Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

3. நோய்

3. நோய்

3. நோய்

“கொள்ளைநோய்களும் உண்டாகும்.”​—லூக்கா 21:11.

● போன்ஸாலி என்பவர் உள்நாட்டுப் போரினால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்க நாட்டில் பொது சுகாதார அதிகாரியாக வேலை செய்துவந்தார். தன்னுடைய ஊரில், மார்பர்க் வைரஸால் * பாதிக்கப்பட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு அவர் தன்னால் முடிந்தளவு சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தார். சுரங்கத் தொழிலாளர்கள் நிறைய பேரின் உயிரை அந்த வைரஸ் பறித்தது. அதனால், ஒரு பெரிய நகரத்தில் இருந்த அதிகாரிகளிடம் அவர் உதவி கேட்டார். ஆனால் அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. நான்கு மாதம் கழித்து ஒருவழியாக அதிகாரிகள் உதவிக்கு வந்தார்கள். ஆனால், போன்ஸாலி உயிரோடு இல்லை. அவர் சிகிச்சை கொடுத்த சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து அவருக்கு அந்தத் தொற்று வந்துவிட்டது.

உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? நிமோனியா போன்ற, சுவாசத் தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட நோய்கள், எச்ஐவி/எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகியவை உயிரைப் பறிக்கிற ரொம்ப மோசமான நோய்களில் சில. 2004-ல் மட்டுமே, இந்த ஐந்து வகையான நோய்களால் ஏறக்குறைய ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு மூன்று நொடிக்கும் ஒருவர் என்ற கணக்கில் இறந்திருக்கிறார்கள்.

பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? மக்கள்தொகை அதிகமாகிக்கொண்டே போகும்போது, நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இன்னும் நிறைய பேருக்கு நோய் தொற்ற வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆட்சேபணை நியாயமானதா? உலக மக்கள்தொகை அதிகமாகியிருப்பது உண்மைதான். அதேசமயத்தில், நோய்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுக்கு சிகிச்சை கொடுப்பதற்கும் மனிதர்களுக்கு இருக்கிற திறமையும் அதிகமாகியிருக்கிறது. அப்படியென்றால், நோய்களும் அவற்றால் மனிதர்களுக்கு வருகிற பாதிப்புகளும் குறைந்திருக்க வேண்டும் தானே? ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறபடி மக்கள் கொள்ளைநோய்களால் பாதிக்கப்படுகிறார்களா?

லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கிற நிலநடுக்கம், பஞ்சம், நோய்கள் இவை எதுவுமே மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், சக மனிதர்களால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்படுகிறார்கள், அதுவும் தங்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 3 மார்பர்க் இரத்தக் கசிவு காய்ச்சல், எபோலா நோயோடு சம்பந்தப்பட்ட ஒரு வைரஸால் ஏற்படுகிறது.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“ஒரு சிங்கமோ வேறு ஏதாவது மிருகமோ ஒருவரை அடித்து சாகடிப்பது எந்தளவுக்குக் கொடூரமானதோ அந்தளவுக்கு நமக்குள்ளே இருக்கிற நோய் நம்மைச் சாகடிப்பதும் கொடூரமானது.”​—கொள்ளைநோயியல் நிபுணர், மைக்கல் ஆஸ்டர்ஹோம்.

[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]

© William Daniels/Panos Pictures