Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் ‘மனிதரின் இதயங்களை அறிந்திருக்கிறார்!’

அவர் ‘மனிதரின் இதயங்களை அறிந்திருக்கிறார்!’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

அவர் ‘மனிதரின் இதயங்களை அறிந்திருக்கிறார்!’

2 நாளாகமம் 6:29-31

பிரச்சினைகளும் துன்பங்களும் இன்று யாரைத்தான் விட்டுவைக்கின்றன? நம் இதயத்தின் வேதனைகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ள யாருமே இல்லை என்று நாம் சில சமயம் நினைக்கலாம். ஆனால், நம் உள்ளத்தின் உணர்வுகளை ஒருவர் மட்டும் முழுமையாகப் புரிந்துகொள்கிறார்; அவர்தான் கடவுளாகிய யெகோவா. அதைப் பற்றி 2 நாளாகமம் 6:29-31-ல் நாம் வாசிக்கிறோம். அதில் பதிவாகியுள்ள சாலொமோனின் வார்த்தைகளைப் படிக்கும்போது நம் மனதுக்கு இதமாய் இருக்கிறது.

வருடம்: கி.மு. 1026. இடம்: எருசலேம் நகரம். சம்பவம்: ஆலயத் திறப்பு விழா. அந்தச் சந்தர்ப்பத்தில் கடவுளிடம் சுமார் பத்து நிமிடம் சாலொமோன் பிரார்த்தனை செய்தார். யெகோவா உண்மையுள்ளவர்... வாக்குத் தவறாதவர்... பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பவர்... என்றெல்லாம் சொல்லி அவரைப் புகழ்ந்தார்.—1 இராஜாக்கள் 8:23-53; 2 நாளாகமம் 6:14-42.

மக்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டருளும்படி கடவுளிடம் சாலொமோன் கெஞ்சினார். (வசனம் 29) மக்கள் பொதுவாகப் படும் கஷ்டங்களை முதலில் பட்டியலிட்டார் (வசனம் 28); பின்பு, அவரவர் ‘வாதையும்’ அவரவர் ‘வியாகுலமும் [அதாவது, இதயத்தின் வேதனையும்]’ அவரவருக்குத் தெரியும் என்று சொன்னார். ஏனென்றால், ஒருவருக்கு ஒரு விதமான பிரச்சினை இருக்கலாம், இன்னொருவருக்கு இன்னொரு விதமான பிரச்சினை இருக்கலாம்.

ஆனால் கடவுள்-பயம் உள்ளவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களாகவே சமாளிக்க வேண்டியதில்லை; ஆம், தங்கள் பாரங்களைத் தனியாகச் சுமக்க வேண்டியதில்லை; யெகோவாவின் உதவியை நாடலாம். சாலொமோன் பிரார்த்தனை செய்தபோது, “கைகளை விரித்து” மனதுருகி விண்ணப்பம் செய்த ஒரு நபரைத் தன் மனதில் நினைத்திருக்கலாம். a ஒருவேளை அவருடைய அப்பா தாவீது துன்பத்தில் துவண்டுபோயிருந்த சமயத்தில் சொன்ன வார்த்தைகள்... அதாவது, “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு” என்ற வார்த்தைகள்... சாலொமோனின் மனதிற்கு வந்திருக்கலாம்.—சங்கீதம் 55:4, 22.

சரி, உதவி கேட்டு மனதுருகி விண்ணப்பம் செய்வோருக்கு யெகோவா எப்படிப் பதிலளிப்பார்? ‘உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் [மக்களின் விண்ணப்பங்களை] கேட்டு மன்னித்து, அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக!’ என்று சாலொமோன் மன்றாடினார். (வசனம் 30; NW) ‘ஜெபத்தைக் கேட்கிற’ கடவுள், மக்களை மொத்தமாகவும் கவனித்துக்கொள்கிறார், தனித்தனியாகவும் கவனித்துக்கொள்கிறார் என்பதை சாலொமோன் அறிந்திருந்தார். (சங்கீதம் 65:2) ஆம், அவர்களுக்குத் தேவையான உதவிகளை யெகோவா அளிக்கிறார்; தவறு செய்தவர் உண்மையாக மனந்திரும்பும்போது மன்னிப்பும் அளிக்கிறார்.—2 நாளாகமம் 6:36-39.

மனந்திரும்பும் நபரின் விண்ணப்பங்களுக்கு யெகோவா செவிசாய்ப்பார் என்பதில் சாலொமோன் ஏன் அவ்வளவு நம்பிக்கையாய் இருந்தார்? “ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் [யெகோவா] அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்!” (பொது மொழிபெயர்ப்பு) என்று அவரே சொன்னார். தமது மக்கள் ஒவ்வொருவருடைய துன்பத்தை அல்லது இதயத்தின் வேதனையை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார்; ஆம், அவர்களுக்கு வேதனை என்றால் அவருக்கும் வேதனைதான்!—சங்கீதம் 37:4.

சாலொமோனின் பிரார்த்தனை நமக்கு ஆறுதலின் அருமருந்தாய் இருக்கிறது. நம் உள்ளத்தின் உணர்வுகளை, ஆம், நம்முடைய துன்பத்தையும் ‘மனவேதனையையும்’ மற்றவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல்போகலாம். (நீதிமொழிகள் 14:10) ஆனால், நம் மனதின் ஏக்கங்கள் என்னவென்று யெகோவாவுக்குத் தெரியும்; அவருக்கு நம்மீது மிகுந்த அக்கறை இருக்கிறது. நம் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டின பிறகு நம் மனப்பாரம் குறைந்துவிடும். அதனால்தான், “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், ‘அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்.’—1 பேதுரு 5:7. (w10-E 12/01)

[அடிக்குறிப்பு]

a அந்தக் காலத்தில், ‘கைகளை விரிப்பது,’ அதாவது இரு கைகளையும் வானத்தை நோக்கி நீட்டுவது, ஜெபம் செய்வதற்கு அடையாளமாக இருந்தது.—2 நாளாகமம் 6:13.