Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி செய்ய வேண்டும்?

எப்படி செய்ய வேண்டும்?

 

ஜெபம் செய்யும்போது நாம் என்ன நிலையில் இருக்க வேண்டும்... என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்... என்ன சடங்காச்சார முறைகளைப் பின்பற்ற வேண்டும்... போன்ற விஷயங்களுக்குத்தான் நிறைய மதங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், “எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?” என்ற கேள்வியில் உட்பட்டிருக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பைபிள் நமக்கு உதவுகிறது.

கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் ஜெபம் செய்ததாக பைபிள் சொல்கிறது. சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் அமைதியாகவோ சத்தமாகவோ ஜெபம் செய்திருக்கிறார்கள். வானத்தை அண்ணாந்து பார்த்து அல்லது முட்டிபோட்டு ஜெபம் செய்திருக்கிறார்கள். உருவப் படங்களையோ ஜெபமாலையையோ ஜெபப் புத்தகத்தையோ பயன்படுத்தி அவர்கள் ஜெபம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, மனதிலிருந்து சொந்த வார்த்தைகளில் ஜெபம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஜெபங்கள் சிறந்ததாக இருந்ததற்குக் காரணம் என்ன?

முந்தின கட்டுரையில் பார்த்தது போல, அவர்கள் ஒரே கடவுளான யெகோவாவிடம்தான் ஜெபம் செய்தார்கள். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை” என்று 1 யோவான் 5:14 சொல்கிறது. அப்படியென்றால், நாம் செய்கிற ஜெபம் கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி ஜெபம் செய்ய வேண்டுமென்றால், அவருடைய விருப்பம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பைபிளை ஆழமாகப் படிக்க வேண்டும். அப்படியென்றால், பைபிளைக் கரைத்துக் குடித்த அறிஞர்களாக இருந்தால்தான் நம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பார் என்று அர்த்தமா? இல்லை. தன்னுடைய விருப்பம் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டு, அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்... அதன்படி நடக்க வேண்டும்... என்றுதான் அவர் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 7:21-23) அதனால், பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களுக்கு ஏற்றபடி ஜெபம் செய்வது முக்கியம்.

ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால், அது கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும், விசுவாசத்தோடு செய்யப்பட வேண்டும், இயேசுவின் பெயரில் செய்யப்பட வேண்டும்

யெகோவாவைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளும்போது அவர்மேல் இருக்கிற விசுவாசம் வளரும். இதுதான் ஜெபத்துக்கு அடிப்படையாக இருக்கிற இன்னொரு விஷயம். “விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 21:22) விசுவாசம் என்பது எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்புவதை அர்த்தப்படுத்துவதில்லை. பார்க்க முடியாத ஏதோ ஒன்றை தெள்ளத் தெளிவான அத்தாட்சியின் அடிப்படையில் நம்புவதுதான் விசுவாசம். (எபிரெயர் 11:1) யெகோவாவை நம்மால் பார்க்க முடியாது. ஆனாலும், அவர் நிஜமானவர்... நம்பகமானவர்... தன்மேல் விசுவாசம் வைத்து ஜெபம் செய்கிறவர்களுக்கு பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறவர்... என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் பைபிளில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நம்முடைய விசுவாசத்தை அதிகமாக்குவதற்கு எப்போது வேண்டுமானாலும் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். அதைக் கொடுப்பதற்கு அவரும் ஆசையாக இருக்கிறார்.—லூக்கா 17:5; யாக்கோபு 1:17.

எப்படி ஜெபம் செய்யலாம் என்பதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உட்பட்டிருக்கிறது. “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:6) அப்படியென்றால், நம் தகப்பனான யெகோவாவிடம் நாம் பேசுவதற்கு இயேசுதான் வழியாக இருக்கிறார். அதனால்தான் தன்னுடைய பெயரில் ஜெபம் செய்யும்படி தன் சீஷர்களிடம் இயேசு சொன்னார். (யோவான் 14:13; 15:16) நாம் இயேசுவிடம் ஜெபம் செய்தாலே போதும் என்று இது அர்த்தப்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது என்பது, பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிற நம்முடைய யெகோவா அப்பாவிடம் பேசுவதற்கு இயேசுதான் வழியாக இருக்கிறார் என்பதை மனதில் வைத்து ஜெபம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது.

ஒருசமயம், இயேசுவின் நெருங்கிய சீஷர்களில் ஒருவர் அவரிடம் வந்து, “எஜமானே, . . . ஜெபம் செய்ய. . . . எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று கேட்டார். (லூக்கா 11:1) ஜெபம் சம்பந்தமாக இதுவரைக்கும் நாம் பார்த்த அடிப்படை விஷயங்களைப் பற்றி அவர் கண்டிப்பாகக் கேட்டிருக்க மாட்டார். “என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்?” என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதால்தான் அவர் அப்படிக் கேட்டார்.