Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அவர் உனக்குத் தென்படுவார்’

‘அவர் உனக்குத் தென்படுவார்’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘அவர் உனக்குத் தென்படுவார்’

1 நாளாகமம் 28:9

கடவுளை உங்களுக்குத் தெரியுமா? ‘தெரியுமே!’ என்று சட்டென்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் அப்படிச் சொல்லிவிட முடியாது! ஏனென்றால், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு, அவர் எதையெல்லாம் விரும்புகிறார்... எதையெல்லாம் வெறுக்கிறார்... என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொள்ளும்போது கடவுளோடு ஒரு நெருக்கமான பந்தத்தை நாம் வளர்த்துக்கொள்வோம்; அந்தப் பந்தம், நம் வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிடும். ஆனால், அப்படியொரு பந்தத்தை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியுமா? முடியுமென்றால், அதற்கு என்ன வழி? தாவீது ராஜா தன்னுடைய மகன் சாலொமோனுக்குக் கொடுத்த அறிவுரையில் இதற்கான பதில் இருக்கிறது. அந்த அறிவுரையை 1 நாளாகமம் 28:9-ல் காணலாம்.

இந்தச் சம்பவத்தைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்: தாவீது ராஜா கிட்டத்தட்ட 40 வருடங்களாக இஸ்ரவேல் தேசத்தை ஆண்டுவந்திருக்கிறார். அவருடைய ஆட்சியில் மக்கள் செழித்தோங்கியிருக்கிறார்கள். அவரையடுத்து அவருடைய மகன் சாலொமோன் அரியணை ஏறப்போகிறார். அவரோ ஓர் இளைஞனாய் இருக்கிறார். (1 நாளாகமம் 29:1) எனவே... தாவீது மரிப்பதற்கு முன் கடைசியாக சாலொமோனுக்குச் சில அறிவுரைகளை அளிக்கிறார். அவை என்னவென்று இப்போது கவனிப்போம்.

தாவீது, கடவுளுக்கு உண்மையாய்ச் சேவை செய்திருக்கிறார்; அதில் தனக்குக் கிடைத்திருக்கும் ஒப்பற்ற அனுபவங்களிலிருந்தே சாலொமோனுக்கு அறிவுரை கொடுக்க ஆரம்பிக்கிறார். “என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து[கொள்]” என்கிறார். கடவுளைப் பற்றி ஏதோ சில உண்மைகளை சாலொமோன் தெரிந்துகொண்டால் போதும் என்ற அர்த்தத்தில் தாவீது அப்படிச் சொல்லவில்லை. ஏனென்றால்... சாலொமோன் ஏற்கெனவே யெகோவாவை வழிபட்டுவந்திருக்கிறாரே! எபிரெய வேதாகமத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதி அப்போது எழுதி முடிக்கப்பட்டிருந்தது; அதில் கடவுளைப் பற்றி என்ன எழுதியிருந்ததென்று சாலொமோனுக்கு நன்றாகவே தெரியும். எப்படிச் சொல்கிறோம்? ‘அறிந்துகொள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை, ‘மிக நெருக்கமாகப் பழகுவதை’ அர்த்தப்படுத்தலாம் என்கிறார் ஓர் அறிஞர். இந்த அர்த்தத்தில்தான் தாவீது அப்படிச் சொல்கிறார். ஆம், தன்னைப் போலவே தன் மகனும் கடவுளோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்... அதைப் பொக்கிஷமாய்ப் போற்ற வேண்டும்... என்று தாவீது விரும்புகிறார்.

அப்படியொரு பந்தத்தை சாலொமோன் வளர்த்துவந்தால்... அது, அவருடைய கண்ணோட்டத்தையே, ஏன், வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றிவிடும். “அவரை [கடவுளை] உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி” என்றும் தாவீது தன் மகனிடம் சொல்கிறார். a கடவுளை அறிந்துகொள்ளும்படி சொன்ன பிறகே அவரைச் சேவிக்கச் சொல்லி தாவீது அறிவுரை கொடுக்கிறார் என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால், சாலொமோன் கடவுளைப் பற்றி நன்றாக அறிய அறிய அவருக்குச் சேவையும் செய்வார். ஆனால், அந்தச் சேவையை அவர் அரைமனதாகவோ இருமனதாகவோ செய்யக் கூடாது. (சங்கீதம் 12:2) ஆகவே, முழு இருதயத்தோடும் முழு மனதோடும் கடவுளுக்குச் சேவை செய்யும்படி தாவீது தன் மகனிடம் நயந்து கேட்டுக்கொள்கிறார்.

சரியான உள்நோக்கத்தோடும் சரியான சிந்தையோடும் கடவுளைச் சேவிக்கும்படி ஏன் தாவீது தன் மகனை அறிவுறுத்துகிறார்? அதற்கு தாவீதே பின்வருமாறு பதிலளிக்கிறார்: “ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்.” (பொது மொழிபெயர்ப்பு) தன் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கினால் போதும் என்ற எண்ணத்தில் சாலொமோன் கடவுளுக்குச் சேவை செய்யக் கூடாது. ஏனென்றால், தம்மை உள்ளப்பூர்வமாகச் சேவிப்பவர்களையே கடவுள் தேடுகிறார்.

அப்படியானால்... சாலொமோன் தன்னுடைய தகப்பனைப் போலவே, யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்வாரா? அது சாலொமோனின் கையில்தான் இருக்கிறது. தாவீது தன் மகனிடம், “நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்” என்று சொல்கிறார். எனவே, கடவுளோடு நெருக்கமான ஒரு பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால்... யெகோவாவை அறிந்துகொள்ள சாலொமோன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். b

யெகோவாவிடம் நாம் நெருங்கிச் செல்ல வேண்டுமென்றே அவர் விரும்புகிறார் என்பதை தாவீதின் அன்பான அறிவுரையிலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அப்படியொரு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள, நாம் ‘அவரைத் தேட வேண்டும்’; அதாவது, பைபிளை அலசி ஆராய்ந்து, அவரைப் பற்றி மிக ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நாம் தெரிந்துகொள்ளும்போது முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அவருக்குச் சேவை செய்வோம். அதைத்தான் யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார்; அப்படிப்பட்ட சேவையைப் பெறுவதற்கு அவர் தகுதியானவரும்கூட!—மத்தேயு 22:37. (w10-E 11/01)

[அடிக்குறிப்புகள்]

a சில பைபிள்களில் இந்த வசனம், “அவரை முழு இருதயத்தோடும் உள்ளப்பூர்வமாகவும் சேவி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

b வருத்தமான விஷயம் என்னவென்றால்... சாலொமோன் முழு இருதயத்தோடுதான் கடவுளைச் சேவிக்க ஆரம்பித்தார்; ஆனால், போகப்போக பாதை மாறிவிட்டார்.—1 இராஜாக்கள் 11:4.