Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

கடவுளிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுளிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம். பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கட்டுரையை வாசியுங்கள். பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக உங்களிடம் பேச யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. கடவுளிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

மனிதர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கடவுள் சொல்லியிருக்கிறார், அதை பைபிளில் சொல்லியிருக்கிறார். பைபிள், நம் அன்பான பரலோகத் தகப்பனிடமிருந்து வந்திருக்கிற கடிதம் என்றே சொல்லலாம்.—எரேமியா 29:11-ஐ வாசியுங்கள்.

2. அந்த நல்ல செய்தி என்ன?

மனிதர்களுக்கு ஒரு நல்ல அரசாங்கம் தேவை. அக்கிரமம், அநியாயம், வியாதி, மரணம் ஆகியவற்றின் பிடியிலிருந்து மனிதர்களை எந்தவொரு அரசியல் தலைவரும் விடுவித்ததாகச் சரித்திரமே இல்லை. ஆனால், ஒரு நல்ல செய்தி! மனிதர்களுக்காகக் கடவுள் ஓர் அருமையான அரசாங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அது அவர்களுடைய துன்ப துயரங்களுக்குக் காரணமானவற்றை எல்லாம் அடியோடு அழித்துவிடும்.—தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.

3. கடவுளிடமிருந்து கற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?

மனிதர்களுக்குக் கஷ்டம் கொடுக்கிற எல்லாரையும் கடவுள் சீக்கிரத்தில் ஒழித்துக்கட்டுவார். என்றாலும், கடவுள் மீதும் சக மனிதர் மீதும் அன்பு காட்டி, சந்தோஷமாக வாழ்வதற்கான வழியை மனத்தாழ்மையுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் கற்றுத் தருகிறார். ஆம், பிரச்சினைகளைச் சமாளிக்க, உண்மையான சந்தோஷத்தைக் காண, தமக்குப் பிரியமாக நடக்க பைபிளிலிருந்து அவர்களுக்குக் கற்றுத் தருகிறார்.—செப்பனியா 2:3-ஐ வாசியுங்கள்.

4. பைபிளின் ஆசிரியர் யார்?

பைபிளில் 66 சிறிய புத்தகங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 40 பேர் அவற்றை எழுதினார்கள். முதல் ஐந்து புத்தகங்களை மோசே சுமார் 3,500 வருடங்களுக்கு முன் எழுதினார். கடைசி புத்தகத்தை அப்போஸ்தலன் யோவான் சுமார் 1,900 வருடங்களுக்கு முன் எழுதினார். பைபிளை எழுதியவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துகளை எழுதவில்லை, கடவுளுடைய கருத்துகளையே எழுதினார்கள். அப்படியென்றால், பைபிளின் ஆசிரியர் கடவுளே!—2 தீமோத்தேயு 3:16-ஐயும் 2 பேதுரு 1:21-ஐயும் வாசியுங்கள்.

பைபிள், கடவுள் தந்த புத்தகம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அது, எதிர்காலத்தைப் பற்றித் திருத்தமாகவும் விளக்கமாகவும் சொல்கிறது. இந்தளவுக்குத் துல்லியமாக எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. (ஏசாயா 46:9, 10) அதுமட்டுமல்ல, கடவுளுடைய அருமையான குணங்களை அது தெளிவாக விளக்குகிறது. மக்களை நல்லவர்களாக மாற்றுகிற வல்லமையும் பைபிளுக்கு இருக்கிறது. இந்த விஷயங்களை அறிந்துகொண்ட லட்சக்கணக்கான மக்கள், பைபிளைக் கடவுளுடைய வார்த்தை என்று நம்புகிறார்கள்.—யோசுவா 23:14-ஐயும் 1 தெசலோனிக்கேயர் 2:13-ஐயும் வாசியுங்கள்.

5. பைபிளை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

கடவுளுடைய வார்த்தையைக் கற்றுத் தருவதில் இயேசு நிகரற்றவராக விளங்கினார். அவருடைய போதனைகளைக் கேட்ட பெரும்பாலோருக்கு வேதவசனங்களைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது; என்றாலும், அதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. ஆகவே, அவர் நிறைய வசனங்களைச் சொல்லி ‘அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள’ அவர்களுக்கு உதவினார். “கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் வரும் இந்தத் தொடர்கட்டுரையில்கூட இதே முறை பயன்படுத்தப்படும்; எனவே, இந்தக் கட்டுரைகளின் உதவியோடு பைபிளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளலாம்.—லூக்கா 24:27, 45-ஐ வாசியுங்கள்.

வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிக் கடவுளிடமிருந்து கற்றுக்கொள்வதைவிட சுவாரஸ்யமான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால், அதைப் பற்றி நீங்கள் பைபிளிலிருந்து கற்றுக்கொள்வது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். என்றாலும், நீங்கள் விட்டுவிடாதீர்கள்; ஏனென்றால், கடவுளை நன்றாக அறிந்துகொண்டால்தான் முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.—மத்தேயு 5:10-12-ஐயும் யோவான் 17:3-ஐயும் வாசியுங்கள். (w11-E 01/01)

கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தைப் பாருங்கள்.