Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறீர்களா?

கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறீர்களா?

கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறீர்களா?

‘உம்முடைய நல்ல ஆவி [அதாவது, சக்தி] என்னைச் செம்மையான வழியிலே நடத்துவதாக.’ —சங். 143:10.

1, 2. (அ) யெகோவா தமது ஊழியர்களுக்கு உதவ தம் சக்தியைப் பயன்படுத்திய சில சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுங்கள். (ஆ) விசேஷித்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான் கடவுளுடைய சக்தி செயல்படுகிறதா? விளக்குங்கள்.

 கடவுளுடைய சக்தி செயல்படும் விதத்தைப் பற்றிச் சிந்திக்கையில் எந்தச் சம்பவங்கள் உங்களுடைய நினைவுக்கு வருகின்றன? கிதியோனும் சிம்சோனும் செய்த வீரதீர செயல்கள் உங்களுடைய கண்முன் வருகின்றனவா? (நியா. 6:33, 34; 15:14, 15) ஒருவேளை, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் காட்டிய தைரியம் அல்லது ஆலோசனை சங்கத்திற்கு முன்னால் ஸ்தேவான் பதட்டமின்றி அமைதியாய் நின்றது உங்களுடைய நினைவுக்கு வரலாம். (அப். 4:31; 6:15) நம் காலத்தில்கூட, சர்வதேச மாநாடுகளில் கரைபுரண்டோடும் சந்தோஷத்தை... போரில் ஈடுபட மறுத்ததால் சிறையில் தள்ளப்பட்ட உத்தமசீலர்களை... பிரசங்க வேலையில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சியை... பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவையும் கடவுளுடைய சக்தி செயல்படும் விதத்திற்கு அத்தாட்சிகளே.

2 விசேஷித்த சந்தர்ப்பங்களில் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும்தான் கடவுளுடைய சக்தி செயல்படுகிறதா? இல்லை. கிறிஸ்தவர்கள், ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருப்பதாக,’ ‘கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுவதாக’ பைபிள் சொல்கிறது. (கலா. 5:16, 18, 25) கடவுளுடைய சக்தி நம்முடைய வாழ்க்கையில் சதா செயல்பட்டுக் கொண்டிருப்பதையே இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. நம்முடைய சிந்தையை, பேச்சை, செயலை யெகோவாவுடைய சக்தி வழிநடத்தும்படி நாம் தினமும் அவரிடம் மன்றாட வேண்டும். (சங்கீதம் 143:10-ஐ வாசியுங்கள்.) நம்முடைய வாழ்க்கையில் அந்தச் சக்தி தாராளமாகச் செயல்பட அனுமதிக்கும்போது, மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிற, கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள அது நமக்கு உதவும்.

3. (அ) கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பது ஏன் முக்கியம்? (ஆ) என்ன கேள்விகளை இப்போது ஆராய்வோம்?

3 கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பது ஏன் முக்கியம்? ஏனென்றால், மற்றொரு சக்தி நம்மேல் செல்வாக்கு செலுத்த முயலுகிறது; இது கடவுளுடைய சக்திக்கு எதிராகச் செயல்படுகிறது. இதை “பாவ இச்சை” என்று பைபிள் குறிப்பிடுகிறது; இது ஆதாமிடமிருந்து நாம் சொத்தாகப் பெற்ற அபூரணத்தினால் விளைந்த பாவ இயல்பைக் குறிக்கிறது. (கலாத்தியர் 5:17-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பது என்றால் என்ன? நம்முடைய பாவ இச்சைகளுக்கு அணைபோட நடைமுறையான படிகள் இருக்கின்றனவா? ‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற’ குணங்களில் அடுத்த ஆறு குணங்களைப் பற்றி, அதாவது “நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு” பற்றி, இப்போது ஆராய்கையில் இவற்றிற்கான பதில்களைக் காணலாம்.—கலா. 5:22, 23.

சபையின் சமாதானத்திற்குக் கைகொடுக்கிற சாந்தமும் நீடிய பொறுமையும்

4. சபையில் சமாதானம் களைகட்ட சாந்தமும் நீடிய பொறுமையும் எவ்வாறு உதவுகின்றன?

4 கொலோசெயர் 3:12, 13-ஐ வாசியுங்கள். சாந்தமும் நீடிய பொறுமையும் கைகோர்த்துக்கொண்டால் சபையில் சமாதானம் களைகட்டும். மற்றவர்களிடம் இனிமையாகப் பேச... கோபம் வரும்போது நாவை அடக்க... புண்படும் விதத்தில் மற்றவர்கள் ஏதாவது பேசினால் அல்லது செய்தால் சரிக்குச் சரி செய்யாதிருக்க... கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற இந்த இரு குணங்களும் நமக்கு உதவும். சக கிறிஸ்தவரோடு ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டால், அவரை அப்படியே ஒதுக்கிவிடாமல் பிரச்சினைக்குத் தீர்வு காண நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய நீடிய பொறுமை உதவும். சாந்தமும் நீடிய பொறுமையும் சபைக்கு உண்மையிலேயே அவசியமா? அதில் சந்தேகமே இல்லை, ஏனென்றால் நாம் எல்லாரும் அபூரணர்.

5. பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே என்ன ஏற்பட்டது, இது எதைக் காட்டுகிறது?

5 பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பல வருடங்கள் ஒன்றுசேர்ந்து உழைத்தார்கள். அவர்கள் இருவரிடமும் மெச்சத்தக்க குணங்கள் இருந்தன. ஆனாலும், ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு “இடையே கடுங்கோபம் மூண்டது; ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோனார்கள்.” (அப். 15:36-39) தேவபக்தியுள்ள ஊழியர்களுக்கு இடையிலும்கூட சில சமயங்களில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால், அது ஒரு பெரிய வாக்குவாதமாக வெடித்து உறவே அறுந்து விடாதிருக்க அவர்கள் என்ன செய்யலாம்?

6, 7. (அ) சக கிறிஸ்தவரோடு பேசும் விஷயம் ஒரு வாக்குவாதமாக மாறாதிருக்க என்ன பைபிள் புத்திமதியை நாம் பின்பற்றலாம்? (ஆ) ‘கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருப்பதால்’ என்ன நன்மை?

6 பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே திடீரென்று மனஸ்தாபம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் “கடுங்கோபம் மூண்டது.” ஒரு விஷயத்தைக் குறித்து சக கிறிஸ்தவரோடு பேசுகையில் ஒருவருக்குச் சட்டெனக் கோபம் வருகிறதென்றால் யாக்கோபு 1:19, 20-ல் சொல்லப்பட்டுள்ள புத்திமதிக்கு அவர் செவிசாய்க்க வேண்டும்; “ஒவ்வொருவரும் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நடப்பிக்க முடியாது” என்று அது சொல்கிறது. ஆகவே, வார்த்தை முற்றிப் போவதற்கு முன் சூழ்நிலையைப் பொறுத்து அவர் பேச்சை மாற்றலாம், அதைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிடலாம், அல்லது அந்த இடத்தைவிட்டு போய்விடலாம்.—நீதி. 12:16; 17:14; 29:11.

7 இந்தப் புத்திமதியைப் பின்பற்றுவதில் என்ன நன்மை? ஒரு கிறிஸ்தவர் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த, அந்த விஷயத்தைக் குறித்து ஜெபிக்க, நல்ல விதமாக பதிலளிப்பது எப்படியென யோசிக்க நேரமெடுத்துக்கொள்கையில் அவர் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பார். (நீதி. 15:1, 28) அந்தச் சக்தியின் உதவியால் அவர் சாந்தத்தோடும் நீடிய பொறுமையோடும் இருக்க முடியும். இதன் மூலம் எபேசியர் 4:26, 29-லுள்ள புத்திமதிக்கு அவர் செவிகொடுக்கிறார்: “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; . . . கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுங்கள்.” ஆம், சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் அணிந்துகொள்வதன் மூலம் சபையில் சமாதானமும் ஐக்கியமும் தழைக்க நாம் உதவுவோம்.

குடும்பத்திற்குப் புத்துணர்ச்சியூட்டுகிற கருணையும் நல்மனமும்

8, 9. கருணை, நல்மனம் இவற்றின் அர்த்தம் என்ன, குடும்பத்தில் இவை என்ன விளைவை ஏற்படுத்துகின்றன?

8 எபேசியர் 4:31, 32; 5:8, 9-ஐ வாசியுங்கள். உஷ்ணமான வேளையில் நம்மை வருடிச் செல்லும் பூங்காற்றைப் போல, நாம் பருகும் ஜில்லென்ற பானத்தைப் போல கருணையும் நல்மனமும் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவ இவை உதவும். கருணை என்ற இந்த அருமையான குணம் இருக்கும்போது மற்றவர்களிடம் உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுவோம்; அதாவது மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம், அன்பாகப் பேசுவோம். கருணையைப் போலவே நல்மனமும் ஒரு சிறந்த குணம்; இதைச் செயலில் காட்டும்போது மற்றவர்கள் நன்மையடைகிறார்கள். தாராளகுணமும் இதில் அடங்கியுள்ளது. (அப். 9:36, 39; 16:14, 15) நல்மனம் என்பதில் முக்கியமான இன்னொரு அம்சமும் உட்பட்டுள்ளது.

9 நல்மனம் என்பது நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்குவதைக் குறிக்கிறது. அப்படியென்றால், நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டுமல்ல எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. இது, முழுமையாய் கனிந்திருக்கிற, உள்ளும் புறமும் சொத்தையில்லாத பழத்தைப் போல் இருக்கிறது. அதுபோல, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற நன்மனமும்கூட ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கை முழுவதிலும் பளிச்சிடுகிறது.

10. கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை வளர்க்க குடும்பத்தாருக்கு எப்படி உதவலாம்?

10 ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கருணையுள்ளவர்களாய், நல்மனமுள்ளவர்களாய் நடந்துகொள்ள எது உதவும்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெறுவது இதற்கு மிக முக்கியம். (கொலோ. 3:9, 10) குடும்பத் தலைவர்கள் சிலர், வாரா வாரம் குடும்ப வழிபாட்டை நடத்தும்போது கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களைப் பற்றியும் ஆழமாகப் படிக்கிறார்கள். அப்படிப் படிப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை. ஆராய்வதற்கு ஏற்ற பிரசுரங்களோ சிடி-களோ உங்களுடைய மொழியில் இருந்தால் ஒவ்வொரு குணத்தையும் பற்றிய தகவலை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். அதிலிருந்து ஒவ்வொரு வாரமும் சில பாராக்களைச் சிந்திக்கலாம்; அப்படி ஒவ்வொரு குணத்தைப் பற்றியும் பல வாரங்களுக்கு ஆராயலாம். அவ்வாறு படிக்கும்போது கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். கற்ற விஷயங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமென யோசியுங்கள்; உங்கள் முயற்சியை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபியுங்கள். (1 தீ. 4:15; 1 யோ. 5:14, 15) குடும்பத்தில் ஒருவரையொருவர் நல்ல விதமாக நடத்த அப்படிப்பட்ட படிப்பு உண்மையிலேயே உதவுகிறதா?

11, 12. கருணையைப் பற்றி ஆராய்ந்து படித்ததால் இரண்டு கிறிஸ்தவ தம்பதியர் எப்படிப் பயனடைந்தார்கள்?

11 மணவாழ்க்கையைச் சந்தோஷமாக நடத்த விரும்பிய ஒரு புதுமணத் தம்பதியர், கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களைப் பற்றி ஆழ்ந்து படிக்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் எப்படிப் பயனடைந்தார்கள்? அந்த மனைவி சொல்கிறார்: “அன்புமாறா கருணையைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொண்டதால் இன்றுவரையாக ஒருவரையொருவர் நல்ல விதமாக நடத்த முடிந்திருக்கிறது. பணிந்துபோகவும் ஒருவரையொருவர் மன்னிக்கவும் கற்றுக்கொண்டோம். பொருத்தமான சமயங்களில் நன்றி சொல்லவும் மன்னிப்பு கேட்கவும்கூட கற்றுக்கொண்டோம்.”

12 மற்றொரு கிறிஸ்தவ தம்பதியருக்கு மணவாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன; ஒருவருக்கொருவர் கருணை காட்டாததே அதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அதனால், அந்தக் குணத்தைப் பற்றி இருவரும் சேர்ந்து ஆராய தீர்மானித்தார்கள். விளைவு? அந்தக் கணவர் சொல்கிறார்: “கருணையைப் பற்றி ஆராய்ந்து படித்தது அநாவசியமாகத் தப்புக்கணக்குப் போடாமல் இருக்கவும் ஒருவரிலொருவர் நல்லதையே பார்க்கவும் உதவியது. அதன் பிறகு ஒவ்வொருவரும் மற்றவருடைய தேவைக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தோம். மனைவியை மனந்திறந்து பேச விடுவதும் அவள் பேசுவதைக் கேட்டு புண்பட்டு விடாதிருப்பதும் கருணையின் ஓர் அம்சம் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், என் கர்வத்தையெல்லாம் மூட்டைகட்டி வைக்க வேண்டியிருந்தது. நாங்கள் இப்படிக் கருணையோடு நடந்துகொள்ள ஆரம்பித்தபோது எதிர்த்துப் பேசுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டோம். பெரிய விடுதலை கிடைத்ததைப் போல இருந்தது.” கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களைப் பற்றி ஆராய்ந்து படிப்பதால் உங்களுடைய குடும்பமும் பயனடையும், அல்லவா?

தனித்திருக்கையில் விசுவாசம் காட்டுங்கள்

13. விசுவாசத்திற்கு உலை வைக்கிற என்ன காரியங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்?

13 கிறிஸ்தவர்கள் மற்றவர்களின் முன்னிலையிலும் சரி தனித்திருக்கையிலும் சரி, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்க வேண்டும். இன்றைய சாத்தானுடைய உலகில், அருவருப்பான காட்சிகளுக்கும் கீழ்த்தரமான பொழுதுபோக்குகளுக்கும் பஞ்சமே இல்லை. இவை கடவுளோடுள்ள நம் பந்தத்திற்கு உலை வைக்கலாம். ஆகவே, ஒரு கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும்? “எல்லாவித அருவருப்பையும் பாழாய்ப்போன துர்குணத்தையும் ஒதுக்கித்தள்ளிவிடுங்கள்; அதோடு, உங்கள் உயிரை மீட்பதற்கு வல்லமையுள்ள தேவ வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு உங்கள் உள்ளத்தில் பதிய வையுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை அறிவுரை கொடுக்கிறது. (யாக். 1:21) யெகோவாவுக்கு முன்னால் எப்போதும் சுத்தமாயிருக்க, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற விசுவாசம் என்ற குணம் எப்படி உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.

14. விசுவாசம் இல்லையென்றால் எப்படித் தவறான காரியத்தில் ஈடுபட்டு விடுவோம்?

14 நமக்கு விசுவாசம் இருந்தால் யெகோவா தேவனை நிஜமானவராகக் கருதுவோம். அவர் நமக்கு நிஜமானவராக இல்லையென்றால் மிக எளிதில் தவறான காரியத்தில் ஈடுபட்டு விடுவோம். முற்காலத்தில், கடவுளுடைய மக்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள். மற்றவர்களுக்கு மறைவாக அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு யெகோவா வெளிப்படுத்தி இவ்வாறு சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே.” (எசே. 8:12) இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்னவென்பதைக் கவனித்தீர்களா? தாங்கள் செய்தது யெகோவாவுக்குத் தெரியும் என்பதை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் யெகோவாவை நிஜமானவராகக் கருதவில்லை.

15. யெகோவாமீது பலமான விசுவாசம் வைப்பது நம்மை எப்படிப் பாதுகாக்கிறது?

15 இதற்கு நேர்மாறாக, யோசேப்பு எப்படி நடந்துகொண்டார் என்பதைக் கவனியுங்கள். வீட்டையும் நாட்டையும் விட்டு தொலைதூரத்தில் இருந்தபோதிலும் போத்திபாருடைய மனைவியின் ஆசைக்கு அவர் இணங்கவில்லை. ஏன்? “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று அவர் கேட்டார். (ஆதி. 39:7-9) ஆம், அவருக்கு யெகோவா நிஜமானவராக இருந்தார். நமக்கும்கூட கடவுள் நிஜமானவராக இருந்தால், தனித்திருக்கையில் அசுத்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவோ கடவுள் வெறுக்கிற எந்தவொரு காரியத்தையும் செய்யவோ மாட்டோம். பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனைப் போல நாமும் திடத்தீர்மானமாய் இருப்போம்: “என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்.”—சங். 101:2, 3.

சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்து இருதயத்தைக் காத்திடுங்கள்

16, 17. (அ) நீதிமொழிகள் புத்தகம் விவரிக்கிறபடி ‘ஒரு புத்தியீனமான வாலிபன்’ எப்படிப் பாவத்தில் சிக்கிக்கொள்கிறான்? (ஆ) பக்கம் 26-லுள்ள படம் காட்டுகிறபடி, வயது வித்தியாசமின்றி இன்றும் இதுபோன்ற நிலை ஒருவருக்கு எப்படி ஏற்படலாம்?

16 கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் கடைசி குணமான சுயக்கட்டுப்பாடு, கடவுள் கண்டனம் செய்கிறவற்றைச் செய்யாதிருக்க உதவுகிறது. இது நம் இருதயத்தைக் காத்துக்கொள்ளவும் உதவுகிறது. (நீதி. 4:23) நீதிமொழிகள் 7:6-23-ல் உள்ள சூழ்நிலையைக் கவனியுங்கள்; ‘புத்தியீனமான வாலிபன்’ ஒருவன் எப்படி ஒரு விலைமகளின் மதுர வாக்கில் மயங்கிவிடுகிறான் என்பதை அது விவரிக்கிறது. ‘அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில்’ நடந்துபோகையில் அவளுடைய மோக வலையில் அவன் சிக்கிக்கொள்கிறான். ஒருவேளை, ஆர்வக்கோளாறின் காரணமாக அவளுடைய வீட்டுப் பக்கம் அவன் போயிருக்கலாம். திடீரென தன்னை அறியாமலேயே முட்டாள்தனமான வழியில் செல்கிறான், அது ‘தன் பிராணனை வாங்கும்’ என்பதையும் உணராதிருக்கிறான்.

17 அந்த வாலிபன் இந்தப் படுகுழியை எப்படித் தவிர்த்திருக்கலாம்? “அவள் பாதையிலே மயங்கித் திரியாதே” என்ற எச்சரிப்புக்குச் செவிசாய்த்திருந்தால் தவிர்த்திருக்கலாம். (நீதி. 7:25) நாமும்கூட ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்: கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்க விரும்பினால், சபலத்தைத் தூண்டும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் டிவி ‘சானல்களை’ தேவையில்லாமல் மாற்றிக்கொண்டே இருந்தால் அல்லது இன்டர்நெட்டில் ‘கிளிக்’ செய்துகொண்டே இருந்தால் ஒரு விதத்தில் ‘புத்தியீனமான வாலிபனை’ போல முட்டாள்தனமான பாதையில் சுற்றித்திரிகிறார் என்று அர்த்தம். அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறாரோ இல்லையோ, அதனால் பாலியல் ஆசைகளைத் தூண்டும் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. போகப் போக, ஆபாசத்தைப் பார்க்கும் அசுத்தமான பழக்கமும் அவருக்கு வந்துவிடலாம்; அது அவருடைய மனசாட்சியையும் கடவுளோடுள்ள உறவையும் சின்னாபின்னமாக்கிவிடும். அவருடைய உயிரையும்கூட பறித்துவிடும்.ரோமர் 8:5-8-ஐ வாசியுங்கள்.

18. ஒரு கிறிஸ்தவர் தன் இருதயத்தைக் காத்துக்கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம், இந்த விஷயத்தில் எப்படிச் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்?

18 ஆம், கவர்ச்சிப் படங்களைப் பார்க்க நேரிட்டால், உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாம் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கலாம், இருக்கவும் வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையையே தவிர்ப்பது அதைவிட சிறந்தது, அல்லவா? (நீதி. 22:3) சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க, நமக்கு நாமே பொருத்தமான எல்லைகளை வகுத்துக்கொள்வதும் அவற்றை மீறாதிருப்பதும் அவசியம். உதாரணத்திற்கு, கம்ப்யூட்டரை எல்லாருடைய பார்வையும் படுகிற இடத்தில் வைப்பது பாதுகாப்பாய் இருக்கும். மற்றவர்கள் இருக்கிற சமயத்தில் மட்டுமே இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது அல்லது டிவி-யைப் பார்ப்பது சிறந்ததென சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ இன்டர்நெட் இணைப்பே வேண்டாமெனத் தீர்மானித்திருக்கிறார்கள். (மத்தேயு 5:27-30-ஐ வாசியுங்கள்.) நம்மையும் நம் குடும்பத்தாரையும் பாதுகாத்து, “சுத்தமான இருதயத்தோடும் நல்மனசாட்சியோடும் வெளிவேஷமற்ற விசுவாசத்தோடும்” யெகோவாவைச் சேவிக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போமாக.—1 தீ. 1:5.

19. கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பதால் விளையும் நன்மைகள் யாவை?

19 கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களால் விளையும் நன்மைகள் எத்தனை! எத்தனை!! சாந்தமும் நீடிய பொறுமையும் கைகோர்த்தால் சபையில் சமாதானம் களைகட்டும். கருணையும் நல்மனமும் இணைந்தால் குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரண்டோடும். விசுவாசமும் சுயக்கட்டுப்பாடும் இருந்தால் எப்போதும் யெகோவாவுடன் நெருக்கமாக... அவருக்கு முன் சுத்தமாக... இருக்க முடியும். அதுமட்டுமா, கலாத்தியர் 6:8 உறுதியளிக்கிறபடி, “கடவுளுடைய சக்திக்கென்று விதைக்கிறவன் கடவுளுடைய சக்தியினால் முடிவில்லா வாழ்வை அறுவடை செய்வான்.” ஆம், தமது சக்தி காட்டுகிற வழியில் நடப்போருக்கு கிறிஸ்துவின் மீட்புபலியின் அடிப்படையில் யெகோவா முடிவில்லா வாழ்வை அளிப்பார்; தமது சக்தியின் மூலமே அதை அளிப்பார்.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

• சபையில் சமாதானம் களைகட்ட சாந்தமும் நீடிய பொறுமையும் எவ்வாறு உதவுகின்றன?

• குடும்பத்தில் கருணையோடும் நல்மனதோடும் நடந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்?

• ஒரு கிறிஸ்தவர் தன் இருதயத்தைக் காத்துக்கொள்ள விசுவாசமும் சுயக்கட்டுப்பாடும் எப்படி உதவுகின்றன?

[கேள்விகள்]

[பக்கம் 24-ன் படம்]

வார்த்தை முற்றிப் போகாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

[பக்கம் 25-ன் படம்]

கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களைப் பற்றி ஆராய்வது உங்கள் குடும்பத்திற்குப் பயனளிக்கும்

[பக்கம் 26-ன் படம்]

விசுவாசத்துடனும் சுயக்கட்டுப்பாட்டுடனும் இருப்பதால் என்ன ஆபத்துகளைத் தவிர்க்கிறோம்?