Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

யாரையும் மதிக்காத ஒரு பங்க் கும்பலில் சேர்ந்து அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த ஒருவர், மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறவராகவும், அவர்களுக்கு உதவி செய்கிறவராகவும் எப்படி மாறினார்? மெக்சிகோவில் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் எப்படித் தன்னுடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டார்? ஜப்பானில் பிரபல சைக்கிள் பந்தய வீரராக இருந்த ஒருவர் ஏன் இப்போது பந்தயத்துக்குப் போவதையே விட்டுவிட்டார்? இதைப் பற்றி அவர்கள் மூன்று பேரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

‘நான் திமிர் பிடித்தவனாக இருந்தேன், ரொம்ப முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டேன்.’​—டெனிஸ் ஓபைர்ன்

பிறந்த வருஷம்: 1958

பிறந்த நாடு: இங்கிலாந்து

என்னைப் பற்றி: பங்க் கும்பலைச் சேர்ந்தவன்

என் கடந்தகால வாழ்க்கை: என் அப்பா குடும்பத்தில் எல்லாரும் அயர்லாந்திலிருந்து வந்தவர்கள். நான் ஒரு கத்தோலிக்கனாக வளர்ந்தேன். பொதுவாக, நான் சர்ச்சுக்குத் தனியாகத்தான் போக வேண்டியிருக்கும். சர்ச்சுக்குப் போவதே எனக்குப் பிடிக்காது. இருந்தாலும், கடவுள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவேன். பரமண்டல ஜெபத்தை அடிக்கடி சொல்வேன். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, படுக்கையில் படுத்துக்கொண்டே அந்த ஜெபத்துக்கு என்ன அர்த்தம் என்று யோசித்திருக்கிறேன். ஜெபத்தில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாகப் பிரித்து அதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றும் யோசித்திருக்கிறேன்.

எனக்கு கிட்டத்தட்ட 16 வயதானபோது சமுதாயத்துக்கு எதிராக கலகம் செய்துகொண்டிருந்த நிறைய கும்பல்களில் சேர்ந்தேன். முக்கியமாக, பங்க் கும்பலில் சேர்ந்து ரொம்ப அடாவடித்தனம் பண்ணிக்கொண்டிருந்தேன். தினமும் போதைப்பொருளை எடுத்துக்கொண்டேன், முக்கியமாக மாரிஹுவானாவுக்கு அடிமையாகிவிட்டேன். ‘எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை’ என்பதுபோல் பாட்டில் பாட்டிலாகக் குடித்தேன், என் உயிருக்கு ஆபத்தான விஷயங்களை செய்தேன், மற்றவர்களை மோசமாக நடத்தினேன். யாரோடும் எனக்குப் பழகப் பிடிக்காது. யாரோடும் பேசவும் மாட்டேன். உண்மையிலேயே முக்கியம் என்றால் மட்டும்தான் பேசுவேன். என்னை ஃபோட்டோ எடுப்பதற்குக்கூட யாரையும் விட மாட்டேன். நான் எவ்வளவு திமிர் பிடித்தவனாக இருந்தேன், எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொண்டேன் என்று இப்போதுதான் புரிகிறது. எனக்கு வேண்டப்பட்டவர்களிடம் மட்டும்தான் அன்பாக நடந்துகொண்டேன், அவர்களுக்கு உதவியும் செய்தேன்.

கிட்டத்தட்ட 20 வயதில், எனக்கு பைபிளில் ஆர்வம் வந்தது. போதைப்பொருளைக் கடத்திக்கொண்டிருந்த என்னுடைய ஒரு நண்பர் ஜெயிலில் இருந்தபோது பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். நானும் அவரும் சேர்ந்து மதத்தைப் பற்றியும் சர்ச்சுகளைப் பற்றியும் சாத்தான் இந்த உலகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியும் மணிக்கணக்காகப் பேசினோம். பிறகு, நான் ஒரு பைபிளை வாங்கி நானே தனியாகப் படிக்க ஆரம்பித்தேன். அதோடு, நானும் என் நண்பரும் பைபிளின் சில பகுதிகளைப் படித்துவிட்டு, அதிலிருந்து என்ன புரிந்துகொண்டோம் என்று பேசுவோம், நாங்களாக சில முடிவுக்கும் வருவோம். மாசக்கணக்காக இப்படிச் செய்தோம்.

அப்போது நாங்கள் புரிந்துகொண்ட விஷயங்கள் இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நாம் இந்த உலகத்தின் கடைசி நாட்களில் வாழ்கிறோம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைக் கிறிஸ்தவர்கள் பிரசங்கிக்க வேண்டும், அவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது, அரசியலிலும் கலந்துகொள்ளக் கூடாது, நல்ல ஒழுக்கநெறிகளை பைபிள் சொல்லித்தருகிறது என்றெல்லாம் புரிந்துகொண்டோம். பைபிள் சொல்வது எல்லாமே உண்மை என்று நன்றாகத் தெரிந்தது. அதனால், உண்மையான ஒரு மதம் கண்டிப்பாக இருக்கும் என்று புரிந்துகொண்டோம். ஆனால், அது எந்த மதம் என்றுதான் தெரியவில்லை. பிரபலமான சர்ச்சுகளுடைய ஆடம்பரத்தையும், பகட்டையும், சடங்கு சம்பிரதாயங்களையும், அரசியலில் அவை ஈடுபடுவதையும் பார்த்தபோது, இயேசுவுக்கும் அந்த சர்ச்சுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது புரிந்தது. கண்டிப்பாகக் கடவுள் அந்த சர்ச்சுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தெரிந்தது. அதனால், சின்னச் சின்ன மதப் பிரிவுகள் என்ன நம்புகிறார்கள் என்று பார்க்க முடிவு செய்தோம்.

அந்த மதப் பிரிவுகளில் இருந்தவர்களைப் போய்ப் பார்த்து அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டோம். நாங்கள் ஏற்கெனவே பைபிளைப் படித்து வைத்திருந்ததால், அவர்கள் பைபிளிலிருந்துதான் பதில் சொல்கிறார்களா என்று உடனே கண்டுபிடிக்க முடிந்தது. ஒவ்வொரு தடவை அவர்களைப் பார்த்துப் பேசிய பிறகும், ‘இவங்க மதம்தான் உண்மை மதம்னா இவங்கள மறுபடியும் பாக்கணுங்கற ஆசைய எனக்கு கொடுங்க’ என்று கடவுளிடம் ஜெபம் செய்தேன். இப்படிப் பல மாதங்கள் ஓடின. ஆனால், யாருமே பைபிளிலிருந்து பதில் சொல்லவில்லை. அவர்களை மறுபடியும் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கு வரவில்லை.

கடைசியாக, நானும் என் நண்பரும் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தோம். அதே கேள்விகளை அவர்களிடமும் கேட்டோம். ஆனால், எல்லா கேள்விகளுக்கும் அவர்கள் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள். அதுவும், அவர்கள் சொன்னதும் நாங்கள் புரிந்து வைத்திருந்ததும் ஒரே மாதிரி இருந்தது. அதனால், நாங்கள் பைபிளில் பதில் தேடிக்கொண்டிருந்த மற்ற கேள்விகளையும் அவர்களிடம் கேட்டோம். உதாரணத்துக்கு, புகை பிடிப்பதைப் பற்றியும் போதைப்பொருள் பயன்படுத்துவதைப் பற்றியும் கடவுள் என்ன சொல்கிறார் என்று கேட்டோம். அதற்கும் அவர்கள் பைபிளிலிருந்துதான் பதில் சொன்னார்கள். அதனால், அவர்களுடைய கூட்டத்துக்குப் போக நாங்கள் முடிவு செய்தோம்.

ஆனால், கூட்டத்துக்குப் போவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மற்றவர்களோடு பழகவே எனக்குப் பிடிக்காது. இத்தனைக்கும் அங்கே எல்லாரும் நீட்டாக டிரெஸ் பண்ணிக்கொண்டு, நட்பாகப் பேசினார்கள். ஆனாலும், எனக்கு அவர்களோடு பேசப் பிடிக்கவில்லை. அவர்களை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தேன். இனிமேல் அவர்களுடைய கூட்டங்களுக்குப் போகவே கூடாது என்று நினைத்தேன். ஆனால், எப்போதும் போலவே கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அவர்களுடைய மதம்தான் உண்மை மதம் என்றால் அவர்களை மறுபடியும் சந்திக்கும் ஆசையை எனக்குக் கொடுக்கும்படி கேட்டேன். ஆச்சரியம் என்னவென்றால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க வேண்டுமென்ற வெறித்தனமான ஆசை எனக்கு வந்துவிட்டது.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது: போதைப்பொருள் எடுப்பதை நான் நிறுத்த வேண்டுமென்று தெரிந்த உடனேயே அதை நிறுத்திவிட்டேன். ஆனால், சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதுதான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. எத்தனையோ தடவை முயற்சி செய்தும் விட முடியவில்லை. ஆனால், சிலர் இந்தப் பழக்கத்தை சட்டென்று விட்டுவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது யெகோவாவிடம் உதவி கேட்டேன். அவருடைய உதவியோடு ஒருவழியாக என்னால் அந்தப் பழக்கத்தை விட முடிந்தது. யெகோவாவிடம் எப்போதும் வெளிப்படையாக, மனம் திறந்து பேசுவது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துகொண்டேன்.

நான் டிரெஸ் பண்ணிக்கொள்ளும் விதத்தையும் என்னுடைய ஹேர் ஸ்டைலையும் மாற்றிக்கொள்வதும்கூட எனக்குப் பெரும் பாடாக இருந்தது. முதல் முறை நான் கூட்டத்துக்குப் போனபோது என் தலைமுடி முள்ளம்பன்றிபோல் குச்சி குச்சியாக இருந்தது. அதற்கு ப்ளூ கலரில் டை அடித்திருந்தேன். அதன் பிறகு ஆரஞ்சு கலருக்கு மாற்றிக்கொண்டேன். அப்போதெல்லாம் ஜீன்ஸ் பேன்ட்டும், ஸ்லோகன்கள் எழுதியிருந்த லெதர் ஜாக்கெட்டும்தான் போட்டிருப்பேன். இதையெல்லாம் நான் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று யெகோவாவின் சாட்சிகள் என்னிடம் அன்பாகச் சொன்னார்கள். ஆனால், இதில் என்ன தப்பு என்று எனக்குத் தோன்றியது. கடைசியில், 1 யோவான் 2:15-17 சொல்வதை யோசித்துப் பார்த்தேன். “இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்தில் இருக்கிற காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள். ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பு இல்லை” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், ‘என்னோட டிரஸையும் தலைமுடியையும் பார்த்தா இந்த உலகத்துமேல அன்பு வெச்சிருக்கிறவன் மாதிரிதான தெரிது! அப்படினா, நான் கடவுள்மேல அன்பு வெச்சிருக்குறத காட்டணும்னா கண்டிப்பா இதயெல்லாம் மாத்திக்கணும்’ என்று யோசித்தேன். அதன் பிறகு என்னை மாற்றிக்கொண்டேன்.

நான் கூட்டங்களுக்கு வர வேண்டும் என்பது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆசை மட்டும் கிடையாது, அது கடவுள் கொடுத்த கட்டளை என்று கொஞ்ச நாளில் புரிந்துகொண்டேன். எபிரெயர் 10:24, 25-ல் கடவுள் அந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கிறார். நான் எல்லா கூட்டங்களுக்கும் போய் அங்கு இருக்கும் எல்லாரோடும் பேசிப் பழக ஆரம்பித்த பிறகு, யெகோவாவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன், ஞானஸ்நானமும் எடுத்தேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்: யெகோவா நம்மை நெருங்கிய நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. அவர் எவ்வளவு அன்பும் அக்கறையும் காட்டுகிறார் என்று யோசிக்கும்போது, அவரைப் போலவும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவைப் போலவும் நடந்துகொள்ள என் மனம் தூண்டுகிறது. (1 பேதுரு 2:21) கிறிஸ்தவ குணங்களைக் காட்ட நான் முயற்சி செய்தாலும், எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க முடியும் என்று புரிந்துகொண்டேன். அதனால், மற்றவர்கள்மேல் அன்பும் அக்கறையும் காட்ட நான் கடினமாக உழைத்திருக்கிறேன். என் மனைவியிடமும் மகனிடமும் இயேசுவைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறேன். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள்மேல் நான் உயிரையே வைத்திருக்கிறேன். இயேசுவைப் பின்பற்றி நடப்பதால் இப்போது எல்லாரும் என்னை மதிக்கிறார்கள், எனக்கு சுயமரியாதை இருக்கிறது, மற்றவர்கள்மேல் அன்பு காட்டவும் முடிகிறது.

“என்னை மரியாதையாக நடத்தினார்கள்.”—குவாடலூப் பில்யாரேயல்

பிறந்த வருஷம்: 1964

பிறந்த நாடு: மெக்சிகோ

என்னைப் பற்றி: ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்தேன்

என் கடந்தகால வாழ்க்கை: மெக்சிகோவைச் சேர்ந்த சொனோராவில் இருக்கும் ஹெர்மோசில்லோ நகரத்தில் நான் வளர்ந்தேன். அங்கிருக்கும் எல்லாருமே வறுமையில் தவிக்கிற மக்கள்தான். என் அம்மா அப்பாவுக்கு ஏழு பிள்ளைகள். நான் சின்ன பையனாக இருந்தபோதே என் அப்பா இறந்துவிட்டார். அதனால், அம்மாதான் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. நான் பொதுவாக வெறுங்காலில்தான் நடப்பேன். ஏனென்றால், செருப்பு வாங்கக்கூட எங்களிடம் காசு இருக்காது. அதனால், வீட்டு செலவுகளுக்காக சின்ன வயதிலேயே நான் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். எல்லாரையும் போல நாங்களும் ஒரு குட்டி வீட்டில்தான் குடியிருந்தோம்.

நாள் முழுக்க அம்மா வேலைக்குப் போய்விடுவார்கள். நாங்கள் தனியாக இருந்ததால் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. எனக்கு 6 வயது இருக்கும்போது 15 வயது பையன் ஒருவன் என்னிடம் தப்பாக நடந்துகொள்ள ஆரம்பித்தான். ரொம்பக் காலத்துக்கு அப்படியே செய்தான். அதனால், ஆண்கள்மேல் ஒரு ஈர்ப்பு வருவது இயல்புதான் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன். சில டாக்டர்களிடமும் பாதிரிகளிடமும்கூட கேட்டுப் பார்த்தேன். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல, இது இயல்புதான்’ என்று அவர்களும் சொன்னார்கள்.

எனக்கு 14 வயது இருக்கும்போது, நான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவன் என்பதை வெளிப்படையாக எல்லாருக்கும் காட்ட முடிவு செய்தேன். அடுத்த 11 வருஷங்களுக்கு வித்தியாச வித்தியாசமான நிறைய ஆண்களோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன். இதற்கிடையில், முடி வெட்ட கற்றுக்கொண்டு ஒரு சலூன் கடையை நடத்தினேன். ஆனால், நான் சந்தோஷமாகவே இல்லை. நிறைய கஷ்டப்பட்டேன், நிறைய பேர் என்னை ஏமாற்றினார்கள். நான் தப்பான வாழ்க்கை வாழ்ந்துவந்தது புரிந்தது. அதனால், ‘இந்த உலகத்துல நம்பகமான, நல்ல ஜனங்க யாராவது இருக்காங்களா?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போதுதான் என் அக்காவின் ஞாபகம் வந்தது. அவள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து ஞானஸ்நானம் எடுத்திருந்தாள். அவள் கற்றுக்கொண்ட விஷயங்களை என்னிடம் சொல்வாள், ஆனால் நான் காதில் வாங்கவே மாட்டேன். இருந்தாலும், எனக்கு அவள்மேல் மதிப்பு ஜாஸ்தி. ஏனென்றால், அவள் வாழ்ந்த விதத்தைப் பார்த்திருக்கிறேன். அவளும் அவளுடைய கணவரும் ஒருவரை ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் மரியாதையாகவும் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன். காலப்போக்கில், நானும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில், வேண்டாவெறுப்போடுதான் படித்தேன். ஆனால், போகப்போக எனக்கு ஆர்வம் வந்துவிட்டது.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது: யெகோவாவின் சாட்சிகள் என்னை அவர்களுடைய கூட்டத்துக்குக் கூப்பிட்டார்கள். நானும் போனேன். அது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. ஏனென்றால், பொதுவாக எல்லாரும் என்னைப் பார்த்தாலே கிண்டல் பண்ணுவார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அப்படிச் செய்யவில்லை. என்னை அன்பாக வரவேற்றார்கள், மரியாதையாக நடத்தினார்கள். அது என் மனதை ரொம்பத் தொட்டுவிட்டது.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டுக்கு நான் போயிருந்தேன். அப்போதுதான், அவர்கள்மேல் இருந்த மதிப்புமரியாதை இன்னும் அதிகமானது. அங்கே நிறைய பேர் இருந்தாலும், அவர்கள் எல்லாருமே என் அக்காவைப் போலவே மற்றவர்களிடம் உண்மையாகப் பழகினார்கள். ‘நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த நல்ல ஜனங்க இவங்கதானோ’ என்று யோசித்தேன். அவர்களுடைய அன்பையும் ஒற்றுமையையும் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லா கேள்விகளுக்கும் அவர்கள் பைபிளிலிருந்து பதில் கொடுத்ததைப் பார்த்தபோது அதைவிட ஆச்சரியமாக இருந்தது. பைபிள் சொல்கிறபடி நடப்பதால்தான் அவர்கள் இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். நானும் அவர்களில் ஒருவனாக ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கு நான் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

சொல்லப்போனால், நான் அடியோடு மாற வேண்டியிருந்தது. ஏனென்றால், நான் என்னை ஒரு பெண்ணாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய பேச்சு, நடை, உடை, பாவனை, ஹேர் ஸ்டைல், சகவாசம் என்று எல்லாவற்றையுமே நான் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடைய பழைய ஃப்ரெண்ட்ஸ் என்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். “உனக்கு என்ன ஆச்சு? நீ நல்லாதான இருந்த? பைபிளெல்லாம் படிக்காத. உனக்கு ஒரு குறையும் இல்ல” என்று சொன்னார்கள். என்னுடைய ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதுதான் எல்லாவற்றையும்விட ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

ஆனாலும், எவ்வளவு பெரிய மாற்றங்களையும் நம்மால் செய்ய முடியும் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஏனென்றால், 1 கொரிந்தியர் 6:9-11-ல் இருக்கும் வார்த்தைகள் என் மனதைத் தொட்டுவிட்டன. “அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், சிலையை வணங்குகிறவர்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள், ஆண் விபச்சாரக்காரர்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள் . . . ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள். ஆனால், . . . சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள்” என்று அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் செய்ய அன்றிருந்த மக்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்தாரோ அதேபோல் எனக்கும் உதவி செய்தார். உண்மைதான், அதற்குப் பல வருஷங்கள் எடுத்தன, நான் நிறைய போராடவும் வேண்டியிருந்தது. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் செய்த உதவியும் அவர்கள் காட்டிய அன்பும் எனக்கு ரொம்பவே கைகொடுத்தன.

எனக்குக் கிடைத்த நன்மைகள்: இன்று நான் சுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்கிறேன். எனக்குக் கல்யாணமாகிவிட்டது. எனக்கு ஒரு பையனும் இருக்கிறான். பைபிள் சொல்கிறபடி எப்படி வாழ வேண்டுமென்று நானும் என் மனைவியும் அவனுக்கு சொல்லித்தருகிறோம். இப்போது நான் ஆளே மாறிவிட்டேன். யெகோவாவோடு எனக்கு ஒரு நல்ல பந்தம் இருக்கிறது. அவருக்கு சந்தோஷமாகச் சேவை செய்துவருகிறேன். சபையில் நான் ஒரு மூப்பராக இருக்கிறேன். கடவுளுடைய வார்த்தை சொல்லும் உண்மைகளைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்தும் வருகிறேன். நான் செய்த மாற்றங்களைப் பார்த்து என் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதன் பிறகு, அவரும் பைபிளைப் படித்து ஞானஸ்நானம் எடுத்துவிட்டார். ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த என் தங்கைகூட இப்போது யெகோவாவின் சாட்சியாக மாறிவிட்டாள்.

நான் முன்பு எப்படி இருந்தேன் என்று பார்த்த சிலர், இப்போது நான் எவ்வளவு நன்றாக இருக்கிறேன் என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். என்னுடைய மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியும். முன்பு நான் டாக்டர்களிடமும் பாதிரிகளிடமும் உதவி கேட்டேன், அவர்கள் கெட்ட ஆலோசனையைத்தான் கொடுத்தார்கள். எனக்கு உண்மையிலேயே உதவி செய்தது யெகோவாதான். நான் எதற்குமே லாயக்கில்லாதவன் என்று நினைத்தபோதுகூட அவர் என்னைக் கவனித்தார், என்னை அன்பாக நடத்தினார், என்னிடம் பொறுமையாக இருந்தார். ‘இவ்ளோ அன்பும் அறிவும் உள்ள அருமையான கடவுள் என்னைப்போய் கவனிச்சிருக்காரே, நான் நல்லா வாழணும்னு ஆசைப்படுறாரே’ என்று யோசித்தபோது என் மனசெல்லாம் குளிர்ந்துவிட்டது. நான் இந்தளவுக்கு மாறியிருப்பதற்குக் காரணமே இதுதான்.

“வாழ்க்கையில் எனக்கு மன நிறைவே இல்லை, தனிமையும் வெறுமையும் என்னை வாட்டியெடுத்தன.”​—காசுஹீரோ கூனிமோச்சி

பிறந்த வருஷம்: 1951

பிறந்த நாடு: ஜப்பான்

என்னைப் பற்றி: சைக்கிள் பந்தய வீரன்

என் கடந்தகால வாழ்க்கை: ஜப்பானில் ஷிசூகா பகுதியில் இருக்கும் ஒரு அமைதியான துறைமுக நகரத்தில்தான் நான் வளர்ந்தேன். எங்கள் குடும்பத்தில் எட்டுப் பேர். நாங்கள் ஒரு சின்ன வீட்டில்தான் குடியிருந்தோம். என் அப்பா ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார். நான் சின்னப் பையனாக இருந்தபோதே, சைக்கிள் பந்தயங்களைப் பார்க்க அப்பா என்னைக் கூட்டிக்கொண்டு போவார். அதனால், அந்த விளையாட்டில் எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. எப்படியாவது என்னை சைக்கிள் பந்தய வீரனாக்கிவிட வேண்டும் என்பதற்காக அப்பா முயற்சி எடுக்க ஆரம்பித்தார். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அப்பா எனக்கு மும்முரமாகப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, வருஷாவருஷம் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டேன். அடுத்தடுத்து மூன்று வருஷங்களுக்கு நான்தான் ஜெயித்தேன். காலேஜில் சேருவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பந்தய பயிற்சிப் பள்ளியில் சேர நான் முடிவெடுத்தேன். 19 வயதில் நான் சைக்கிள் பந்தய வீரனாக ஆனேன்.

ஜப்பானில் இருக்கும் சைக்கிள் பந்தய வீரர்களிலேயே நான்தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் என் லட்சியமாக இருந்தது. நிறைய காசு சம்பாதிக்க வேண்டும், என் குடும்பத்தை வசதியாக வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்தேன். அதனால், உயிரைக் கொடுத்து பயிற்சி செய்தேன். பயிற்சியோ பந்தயமோ எனக்குக் கஷ்டமாக இருந்தபோதெல்லாம், ‘நான் இதுக்காகத்தான் பிறந்திருக்கேன், இதுல எப்படியாவது முன்னுக்கு வரணும்’ என்று எனக்கு நானே திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வேன். அதேபோல் நான் முன்னுக்கு வந்தேன். நான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைக்க ஆரம்பித்தது. முதல் வருஷத்தில், புது பந்தய வீரர்களுடைய போட்டியில் நான்தான் முதல் இடத்தைப் பிடித்தேன். இரண்டாவது வருஷத்தில், தேசிய அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றேன். ஆறு தடவை அந்தப் போட்டிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன்.

நான் பரிசுகளுக்குமேல் பரிசுகளை வாங்கிக் குவித்தேன். அதனால், ‘டோக்கையின் இரும்புக் கால்கள்’ என்று எனக்குப் பெயர் வைத்தார்கள். (டோக்கை என்பது ஜாப்பானில் இருக்கும் ஒரு இடம்.) போட்டி என்று வந்துவிட்டால் எனக்கு ஒரு வெறி வந்துவிடும், தயவுதாட்சண்யமே பார்க்க மாட்டேன். அதனால் போகப்போக, என்னோடு பந்தயத்தில் கலந்துகொண்டவர்கள் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். என் வருமானம் அதிகமானது. ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கும் அளவுக்கு நான் வசதியாகிவிட்டேன். ஒரு புது வீடு வாங்கினேன். அங்கே உடற்பயிற்சி செய்வதற்காக ஒரு தனி ரூமே இருந்தது, விலை உயர்ந்த மெஷின்களும் இருந்தன. என் வீட்டை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினேனோ அதே அளவு பணத்தைக் கொடுத்து ஒரு வெளிநாட்டு காரையும் வாங்கினேன். அதன்பின், ஒரு பாதுகாப்புக்காக என் பணத்தையெல்லாம் ரியல் எஸ்டேட்டிலும் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்தேன்.

இருந்தாலும், வாழ்க்கையில் எனக்கு மன நிறைவே இல்லை, தனிமையும் வெறுமையும் என்னை வாட்டியெடுத்தன. அந்தச் சமயத்தில் எனக்குக் கல்யாணமாகி பிள்ளைகளும் இருந்தார்கள். ஆனால், நான் அவர்களிடம் பொறுமையாகவே நடந்துகொள்ளவில்லை. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் அவர்கள்மேல் எரிந்து எரிந்து விழுந்தேன். அதனால் என்னைக் கண்டாலே அவர்கள் பயந்து நடுங்கினார்கள். நான் உர்ரென்று இருக்கிறேனா என்று பார்த்துப் பார்த்துதான் பேச வருவார்கள்.

அதன் பிறகு ஒருகட்டத்தில், எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வர ஆரம்பித்தன. ஏனென்றால், என் மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். அவர்களுடைய கூட்டங்களுக்குப் போக ஆசைப்படுவதாகவும் அவள் சொன்னாள். ஆனால், குடும்பமாகத்தான் போக வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஒருநாள் ராத்திரி ஒரு மூப்பர் எங்கள் வீட்டுக்கு வந்தது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதுமுதல், நான் அவரோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் படித்த விஷயங்களெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தன.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது: எபேசியர் 5:5 என் கண்களைத் திறந்துவிட்டது. அதை என்னால் மறக்கவே முடியாது. “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவனோ, அசுத்தமான செயல்களைச் செய்கிறவனோ, பேராசை பிடித்தவனோ, அதாவது சிலை வழிபாடு செய்கிறவனோ, கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படவே மாட்டான்” என்று அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் படித்த பிறகுதான், ‘சைக்கிள் பந்தயத்த வெச்சு நெறைய பேர் சூதாடுறாங்களே, அது பேராசைய தூண்டிவிடுதே’ என்றெல்லாம் நான் யோசித்தேன். அதனால், என் மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது. நான் யெகோவாவை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால் இனி இந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ள கூடாது என்று புரிந்துகொண்டேன். ஆனால், அப்படியொரு முடிவை எடுப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

அந்த வருஷம்தான் நிறைய போட்டிகளில் நான் ஜெயித்திருந்தேன், இன்னும் இன்னும் ஜெயிக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டேன். அதற்கு நான் வெறித்தனமாகப் போட்டி போட வேண்டியிருந்தது. ஆனால், பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு நான் அமைதியாகவும் சாந்தமாகவும் மாறிக்கொண்டு வந்தேன். அதோடு, பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு மூன்று தடவை மட்டும்தான் போட்டிகளில் கலந்துகொண்டேன். இருந்தாலும், பந்தயத்துக்குப் போக வேண்டுமென்ற ஆசை என் மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. என் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று நினைத்தும் நான் கவலைப்பட்டேன். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதுபோல், அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் இருந்தேன். என் சொந்தக்காரர்கள்வேறு, நான் பைபிள் படித்தது பிடிக்காமல் எனக்கு நிறைய கஷ்டம் கொடுத்தார்கள். என் அப்பாவும் ரொம்ப நொந்துபோய்விட்டார். அவருடைய கனவுகளை நான் உடைத்துவிட்டதாக நினைத்தார். இதையெல்லாம் யோசித்து யோசித்து எனக்கு மன அழுத்தம் ஜாஸ்தியாகிவிட்டது. அதனால், எனக்கு வயிற்றுப்புண்ணே வந்துவிட்டது.

இருந்தாலும், பைபிளைப் படிப்பதையும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போவதையும் நான் விடவே இல்லை. இதுதான், பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு உதவியது. கொஞ்சம் கொஞ்சமாக என் விசுவாசம் பலமானது. என் ஜெபத்தைக் கேட்கச் சொல்லி யெகோவாவிடம் கேட்டேன். என் ஜெபத்துக்கு அவர் பதில் தருவதைப் பார்க்க உதவும்படியும் கேட்டேன். ஒருநாள் என் மனைவி, ‘மாளிகை மாதிரி வீட்ல இருந்தாதான் நான் சந்தோஷமா இருப்பேன்னு எல்லாம் கிடையாது’ என்று சொன்னபோது எனக்கு இன்னும் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. அதன் பிறகு, மெதுமெதுவாக நான் முன்னேற்றம் செய்தேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்: மத்தேயு 6:​33-ல் இயேசு சொல்லியிருக்கும் விஷயம் ரொம்ப உண்மை என்பதை நான் கற்றுக்கொண்டேன். “எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று அதில் அவர் சொல்லியிருக்கிறார். அதாவது, அடிப்படைத் தேவைகளையெல்லாம் கடவுள் கொடுப்பார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை! ஒரு பந்தய வீரனாக நான் சம்பாதித்ததில் 30-ல் ஒரு பங்குதான் இப்போது சம்பாதிக்கிறேன். ஆனால், இந்த 20 வருஷத்தில் எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்தக் குறையுமே இருந்ததில்லை.

இன்னும் சொல்லப்போனால், மற்ற யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து ஆன்மீக விஷயங்களில் ஈடுபடும்போது, இதுவரை கிடைக்காத சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது. நாட்கள் வேகமாகப் போகின்றன. என் குடும்ப வாழ்க்கையும் ரொம்ப நன்றாகப் போகிறது. என் மூன்று மகன்களும் மருமகள்களும்கூட யெகோவாவுக்கு சந்தோஷமாகச் சேவை செய்துவருகிறார்கள்.