Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்றியுணர்வை எப்போதும் காட்டுங்கள்

நன்றியுணர்வை எப்போதும் காட்டுங்கள்

ரகசியம் 3

நன்றியுணர்வை எப்போதும் காட்டுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:18.

என்ன சவால்? நம்மைச் சுற்றிலும் கர்வம்பிடித்த, நன்றிகெட்ட மக்கள்தான் இருக்கிறார்கள், அதனால் அவர்களுடைய மனப்பான்மை நம்மையும் தொற்றிக்கொள்ளலாம். (2 தீமோத்தேயு 3:1, 2) அதோடு, ஏற்கெனவே இருக்கிற வேலை போதாதென்று இன்னும் அதிக வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ள நாம் நினைக்கலாம். பிரச்சினைக்கு மேல் பிரச்சினை நம்மைத் திக்குமுக்காடச் செய்யலாம், அல்லது நம்முடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதிலேயே மூழ்கிவிடலாம். அதனால், நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை உயர்வாய் மதிக்கவோ மற்றவர்கள் நமக்குச் செய்தவற்றிற்காக நன்றி சொல்லவோ நேரம் இல்லாமல் போய்விடும்.

நீங்கள் என்ன செய்யலாம்? இப்போது நீங்கள் அனுபவிக்கிற நல்ல காரியங்களைச் சிந்தித்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள். உண்மைதான், பிரச்சினைகளால் நீங்கள் திணறிக் கொண்டிருக்கலாம். ஆனால், தாவீது ராஜாவின் உதாரணத்தைக் கவனியுங்கள். சில சமயங்களில் அவரும் பிரச்சினைகளால் நொறுங்கிப் போயிருந்தார், இதயமே நின்றுவிட்டதுபோல் நினைத்தார். என்றாலும், “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்” என்று சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். (சங்கீதம் 143:3-5) பல கஷ்டங்களின் மத்தியிலும் நன்றியுணர்வைக் காட்டினார், திருப்தியுடனும் இருந்தார்.

உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட பிறர் செய்ததைச் சற்று எண்ணிப் பாருங்கள், அவர்களுடைய முயற்சிகளுக்காக நன்றி சொல்லுங்கள். இந்த விஷயத்தில், இயேசு தலைசிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். உதாரணமாக, அவரது தலையிலும் பாதத்திலும் விலையுயர்ந்த தைலத்தை மரியாள் ஊற்றியபோது, “இந்த வாசனைத் தைலத்தை ஏன் இப்படி வீணாக்க வேண்டும்?” என்று சொல்லி சிலர் முறுமுறுத்தார்கள். a அந்தத் தைலத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம் என அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு, “இவளை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் இவளுடைய மனதை நோகடிக்கிறீர்கள்?” என்றார். அதோடு, “இவள் தனக்கு முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறாள்” என்றும் சொன்னார். (மாற்கு 14:3-8; யோவான் 12:3) மரியாள் என்ன செய்யவில்லையோ அதைப் பொருட்படுத்தாமல், அவள் என்ன செய்தாளோ அதை நன்றியோடு பாராட்டினார்.

சிலர் எல்லாவற்றையும் இழந்த பிறகுதான், அதாவது குடும்பத்தை... நண்பர்களை... வேறு சிலவற்றை இழந்த பிறகுதான் அதன் மதிப்பை உணருகிறார்கள். இப்போது அனுபவிக்கிற நல்ல காரியங்களைச் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் அப்படிப்பட்ட சோகமான முடிவை நீங்கள் தவிர்க்கலாம்! ஆகவே, நீங்கள் நன்றியுணர்வைக் காட்ட வேண்டிய இதுபோன்ற காரியங்களை ஏன் எண்ணிப் பார்க்கக்கூடாது அல்லது பட்டியல் போடக் கூடாது?

“நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும்” கடவுளிடமிருந்தே வருவதால், நாம் அவருக்கு ஜெபத்தில் நன்றி தெரிவிக்கலாம், அல்லவா? (யாக்கோபு 1:17) அப்படித் தவறாமல் செய்யும்போது நன்றியுணர்வை எப்போதும் காட்ட முடியும், திருப்தியையும் வளர்த்துக்கொள்ள முடியும்.—பிலிப்பியர் 4:6, 7. (w10-E 11/01)

[அடிக்குறிப்பு]

a முதல் நூற்றாண்டில், விருந்தினரின் தலையில் தைலத்தை ஊற்றுவது உபசரிப்புக்கு அடையாளம்; பாதத்தில் ஊற்றுவது மனத்தாழ்மைக்கு அடையாளம்.

[பக்கம் 6-ன் படம்]

பிறர் செய்த காரியங்களுக்கு நன்றி சொல்கிறீர்களா?