Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு எப்படி வாழ்ந்தார்?

இயேசு எப்படி வாழ்ந்தார்?

“என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவு.”—யோவான் 4:34.

எந்தச் சூழ்நிலையில் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான், அவருடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது நமக்குப் புரியும். அன்று காலை தொடங்கி மதியம் வரை இயேசுவும் அவருடைய சீடர்களும் சமாரியாவின் மலைப்பிரதேசங்களில் பயணம் செய்து வந்திருந்தார்கள். (யோவான் 4:6, அடிக்குறிப்பு) இயேசு பசியாக இருப்பார் என நினைத்து, அவருடைய சீடர்கள் சாப்பிடும்படி அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். (யோவான் 4:31-33) அப்போதுதான் இயேசு நாம் மேலே பார்த்த அந்த வார்த்தைகளை அவர்களிடம் சொன்னார்; அதில், தம்முடைய வாழ்க்கையின் லட்சியத்தை சுருக்கமாகச் சொன்னார். உணவைவிட கடவுளுடைய வேலையைச் செய்வதற்குத்தான் அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கடவுளுடைய சித்தத்தைச் செய்து முடிப்பதுதான் தம் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் காட்டினார். எப்படி?

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கித்தார், கற்பித்தார்

இயேசு தம்முடைய வாழ்நாளில் செய்துவந்த மிக முக்கியமான வேலையை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: ‘அவர் கலிலேயா முழுவதும் போய், . . . கற்பித்தார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்.’ (மத்தேயு 4:23) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பதோடு, அதாவது அறிவிப்பதோடு இயேசு நிறுத்திவிடவில்லை. அவர் மக்களுக்குக் கற்பித்தார்; அதாவது, அவர்களுக்கு விளக்கிச் சொன்னார், அறிவுரை வழங்கினார், அவர்கள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் நியாயங்காட்டிப் பேசினார். கடவுளுடைய அரசாங்கமே இயேசு பிரசங்கித்த செய்தியின் மையக் கருத்தாக இருந்தது.

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பற்றி தம்முடைய ஊழியக் காலம் முழுவதும் இயேசு மக்களுக்குக் கற்பித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளையும், அதைப் பற்றி இயேசு சொன்னவற்றையும் கீழே காணலாம்; அவற்றுக்கான பைபிள் மேற்கோள்களையும் காணலாம்.

  • கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும்; இயேசுவை அதன் அரசராக யெகோவா தேவன் நியமித்திருக்கிறார்.—மத்தேயு 4:17; யோவான் 18:36.

  • இந்த அரசாங்கம் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும்; அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதைப் போலவே பூமியில் செய்யப்படும்படி பார்த்துக்கொள்ளும்.—மத்தேயு 6:9, 10.

  • கடவுளுடைய ஆட்சியில் இந்த முழு பூமியும் பூஞ்சோலையாக மாறும்.—லூக்கா 23:42, 43.

  • கடவுளுடைய அரசாங்கம் விரைவில் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்; இந்தப் பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றும். aமத்தேயு 24:3, 7-12.

வல்லமையுள்ள செயல்களைச் செய்தார்

“போதகர்” என்றே இயேசு முக்கியமாக அழைக்கப்பட்டார். (யோவான் 13:13) என்றாலும், அவர் ஊழியம் செய்துவந்த மூன்றரை ஆண்டுகளில், அநேக அற்புதங்களையும் செய்தார். அப்படிச் செய்ததற்கு குறைந்தபட்சம் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை அவை நிரூபித்தன. (மத்தேயு 11:2-6) இரண்டு, அவர் எதிர்காலத்தில் கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக ஆட்சி செய்யும்போது இவற்றையெல்லாம் இன்னும் பெரிய அளவில் செய்வார் என்பதைக் காட்டின. அவர் செய்த சில அற்புதங்களைக் கவனியுங்கள்:

  • கொந்தளித்த கடலை அமைதிப்படுத்தினார், பலத்த காற்றை அடக்கினார்.—மாற்கு 4:39-41.

  • நோய்வாய்ப்பட்டவர்களை, பார்வையற்றவர்களை, காது கேளாதவர்களை, நடக்க முடியாதவர்களை அவர் குணப்படுத்தினார்.—லூக்கா 7:21, 22.

  • பசியோடிருந்த பெருங்கூட்டத்திற்கு உணவளிப்பதற்காக, உணவைப் பன்மடங்காகப் பெருக்கினார்.—மத்தேயு 14:17-21; 15:34-38.

  • குறைந்தபட்சம் மூன்று சந்தர்ப்பங்களில், இறந்துபோனவர்களை உயிரோடு எழுப்பினார்.—லூக்கா 7:11-15; 8:41-55; யோவான் 11:38-44.

இந்தளவு சக்திவாய்ந்த ஒரு ராஜாவின் ஆட்சியில் இந்தப் பூமி எப்படி மாறிவிடும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்!

யெகோவா தேவனின் சுபாவத்தை வெளிப்படுத்தினார்

யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்குத் தகுதியுள்ளவர் அவருடைய மகன் இயேசு கிறிஸ்து மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ‘படைப்புகளிலேயே முதல் படைப்பாக’ இருக்கும் இயேசு மட்டும்தான், பரலோகத்தில் உள்ள வேறெந்த தூதரைக் காட்டிலும் யெகோவாவோடு அதிக காலத்தைக் கழித்திருக்கிறார். (கொலோசெயர் 1:15) அப்போது, தம்முடைய தகப்பனுடைய எண்ணங்களைக் கிரகித்துக்கொள்ளவும், அவருடைய சித்தத்தை, நெறிமுறைகளை, வழிகளை... கற்றுக்கொள்ளவும் அவருக்கு எந்தளவு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

அதனால்தான், இயேசு ஒருமுறை இப்படிச் சொன்னார்: “தகப்பனைத் தவிர வேறு ஒருவனுக்கும் மகனைத் தெரியாது; மகனுக்கும், மகன் எவனுக்கு அவரை வெளிப்படுத்த விருப்பமாயிருக்கிறாரோ அவனுக்கும் தவிர வேறு ஒருவனுக்கும் தகப்பனைத் தெரியாது.” (லூக்கா 10:22) அவர் பூமியில் மனிதனாக வாழ்ந்தபோது, தம்முடைய தகப்பன் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி மக்களுக்கு ஆசைஆசையாய் சொல்லிக்கொடுத்தார். கடவுளைப் பற்றி ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து அவர் பேசினார், கற்றுக்கொடுத்தார். பரலோகத்தில் உன்னதமான கடவுளுடைய மகிமையான சன்னிதானத்தில் நேருக்கு நேர் பார்த்தவற்றைப் பற்றிப் பேசினார்.—யோவான் 8:28.

இயேசு தம்முடைய தகப்பனைப் பற்றி எப்படிச் சொல்லிக்கொடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ள மின்சார ‘டிரான்ஸ்பார்மரின்’ உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது அதிக ‘வோல்டேஜிலுள்ள’ மின்சாரத்தை எடுத்து குறைந்த ‘வோல்டேஜாக’ மாற்றுகிறது; இதனால், சாதாரணமாக வீடுகளில்கூட நம்மால் அதைப் பயன்படுத்த முடிகிறது. அதேபோல், இயேசு பூமியில் இருந்தபோது, பரலோகத்தில் தம்முடைய தகப்பனைப் பற்றிக் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பூமியிலுள்ள சாதாரண மனிதர்கள்கூட சுலபமாகப் புரிந்துகொண்டு பின்பற்றுவதற்கு ஏற்ற விதத்தில் எளிமையாகக் கற்றுக்கொடுத்தார்.

எந்த இரண்டு முக்கியமான விதங்களில் இயேசு தமது தகப்பனைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தினார் என்பதைக் கவனியுங்கள்:

  • தம்முடைய போதனைகளில் யெகோவாவைப் பற்றிய உண்மைகளை, அவருடைய பெயர், நோக்கம், வழிகள் ஆகியவற்றை இயேசு தெரியப்படுத்தினார்.—யோவான் 3:16; 17:6, 26.

  • தம்முடைய செயல்களில் யெகோவாவுடைய முத்தான குணங்களை வெளிக்காட்டினார். தமது தகப்பனின் சுபாவத்தை அவர் அவ்வளவு துல்லியமாகப் பிரதிபலித்ததால், ‘என் தகப்பன் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள விரும்பினால், என்னைப் பாருங்கள், போதும்’ என்ற அர்த்தத்தில் சொன்னார்.—யோவான் 5:19; 14:9.

இயேசு வாழ்ந்த விதம் எவ்வளவு மலைப்பூட்டுகிறது! அவர் ஏன் இறந்தார் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்வதோடு, அவரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதற்கு இசைவாக வாழ்ந்தால் அளவில்லா நன்மைகளைப் பெறுவோம். (w11-E 04/01)

a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அது விரைவில் வரப்போகிறது என்பதற்கான அடையாளங்களைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் “கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?” என்ற தலைப்பிலுள்ள 8-ஆம் அதிகாரத்தையும் “நாம் ‘கடைசி நாட்களில்’ வாழ்கிறோமா?” என்ற தலைப்பிலுள்ள 9-ஆம் அதிகாரத்தையும் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.