Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நான் நம்புகிறேன்’

‘நான் நம்புகிறேன்’

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

‘நான் நம்புகிறேன்’

கண்ணை மூடினால், அந்தக் காட்சிதான் மார்த்தாளின் மனதில் வந்துவந்து போனது. அன்பு சகோதரனின் கல்லறை. ஒரு பெரிய பாராங்கல்லால் மூடப்பட்ட குகை. அந்தப் பெரிய பாராங்கல்லையே தூக்கி நெஞ்சில் வைத்ததுபோல அவள் மனம் கனத்தது. லாசரு இந்த உலகத்திலேயே இல்லை என்பதை அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவன் கடைசி மூச்சை விட்டு நான்கு நாட்களாகிவிட்டது. அடக்கத்திற்கு வந்தவர்கள், துக்கம் விசாரிக்க வருபவர்கள் என ஆள் மாற்றி ஆள் வந்துகொண்டே இருந்ததால், நா...ன்கு நாட்கள் எப்படியோ போய்விட்டது.

இப்போது... லாசருவின் ஆருயிர் நண்பர் அவள்முன் நிற்கிறார். அவர் வேறு யாருமில்லை, இயேசுதான். மலைச்சரிவிலிருந்த ஊரான பெத்தானியாவிற்கு வெளியே அவரைப் பார்க்கிறாள். அவள் இதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டு வருகிறது; இந்த உலகத்திலேயே தன்னுடைய சகோதரனைக் காப்பாற்ற முடிந்த ஒரே ஆள் அவர்தான் என அவள் மலைபோல் நம்பிக்கொண்டிருந்தாள். இருந்தாலும், இயேசுவைப் பார்த்ததே, அவளுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அந்த ஒருசில நிமிடங்களில், அவருடைய கண்களில் தேங்கியிருந்த கருணை அவளுடைய மனதுக்கு இதமூட்டியது. அனுதாபத்தோடு அவர் பேசிய ஊக்கமூட்டும் வார்த்தைகள் அவள் மனதுக்கு ஒத்தடம் தந்தது. அவர் அவளிடம் கேட்ட சில கேள்விகள் அவளுடைய விசுவாசத்தையும், உயிர்த்தெழுதலில் அவள் வைத்திருந்த நம்பிக்கையையும் பலப்படுத்த உதவின. இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த சமயத்தில், “நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து; நீங்கள்தான் இந்த உலகத்திற்கு வரவேண்டியவர் என்று நம்புகிறேன்” என அவள் சொன்னாள். அவள் பேசியதிலேயே பொன்னான வார்த்தைகள் இவை.—யோவான் 11:27.

விசுவாசத்திற்கு மறுபெயர் கேட்டால் மார்த்தாளைக் கைக் காட்டலாம். அவளைப் பற்றி பைபிளில் பதிவாகியுள்ள விஷயங்கள் என்னவோ கொஞ்சம்தான்; ஆனால் அதில் நமக்குள்ள பாடங்களோ எத்தனை எத்தனை! அவை நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள, பைபிள் பதிவில் மார்த்தாள் முதல் அடியெடுத்து வைக்கிற சம்பவத்திற்கு நாம் போகலாம்.

“நீ நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய்”

இந்தச் சம்பவம் பல மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது லாசரு ஆரோக்கியமாகத்தான் இருந்தார். பெத்தானியாவிலிருந்த அவருடைய வீடு களைகட்டியிருந்தது; மிக முக்கியமான ஒரு விருந்தாளி, ஆம் இயேசு கிறிஸ்து, வரப்போகிறார். உடன்பிறப்புகளான லாசரு, மார்த்தாள், மரியாள் மூன்று பேரும் அநேகமாக ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கலாம். அவர்களில் மார்த்தாளே மூத்தவளாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சிலர் சொல்கிறார்கள்; ஏனென்றால், அவள் முன்னின்று விருந்தாளிகளை உபசரித்து வந்ததாகத் தெரிகிறது; சில சமயங்களில் அவளுடைய பெயர் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. (யோவான் 11:5) அவர்களில் யாருக்காவது திருமணம் ஆகியிருந்ததா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் மூன்று பேரும் இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். இயேசு யூதேயாவில் ஊழியம் செய்தபோது அவர்களுடைய வீட்டிலிருந்துதான் ஊழியம் செய்தார்; அந்தப் பகுதியில் அவர் எதிர்ப்பையும் பகைமையையும் சந்தித்து வந்ததால் அவர்கள் காட்டிய அன்பிலும் ஆதரவிலும் ரொம்பவே நெகிழ்ந்துபோனார்.

வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளுக்கு எல்லா சௌகரியங்களையும் செய்துகொடுக்க வேண்டும், அவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும் என்பதே மார்த்தாளின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சாதாரணமாகவே அவள் வேலை செய்ய சலித்துக்கொள்ளமாட்டாள்; எப்போதும் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவாள். அப்படியென்றால், இயேசு வந்திருக்கும்போது சொல்லவா வேண்டும். இந்த முக்கியமான விருந்தாளிக்கும், அவருடன் பயணத் தோழர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கும் சேர்த்து, நிறைய பதார்த்தங்களுடன் ஒரு தடபுடலான விருந்து கொடுக்க அவள் உடனடியாகத் திட்டம் போட்டாள். அந்தக் காலத்தில், உபசரிப்பு என்பது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. ஒரு விருந்தாளி வந்தவுடன், அவரை முத்தம் செய்து வரவேற்று... அவருடைய காலணிகளைக் கழற்றிவிட்டு... பாதங்களைக் கழுவி... தலையில் நறுமணத் தைலத்தைப் பூசுவார்கள். (லூக்கா 7:44-47) வரவேற்பே இப்படி பலமாக இருந்ததென்றால், அவர்கள் தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் எவ்வளவு கவனிப்பு இருந்திருக்கும்!

மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் தலைக்குமேல் வேலை இருந்தது. மரியாள் மற்றவர்களைப் புரிந்துகொள்கிறவளாக, யோசித்துச் செயல்படுகிறவளாக இருந்திருக்கலாம். அதனால், முதலில் அவள் நிச்சயம் தன் சகோதரிக்கு உதவி செய்திருப்பாள். ஆனால், இயேசு வந்த பிறகோ, அவளுடைய கவனம் திசை திரும்பியது. இயேசு இந்தச் சந்தர்ப்பத்தைக் கற்றுக்கொடுப்பதற்கான ஒரு நல்ல சமயமாகக் கருதினார், கற்றுக்கொடுக்கவும் தொடங்கினார். அக்காலத்திலிருந்த மதத் தலைவர்களைப் போலில்லாமல், அவர் பெண்களை மதித்தார்; அவருடைய ஊழியத்தின் முக்கியப் பொருளாக இருந்த கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்கு ஆர்வமாய்க் கற்றுக்கொடுத்தார். இதை ஓர் அரும்பெரும் பாக்கியமாக நினைத்துச் சந்தோஷப்பட்ட மரியாள், அவருடைய காலடியில் உட்கார்ந்து அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக்கொண்டாள்.

அந்தச் சமயத்தில் மார்த்தாளுக்கு எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும். ஒரு பக்கம் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும், இன்னொரு பக்கம் சமைத்து முடிக்க வேண்டும் என்று எல்லா வேலைகளும் அவள் தலையில். அவள் ரொம்பவே திணறிப்போனாள். அரக்கப்பரக்க இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நடந்தபோது, தன்னுடைய சகோதரி மட்டும் ‘ஹாயாக’ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவள் முகம் கோபத்தில் சிவந்திருக்குமா? அவள் சத்தமாய்ப் பெருமூச்சு விட்டிருப்பாளா? அல்லது முகம் சுளித்திருப்பாளா? அப்படியெல்லாம் அவள் செய்திருந்தால் அதில் ஆச்சரியமே இல்லை. பாவம், ஒரே ஆளாய் அவள் எப்படித்தான் எல்லா வேலைகளையும் செய்வாள்!

இதற்கு மேலும் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இயேசு பேசிக்கொண்டிருந்தபோது இடையில் குறுக்கிட்டு, “என் சகோதரி என்னைத் தனியாக வேலை செய்ய விட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டே விட்டாள். (லூக்கா 10:40) அவள் சொன்ன வார்த்தைகள் கடுமையானவை. சொல்லப்போனால், அவள் கேட்ட கேள்வி பல பைபிள்களில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: “ஆண்டவரே, . . . உமக்குக் கொஞ்சம்கூட கவலையில்லையா?” அதற்குப் பிறகு, மரியாளைக் கண்டித்து தனக்கு உதவி செய்யச் சொல்லும்படி இயேசுவிடம் கேட்கிறாள்.

இயேசு சொன்ன பதில் மார்த்தாளுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கலாம். அவளுக்கு மட்டுமல்ல, பைபிளை வாசிக்கிற பலருக்கும் அது ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. அவருடைய கனிவான பதில் இதுதான்: “மார்த்தாளே, மார்த்தாளே, நீ நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய். கொஞ்சம் இருந்தாலே போதும், ஒன்றே ஒன்றுகூடப் போதும். மரியாளைப் பொறுத்தவரை, அவள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.” (லூக்கா 10:41, 42) இயேசு அவளிடம் என்ன சொல்ல வருகிறார்? அவள் வீட்டு காரியங்களில் மூழ்கிவிட்டு ஆன்மீக விஷயங்களை ஓரங்கட்டியதாகச் சொன்னாரா? ஒரு நல்ல விருந்தைச் செய்வதற்காக அவள் பட்ட பாட்டையெல்லாம் அவர் துச்சமாகக் கருதினாரா?

இல்லை. நல்ல உள்நோக்கமும், அன்பும் இருந்ததால்தான் மார்த்தாள் இதையெல்லாம் செய்தாள் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, தடபுடலான ஒரு விருந்து கொடுப்பதில் தவறேதும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. சொல்லப்போனால், கொஞ்ச நாட்களுக்கு முன்பு மத்தேயு கொடுத்த ‘ஒரு பெரிய விருந்தில்’ அவர் சந்தோஷமாகக் கலந்துகொண்டாரே! (லூக்கா 5:29) எனவே, விருந்து தயார் செய்தது இங்கே பிரச்சினையே இல்லை; மார்த்தாள் எதற்கு முதலிடம் கொடுத்தாள் என்பதுதான் பிரச்சினையே. அவள் கவனம் முழுக்க ஒரு பிரமாதமான விருந்து கொடுப்பதிலேயே இருந்தது; அதனால், முக்கியமான விஷயத்திற்கு கவனம் செலுத்த மறந்துவிட்டாள். அது என்ன முக்கியமான விஷயம்?

யெகோவா தேவனுடைய ஒரே மகனான இயேசு சத்தியத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக அவளுடைய வீடுதேடி வந்திருக்கிறார்! இப்படிப்பட்ட ஒரு நேரத்தில், அவருடைய போதனைகளைக் கேட்பதைவிட வேறு ஏதாவது முக்கியமாக இருந்திருக்குமா? ஏன், பிரமாதமான விருந்து தயாரிப்பதுகூட முக்கியமாக இருந்திருக்குமா என்ன? விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான விசேஷ வாய்ப்பை அவள் நழுவவிடுகிறாளே என நினைத்து இயேசு நிஜமாகவே வருத்தப்பட்டார். இருந்தாலும், அவளுக்கு எது வேண்டுமோ அதை அவளே தேர்ந்தெடுக்கட்டும் என அவர் விட்டுவிட்டார். அப்படியிருக்க, இப்போது மரியாளையும் தன்னோடு வேலை செய்ய அனுப்பச் சொல்லி இயேசுவிடம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

அதனால்தான், இயேசு அவளை மென்மையாகக் கண்டித்தார்; அவளுடைய பெயரை இரண்டு முறை பாசத்தோடு சொல்வதன் மூலம் அவள் கோபத்தைத் தணித்து சாந்தப்படுத்த முயற்சி செய்தார். பின்பு அவர் சொன்னார்: நீ ஏன் ‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய், கொஞ்சம் இருந்தாலே போதும்.’ அதுவும், ஆன்மீக விருந்து கிடைக்கும்போது ஓரிரு பதார்த்தங்களுடன் ஓர் எளிய உணவே போதுமானதாக இருக்கும். எனவே, மரியாள் தேர்ந்தெடுத்த “மிகச் சிறந்ததை,” அதாவது தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை, அவர் பறித்துவிட மாட்டார்!

இந்தப் பதிவு என்னவோ சிறியதுதான். ஆனால், இதில் நமக்குள்ள பாடங்கள் ஏராளம்! கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் ‘ஆன்மீக விஷயங்களில் நம் ஆர்வப்பசியைத்’ திருப்தி செய்வதற்கு எதுவுமே முட்டுக்கட்டையாக இருக்க அனுமதிக்கக் கூடாது. (மத்தேயு 5:3) மார்த்தாள் காட்டிய தாராள குணத்தை, கடின உழைப்பை நாம் பின்பற்ற வேண்டும்தான்; என்றாலும், முக்கியமான காரியங்களைத் தவற விடுமளவுக்கு உபசரிப்பதிலேயே மூழ்கி ‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடக் கூடாது.’ சக கிறிஸ்தவர்களோடு நாம் நல்ல தோழமை அனுபவிக்கும்போது தடபுடலான விருந்து கொடுப்பதற்கோ, சாப்பிடுவதற்கோ அதிக முக்கியத்துவம் தராமல் ஒருவருக்கொருவர் ஊக்கம்பெறவும் ஆன்மீக அன்பளிப்பைக் கொடுக்கவும்தான் முக்கியத்துவம் தர வேண்டும். (ரோமர் 1:11, 12) விசுவாசத்தைப் பலப்படுத்துகிற இதுபோன்ற நேரத்தில் மிக எளிய உணவே போதுமானதாக இருக்கும்.

அன்பு சகோதரன் மறைந்தார்... மலர்ந்தார்...

இயேசு கொடுத்த அன்பான அறிவுரையை மார்த்தாள் ஏற்றுக்கொண்டாளா, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டாளா? அதில் சந்தேகமே வேண்டாம். அப்போஸ்தலனாகிய யோவான், மார்த்தாளின் சகோதரனைப் பற்றிய பரவசமூட்டுகிற ஒரு பதிவை ஆரம்பித்த விதமே இதற்கு அத்தாட்சி. “மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் லாசருவையும் இயேசு நேசித்தார்” என அவர் சொன்னார். (யோவான் 11:5) இயேசு பெத்தானியாவிற்கு வந்துபோய், மாதங்கள் பல கரைந்துவிட்டன. அன்று, இயேசு தன்னைக் கண்டித்துவிட்டார் என்ற கோபத்தில், மார்த்தாள் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்துவிடவில்லை; சரியான சமயம்பார்த்து அவரைப் பழிவாங்க வேண்டுமென மனதில் வன்மத்தை வளர்த்துக்கொள்ளவும் இல்லை. அவர் கொடுத்த அன்பான அறிவுரையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டாள். இந்த விஷயத்திலும் அவள் நமக்கு சிறந்த முன்மாதிரி! நம் எல்லாருக்குமே சின்ன சின்ன புத்திமதி அவ்வப்போது தேவைதானே.

தன்னுடைய சகோதரன் லாசரு நோய்வாய்ப்பட்டபோது, மார்த்தாள் அவர் பக்கத்திலேயே இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டாள். அவருடைய வேதனையைப் போக்கவும், அவர் உடல்நிலை தேறவும் பார்த்துப் பார்த்து பணிவிடை செய்தாள். ஆனால், நாளுக்கு நாள் லாசருவின் உடல்நிலை மோசமானதுதான் மிச்சம். சகோதரிகள் இருவரும், இரவு பகல் பாராமல் அவர் தலைமாட்டிலேயே உட்கார்ந்து அவரைக் கவனித்துக்கொண்டார்கள். மெலிந்து, கன்னமெல்லாம் ஒட்டிப்போய், கட்டிலில் முடங்கிவிட்ட தன் சகோதரனைப் பார்த்து மார்த்தாள் பழைய நினைவுகளில் மெல்ல கரைந்திருப்பாள்; சந்தோஷங்களையும் சங்கடங்களையும் சரிசமமாய் பகிர்ந்துகொண்ட சிறு வயது நாட்களை... அந்த அருமையான நினைவுகளை... மனதில் அசைபோட்டிருப்பாள்.

லாசருவின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமானபோது, மார்த்தாளும் மரியாளும் இயேசுவுக்குத் தகவல் சொல்லிவிட்டார்கள். அப்போது இயேசு இரண்டு நாள் பயண தூரத்திலிருந்த ஒரு பகுதியில் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு அவர்கள் சொல்லிவிட்ட தகவல் இதுதான்: “எஜமானே, உங்கள் பாசத்திற்குரிய நண்பன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்.” (யோவான் 11:1, 3) தம்முடைய உயிர் நண்பனை அவர் எப்படியாவது காப்பாற்றிவிடுவார் என அவர்கள் மலைபோல் நம்பினார்கள். நிலைமை கைமீறிப் போவதற்கு முன்பு இயேசு வந்துவிடுவார், லாசருவைக் குணப்படுத்தி விடுவார் என்று அவர்கள் உறுதியாக நம்பிக்கொண்டிருந்தார்களா? அப்படி நம்பியிருந்தால், அவர்களுடைய நம்பிக்கை தவிடுபொடியானது. லாசரு இறந்துபோனார்.

மார்த்தாளும் மரியாளும் தங்களுடைய சகோதரனுக்காகக் கதறி அழுதார்கள்; பின்பு, அவரை அடக்கம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். துக்கம் விசாரிக்க பெத்தானியாவிலும், சுற்றுவட்டாரத்திலும் இருந்து அவர்கள் வீட்டுக்கு ஆட்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால், இன்னும் இயேசுவைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. நேரம் கடந்து செல்ல செல்ல மார்த்தாள் ரொம்பவே குழம்பிப்போனாள். கடைசியில் லாசரு இறந்து நான்கு நாட்கள் கழித்து, பெத்தானியாவுக்கு இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி அவள் காதை எட்டியது. எப்போதும் துடிப்பாகச் செயல்படுகிற அவள், சோகத்தில் மூழ்கியிருந்த இந்தச் சமயத்திலும் மரியாளிடம்கூட சொல்லாமல் இயேசுவைப் பார்க்க வேகமாகப் போனாள்.—யோவான் 11:20.

தன்னுடைய எஜமானரைப் பார்த்தவுடன், இத்தனை நாட்களாக தன் மனதிலும் மரியாளின் மனதிலும் தேங்கியிருந்த ஏக்கத்தை வார்த்தைகளில் வார்த்தாள். “எஜமானே, நீங்கள் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள். இருந்தாலும், மார்த்தாளின் மனதில் எரிந்துகொண்டிருந்த நம்பிக்கையும் விசுவாசமும் அணைந்துவிடவில்லை. எனவே, அவள் இயேசுவைப் பார்த்து, “நீங்கள் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கையை இன்னும் பலப்படுத்துவதற்காக இயேசு உடனடியாக அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்றார்.—யோவான் 11:21-23.

எதிர்காலத்தில் நடைபெறப் போகிற உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு பேசுவதாக மார்த்தாள் நினைத்தாள். எனவே அவள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடைபெறும்போது அவன் எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்றாள். (யோவான் 11:24) உயிர்த்தெழுதலில் அவள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தாள். சதுசேயர் என்றழைக்கப்பட்ட யூத மதத் தலைவர்கள் உயிர்த்தெழுதலை நம்பவில்லை. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதவாக்கியங்கள் அதைத் தெளிவாகக் கற்பித்திருந்தும்கூட அவர்கள் நம்பவில்லை. (தானியேல் 12:13; மாற்கு 12:18) என்றாலும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி இயேசு கற்றுக்கொடுத்தார் என்றும், அவரே சிலரை உயிர்த்தெழுப்பியிருக்கிறார் என்றும் அவள் அறிந்திருந்தாள். ஆனால், லாசருவைப் போல இறந்து பல நாட்களான யாரையும் அவர் இதுவரை உயிர்த்தெழுப்பவில்லை என்பதையும் அவள் அறிந்திருந்தாள். எனவே, இயேசு என்ன செய்யப்போகிறார் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அப்போது, கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகளை இயேசு சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.” சொல்லப்போனால் மண்ணின் மடியில் உறங்குகிற எண்ணற்றோரை எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்புவதற்கான அதிகாரத்தை யெகோவா தேவன் அவருடைய மகனுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு மார்த்தாளைப் பார்த்து, “இதை நம்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு மார்த்தாள் சொன்ன பதில் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ளது. யெகோவா தேவனுடைய மகனாகிய இயேசுவே கிறிஸ்து அல்லது மேசியா என்பதையும், தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தபடி இந்த உலகத்திற்கு வரவேண்டியவர் அவரே என்பதையும் அவள் விசுவாசித்தாள்.—யோவான் 5:28, 29; 11:25-27.

இப்படிப்பட்ட விசுவாசத்தை யெகோவா தேவனும் அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவும் உயர்வாய் மதிக்கிறார்களா? மார்த்தாளின் கண்களுக்கு முன்பு அடுத்தடுத்து அரங்கேறிய காட்சிகள் இந்தக் கேள்விக்குத் தெள்ளத்தெளிவான பதில் தருகின்றன. மார்த்தாள் தன் சகோதரியைக் கூப்பிடுவதற்காக ஓட்டமாய் ஓடினாள். அதற்குப் பின்பு, மரியாளிடமும் அவளுடன் வந்தவர்களிடமும் இயேசு பேசியபோது, அவர் மனம் கலங்கி, மெழுகாய்க் கரைந்து உருகுவதை அவள் பார்த்தாள். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியதைப் பார்த்தாள்; மரணத்தினால் ஏற்படுகிற பயங்கர வலியை அவர் உணர்ந்து, துக்கத்தை அடக்கிக்கொள்ளாமல் அதைக் கண்ணீரில் வடித்ததை பார்த்தாள். லாசருவின் கல்லறையிலிருந்து கல்லை எடுத்துப்போடச் சொல்லி இயேசு கட்டளையிட்டதைக் கேட்டாள்.—யோவான் 11:28-39.

எதையும் யதார்த்தமாக யோசிக்கிற மார்த்தாள் அதை ஆட்சேபித்தாள்; லாசரு இறந்து ‘நான்கு நாட்கள் ஆகிவிட்டதே, நாறுமே’ என்று சொன்னாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பாய் என உனக்குச் சொன்னேன் அல்லவா?” என்று திரும்பவும் சொன்னார். ஆம், அவள் நம்பினாள், யெகோவா தேவனின் மகிமையைப் பார்த்தாள். அங்கேயே, அப்போதே, லாசருவை உயிரோடு எழுப்புவதற்கான சக்தியை யெகோவா தம் மகனுக்குத் தந்தார்! அடுத்து நடந்த சம்பவங்களை எல்லாம் உங்கள் மனக்கண்ணில் ஓடவிடுங்கள்: “லாசருவே, வெளியே வா!” என்று இயேசு அதிகாரத்தொனியில் அழைத்தது... உடனே, அந்தக் குகைக்குள் லாசரு எழுந்து உட்கார்ந்தபோது கேட்ட மெல்லிய சத்தம்... உடல் முழுக்கச் சுற்றப்பட்டிருந்த துணியோடு அடிமேல் அடி வைத்து அந்தக் குகையின் வாசலை நோக்கி நடந்து வந்தது... “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள்” என்ற இயேசுவின் கட்டளை... அடுத்த நொடியே மார்த்தாளும் மரியாளும் மனங்கொள்ளா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது... ஓடிப்போய் தங்கள் சகோதரனைத் தழுவிக்கொண்டது... இவையெல்லாம் மரணம்வரை மார்த்தாளுடைய மனதைவிட்டு மறையாமல் இருந்திருக்கும். (யோவான் 11:40-44) இப்போது, மார்த்தாளின் மனதில் இருந்த பாரமெல்லாம் பஞ்சாய் பறந்துவிட்டது!

இந்தப் பதிவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்: இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்பது ஏதோ கற்பனை அல்ல, அது நம் நெஞ்சைக் குளிர்விக்கும் பைபிள் போதனை, சரித்திரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்ட உண்மை. யெகோவாவும் அவருடைய மகனும் விசுவாசமுள்ளவர்களை ஆசீர்வதிக்க ஆசைப்படுகிறார்கள்; மார்த்தாள், மரியாள் மற்றும் லாசருவின் வாழ்க்கையே இதற்கு அத்தாட்சி. மார்த்தாளைப் போலவே நாமும் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால், யெகோவாவும் இயேசுவும் நாம் நினைத்தே பார்க்காத அளவுக்கு ஆசி மழை பொழிவார்கள். a

“மார்த்தாள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்”

மார்த்தாளைப் பற்றி இன்னும் ஒரேவொரு தடவை மட்டும்தான் பைபிள் குறிப்பிடுகிறது. அது, இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த கடைசி வாரத்தின் ஆரம்பம். தாம் படப்போகிற பாடுகளை எல்லாம் இயேசு முன்கூட்டியே அறிந்திருந்ததால், மறுபடியும் பெத்தானியாவில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த லாசருவின் வீட்டில் தங்குகிறார். அங்கிருந்து 3 கிலோமீட்டர் நடந்தால் எருசலேம் வந்துவிடும். முன்பு குஷ்டரோகியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசுவும் லாசருவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்; அங்கே “மார்த்தாள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்.” இதுதான் மார்த்தாளைப் பற்றிய கடைசி பைபிள் பதிவு.—யோவான் 12:2.

கடின உழைப்புக்கு மார்த்தாள் எப்பேர்ப்பட்ட சிறந்த எடுத்துக்காட்டு! பைபிள் அவளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறபோதும் அவள் வேலை செய்துகொண்டிருக்கிறாள், கடைசியாகக் குறிப்பிடுகிறபோதும் அவள் வேலை செய்துகொண்டிருக்கிறாள்; ஆம், மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த பணிவிடையைச் செய்துகொண்டிருக்கிறாள். இன்றும்கூட கிறிஸ்தவச் சபைகளில் தாராள குணமுள்ள, நெஞ்சுரமிக்க மார்த்தாள்கள் ஏராளம் ஏராளம்! தங்களையே அர்ப்பணிப்பதன் மூலம் அவர்கள் தங்களது விசுவாசத்தைச் செயலில் காட்டுகிறார்கள். மார்த்தாள் கடைசிவரை அப்படியே செய்துவந்திருப்பாள் எனத் தெரிகிறது. அப்படியானால், அவள் ஞானமாகச் செயல்பட்டாள்; ஏனென்றால், சோதனை மேல் சோதனை அவளுக்குக் காத்திருந்தது.

சில நாட்களில், தனது அன்புக்குரிய எஜமானரான இயேசுவின் கொடூர மரணத்தை அவள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. லாசரு உயிர்த்தெழுந்ததைப் பார்த்த அநேகர் இயேசுவின்மீது விசுவாசம் வைத்ததால், இயேசுவைக் கொல்லத் துடித்த நயவஞ்சகர்கள் லாசருவையும் கொல்லத் திட்டம் போட்டார்கள். (யோவான் 12:9-11) காலப்போக்கில், மார்த்தாளுக்கும் அவளுடைய உடன்பிறப்புகளுக்கும் இடையே இருந்த பாசக்கயிறை மரணம் அறுத்திருக்கும். அது எப்போது நடந்தது, எப்படி நடந்தது எனத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும்: மார்த்தாள் காட்டிய விலைமதிப்பில்லாத விசுவாசம் கடைசிவரை சகித்திருக்க அவளுக்கு உதவியது. அதனால்தான், இன்றுள்ள கிறிஸ்தவர்கள் அவளுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவது நல்லது. (w11-E 04/01)

[அடிக்குறிப்பு]

a உயிர்த்தெழுதல் என்ற பைபிள் போதனையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 7-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 23-ன் படம்]

துயரக் கடலில் மூழ்கியிருந்தபோதும், தனது விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக இயேசு சொன்ன விஷயங்களில் மார்த்தாள் கவனம் செலுத்தினாள்

[பக்கம் 24-ன் படம்]

மார்த்தாள் ‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடினாலும்’ இயேசு கொடுத்த அறிவுரையைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டாள்

[பக்கம் 27-ன் படம்]

இயேசுமீது மார்த்தாள் வைத்திருந்த விசுவாசத்திற்குப் பரிசாக லாசரு உயிர்த்தெழுப்பப்பட்டார்