Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

ரகசியம் 2

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “உங்கள் வேலையை நீங்கள் நன்றாகச் செய்யுங்கள், அப்போது நீங்கள் அதைக் குறித்து பெருமிதம் கொள்ளலாம். ஆனால் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.”—கலாத்தியர் 6:4, கன்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.

என்ன சவால்? நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் வருவது சகஜம்தான். ஆம், சில சமயங்களில், நம்மைவிட தாழ்வானவர்களுடன்... பெரும்பாலான சமயங்களில் நம்மைவிட பலமானவர்களுடன்... வசதியானவர்களுடன்... திறமையானவர்களுடன்... ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் வருவது சகஜம்தான். எப்படி இருந்தாலும்சரி, அது நல்லதல்ல. ஒருவரிடம் உள்ளதை வைத்து அல்லது ஒருவருடைய திறமையை வைத்து நாம் அவருடைய மதிப்பை தவறாக எடை போட்டுவிடலாம். இதனால், போட்டியும் பொறாமையும் நமக்குள் எரிமலைபோல் வெடிக்கும்.—பிரசங்கி 4:4.

என்ன செய்யலாம்? கடவுள் உங்களைப் பார்க்கும் விதமாக நீங்கள் உங்களைப் பாருங்கள். உங்களுடைய மதிப்பை அவருடைய கண்ணோட்டத்தில் மதிப்பிடுங்கள். ‘மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: யெகோவாவோ a இதயத்தைப் பார்க்கிறார்.’ (1 சாமுவேல் 16:7) மற்ற மனிதரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் அல்ல, உங்களுடைய இதயத்தை... யோசனைகளை... உணர்ச்சிகளை... உள்ளெண்ணங்களை... ஆராய்வதன் மூலமே யெகோவா உங்கள் மதிப்பை எடைபோடுகிறார். (எபிரெயர் 4:12, 13) யெகோவா உங்களுடைய வரம்புகளைப் புரிந்துகொள்கிறார், நீங்களும் அவற்றைப் புரிந்துகொண்டு நடக்கும்படியே உந்துவிக்கிறார். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய மதிப்பை அளவிட்டால், கடைசியில் தலைக்கனம் பிடித்தவர்களாய் ஆகிவிடுவீர்கள், அல்லது எதிலும் திருப்தி இல்லாதவர்களாய் ஆகிவிடுவீர்கள். ஆகவே, எல்லாவற்றிலும் திறமைசாலி ஆகிவிட முடியாது என்பதைத் தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 11:2.

கடவுளுடைய பார்வையில் மதிப்புள்ளவர்களாய் இருப்பதற்கு நீங்கள் முக்கியமாக என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய தூண்டுதலால் தீர்க்கதரிசியான மீகா இவ்வாறு எழுதினார்: ‘மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.’ (மீகா 6:8) இந்த அறிவுரையை நீங்கள் பின்பற்றினால், கடவுள் உங்களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக்கொள்வார். (1 பேதுரு 5:6, 7) திருப்தியுடன் இருப்பதற்கு இதைவிட வேறென்ன காரணம் இருக்க முடியும்? (w10-E 11/01)

[அடிக்குறிப்பு]

a பைபிளில் கடவுளுடைய பெயர்.

[பக்கம் 5-ன் படம்]

நம் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை வைத்தே யெகோவா நம் மதிப்பை எடைபோடுகிறார்