோவொரு விதத்தில் மற்றவர்களைப் புண்படுத்திவிடுகிறோம். அதெல்லாம்கூட பரவாயில்லை. ஏடாகூடமாக எதையாவது சொல்லிவிடுவோமோ என நினைத்துக்கொண்டு நண்பரைப் போய் எட்டிப்பார்க்காமல் இருப்பதுதான் தவறு; அதுவும் அவர் உங்களை ரொம்பவே எதிர்பார்க்கும்போது!”

நோயுற்ற நண்பருக்கு, எப்போதையும்விட இப்போதுதான் நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆகவே, அவருக்கு ‘உண்மையான சிநேகிதனாக’ இருங்கள். உங்களுக்குப் பிரியமானவருக்கு நீங்கள் செய்கிற உதவிகள் அவருடைய வலியைப் போக்கிவிடாது என்றாலும், அவருடைய கஷ்டமான சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கப் பெரிதும் உதவும். (w10-E 07/01)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.