Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ஜெபத்தைக் கேட்கிறவர்’

‘ஜெபத்தைக் கேட்கிறவர்’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘ஜெபத்தைக் கேட்கிறவர்’

1 நாளாகமம் 4:9, 10

பக்தியோடு வழிபடுவோர் செய்யும் பிரார்த்தனைகளுக்கு யெகோவா பதிலளிக்கிறாரா? யாபேஸ் என்பவரைப் பற்றிய பைபிள் பதிவு யெகோவா உண்மையிலேயே ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதைக் காட்டுகிறது. (சங்கீதம் 65:2) யாபேஸ் அவ்வளவாய் அறியப்படாத ஒரு நபர். அவரைப் பற்றிய சுருக்கமான பதிவு நாம் எதிர்பார்க்காத ஓர் இடத்தில், அதாவது ஒன்று நாளாகமம் புத்தகத்தில் வம்சாவளிப் பட்டியலின் இடையில், இருக்கிறது. இப்போது 1 நாளாகமம் 4:9, 10 வசனங்களை ஆராயலாம்.

யாபேஸ் பற்றி நமக்குத் தெரிந்த விவரமெல்லாம் இந்த இரண்டு வசனங்களிலேயே அடக்கம். ‘“நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்” என்று சொல்லி, அவருடைய அம்மா யாபேஸ் என்று அவருக்கு பெயரிட்டார்’ என வசனம் 9 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. a ஏன் அந்தப் பெயரை அவருக்குச் சூட்டினார்? மற்ற பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது அனுபவித்ததைவிட இவரைப் பெற்றெடுத்தபோது பயங்கரமான பிரசவ வேதனைப்பட்டாரா? அல்லது, ஒருவேளை அவர் விதவையாக இருந்ததால் அந்தக் குழந்தை பிறந்தபோது அதைக் கையில் ஏந்த அப்பா இல்லையே என்று வருத்தப்பட்டாரா? அதைப் பற்றியெல்லாம் பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், இந்த அம்மா தன் மகனை நினைத்து ஒருநாள் பெருமைப்படுவார். யாபேசின் கூடப் பிறந்தவர்கள் நல்லவர்களாய் இருந்திருக்கலாம், என்றாலும், ‘யாபேஸ் தன் சகோதரர்களைவிட மதிப்பு மரியாதை பெற்றிருந்தார்.’—NW.

யாபேஸ் பயபக்தியோடு அடிக்கடி ஜெபம் செய்பவர். அவர் தன் ஜெபத்தின் ஆரம்பத்தில் கடவுளுடைய ஆசிக்காகக் கெஞ்சிக் கேட்டார். பிறகு மூன்று வேண்டுகோள்களை முன்வைத்தார்; அவருக்கு எவ்வளவு விசுவாசம் இருந்தது என்பதை இந்த வேண்டுகோள்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

முதலில், ‘என் எல்லையைப் பெரிதாக்கும்’ என்று சொல்லி கடவுளிடம் யாபேஸ் மன்றாடினார். (வசனம் 10) மக்கள் மத்தியில் கௌரவமாய் இருந்த யாபேஸ் மற்றவர்களுடைய நிலத்தை அபகரிப்பவரும் அல்ல, அதன்மேல் ஆசைப்படுபவரும் அல்ல. அதனால், நிலத்திற்காக அவர் மன்றாடியிருக்க மாட்டார், மக்கள்மீது இருந்த அக்கறையினால்தான் அப்படி மன்றாடியிருப்பார். தன் பிராந்தியத்தை பெரிதாக்கினால் அங்கு குடியிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு உண்மைக் கடவுளை வழிபட தன்னால் உதவ முடியும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி ஜெபித்திருப்பார். b

இரண்டாவதாக, கடவுளுடைய “கரம்” தன்னோடு இருக்கும்படி வேண்டினார். கடவுளுடைய கரம் என்பது அவருடைய சக்தியைக் குறிக்கிறது; தம்மை வழிபடுவோருக்கு உதவ இதைப் பயன்படுத்துகிறார். (1 நாளாகமம் 29:12) யாபேஸ் தன் மனதின் வேண்டுதலைப் பெற கடவுளையே நோக்கியிருந்தார்; ஏனென்றால், அவர்மீது விசுவாசம் வைக்கிறவர்களுக்கு உதவுவதில் அவருடைய கரம் குறுகியதல்ல.—ஏசாயா 59:1.

மூன்றாவதாக, “தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்” என்று யாபேஸ் ஜெபித்தார். “தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு” என்று சொன்னபோது, தனக்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்று கேட்கவில்லை; மாறாக, துக்கத்தில் மூழ்கிவிடாதபடி அல்லது தீங்கினால் உண்டாகும் விளைவுகள் தன்னை நிலைகுலையச் செய்யாதபடி காத்தருளும் என்றே ஜெபித்தார்.

யாபேசின் ஜெபத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? உண்மை வழிபாட்டின் மீது அவருக்கு ஆர்வம் இருந்ததை... ஜெபத்தைக் கேட்கிறவர் மீது நம்பிக்கை இருந்ததை... தெரிந்துகொள்கிறோம். அவருடைய ஜெபத்திற்கு யெகோவா எப்படிப் பதிலளித்தார்? ‘அவர் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்’ என்ற வார்த்தைகளுடன் இந்தச் சுருக்கமான பதிவு முடிவடைகிறது.

ஜெபத்தைக் கேட்கிறவர் இன்றும் மாறவில்லை. தம்மை வழிபடுவோர் செய்யும் ஜெபங்கள் அவருக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்றன. “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” என்பதில் அவரையே நம்பியிருப்பவர்கள் ஆணித்தரமான விசுவாசம் வைக்கலாம்.—1 யோவான் 5:14. (w10-E 10/01)

[அடிக்குறிப்புகள்]

a யாபேஸ் என்ற பெயர் “வேதனை” என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது.

b டார்கம், அதாவது பரிசுத்த வேதாகமத்தின் யூத பொழிப்புரை, யாபேசின் வார்த்தைகளை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “எனக்குப் பிள்ளை செல்வங்களைக் கொடுத்து ஆசீர்வதியும், என் எல்லைகளைப் பெரிதாக்கி உமது சீடர்களால் நிரப்பும்.”