Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பாரா?

கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பாரா?

நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்வி இது. நாம் செய்கிற ஜெபங்களை யெகோவா காதுகொடுத்துக் கேட்கிறார் என்றுதான் பைபிள் சொல்கிறது. ஆனால், அவர் கேட்கும் விதத்தில் ஜெபம் செய்வது நம் கையில்தான் இருக்கிறது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள் செய்த ஜெபம் போலித்தனமாக இருந்தது. மக்களுக்கு முன் தங்களைப் பக்திமான்கள் போலக் காட்டிக்கொள்வதில்தான் அவர்கள் குறியாக இருந்தார்கள். அதனால், அவர்களை இயேசு கண்டித்தார். “மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:5) இதன் அர்த்தம் என்னவென்றால், மக்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்த பேரும் புகழும் அவர்களுக்குக் கிடைக்கும், ஆனால் மிக முக்கியமான ஒன்று அவர்களுக்குக் கிடைக்காது. அதாவது, அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்படாது. இன்றும்கூட நிறைய பேர் கடவுளுடைய விருப்பத்தின்படி இல்லாமல் தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி ஜெபம் செய்கிறார்கள். இதுவரை நாம் பார்த்த பைபிள் நியமங்களை அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அதனால், அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்படாது.

உங்களுடைய ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? நீங்கள் செய்யும் ஜெபத்தைக் கடவுள் கேட்டு அதற்குப் பதில் கொடுப்பாரா? உங்களுடைய இனம், நாடு, அல்லது சமுதாய அந்தஸ்து இவற்றின் அடிப்படையில் உங்களுடைய ஜெபத்துக்கு அவர் பதில் கொடுப்பதில்லை. “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) இந்த வார்த்தைகள் உங்களுக்குப் பொருந்துமா? நீங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்கும்போது, அவர்மேல் உங்களுக்கு மதிப்பு, மரியாதை இருப்பதையும், ‘கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவேனோ?’ என்று பயம் உங்களுக்குள் இருப்பதையும் காட்டுகிறீர்கள். அதோடு, சரியானதைச் செய்ய நீங்கள் முயற்சி எடுக்கும்போது, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எது சரியென்று படுகிறது என யோசிக்காமல் கடவுளுக்கு எது சரியென்று படும் என யோசிப்பீர்கள். நீங்கள் செய்கிற ஜெபத்தைக் கடவுள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்படுகிறீர்களா? கடவுள் காதுகொடுத்துக் கேட்கும் விதத்தில் எப்படி ஜெபம் செய்யலாம் என்று பைபிள் உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது.

ஒரு அற்புதத்தின் மூலம் தங்களுடைய ஜெபத்துக்குக் கடவுள் பதில் கொடுக்க வேண்டும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், பழங்காலத்தில்கூட ரொம்ப அபூர்வமாகத்தான் இப்படி அற்புதங்கள் மூலம் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளித்திருக்கிறார். சிலசமயங்களில், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு அற்புதத்துக்கும் இன்னொரு அற்புதத்துக்கும் இடையில் நூற்றுக்கணக்கான வருஷங்கள் இடைவெளி இருந்திருக்கிறது. அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப் பிறகு இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் முடிவுக்கு வந்ததாக பைபிள் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 13:8-10) அப்படியானால், இன்று நம் ஜெபங்களுக்குக் கடவுள் பதில் கொடுப்பதில்லை என்று அர்த்தமா? அப்படிக் கிடையாது. ஜெபத்துக்குக் கடவுள் பதில் கொடுக்கிற சில விதங்களை இப்போது பார்க்கலாம்.

கடவுள் ஞானத்தைக் கொடுக்கிறார். யெகோவா ஞானத்துக்கு ஊற்றுமூலமாக இருக்கிறார். தன்னுடைய ஆலோசனையைக் கேட்டு, அதன்படி வாழ முயற்சி செய்கிறவர்களுக்கு ஞானத்தை அவர் தாராளமாகக் கொடுக்கிறார்.—யாக்கோபு 1:5.

கடவுள் தன்னுடைய சக்தியைக் கொடுத்து உதவுகிறார். கடவுளுடைய சக்தி என்பது அவருடைய செயல் நடப்பிக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. கடவுளுடைய சக்திக்கு நிகர் எதுவுமே இல்லை. கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள... வேதனையில் தவிக்கும்போது மன சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள... அருமையான, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள... இந்தச் சக்தி நமக்கு உதவும். (கலாத்தியர் 5:22, 23) கடவுள் தன்னுடைய சக்தியைத் தாராளமாகக் கொடுப்பதாக தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு உறுதியளித்தார்.—லூக்கா 11:13.

தன்னை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குத் தன்னைப் பற்றிய உண்மைகளைக் கடவுள் சொல்லிக்கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 17:26, 27) கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு ஆர்வமுள்ள மக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய பெயரையும், கடவுள் ஏன் பூமியையும் மனிதர்களையும் படைத்தார் என்பதையும், கடவுளோடு எப்படி நெருங்கி வரலாம் என்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறார்கள். (யாக்கோபு 4:8) யெகோவாவின் சாட்சிகள் இப்படிப்பட்ட மக்களை அடிக்கடி சந்திக்கிறார்கள். அவர்களுடைய மனதில் இருக்கிற இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் கொடுக்க அவர்கள் ஆசையாக இருக்கிறார்கள்.

நீங்களும் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறீர்களா? ஒருவேளை இந்தப் பத்திரிகை உங்களுடைய ஜெபத்துக்குக் கிடைத்த பதிலாகக்கூட இருக்கலாம்.