Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏழைகளுக்கு ஓர் நற்செய்தி!!

ஏழைகளுக்கு ஓர் நற்செய்தி!!

ஏழைகளுக்கு ஓர் நற்செய்தி!!

“ஏழையானவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை” என்று கடவுளுடைய புத்தகமான பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (சங்கீதம் 9:18, திருத்திய மொழிபெயர்ப்பு) அதோடு, நம்மைப் படைத்த கடவுளைப் பற்றியும் இப்படிச் சொல்கிறது: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” (சங்கீதம் 145:16) கடவுளுடைய புத்தகத்திலுள்ள நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும், அதில் சந்தேகமே இல்லை! சர்வசக்தி படைத்த நம் கடவுள் வறுமையை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப் போகிறார். ஆனால், வறுமை ஒழிய என்ன தேவை?

ஏழை நாடுகளுக்கு “இரக்க மனமுள்ள ஒரு சர்வாதிகாரிதான்” தேவை என்று ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர் சொன்னார். அதாவது, வறுமையை ஒழிக்க வலிமைமிக்க ஒரு சக்கரவர்த்தி வேண்டும், அதேசமயம் அதைச் செய்வதற்கான கருணை உள்ளமும் அவருக்கு இருக்க வேண்டும் என்றே அவர் சொல்ல வருகிறார். அவற்றோடு சேர்த்து, அவருக்கு இந்த உலகத்தையே ஆளும் அதிகாரமும் இருக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கலாம்; ஏனென்றால், உலகிலுள்ள வளங்களை எல்லாம் எல்லாரும் சரிசமமாக அனுபவிக்க அவர் வழிசெய்வார். அதுமட்டுமல்லாமல், வறுமைக்கான ஆணிவேரை, அதாவது மனிதர்களின் பிறவி குணமான சுயநலத்தை, வேரோடு பிடுங்கும் சக்தியும் அந்த ராஜாவுக்கு இருக்க வேண்டும். இப்படிச் சர்வ தகுதிகளும் பொருந்திய ஒரு ராஜா எங்கே கிடைப்பார்?

ஏழைகளுக்கு நற்செய்தி சொல்ல இயேசுவைக் கடவுள் அனுப்பினார். ஒரு கூட்டத்தின்முன் பேச வாய்ப்பு கிடைத்தபோது கடவுள் தமக்குக் கொடுத்த வேலையைப் பற்றி இயேசுவே இப்படிச் சொன்னார்: “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்.”—லூக்கா 4:16-18.

என்ன நற்செய்தி?

இயேசுவைக் கடவுள் ராஜாவாக நியமித்திருக்கிறார். இது உண்மையிலேயே சந்தோஷமான செய்தி, அல்லவா? வறுமையை ஒழிக்க அவரால் மட்டும்தான் முடியும். ஏனென்றால், (1) முழு மனிதகுலத்தையும் அவர் ஆளப்போகிறார், அதற்கான வல்லமையும் அவருக்கு இருக்கிறது; (2) ஏழைகளை அவர் கனிவாக நடத்துகிறார், கனிவாக இருக்க தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்; (3) வறுமைக்கான காரணத்தை, ஆம் மனிதர்களுடன் ஒட்டிப்பிறந்த சுயநலத்தை, முற்றிலும் நீக்கப்போகிறார். நற்செய்தியின் இந்த மூன்று அம்சங்களை நாம் இப்போது சிந்திப்போம்.

1. முழு பூமியின்மீது இயேசுவுக்கு இருக்கும் அதிகாரம் ‘சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்கு ராஜரீகம் கொடுக்கப்பட்டது’ என்று இயேசுவைக் குறித்து பைபிள் சொல்கிறது. (தானியேல் 7:14) முழு பூமியையும் ஒரே அரசாங்கம் ஆட்சி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! பூமியில் உள்ள வளங்களுக்காக யாரும் அடித்துக்கொள்ள மாட்டார்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும், அதுவும் சரிசமமாகக் கிடைக்கும். முழு உலகத்தையும் ஆட்சிசெய்யத் தமக்கு அதிகாரம் இருப்பதாக இயேசுவே சொன்னார். “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.—மத்தேயு 28:18.

2. ஏழைகள்மீது இயேசுவுக்கு இருக்கும் இரக்கம் பூமியில் ஊழியம் செய்த காலமெல்லாம் ஏழைகள்மீது இயேசு இரக்கம் காட்டினார். உதாரணமாக, ஒரு பெண் 12 வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டாள். அதனால் அவளுக்குக் கடும் இரத்தசோகை ஏற்பட்டது. சிகிச்சைக்காகச் சொத்துபத்துகளையெல்லாம் செலவு செய்தும் அவளுக்குப் பலன் கிடைக்கவில்லை. இயேசு தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பி அவர் அங்கியைத் தொட்டாள். கடவுள் மோசேயிடம் கொடுத்த கட்டளையின்படி, அவள் யாரையெல்லாம் தொடுகிறாளோ அவர்கள் எல்லாரும் அசுத்தமாவார்கள். அதனால் அவள் இயேசுவைத் தொட்டது தவறுதான். இருந்தாலும், இயேசு அவளிடம் கனிவாக நடந்துகொண்டார். “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ. உன்னைப் பாடுபடுத்திய நோயிலிருந்து விடுபட்டு நலமாயிரு” என்றார்.—மாற்கு 5:25-34.

இயேசுவின் போதனைகளுக்கு மனிதர்களுடைய மனதையே மாற்றும் அளவுக்குச் சக்தி இருக்கிறது. அதனால், அவர்களும் இயேசுவைப் போலவே இரக்கத்தோடு நடந்துகொள்கிறார்கள். இதற்கு ஒரு சம்பவத்தை நாம் பார்ப்போம். கடவுளைப் பிரியப்படுத்த என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்ள ஒரு மனிதன் விரும்பினான். சக மனிதரை நாம் நேசிக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் அவன் இயேசுவிடம், “உண்மையில், நான் அன்புகாட்ட வேண்டிய சக மனிதர் யார்?” என்று கேட்டான்.

இயேசு அவனுக்கு ‘நல்ல சமாரியன்’ கதையைச் சொன்னார்: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தான்; வழியில் திருடர்கள் அவனிடம் இருந்ததைக் கொள்ளையடித்து “குற்றுயிராக” விட்டுச் சென்றார்கள். அந்த வழியில் வந்த ஆலயகுரு ஒருவர் அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் மறுபக்கமாக விலகிப் போனார். அடுத்து வந்த லேவியனும் அப்படியே போனார். “ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அங்கு வந்து அவனைக் கண்டபோது மனதுருகினார்.” அவனுடைய காயங்களைச் சுத்தம் செய்தார், ஒரு சத்திரத்திற்குக் கொண்டு போனார், பின்பு அங்கிருந்த சத்திரக்காரனிடம் பணம் கொடுத்து அவனைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். இதைச் சொல்லிவிட்டு இயேசு, “அப்படியென்றால், . . . கொள்ளையரின் கையிலே மாட்டிக்கொண்டவனிடம் அன்பு காட்டி சக மனிதராக நடந்துகொண்டவர் யாரென்று நினைக்கிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதன், “அவனிடம் இரக்கத்துடன் நடந்துகொண்டவரே” என்று பதில் அளித்தான். அப்போது இயேசு, “நீயும் போய் அப்படியே நடந்துகொள்” என்றார்.—லூக்கா 10:25-37.

யெகோவாவின் சாட்சிகளாக ஆகிறவர்கள் இயேசுவின் இந்தப் போதனைகளைப் படித்து தங்களையே மாற்றிக்கொள்கிறார்கள். கஷ்டப்படுகிறவர்கள்மீது இரக்கம் காட்ட முயற்சி செய்கிறார்கள். லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளரின் அனுபவத்தைக் கவனியுங்கள்; 1960-களின் மத்திபத்தில் போட்மா கடுங்காவல் முகாமில் அவர் வேலை செய்தபோது நடந்த ஒரு சம்பவத்தை, சோவியத் சிறையில் பெண்கள் என்ற தன் புத்தகத்தில் எழுதினார். அங்கே அவர் கடுமையான நோயினால் அவதிப்பட்டபோது, “நான் குணமாகும்வரை [சாட்சிகள்தான்] என் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டார்கள். அவர்களைப் போல வேறு யாருமே இந்தளவுக்கு என்னைக் கவனித்திருக்க முடியாது. . . . மதம், நாடு என்ற பேதம் இல்லாமல் எல்லாருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்கிறார்கள். அதைத் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள்” என்றார்.

ஈக்வடாரில் உள்ள ஆங்கோன் என்ற ஊரில் இருக்கும் சில யெகோவாவின் சாட்சிகள் பொருளாதார வீழ்ச்சியால் வேலை இழந்தார்கள். வருமானமில்லாமல் தவித்த அவர்களுக்குப் பண உதவி செய்ய மற்ற சாட்சிகள் முன்வந்தார்கள். இரவெல்லாம் மீன்பிடித்துவிட்டு வரும் மீனவர்களுக்கு விற்பதற்காக உணவைச் சமைத்துக் கொடுத்தார்கள் (படத்தைப் பாருங்கள்). சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சபையிலிருந்த எல்லாரும் அதில் பங்குகொண்டார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் அதிகாலை ஒருமணிக்கே வேலையைத் தொடங்கிவிடுவார்கள்; அப்போதுதான் மீன்பிடித்துவிட்டு விடியற்காலை நான்கு மணிக்கு வரும் மீனவர்களுக்கு உணவு தயாராக இருக்கும். இதில் கிடைத்த பணம் ஒவ்வொருவருடைய தேவைக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்கப்பட்டது.

இதுபோன்ற அனுபவங்கள் எதைக் காட்டுகின்றன? இயேசுவின் முன்மாதிரிக்கும் போதனைகளுக்கும் மக்களுடைய மனதையே மாற்றும் சக்தி இருக்கிறது. இதனால், கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவ அவர்கள் தூண்டப்படுகிறார்கள்.

3. மனித இயல்பை மாற்ற இயேசுவுக்கு இருக்கும் சக்தி சுயநலமாய் நடக்கிற மனப்பான்மை மனிதர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது; இது உலகறிந்த உண்மை. இதைத்தான் பாவம் என்று பைபிள் சொல்கிறது. அப்போஸ்தலன் பவுலும் இதைப் பற்றி விவரிக்கிறார்: “இந்தச் சட்டத்தை என்னிடம் காண்கிறேன்: நன்மை செய்ய விரும்புகிற எனக்குள் தீமை இருக்கிறது. . . . மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்? நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” (ரோமர் 7:21-25) பவுல் என்ன சொல்ல வருகிறார்? இயேசுவின் மூலம் கடவுள் தம்முடைய உண்மை பக்தர்களைப் பாவ இயல்பிலிருந்து விடுவிக்கப்போகிறார், அதாவது வறுமையின் ஆணிவேரான சுயநலத்தைப் பிடுங்கப்போகிறார். இது எப்படி நடக்கும்?

இயேசு ஞானஸ்நானம் பெற்று சில வாரங்கள் கழித்து “இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” என்று அவரை யோவான் ஸ்நானகர் அறிமுகப்படுத்தினார். (யோவான் 1:29) வழிவழியாக வந்த பாவத்திலிருந்து சீக்கிரத்தில் மக்கள் விடுபடுவார்கள். அப்போது இந்த உலகத்தில் ஒருவர்கூட சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள். (ஏசாயா 11:9) ஏனென்றால், இயேசுதான் வறுமையின் ஆணிவேரையே பிடுங்கியிருப்பாரே!

ஆம், வறுமை என்ற வார்த்தையே வழக்கில் இல்லாமல் போய்விடும்! இதைக் கேட்கும்போதே மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது!! “ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும், அத்திமரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்; அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை” என பைபிள் சொல்கிறது. (மீகா 4:4, பொது மொழிபெயர்ப்பு) கவிதை மணம் வீசும் இந்த வார்த்தைகள் என்ன சொல்கின்றன? மனதிற்குப் பிடித்த வேலை, கவலையில்லா வாழ்க்கை, வறுமையின் வாசமில்லா உலகம்... இதெல்லாம் நம் கடவுள் யெகோவாவுக்குப் புகழ்மாலை சூட்டும்!!! (w11-E 06/01)