Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எங்கே, எப்போது செய்ய வேண்டும் என்பது முக்கியமா?

எங்கே, எப்போது செய்ய வேண்டும் என்பது முக்கியமா?

நிறைய மத அமைப்புகள், ஆடம்பரமான கட்டிடங்களில் ஜெபம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதோடு, ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறதா?

எந்தெந்த சமயங்களில் ஜெபம் செய்வது பொருத்தமானது என்று பைபிள் சொல்வது உண்மைதான். உதாரணத்துக்கு, இயேசு தன்னுடைய சீஷர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு நன்றி சொல்லி ஜெபம் செய்தார். (லூக்கா 22:17) வணக்கத்துக்காக அவருடைய சீஷர்கள் கூடிவந்தபோது அவர்கள் ஒன்றுசேர்ந்து ஜெபம் செய்தார்கள். யூத ஜெபக்கூடங்களிலும் எருசலேம் ஆலயத்திலும் இப்படி ஜெபம் செய்வது வழக்கமாக இருந்தது. இயேசுவின் சீஷர்களும் இந்த வழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றினார்கள். அந்த ஆலயம் ‘எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக இருக்க’ வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கமாக இருந்தது.—மாற்கு 11:17.

கடவுளுடைய ஊழியர்கள் ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்யும்போது அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அவர்கள் தங்கள் சார்பாக ஒருமனதோடும் பைபிள் நியமங்களின் அடிப்படையிலும் ஜெபம் செய்யும்போது கடவுள் அதை சந்தோஷமாக கேட்கிறார். அதுவரை செய்ய நினைக்காததைச் செய்வதற்குக்கூட இந்த ஜெபம் அவரைத் தூண்டலாம். (எபிரெயர் 13:18, 19) யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சபைக் கூட்டங்களில் தவறாமல் ஜெபம் செய்கிறார்கள். நீங்கள் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலுள்ள ராஜ்ய மன்றத்துக்கு வந்து, அங்கே அவர்கள் எப்படி ஜெபம் செய்கிறார்கள் என்பதை நீங்களே பார்க்கும்படி உங்களை அன்போடு அழைக்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை. கடவுளுடைய ஊழியர்கள் வித்தியாசமான நேரங்களில், வித்தியாசமான இடங்களில் ஜெபம் செய்ததைப் பற்றிய பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. “நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள். அப்போது, எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:6.

நாம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜெபம் செய்யலாம்

இதைக் கேட்கும்போது ஆறுதலாக இருக்கிறது இல்லையா! இந்த பிரபஞ்சத்தின் பேரரசரிடம் எந்த நேரத்திலும், தன்னந்தனியாக ஒரு இடத்தில் இருந்துகூட நீங்கள் ஜெபம் செய்யலாம். அதை அவர் கண்டிப்பாகக் கவனித்துக் கேட்பார். அப்படியானால், இயேசு ஏன் அடிக்கடி தனியாகப் போய் ஜெபம் செய்ய ஆசைப்பட்டார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருசமயம், ரொம்பவே முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு உதவி கேட்டு ஒரு ராத்திரி முழுவதும் கடவுளிடம் இயேசு ஜெபம் செய்தார்.—லூக்கா 6:12, 13.

முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்காக அல்லது பிரச்சினைகளை சமாளிப்பதற்காக, வேறு சில ஆண்களும், பெண்களும் செய்த ஜெபங்கள்கூட பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சிலசமயம், சத்தமாகவும் , சிலசமயம் மனதுக்குள்ளும் அவர்கள் ஜெபம் செய்திருக்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்தும், தனியாகவும் ஜெபம் செய்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும், எங்கிருந்தாலும் அவர்கள் ஜெபம் செய்தார்கள். “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என்றும் தன்னுடைய ஊழியர்களிடம் கடவுள் சொல்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:17) தன்னுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களுடைய ஜெபங்களைக் கேட்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். இது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம், இல்லையா?

எதிலும் நம்பிக்கை இல்லாத இந்த உலகத்தில், ‘ஜெபம் செய்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?’ என்று நிறைய பேர் யோசிக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் யோசிக்கிறீர்களா?