Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு கிறிஸ்து உண்மையில் யார்?

இயேசு கிறிஸ்து உண்மையில் யார்?

“அவர் எருசலேமுக்குள் சென்றபோது, நகரத்தார் எல்லாரும் பரபரப்பாகி, ‘இவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் கூட்டத்தார், ‘இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான இயேசு! கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்’ என்று சொன்னார்கள்.” —மத்தேயு 21:10, 11.

கி.பி.33-ஆம் ஆண்டு. வசந்த காலம். எருசலேம் நகருக்குள் இயேசு கிறிஸ்து a நுழைந்தார்; அப்போது அந்த நகரெங்கும் ஒரே பரபரப்பு! ஏன்? அவர்களில் அநேகர் இயேசுவைப் பற்றியும் அவர் செய்த வியக்கத்தக்க அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். அதை மற்றவர்களுக்குச் சொல்லியும் வந்தார்கள். (யோவான் 12:17-19) என்றாலும், அவருடைய புகழ் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கும் என்றோ பல நூற்றாண்டுகள் கடந்து இன்றுவரை நிலைத்திருக்கும் என்றோ அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை!

மனித சரித்திரத்தில் இயேசு எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார் என்பதற்குச் சில உதாரணங்களைக் கவனியுங்கள்:

  • இயேசு பிறந்ததாகக் கருதப்படுகிற வருடத்தை அடிப்படையாக வைத்தே இன்று உலகின் பல பகுதிகளில் நாட்காட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • கிட்டத்தட்ட 200 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், தங்களைக் கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொள்கிறார்கள்.

  • உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமான அங்கத்தினர்களை உடைய இஸ்லாம் மதம், இயேசுவை ஒரு பெரிய தீர்க்கதரிசி எனப் போதிக்கிறது.

  • இயேசு சொன்ன நிறைய பொன்மொழிகள், கொஞ்சம் மருவி நம்முடைய அன்றாடப் பேச்சுவழக்கில் கலந்துவிட்டன. அவற்றில் சில:

    ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு.’மத்தேயு 5:39.

    ‘வலது கை செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது.’மத்தேயு 6:3.

    ‘நாளைக்காகக் கவலைப்படாதே.’மத்தேயு 6:34.

    கத்தியை எடுக்கிறவன் கத்தியால் சாவான்.மத்தேயு 26:52.

    ‘எதிரியைக்கூட நேசி.’லூக்கா 6:27.

மனித சரித்திரத்தில் இயேசு செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும், அவரைப் பற்றி மக்கள் மனதில் பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன, பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. எனவே, ‘இயேசு கிறிஸ்து உண்மையிலேயே யார்?’ என்ற கேள்வி உங்கள் மனதிலும் தலைதூக்கியிருக்கலாம். இயேசு எங்கிருந்து வந்தார், எப்படி வாழ்ந்தார், ஏன் இறந்தார் என்ற கேள்விகளுக்கு பைபிள் மட்டுமே விடையளிக்கிறது. அவரைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொண்டால் உங்கள் வாழ்வு இன்றும் என்றும் ஒளிமயமாகும்! (w11-E 04/01)

a நாசரேத்தைச் சேர்ந்த இந்தத் தீர்க்கதரிசியின் சொந்தப் பெயர் “இயேசு.” அதன் அர்த்தம் “யெகோவாவே மீட்பர்” என்பதாகும். “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரின் அர்த்தம், “அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” கடவுள் அவரை ஒரு விசேஷ பொறுப்பில் நியமித்திருக்கிறார் என்பதை இது குறிக்கிறது.