Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏதேன் தோட்டம்—முதல் மனிதன் வாழ்ந்த இடமா?

ஏதேன் தோட்டம்—முதல் மனிதன் வாழ்ந்த இடமா?

ஏதேன் தோட்டம்—முதல் மனிதன் வாழ்ந்த இடமா?

நகரத்தின் இரைச்சல் இல்லாத அமைதியான இடம். பரந்துவிரிந்த அழகான பூஞ்சோலை. மனதில் கவலை இல்லை, உடம்பில் நோய்நொடி இல்லை. அழகு கொஞ்சும் அந்தத் தோட்டத்தைப் பார்த்து ரசிப்பதற்குத் தடைகளே இல்லை.

கண்களைப் பறிக்கும் வண்ண வண்ண மலர்கள். சூரிய ஒளியில் மினுமினுக்கும் நீரோடை. பசுமையான புல்வெளி. பச்சை நிறத்தின் பல வண்ணங்களைப் போர்த்திய இலைதழைகள். நம்மை மென்மையாக வருடிச்செல்லும் தென்றல் காற்று. அதில் கலந்துவரும் மலர்களின் இனிய வாசனை. ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் இலைகளின் சரசரப்பு. பாறைகள்மேல் குதித்து ஓடும் அருவிகளின் ஆர்ப்பரிப்பு. பறவைகளின் இன்னிசைப் பாடல்கள். சுறுசுறுப்பான வண்டுகளின் ரீங்காரம். ஆஹா.. எவ்வளவு அருமையான இடம்! இங்கே வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது?!

இதுபோன்ற ஒரு இடத்தில்தான் முதல் மனிதனும் மனுஷியும் வாழ்ந்ததாக நிறைய பேர் நம்புகிறார்கள். கடவுள் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வாழ வைத்தார் என்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் காலம்காலமாக நம்பிவருகிறார்கள். ஆதாமும் ஏவாளும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்ததாக பைபிள் சொல்கிறது. அவர்களுக்கு இடையில் சமாதானம் இருந்தது, மிருகங்கள்கூட அவர்களுக்குத் தீங்கு செய்யவில்லை. கடவுளோடு அவர்களுக்கு ஒரு நல்ல பந்தம் இருந்தது. அந்த அழகு கொஞ்சும் தோட்டத்தில் என்றென்றும் வாழும் வாய்ப்பைக் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.—ஆதியாகமம் 2:15-24.

மனிதர்கள் ஒருகாலத்தில் பூஞ்சோலையில் வாழ்ந்ததாக இந்துக்களும் நம்புகிறார்கள். புத்த மதத்தினர்கூட, உலகம் பூஞ்சோலையாக இருந்த பொற்காலங்களில்தான் ஆன்மீகப் பாதையைக் காட்டும் பெரும் தலைவர்கள் தோன்றியதாக நம்புகிறார்கள். நிறைய ஆப்பிரிக்க மதங்கள் சொல்லித்தரும் கதைகளும், ஆதாம் ஏவாள் கதையைப் போலவே இருக்கின்றன.

இப்படி, ஆதி காலத்தில் ஒரு பூஞ்சோலை இருந்தது என்ற நம்பிக்கை நிறைய மதங்களிலும் பாரம்பரியங்களிலும் ஊடுருவியிருக்கிறது. “பயமுறுத்தலோ கவலைகளோ சண்டை சச்சரவுகளோ இல்லாத அருமையான ஒரு பூஞ்சோலை முதலில் இருந்ததாக நிறைய நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் நினைத்தார்கள். அங்கே சந்தோஷமும் சமாதானமும் சுதந்தரமும் நிறைந்திருந்ததாக அவர்கள் நம்பினார்கள். அதனால், இழந்துபோன பூஞ்சோலைக்காக ஏங்கினார்கள், எப்படியாவது அந்த வாழ்க்கையை அடையத் துடித்தார்கள்” என்று ஒரு எழுத்தாளர் சொன்னார்.

ஒருவேளை, இந்த எல்லா கதைகளும் பாரம்பரிய நம்பிக்கைகளும் ஒரே இடத்திலிருந்து தோன்றியிருக்குமோ? இதெல்லாம் நிஜம் என்பதால்தான் பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களின் நினைவிலும் பதிந்துவிட்டதோ? அப்படியென்றால், ஆரம்பத்தில் ஒரு ஏதேன் தோட்டம் இருந்தது நிஜம்தானா? ஆதாமும் ஏவாளும் அங்கு வாழ்ந்தது உண்மைதானா?

இதையெல்லாம் நம்புவது முட்டாள்தனம் என்றும், இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நிறைய மதத் தலைவர்கள்கூட ஏதேன் தோட்டம் இருந்ததை நம்புவதில்லை. நமக்கு ஒரு நல்ல பாடத்தைச் சொல்லித்தருவதற்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைதான் அல்லது நீதிக் கதைதான் அது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

பைபிளில் நீதிக் கதைகள் இருப்பது உண்மைதான். இயேசுவும்கூட உலகப் புகழ்பெற்ற பல நீதிக் கதைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களெல்லாம் நிஜம் என்று பைபிள் சொல்கிறது. அந்தச் சம்பவங்கள் உண்மையில் நடக்கவே இல்லை என்றால், பைபிள் சொல்லும் மற்ற விஷயங்களை நாம் எப்படி நம்ப முடியும்? ஏதேன் தோட்டம் இருந்ததை ஏன் சிலர் நம்புவதில்லை என்று நாம் பார்க்கலாம். அதோடு, அந்தப் பதிவைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்றும் பார்க்கலாம்.