Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிகுந்த பொறுப்போடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

மிகுந்த பொறுப்போடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

மிகுந்த பொறுப்போடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

“அதிமுக்கியமானவை எவையோ . . . அவற்றையே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள்.” —பிலி. 4:8.

1, 2. அநேகர் பொழுதுபோக்குகளில் சதா ஈடுபட என்ன காரணம், அதனால் என்ன கேள்விகள் எழுகின்றன?

 மனித சரித்திரத்திலேயே கஷ்டமும், துயரமும் நிறைந்த காலப் பகுதியில் நாம் வாழ்கிறோம். கடவுளுடன் நெருங்கிய பந்தம் வைத்திராத மக்களுக்கு இந்த ‘கடினமான கொடிய காலங்களை’ சமாளிப்பது கஷ்டம்தான். (2 தீ. 3:1-5) ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களுடைய சொந்த பலத்தால் அவற்றைச் சமாளிக்க முயற்சி செய்வதால் ஓரளவே வெற்றி காண்கிறார்கள். பிரச்சினைகளிலிருந்து விடுபட அநேகர் புதுப் புது பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார்கள்.

2 கவலைகளைச் சமாளிக்க மக்கள் சிற்றின்பங்களையே நாடுகிறார்கள். கவனமாக இல்லாவிட்டால் அந்த மனப்பான்மை கிறிஸ்தவர்களையும் எளிதில் தொற்றிக்கொள்ளும். நாம் அதை எப்படித் தவிர்க்கலாம்? அப்படியென்றால் நாம் எந்த விதமான பொழுதுபோக்குகளிலும் ஈடுபடவே கூடாதா? பொறுப்புணர்ச்சியோடு இருக்கும் அதே சமயத்தில் நாம் எப்படிப் பொழுதுபோக்கிலும் சமநிலையோடு ஈடுபடலாம்? இதற்கு என்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்? முக்கியமான காரியங்களுக்கு நாம் கவனம் செலுத்தினாலும், எப்போதும் கறாராக இருப்பதை எப்படித் தவிர்க்கலாம்?

சிற்றின்பப் பிரியர் மத்தியில் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ளுதல்

3, 4. முக்கியமான காரியங்களுக்குக் கவனம் செலுத்துவதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள பைபிள் எப்படி உதவுகிறது?

3 இந்த உலகம் ‘சுகபோகத்திற்கே’ அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. (2 தீ. 3:4) அப்படிச் சுகபோகமே வாழ்க்கை என்று இருந்தால் கடவுளோடுள்ள நம் உறவு அறுந்துவிடலாம். (நீதி. 21:17) அதனால்தான், தீமோத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் எழுதிய கடிதங்களில் பொறுப்புணர்ச்சியோடு இருப்பதன் அவசியத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். பொழுதுபோக்கு விஷயத்தில் இந்த உலகத்தின் மனப்பான்மையைத் தவிர்க்க அவருடைய அறிவுரைகள் நமக்கு உதவும்.1 தீமோத்தேயு 2:1, 2-ஐயும் தீத்து 2:2-8-ஐயும் வாசியுங்கள்.

4 சில சமயங்களில் சிற்றின்பங்களைத் தவிர்த்து முக்கியமான காரியங்களுக்குக் கவனம் செலுத்துவது எவ்வளவு நல்லது என்பதைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாலொமோன் எழுதினார். (பிர. 3:4; 7:2-4) ஆம், நம் வாழ்நாள் குறுகியதாக இருப்பதால், மீட்பைப் பெற நாம் ‘தீவிரமாக முயற்சியெடுக்க’ வேண்டும். (லூக். 13:24) அதற்காக நாம் ‘அதிமுக்கியமானவற்றை’ தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும். (பிலி. 4:8, 9) அதாவது, நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

5. நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய அம்சம் எது?

5 உதாரணத்திற்கு, யெகோவாவையும் இயேசுவையும் போல கடினமாய் உழைப்பதற்குக் கிறிஸ்தவர்கள் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். (யோவா. 5:17) அதனால் கடின உழைப்பாளிகள், நம்பகமானவர்கள் என்ற நல்ல பெயரெடுத்திருக்கிறார்கள். முக்கியமாகக் குடும்பத் தலைவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற கடினமாய் உழைக்கிறார்கள். சொல்லப்போனால், தன் குடும்பத்தைப் பராமரிக்காதவர் ‘விசுவாசத்தில் இல்லாதவருக்கு,’ அதாவது யெகோவாவையே ஒதுக்கிவிட்டவருக்குச் சமம்!—1 தீ. 5:8.

வழிபாட்டில் பொறுப்போடும் சந்தோஷத்தோடும் ஈடுபடுதல்

6. யெகோவாவைச் சரியான விதத்தில் வழிபடுவது முக்கியம் என்பதை எது காட்டுகிறது?

6 தம்மைச் சரியான விதத்தில் வழிபட வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர் யெகோவாவைவிட்டு வழிவிலகிச் சென்றபோது திருச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சாபங்கள் எல்லாம் அவர்கள்மீது வந்தன. (யோசு. 23:12, 13) முதல் நூற்றாண்டில், பொய்ப் போதனைகளாலும் தீய மனப்பான்மையாலும் உண்மை வழிபாடு கறைபடாதிருக்க கிறிஸ்துவின் சீடர்கள் கடினமாய்ப் போராட வேண்டியிருந்தது. (2 யோ. 7-11; வெளி. 2:14-16) இன்று உண்மை கிறிஸ்தவர்களும் கடவுளைச் சரியான விதத்தில் வழிபட எப்போதும் கவனமாய் இருக்கிறார்கள்.—1 தீ. 6:20.

7. ஊழியத்திற்காக பவுல் எப்படித் தயார் செய்தார்?

7 ஊழியத்தில் ஈடுபடுவது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், அந்தச் சந்தோஷம் நிலைத்திருக்க அதன் முக்கியத்துவத்தை உணருவதும் முன்கூட்டியே தயாரிப்பதும் அவசியம். மக்களை மனதில் வைத்து கற்பித்த விதத்தை பவுல் விளக்கினார். “எப்படியாவது சிலரையேனும் மீட்புக்கு வழிநடத்த எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியை நான் மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்கிறேன்” என்று அவர் எழுதினார். (1 கொ. 9:22, 23) மக்களுக்கு ஆன்மீக உதவி அளிப்பதில் பவுல் இன்பம் கண்டார்; அதோடு, தனக்குச் செவிகொடுத்தவர்களின் முக்கியமான தேவைகளை எப்படிப் பூர்த்திசெய்யலாம் என்பதிலும் அவர் கவனம் செலுத்தினார். இவ்வாறு, யெகோவாவை வழிபட அவர்களை ஊக்குவித்தார்.

8. (அ) நாம் எதை உணர்ந்து ஜனங்களுக்குக் கற்பிக்க வேண்டும்? (ஆ) பைபிள் படிப்பு நடத்துவது நமக்கு எப்படிச் சந்தோஷத்தைத் தரலாம்?

8 ஊழியத்தை பவுல் எவ்வளவு முக்கியமானதாய்க் கருதினார்? யெகோவாவுக்கும் சத்தியத்திற்குச் செவிசாய்த்தவர்களுக்கும் ‘அடிமையாக’ இருக்க அவர் மனமுள்ளவராக இருந்தார். (ரோ. 12:11; 1 கொ. 9:19) பைபிள் படிப்பில், கிறிஸ்தவக் கூட்டங்களில், அல்லது குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும்போது நம் பொறுப்பை உணர்ந்து கற்பிக்கிறோமா? ஒருவேளை, வாராவாரம் பைபிள் படிப்பு நடத்துவதை நாம் பெரிய சுமையாகக் கருதலாம். நம்முடைய சொந்தக் காரியங்களுக்காகச் செலவிடுகிற நேரத்தைக் குறைத்து அதை மற்றவர்களுக்குப் படிப்பு நடத்த செலவிடுகிறோம் என்பது உண்மையே. என்றாலும், “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக அது இருக்கிறது, அல்லவா? (அப். 20:35) மீட்பைப் பெறுவதற்கான வழியை மற்றவர்களுக்குக் கற்பிப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது; இந்தச் சந்தோஷம் வேறு எதற்குமே ஈடாகாது.

9, 10. (அ) பொறுப்பாக இருப்பவர்கள் ஓய்வெடுக்கக் கூடாது, மற்றவர்களுடன் நேரம் செலவிடக் கூடாது என்று அர்த்தமா? விளக்குங்கள். (ஆ) ஒரு மூப்பர் ஊக்குவிப்பவராகவும் அணுகத்தக்கவராகவும் இருக்க எது உதவும்?

9 பொறுப்பாக இருப்பவர்கள் ஓய்வெடுக்கக் கூடாதென்றோ மற்றவர்களுடன் நேரம் செலவிடக் கூடாதென்றோ அர்த்தமில்லை. இந்த விஷயத்தில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்தார்; அவர் கற்பிப்பதற்கு மட்டுமல்ல ஓய்வெடுப்பதற்கும் மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கும் நேரம் செலவிட்டார். (லூக். 5:27-29; யோவா. 12:1, 2) பொறுப்பாக இருப்பவர்கள் எப்போதும் முகத்தை ‘உர்’ என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தமில்லை. இயேசு அப்படி இருந்திருந்தால் மக்கள் நிச்சயம் அவரிடம் நெருங்கி வந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால், குழந்தைகள்கூட தயக்கமின்றி அவரிடம் நெருங்கி வந்தார்கள். (மாற். 10:13-16) இந்த விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் போல் சமநிலையோடு இருக்கலாம்?

10 ஒரு மூப்பரைப் பற்றி ஒரு சகோதரர் சொல்லுகையில், “அவர் மற்றவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டுமென விரும்புவார்; ஆனால், மற்றவர்களும் அதேபோல் தன்னிடம் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கவே மாட்டார்” என்றார். உங்களைப் பற்றி அப்படிச் சொல்ல முடியுமா? சில விஷயங்களில் மற்றவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமே. உதாரணத்திற்கு, பிள்ளைகளின் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப சில காரியங்களை அவர்களாகவே செய்யும்படி சொல்வதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் செய்வதற்குப் பெற்றோர் உதவலாம். அதேபோல், சபையிலுள்ளவர்கள் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கு மூப்பர்கள் சில ஆலோசனைகளைக் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கலாம். மேலும், ஒரு மூப்பருக்குச் சமநிலையான கண்ணோட்டம் இருக்கும்போது அவரால் மற்றவர்களை அன்போடு ஊக்குவிக்க முடியும், மற்றவர்களும் அவரைத் தேடி வருவார்கள். (ரோ. 12:3) “ஒரு மூப்பர் எல்லாவற்றையும் தமாஷாக எடுத்துக்கொள்வது எனக்குப் பிடிக்காது. அதற்காக அவர் எப்போதுமே கறாராக இருந்தால் அவரிடம் நெருங்குவதே கஷ்டமாக இருக்கும்” என்று ஒரு சகோதரி சொன்னார். சில மூப்பர்களுடைய “முகத்தைப் பார்த்தாலே கடுகடுவென இருப்பதால் அவர்களிடம் பேசுவதற்கே பயமாக இருக்கும்” என்று நினைப்பதாக மற்றொரு சகோதரி சொன்னார். ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவாவைச் சகோதர சகோதரிகள் சந்தோஷமாக வழிபட உதவவே மூப்பர்கள் எப்போதும் விரும்புவார்கள்.—1 தீ. 1:11.

சபையில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்

11. சபையில் ‘தகுதிபெற முயலுகிறவர்கள்’ என்ன செய்ய வேண்டும்?

11 சபையிலுள்ள சகோதரர்கள் அதிக பொறுப்புகளைப் பெற முயலும்படி பவுல் உற்சாகப்படுத்தினார்; ஆனால், பேரும் புகழும் பெற வேண்டும் என்ற தன்னல ஆசையைத் திருப்தி செய்துகொள்வதற்காக அவர்களை அவர் உற்சாகப்படுத்தவில்லை. மாறாக, “கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுகிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார்” என்று எழுதினார். (1 தீ. 3:1, 4) ‘தகுதிபெற முயலுகிற’ கிறிஸ்தவ சகோதரர்கள், மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொண்டு அதற்குத் தேவையான ஆன்மீகக் குணங்களை வளர்த்துக்கொள்ள கடினமாய்ப் பாடுபட வேண்டும். உதவி ஊழியராகச் சிபாரிசு செய்யப்படுவதற்கு ஒரு சகோதரர் ஞானஸ்நானம் பெற்று ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும்; அதோடு, 1 தீமோத்தேயு 3:8-13-ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை அவர் ஓரளவு பெற்றிருக்க வேண்டும். “அதேபோல், உதவி ஊழியர்கள் பொறுப்புடன் நடக்கிறவர்களாக” இருக்க வேண்டுமென 8-வது வசனம் தெளிவாகக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

12, 13. இளம் சகோதரர்கள் சபையில் தகுதிபெற எந்தெந்த வழிகளில் முயலலாம் எனச் சொல்லுங்கள்.

12 நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற, அதே சமயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்கிற 18-19 வயதிலுள்ள சகோதரரா? நீங்கள் தகுதிபெற நிறைய வழிகள் இருக்கின்றன. ஊழியத்தில் இன்னும் அதிகமாக ஈடுபடுவது ஒரு வழி. வயது வித்தியாசமின்றி சக கிறிஸ்தவர்கள் எல்லாருடனும் சேர்ந்து ஊழியம் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? பைபிள் படிக்க ஆர்வமுள்ள ஒருவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்களா? சபைக் கூட்டங்களில் கொடுக்கப்படுகிற ஆலோசனைகளுக்கு இசைய பைபிள் படிப்பு நடத்தும்போது கற்பிக்கும் திறமையில் நீங்கள் முன்னேறுவீர்கள். அதோடு, யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்கிற நபரிடம் அனுதாபம் காட்டவும் பழகிக்கொள்வீர்கள். மாற்றங்கள் செய்வதன் அவசியத்தை மாணாக்கர் புரிந்துகொள்ளும்போது, பைபிள் நியமங்களைப் பின்பற்ற அவருக்குப் பொறுமையாகவும் பக்குவமாகவும் சொல்லிக் கொடுப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொள்வீர்கள்.

13 இளைஞர்களே, உங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் சபையிலுள்ள முதியவர்களுக்கு உதவத் தயாராக இருங்கள். ராஜ்ய மன்றத்தை அழகாக, சுத்தமாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வதற்கும் உதவுங்கள். உங்களால் முடிந்த இப்படிப்பட்ட உதவிகளை மனமுவந்து செய்யும்போது, ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டுகிறீர்கள். தீமோத்தேயுவைப் போலவே, நீங்களும் சபையின் தேவைகளுக்கு உள்ளப்பூர்வமான அக்கறை காட்ட கற்றுக்கொள்வீர்கள்.பிலிப்பியர் 2:19-22-ஐ வாசியுங்கள்.

14. சபையில் பொறுப்புகளை ஏற்க இளம் சகோதரர்கள் “தகுதியுள்ளவர்களா” என்று எப்படி ‘சோதிக்கலாம்’?

14 மூப்பர்களே, ‘இளமைப் பருவத்திற்குரிய ஆசைகளிலிருந்து விலகியோடுவதற்கும்,’ “நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம்” போன்ற அருமையான குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் முயற்சி செய்கிற இளம் சகோதரர்களைப் பயன்படுத்திக்கொள்ள விழிப்பாய் இருங்கள். (2 தீ. 2:22) சபையில் அவர்களுக்கு வேலைகளைக் கொடுக்கும்போது பொறுப்புகளை ஏற்க அவர்கள் ‘தகுதியுள்ளவர்களா என்று சோதிக்க’ முடியும்; அதோடு அவர்களுடைய “முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 3:10; 4:15.

சபையிலும் குடும்பத்திலும் பொறுப்போடு நடந்துகொள்ளுதல்

15. நாம் எப்படி 1 தீமோத்தேயு 5:1, 2-க்கு இசைய மற்றவர்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளலாம்?

15 பொறுப்போடு நடந்துகொள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு மதிப்புமரியாதை காட்டுவதும் அவசியம். மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதன் அவசியத்தை பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த அறிவுரையில் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 5:1, 2-ஐ வாசியுங்கள்.) எதிர்பாலாருடன் பழகும் விஷயத்தில் இது ரொம்பவே முக்கியம். பெண்களுக்கு மதிப்புமரியாதை காட்டுவதில், முக்கியமாக மனைவிக்கு மதிப்புமரியாதை காட்டுவதில், யோபு சிறந்த முன்மாதிரி வைத்தார். எந்தப் பெண்ணையும் கெட்ட எண்ணத்தோடு பார்க்கவே கூடாது என்பதில் அவர் தீர்மானமாய் இருந்தார். (யோபு 31:1) நம் சகோதர சகோதரிகளிடம் பொறுப்புடன் நடந்துகொள்கிறோம் என்றால் அவர்களோடு காதல் விளையாட்டுகளில் ஈடுபட மாட்டோம் அல்லது நம்மிடம் வரவே தயங்குகிற அளவுக்கு எதையும் செய்ய மாட்டோம். திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு பழகுகிறவர்கள்கூட ஒருவருக்கொருவர் மதிப்புமரியாதையுடன் நடந்துகொள்வது அவசியம். பொறுப்பான எந்தக் கிறிஸ்தவரும் எதிர்பாலார் ஒருவரின் உணர்ச்சிகளோடு விளையாடவே மாட்டார்.—நீதி. 12:22.

16. கணவருக்கும் தகப்பனுக்கும் உரிய ஸ்தானத்தைப் பற்றிய சிலரின் கருத்துக்கும் பைபிளின் கருத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

16 குடும்பத்தில் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பொறுப்புகளைக் கையாளுவதிலும்கூட நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சாத்தானுடைய உலகம், கணவருக்கும் தகப்பனுக்கும் உரிய ஸ்தானத்தைக் கேலி கிண்டல் செய்கிறது. இன்றைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குடும்பத் தலைவரைக் கேலிக்கும் அவமதிப்புக்கும் உரியவராகவே சித்தரிக்கின்றன. ஆனால், கணவர்களுக்கு அதிக பொறுப்பு இருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது, அவர் “மனைவிக்குத் தலையாக” இருக்கிறார்.—எபே. 5:23; 1 கொ. 11:3.

17. குடும்ப வழிபாட்டை நடத்துவது நம் பொறுப்புகளுக்குக் கவனம் செலுத்துகிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறது என்று விளக்குங்கள்.

17 ஒரு கணவர் தன் குடும்பத்துக்காகச் சம்பாதித்துக் கொடுக்கலாம். ஆனால், அவர் ஆன்மீக வழிநடத்துதலைக் கொடுக்காவிட்டால், அவருக்கு ஞானமும் அறிவும் போதாது என்றே அர்த்தம். (உபா. 6:6, 7) நீங்கள் குடும்பத் தலைவராக இருந்து, சபையில் கூடுதல் பொறுப்புகளுக்குத் தகுதிபெற முயலுகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள், “குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராகவும், மிகுந்த பொறுப்பும் கீழ்ப்படிதலும் உள்ள பிள்ளைகளை உடையவராகவும் இருக்க வேண்டும்” என்று 1 தீமோத்தேயு 3:4 சொல்கிறது. எனவே, ‘குடும்ப வழிபாட்டிற்காகத் தவறாமல் நேரம் ஒதுக்குகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். குடும்ப வழிபாட்டை நடத்தும்படி சில மனைவிகள் தங்கள் கணவரிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. ‘இந்தப் பொறுப்பைச் சரிவர செய்கிறேனா?’ என ஒவ்வொரு கணவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். குடும்ப வழிபாடு சரிவர நடக்க கிறிஸ்தவ மனைவியும் ஒத்தாசையாக இருந்து, தன் கணவரோடு ஒத்துழைக்க வேண்டும்.

18. பிள்ளைகள் எப்படி வாழ்க்கையில் முக்கியக் காரியங்களுக்குக் கவனம் செலுத்தக் கற்றுக்கொள்ளலாம்?

18 வாழ்க்கையில் முக்கியக் காரியங்களுக்குக் கவனம் செலுத்தும்படி பிள்ளைகளுக்கும் பைபிள் ஆலோசனை கொடுக்கிறது. (பிர. 12:1) இளம் பிள்ளைகள் கடினமாக உழைக்கவும், அவரவர் வயதுக்கும் திறமைகளுக்கும் ஏற்ப வீட்டு வேலைகள் சிலவற்றைச் செய்யவும் கற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை. (புல. 3:27) தாவீது ராஜா இளம் வயதிலேயே சிறந்த மேய்ப்பராக இருக்கக் கற்றுக்கொண்டார். பாட்டு இசைக்கவும் பாட்டு இயற்றவும்கூட கற்றுக்கொண்டார்; அதனால்தான் இஸ்ரவேல் ராஜாவுக்குச் சேவை செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றார். (1 சா. 16:11, 12, 18-21) தாவீது சிறுவயதில் சந்தோஷமாக விளையாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை; அதே சமயத்தில், யெகோவாவைத் துதிக்க பின்னர் அவருக்கு உதவிய திறமைகளையும் வளர்த்துக்கொண்டார். ஒரு மேய்ப்பருக்குரிய திறமைகளை அவர் வளர்த்திருந்ததால், இஸ்ரவேல் மக்களைப் பொறுமையோடு வழிநடத்த முடிந்தது. இளைஞர்களே, உங்கள் படைப்பாளருக்குச் சேவை செய்வதற்கும், எதிர்காலத்தில் பொறுப்புகளை ஏற்பதற்கும் உதவுகிற என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்?

சமநிலையோடு இருங்கள்

19, 20. உங்களையும் உங்கள் வழிபாட்டையும் குறித்ததில் என்ன மனநிலையோடிருக்கத் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?

19 நம்மைப் பற்றி மட்டுக்குமீறி எண்ணாமல் சமநிலையோடு இருக்க நாம் எல்லாருமே முயற்சி செய்ய வேண்டும். ‘மிஞ்சின நீதிமானாய்’ ஆக நாம் விரும்புவதில்லை. (பிர. 7:16) வீட்டாரிடமோ சக பணியாளர்களிடமோ நம் சகோதர சகோதரிகளிடமோ நகைச்சுவையாகப் பேசுவது இறுக்கத்தைத் தளர்த்த பேருதவியாய் இருக்கலாம். குடும்பத்தார் ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறைசொல்லாதபடி கவனமாய் இருக்க வேண்டும்; அப்போதுதான், குடும்பத்தின் சமாதானம் பறிபோகாதிருக்கும். சபையிலுள்ள எல்லாரும் ஜாலியாக இருந்து சிரித்து மகிழ கற்றுக்கொள்ள வேண்டும்; அதோடு, சபையில் உரையாடல்களும் கற்பிக்கும் முறைகளும் உற்சாகமூட்டுவதாய் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.—2 கொ. 13:10; எபே. 4:29.

20 இந்த உலக மக்கள் யெகோவாவுக்கோ அவருடைய சட்டங்களுக்கோ மதிப்புக் கொடுப்பதில்லை. மாறாக, யெகோவாவின் மக்கள் அவருக்குக் கீழ்ப்படியவும் உண்மையோடிருக்கவும் அதிக கவனமாய் இருக்கிறார்கள். ‘மிகுந்த பொறுப்போடு’ யெகோவாவை வழிபடுகிற மாபெரும் கூட்டத்தாரில் ஒருவராக இருப்பது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது! நம் வாழ்க்கையையும் வழிபாட்டையும் எப்போதும் முக்கியமானதாய்க் கருதத் தீர்மானமாய் இருப்போமாக.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

• பொழுதுபோக்கு விஷயத்தில் இந்த உலகத்தின் மனப்பான்மையை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

• நாம் எப்படி ஊழியத்தில் பொறுப்போடும் சந்தோஷத்தோடும் ஈடுபடலாம்?

• சபை பொறுப்புகளை முக்கியமானதாகக் கருதுகிறோமா இல்லையா என்பதை எது காட்டும்?

• சபையாருக்கும் குடும்பத்தாருக்கும் மதிப்புக் கொடுப்பது ஏன் முக்கியமென விளக்குங்கள்.

[கேள்விகள்]

[பக்கம் 12-ன் படங்கள்]

ஒரு கணவர் குடும்பத்துக்குச் சம்பாதித்துக் கொடுப்பதோடு ஆன்மீக வழிநடத்துதலையும் கொடுக்க வேண்டும்