Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாரிடம் செய்ய வேண்டும்?

யாரிடம் செய்ய வேண்டும்?

எல்லாருடைய ஜெபங்களும் கடவுளிடம்தான் போய்ச் சேர்கிறதா? பொதுவாக, அப்படித்தான் மக்கள் நினைக்கிறார்கள். கலப்பு விசுவாசத்தை ஆதரிக்கிறவர்களும் எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறவர்களும் இந்தக் கருத்தை வரவேற்கிறார்கள். இந்தக் கருத்து உண்மையாக இருக்க முடியுமா?

நிறைய சமயங்களில் மக்கள் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டுமோ அவரிடம் ஜெபம் செய்வதில்லை என்றுதான் பைபிள் சொல்கிறது. பைபிள் எழுதப்பட்ட காலத்தில், மக்கள் செதுக்கப்பட்ட சிலைகளிடம் வேண்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அப்படிச் செய்யக் கூடாது என்று கடவுள் திரும்பத் திரும்ப எச்சரித்தார். உதாரணத்துக்கு, சிலைகளைப் பற்றி சங்கீதம் 115:4-6 இப்படிச் சொல்கிறது: அவற்றுக்கு, “காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.” இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: கேட்க முடியாத ஒரு கடவுளிடம் ஜெபம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

இதை நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு பைபிள் பதிவை இப்போது பார்க்கலாம். உண்மைத் தீர்க்கதரிசியான எலியா, பாகால் தீர்க்கதரிசிகளிடம் ஒரு சவால்விட்டார். முதலில் தங்களுடைய கடவுளிடம் ஜெபம் செய்யும்படி அவர்களிடம் சொன்னார். பிறகு தன்னுடைய கடவுளிடம் எலியா ஜெபம் செய்வதாகச் சொன்னார். உண்மைக் கடவுள் பதில் கொடுப்பார் என்றும், பொய்க் கடவுளால் பதில் கொடுக்க முடியாது என்றும் எலியா சொன்னார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு, பாகால் தீர்க்கதரிசிகள் தொண்டை கிழிய கத்தி ரொம்ப நேரம் வேண்டினார்கள். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. “யாரும் பதில் தரவுமில்லை, அவர்களுடைய வேண்டுதலை யாரும் கேட்கவுமில்லை” என்று அந்த பைபிள் பதிவு சொல்கிறது. (1 ராஜாக்கள் 18:29) ஆனால், எலியா ஜெபம் செய்தபோது என்ன நடந்தது?

வானத்திலிருந்து நெருப்பு வந்து எலியா கொடுத்த பலியைச் சுட்டெரித்தது. இப்படி, எலியா செய்த ஜெபத்துக்குக் கடவுள் உடனடியாகப் பதில் கொடுத்தார். பாகால் தீர்க்கதரிசிகள் செய்த ஜெபத்துக்கும் எலியா செய்த ஜெபத்துக்கும் என்ன வித்தியாசம்? 1 ராஜாக்கள் 18:36, 37-ல் பதிவு செய்யப்பட்டுள்ள எலியாவின் ஜெபத்திலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த வசனங்களின் மூலப் பதிவில் சுமார் 30 வார்த்தைகள்தான் இருக்கின்றன. ஆனாலும், அந்தச் சுருக்கமான ஜெபத்தில் யெகோவா என்ற கடவுளுடைய தனிப்பட்ட பெயரை மூன்று தடவை எலியா சொல்லியிருக்கிறார்.

கானானியர்கள், பாகால் என்ற தெய்வத்தை வணங்கினார்கள். “சொந்தக்காரர்” அல்லது “எஜமான்” என்பதுதான் அந்தப் பெயரின் அர்த்தம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரில் இந்தத் தெய்வத்தை மக்கள் வழிபட்டார்கள். ஆனால் யெகோவா என்ற தனிச் சிறப்பான பெயர், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரேவொரு கடவுளுக்கு மட்டும்தான் பொருந்தும். “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர். என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்று தன்னுடைய மக்களிடம் இந்தக் கடவுள் சொல்லியிருக்கிறார்.—ஏசாயா 42:8.

எலியா செய்த ஜெபமும் பாகால் தீர்க்கதரிசிகள் செய்த ஜெபங்களும் ஒரே கடவுளிடம்தான் போய்ச் சேர்ந்ததா? பாகாலை வணங்கியவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவது... நரபலி கொடுப்பது... மூலமாக இழிவான விதத்தில் தங்களுடைய கடவுளை வணங்கினார்கள். அந்த இழிவான பழக்கங்களை விட்டுவிட்டு கண்ணியமான முறையில் தன்னை வணங்க வேண்டும் என்று தன்னுடைய மக்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் உயர்வாக நினைக்கிற ஒரு நண்பருக்குக் கடிதம் அனுப்புகிறீர்கள். அந்தக் கடிதம் வேறு பெயரில் இருக்கிற ஒருவரிடம், அதுவும் மற்றவர்கள் கேவலமாக நினைக்கிற ஒருவரிடம் போய்ச் சேரவேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களா? கண்டிப்பாக அப்படி நினைக்க மாட்டீர்கள்!

பாகால் தீர்க்கதரிசிகளிடம் எலியா சவால்விட்டதிலிருந்து எல்லாருடைய ஜெபங்களும் ஒரே கடவுளிடம் போய்ச் சேர்வதில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது

யெகோவாவிடம் நீங்கள் ஜெபம் செய்யும்போது படைப்பாளரிடம், அதாவது மனிதர்களுக்கு உயிர் கொடுத்த தகப்பனிடம், ஜெபம் செய்கிறீர்கள். * “யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன்” என்று ஏசாயா தீர்க்கதரிசி ஜெபத்தில் சொன்னார். (ஏசாயா 63:16) இந்தத் தகப்பனைப் பற்றித்தான் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்.” (யோவான் 20:17) யெகோவாதான் இயேசுவின் தகப்பன். அவரிடம்தான் இயேசு ஜெபம் செய்தார். அந்தக் கடவுளிடம் ஜெபம் செய்யும்படி தன்னுடைய சீஷர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9.

இயேசுவிடமோ மரியாளிடமோ புனிதர்களிடமோ தேவதூதர்களிடமோ ஜெபம் செய்யும்படி பைபிள் நமக்குச் சொல்கிறதா? இல்லை. யெகோவாவிடம் மட்டும்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதற்கான இரண்டு காரணங்களைப் பார்க்கலாம். முதல் காரணம், ஜெபம் நம் வணக்கத்தின் பாகமாக இருக்கிறது. அதோடு, யெகோவாவை மட்டும்தான் வணங்கவேண்டும் என்று பைபிளும் சொல்கிறது. (யாத்திராகமம் 20:5) இரண்டாவது காரணம், ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்ற சிறப்புப்பெயர் யெகோவாவுக்கு இருப்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (சங்கீதம் 65:2) யெகோவா தன்னுடைய பொறுப்புகளைத் தாராளமாக மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாலும், இந்தப் பொறுப்பை மட்டும் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை. நம்முடைய ஜெபத்தை அவரே கேட்பதாக நமக்கு வாக்குக் கொடுக்கிறார்.

உங்களுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால் பைபிளில் இருக்கிற இந்த அறிவுரையை ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.” (அப்போஸ்தலர் 2:21) ஆனால் எல்லாருடைய ஜெபத்தையும் கடவுள் கேட்கிறாரா? நம்முடைய ஜெபத்தை யெகோவா கேட்க வேண்டுமென்றால், ஜெபம் சம்பந்தமாக வேறு என்னென்ன விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?

^ பாரா. 9 கடவுளுடைய பெயரை ஜெபத்தில்கூட பயன்படுத்துவது தவறு என்று சில மத பாரம்பரியங்கள் சொல்கின்றன. ஆனால், பைபிளின் மூல மொழிப் பதிவுகளில் சுமார் 7,000 தடவை இந்தப் பெயர் காணப்படுகிறது. யெகோவாவின் உண்மை ஊழியர்கள் நிறைய பேர் தங்களுடைய ஜெபங்களிலும், அவர்கள் பாடிய சங்கீதங்களிலும் இந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.