Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்?

கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம். பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கட்டுரையை வாசியுங்கள். பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக உங்களிடம் பேச யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்?

கடவுள் பூமியை மனிதர்களுக்காகப் படைத்தார். பரலோகத்தில் வாழ்வதற்காகத் தேவதூதர்களைப் படைத்த பிறகு, பூமியை மனிதர்களுக்கு வீடாகக் கொடுத்தார்; அதில் அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டுமென விரும்பினார். (யோபு 38:4, 7) இந்தப் பூமியில், ஏதேன் என்று அழைக்கப்பட்ட அழகான பூஞ்சோலையில் முதல் மனிதனை யெகோவா குடிவைத்தார்; அவனும் அவனுடைய சந்ததியும் சாகாமல் என்றென்றும் வாழ வேண்டும் என்று விரும்பினார்.—ஆதியாகமம் 2:15-17; சங்கீதம் 115:16-ஐ வாசியுங்கள்.

ஏதேன் தோட்டம் பூமியில் ஒரு சிறிய பகுதியில் இருந்தது. முதல் தம்பதிகளான ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டியிருந்தது. மனிதர்கள் பெருகப் பெருக இந்தப் பூமியைப் பண்படுத்தி அதை அழகிய பூஞ்சோலையாக மாற்ற வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 1:28) இந்தப் பூமி ஒருநாளும் அழியாது.சங்கீதம் 104:5-ஐ வாசியுங்கள்.

2. இப்போது இந்தப் பூமி ஏன்

ஒரு பூஞ்சோலையாக இல்லை?

ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்; அதனால், ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள், பூஞ்சோலையை இழந்தார்கள். எந்த மனிதனாலும் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்ற முடியவில்லை. ஏனென்றால், “உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது” என பைபிள் சொல்கிறது.—யோபு 9:24; ஆதியாகமம் 3:23, 24-ஐ வாசியுங்கள்.

ஆனால், இந்தப் பூமியைப் படைத்ததற்கான காரணத்தை யெகோவா மறந்துவிடவில்லை; அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார். (ஏசாயா 45:18) மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆரம்பத்தில் அவர் நினைத்தாரோ அந்த வாழ்க்கையைத் திரும்பவும் கொடுக்கப்போகிறார்.சங்கீதம் 37:11-ஐ வாசியுங்கள்.

3. மனிதர்கள் இந்தப் பூமியில் திரும்பவும் சமாதானமாக வாழ கடவுள் என்ன செய்வார்?

மனிதர்கள் சமாதானமாக வாழ வேண்டுமென்றால், கடவுள் முதலில் கெட்ட ஜனங்களை அழிக்க வேண்டும். அர்மகெதோன் என்ற போரில் கடவுளுடைய தூதர்கள் அவருடைய எதிரிகள் எல்லாரையும் அழிப்பார்கள். அப்போது, சாத்தான் 1,000 வருடங்களுக்கு அடைத்து வைக்கப்படுவான்; ஆனால், கடவுளை நேசிக்கும் மக்கள் புதிய பூமியில் சந்தோஷமாக வாழ்வார்கள்.வெளிப்படுத்துதல் 16:14, 16; 20:1-3; 21:3, 4-ஐ வாசியுங்கள்.

4. கஷ்டங்கள் எப்போது முடிவுக்கு வரும்?

இயேசு பரலோகத்தில் இருந்து 1,000 வருடங்கள் பூமியை ஆட்சி செய்வார்; இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவார். அதோடு, கடவுளை நேசிக்கும் மக்களின் பாவங்களைப் போக்குவார். பாவத்தினால் வருகிற வியாதி, முதுமை, மரணம் எல்லாவற்றையும் ஒழித்துவிடுவார்.ஏசாயா 11:9; 25:8; 33:24; 35:1-ஐ வாசியுங்கள்.

ஆனால், இதெல்லாம் எப்போது நடக்கும்? கடவுள் எப்போது கெட்டவர்களை அழிப்பார்? இதற்கான ‘அடையாளங்களை’ இயேசு சொன்னார். இன்றைய உலக நிலைமையைப் பார்த்தால் மனித இனமே அழிந்துவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது; ஆனால், நாம் ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்’ வாழ்கிறோம் என்பதற்கு இது அத்தாட்சி அளிக்கிறது.மத்தேயு 24:3, 7-14, 21, 22-ஐயும் 2 தீமோத்தேயு 3:1-5-ஐயும் வாசியுங்கள்.

5. வரப்போகிற பூஞ்சோலையில் யார் வாழ்வார்கள்?

மக்களைத் தம்முடைய சீடர்களாக்கி, அவர்களுக்குக் கடவுளுடைய அன்பான வழிகளைக் கற்றுக்கொடுக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். (மத்தேயு 28:19, 20) புதிய பூமியில் வாழ்வதற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை யெகோவா தயார்படுத்தி வருகிறார். (செப்பனியா 2:3) சிறந்த கணவனாக, அப்பாவாக... அருமையான மனைவியாக, அம்மாவாக... இருப்பது எப்படி என்பதை யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் மக்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் வரும் என்பதற்கான ஆதாரங்களைப் பிள்ளைகளும் பெற்றோர்களும் சேர்ந்து கற்றுக்கொள்கிறார்கள்.மீகா 4:1-4-ஐ வாசியுங்கள்.

கடவுளை நேசிக்கிற... அவரை சந்தோஷப்படுத்த விரும்புகிற... மக்களை ராஜ்ய மன்றத்தில் நீங்கள் சந்திக்கலாம்.எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள். (w11-E 04/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தின் 3-ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.