Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

60 வயதான ஒரு பெண்மணி உருவ வழிபாட்டை விட்டுவிட என்ன காரணம்? ஒரு ஷின்டோ பாதிரி தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு யெகோவாவின் சாட்சியாவதற்கு என்ன காரணம்? குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கு இருந்த கைவிடப்பட்ட உணர்வை எப்படிச் சமாளித்தார்? இவர்கள் எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

”இனியும் நான் சிலைகளுக்கு அடிமை இல்லை.“​—அபா டன்சோ

பிறந்த வருஷம்: 1938

பிறந்த நாடு: பெனின்

என்னைப் பற்றி: உருவ வழிபாடு செய்தேன்

என் கடந்தகால வாழ்க்கை: ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருக்கிற சுவிங்கிரா என்ற கிராமத்தில்தான் நான் வளர்ந்தேன். இந்தக் கிராமத்தில் இருக்கிறவர்கள் ஆடு, மாடு, பன்றி, பறவைகள் என எல்லாவற்றையும் வளர்ப்பார்கள். இங்கு ரோடு வசதியெல்லாம் இல்லை. அதனால், எங்கேயாவது போக வேண்டுமென்றால் படகில்தான் போவார்கள். இங்கு இருக்கிற நிறையப் பேர் அவர்களுடைய வீட்டை மரம், புல் போன்றவற்றை வைத்துதான் கட்டுவார்கள். சிலர், செங்கல் வீடுகளையும் கட்டுவார்கள். இங்கிருக்கிற மக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தாலும் நகரத்தில் நடப்பதுபோல் குற்றச்செயல்கள் இங்கு நடப்பதில்லை.

நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது, என்னையும் என் அக்காவையும் ஒரு கன்னிகாஸ்திரீ மடத்தில் என்னுடைய அப்பா சேர்த்துவிட்டார். அங்குதான் நிறைய கலாச்சார நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொண்டோம். நான் வளரவளர யோருபா கலாச்சாரத்தில் இருக்கும் துடுவா (ஒடுடுவா) என்ற கடவுளை வணங்க ஆரம்பித்தேன். அந்தக் கடவுளுக்காக ஒரு கோயிலையும் கட்டினேன். கருணைக்கிழங்குகளையும், பாமாயிலையும், நத்தைகளையும், கோழிகளையும், புறாக்களையும் இன்னும் நிறைய மிருகங்களையும் நான் தினமும் அந்தக் கடவுளுக்காகப் பலி கொடுப்பேன். பலசமயங்களில், இந்த மாதிரி பலி கொடுப்பதற்காக என்னிடம் இருந்த எல்லா காசுகளையும் நான் செலவு செய்ய வேண்டியிருந்தது.

பைபிள் எப்படி என்னுடைய வாழ்க்கையை மாற்றியது: நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, யெகோவாதான் உண்மையான கடவுள் என்று தெரிந்துகொண்டேன். சிலைகளை வணங்குவதை யெகோவா வெறுக்கிறார் என்று கற்றுக்கொண்டேன். (யாத்திராகமம் 20:4, 5; 1 கொரிந்தியர் 10:14) அதனால், என்னிடம் இருந்த எல்லா சிலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டேன், உருவ வழிபாடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் நான் விட்டுவிட்டேன். குறி கேட்பதையும் ஆவியுலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்வதையும் நான் நிறுத்திவிட்டேன்.

என்னுடைய 60 வயதில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்வது எனக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. என்னுடைய நண்பர்கள், சொந்தக்காரர்கள், என்னை சுற்றியிருந்தவர்கள் என எல்லாரும் என்னை எதிர்த்தார்கள். என்னைக் கேலியும் செய்தார்கள். ஆனால், ‘எப்போதும் சரியானத செய்ய உங்க சக்திய தாங்க’ என்று யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். நீதிமொழிகள் 18:​10-ல் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. ”யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை. நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்” என்று அது சொல்கிறது.

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போனதும் எனக்கு உதவி செய்தது. அவர்கள் என்மேல் காட்டிய அன்பைப் பார்த்து பூரித்துப் போய்விட்டேன். அங்கு இருந்தவர்கள் எல்லாரும் பைபிள் சொல்வது போல் வாழ முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் உண்மையான மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை அங்கு பார்த்த விஷயங்களை வைத்து தெரிந்துகொண்டேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்: பைபிளில் சொல்லியிருப்பது போல் நடந்துகொண்டபோது என் பிள்ளைகளோடு என்னால் இன்னும் சந்தோஷமாக இருக்க முடிந்தது. என்னுடைய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. எந்த நன்மையும் தராத சிலைகளுக்குப் படைக்க வேண்டும் என்பதற்காக முன்பு நிறைய காசுகளை நான் செலவு செய்வேன். ஆனால், இப்போது நான் யெகோவாவை வணங்குகிறேன். அவர்தான் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வைக் கொடுக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:​3, 4) இனியும் நான் சிலைகளுக்கு அடிமை இல்லை என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நான் யெகோவாவுக்கு அடிமையாக இருக்கிறேன். அவரிடம் இருந்துதான் எனக்கு பாதுகாப்பும் உண்மையான சந்தோஷமும் கிடைக்கிறது.

”சின்ன வயதிலிருந்தே நான் கடவுளைத் தேடிக்கொண்டு இருந்தேன்.“​—சின்ஜி சாதோ

பிறந்த வருஷம்: 1951

பிறந்த இடம்: ஜப்பான்

என்னைப் பற்றி: ஷின்டோ பாதிரி

என் கடந்தகால வாழ்க்கை: நான் புக்குவோக்கா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்தில் வளர்ந்தேன். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பக்தி ஜாஸ்தி. அதனால், ஷின்டோ கடவுள்களைத்தான் வணங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே சொல்லிக்கொடுத்தார்கள். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சின்ன வயதில் அடிக்கடி யோசிப்பேன். அதோடு, கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் ஆசிரியர் எங்களிடம், வளர்ந்த பிறகு என்னவாக ஆக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். கூட படித்த பிள்ளைகளுக்கெல்லாம் நிறைய கனவுகள் இருந்தது. விஞ்ஞானி ஆக வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், கடவுளை வணங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அதுதான் என்னுடைய ஆசை. இதை நான் சொன்னபோது எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மத போதகர்களுக்கான பள்ளியில் நான் சேர்ந்தேன். நான் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷின்டோ பாதிரி ஒருவர் அவருடைய ஓய்வு நேரத்தில் கருப்பு நிற கவர் போட்டிருந்த ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் என்னிடம், ”சாதோ, இது என்ன புத்தகம்னு தெரியுமா?“ என்று கேட்டார். அந்தக் கவரை பார்க்கும்போதே அது பைபிள் என்று எனக்குத் தெரிந்தது. அப்போது அந்தப் பாதிரி, ”யாரெல்லாம் ஷின்டோ பாதிரியா ஆகணும்னு நினைக்கிறாங்களோ அவங்க எல்லாரும் இந்த புத்தகத்த படிக்கணும்“ என்று சொன்னார்.

நான் உடனே போய் ஒரு பைபிளை வாங்கினேன். என்னுடைய புத்தகங்களை வைக்கும் இடத்தில் ஒரு நல்ல இடமாக பார்த்து பைபிளை அங்கு வைத்தேன். அதை ரொம்ப பத்திரமாகப் பார்த்துக்கொண்டேன். ஆனால், அதைப் படிப்பதற்கு எனக்கு நேரமே கிடைக்கவில்லை. பள்ளிக்குப் போய் வருவதால் நான் ரொம்ப பிஸியாக இருந்தேன். ஆனால், என்னுடைய பள்ளி படிப்பு முடிந்த பிறகு நான் ஒரு புனித ஸ்தலத்தில் ஷின்டோ பாதிரியாக வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் சின்ன வயதில் கண்ட கனவு நனவாகிவிட்டது என்று நினைத்தேன்.

நான் ஷின்டோ பாதிரியாக வேலை செய்தபோது அங்கிருந்த பாதிரிகள் எல்லாம் மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லை. நிறையப் பேரிடம் விசுவாசமே இல்லை. அங்கிருந்த மூத்த பாதிரிகளில் ஒருவர் என்னிடம், ”நீ இந்த இடத்துலயே இருக்கணும்னா தத்துவங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள பத்தி மட்டும்தான் பேசணும், விசுவாசத்த பத்தியெலாம் பேசவே கூடாது“ என்று சொன்னார்.

ஷின்டோ மதத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டது ஒன்று, ஆனால் அங்கு நடப்பது ஒன்று என்று புரிந்துகொண்டேன். நான் அங்கு வேலை செய்துகொண்டிருந்த அதேசமயத்தில், மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் ஆரம்பித்தேன். நான் எவ்வளவு அதிகமாக மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தேனோ அவ்வளவு அதிகமாக சோர்ந்துபோய்விட்டேன். ஏனென்றால், நான் ஆராய்ச்சி செய்த எந்த மதமும் உண்மையான மதம் இல்லை என்று எனக்குத் தோன்றியது.

பைபிள் எப்படி என்னுடைய வாழ்க்கையை மாற்றியது: 1988-ல் புத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் பைபிளைப் படிக்கச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். சில வருஷங்களுக்கு முன்பு ஷின்டோ பாதிரியும் இதே விஷயத்தைத்தான் சொன்னார். அதனால், நான் பைபிளைப் படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, அது எனக்கு ரொம்ப பிடித்தது. அதிலேயே மூழ்கிவிட்டேன் என்றுகூட சொல்லலாம். சிலசமயங்களில், நான் ராத்திரி முழுவதும் பைபிளைப் படித்திருக்கிறேன்; காலை விடியும்வரை படித்திருக்கிறேன்.

நான் பைபிளைப் படிக்க படிக்க பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால், மத்தேயு 6:​9-​13-ல் இருக்கும் ஜெபத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். ஷின்டோ ஸ்தலத்தில் வேலை செய்யும் நேரத்திலும் நான் இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை இந்த ஜெபத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

பிறகு எனக்குக் கல்யாணம் ஆனது. பைபிளைப் படிக்க படிக்க எனக்கு நிறைய கேள்விகள் வர ஆரம்பித்தன. யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், என் மனைவி ஒருகாலத்தில் அவர்களோடு பைபிளைப் படித்திருந்தாள். அதனால், நான் யெகோவாவின் சாட்சிகளைத் தேடினேன். சாட்சியாக இருந்த பெண்ணைச் சந்தித்து, அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டேன். ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து அவர் பதில் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால், ஒரு சகோதரருடன் சேர்ந்து பைபிளைப் படிக்க அந்தப் பெண் ஏற்பாடு செய்தார்.

பிறகு, நான் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். அங்கு போன பின்புதான் அங்கிருந்த சில சகோதரர்களிடம் நான் ஏற்கெனவே கடுமையாக நடந்திருக்கிறேன் என்று தெரியவந்தது. ஆனாலும், அவர்கள் என்னை அன்பாக வரவேற்றார்கள். எனக்கு வாழ்த்து சொன்னார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கணவர்கள் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்று அந்தக் கூட்டங்களிலிருந்து கற்றுக்கொண்டேன். நான் ஒரு பாதிரியாக இருந்தபோது என் வேலையிலேயே மூழ்கியிருப்பேன். அதனால், என் மனைவியோடும் இரண்டு பிள்ளைகளோடும் நான் நேரம் செலவு செய்யவே மாட்டேன். புனித ஸ்தலத்துக்கு வரும் நிறைய பேர் சொல்வதைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு தடவைகூட என் மனைவி பேசுவதை நான் கேட்டதே இல்லை.

பைபிள் படிப்பு படிக்க படிக்க நான் கற்றுக்கொண்ட நிறைய விஷயங்கள் யெகோவாவிடம் நெருங்கிப்போக எனக்கு உதவி செய்தது. முக்கியமாக, ரோமர் 10:​13 என் மனதைத் தொட்டது. அது இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.” சின்ன வயதிலிருந்தே நான் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தேன், இப்போது நான் அவரைக் கண்டுபிடித்துவிட்டேன்!

ஷின்டோ ஸ்தலத்தில் வேலை பார்க்க எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஷின்டோ மதத்தைவிட்டு விலகினால் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று ரொம்ப கவலைப்பட்டேன். ஆனால், நான் உண்மையான கடவுளைக் கண்டுபிடித்துவிட்டால் இந்த மதத்தைவிட்டு போக வேண்டும் என்றுதான் ஆரம்பத்திலேயே முடிவு பண்ணி இருந்தேன். அதனால், 1989-ல் என் மனசாட்சி சொல்வதுபோல் நடக்க முடிவு செய்தேன். அந்த மதத்தைவிட்டு வெளியே வந்தேன்; யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள முடிவு எடுத்தேன்.

அந்த மதத்தைவிட்டு வருவது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை. என்னை அங்கேயே இருக்க வைக்க பெரிய பெரிய பாதிரிகள் ரொம்ப முயற்சி செய்தார்கள். நான் ஷின்டோ மதத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன் என்று என் அப்பா அம்மாவிடம் சொல்வதுதான் இதைவிட கஷ்டமாக இருந்தது. எப்படியாவது இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்களைப் பார்க்கப் போனேன். போகும் வழியெல்லாம் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. என் கால்களில் பலமே இல்லாதது போல் உணர்ந்தேன். போகும் வழியில் நிறைய தடவை யெகோவாவிடம் சக்திக்காக ஜெபம் செய்தேன்.

என்னுடைய அப்பா அம்மா வீட்டுக்குப் போனதும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே பயமாக இருந்தது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, நன்றாக ஜெபம் செய்துவிட்டு என்னுடைய அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னேன். நான் உண்மையான கடவுளைக் கண்டுபிடித்துவிட்டேன், அவருக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறேன். அதனால், நான் ஷின்டோ மதத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன் என்று அவரிடம் சொன்னேன். என்னுடைய அப்பாவிற்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அதை நினைத்து கவலைப்பட்டார். என்னுடைய மற்ற சொந்தக்காரர்களும் வீட்டுக்கு வந்து என்னுடைய மனதை மாற்ற நிறைய முயற்சி செய்தார்கள். என் குடும்பத்தில் இருக்கும் யாரையும் நான் கஷ்டப்படுத்த நினைக்கவில்லை. அதேசமயத்தில், யெகோவாவை வணங்குவதுதான் சரியான விஷயம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதனால், போகப்போக என் குடும்பத்தில் இருப்பவர்களும் நான் எடுத்த தீர்மானத்தை மதிக்க ஆரம்பித்தார்கள்.

ஷின்டோ மதத்தைவிட்டு வெளியே வருவது கஷ்டமாக இருந்தது. அதைவிட மனதளவில் வெளியே வருவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. பல வருஷங்களாக நான் ஒரு பாதிரியாக வேலை செய்ததால் அது எனக்குள் ஊறிப்போயிருந்தது. அந்த விஷயங்களை மறப்பது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் என்ன செய்தாலும் இதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய ஞாபகம் எனக்கு வந்துகொண்டே இருந்தது.

இதையெல்லாம் விட்டு வெளியே வர இரண்டு விஷயங்கள் எனக்கு ரொம்ப உதவியது. முதல் விஷயம், நான் இதற்கு முன்பிருந்த மதத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று நன்றாக தேடிப் பார்த்தேன். அப்படியிருந்த புத்தகங்கள், படங்கள், விலை மதிப்புள்ள பொருள்கள் என எல்லாவற்றையும் எரித்துவிட்டேன். இரண்டாவது விஷயம், யெகோவாவின் சாட்சிகளோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அவர்கள் செய்த உதவியும், அவர்களோடு இருந்த நட்பும்தான் இதையெல்லாம் சமாளிக்க எனக்கு உதவி செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பழைய வாழ்க்கையைப் பற்றிய ஞாபகம் மறைய ஆரம்பித்தது.

எனக்கு கிடைத்த நன்மைகள்: முன்பெல்லாம் நான் என் மனைவியோடும் பிள்ளைகளோடும் நேரம் செலவு செய்யவே மாட்டேன். அதனால், அவர்கள் தனியாக இருப்பது போல் உணர்ந்தார்கள். ஆனால், கணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு, நான் அவர்களோடு நிறைய நேரம் செலவு செய்ய ஆரம்பித்தேன். அதனால் நாங்கள் இப்போது ரொம்ப நெருக்கமாக இருப்பது போல் உணர்கிறோம். என்னுடைய மனைவியும் இப்போது என்னோடு சேர்ந்து யெகோவாவை வணங்குகிறாள். என் மகன், மகள், மருமகன் என எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வணங்குகிறோம். நாங்கள் உண்மையான மதத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்.

கடவுளை வணங்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் சின்ன வயதில் என்னுடைய கனவாக இருந்தது. இப்போது அது நனவாகிவிட்டது. உண்மை கடவுளையே கண்டுபிடித்துவிட்டேன். நான் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

“என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்த மாதிரி இருந்தது.”​—லினட் ஹொக்டிங்

பிறந்த வருஷம்: 1958

பிறந்த நாடு: தென் ஆப்பிரிக்கா

என்னைப் பற்றி: கைவிடப்பட்ட உணர்வு

என் கடந்த கால வாழ்க்கை: நான் ஜர்மிஸ்டன் என்ற இடத்தில் பிறந்தேன். அங்கே அவ்வளவாக குற்றச்செயல்கள் நடக்காது. அது பண வசதி இல்லாத ஒரு நகரமாக இருந்தது. என்னை சரியாகப் பார்த்துக்கொள்ள முடியாது என்று என் அப்பா-அம்மா நினைத்ததால் என்னைத் தத்துக்கொடுக்க முடிவு செய்தார்கள். 14 நாள் குழந்தையாக இருக்கும்போது ஒரு அன்பான தம்பதி என்னைத் தத்தெடுத்தார்கள். அன்றிருந்து அவர்கள்தான் என்னுடைய அப்பா-அம்மா என்று நினைத்தேன். ஆனால், நடந்ததைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, நான் யாருக்குமே சொந்தம் இல்லை என்ற உணர்வு என்னை ரொம்ப வாட்டியது. என்னைத் தத்தெடுத்த அப்பா-அம்மா என்னை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தேன்.

எனக்கு 16 வயது இருந்தபோது, பாருக்குப் போய் என் நண்பர்களோடு சேர்ந்து குடிக்க ஆரம்பித்தேன். அவர்களோடு சேர்ந்து பாடல்கள் கேட்டுக்கொண்டும் டான்ஸ் ஆடிக்கொண்டும் இருப்பேன். என்னுடைய 17 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். சிகரெட் விளம்பரங்களில் வருகிறவர்களைப் போல் நானும் ஒல்லியாக, அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய 19 வயதில் ஜோஹன்னஸ்பெர்க்கில் வேலைக்குச் சென்றேன். சீக்கிரத்திலேயே தவறான ஆட்களோடு சேர ஆரம்பித்தேன். நிறைய கெட்ட வார்த்தைகளைப் பேசினேன். சிகரெட் பழக்கத்துக்கும் அடிமையானேன். வாரயிறுதி நாட்களில் வெறித்தனமாகக் குடிக்கவும் ஆரம்பித்தேன்.

என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தினமும் ஃபுட்பால் விளையாடினேன். மற்ற விளையாட்டுகளையும் விளையாடினேன். அதேசமயத்தில், என்னுடைய வேலையையும் ரொம்ப கவனமாகச் செய்தேன். அதனால், வேலை செய்த இடத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. நான் ரொம்ப வசதியாக வாழ்ந்தேன். வாழ்க்கையில் நான் சாதித்துவிட்டதாக நிறையப் பேர் நினைத்தார்கள். ஆனால், உண்மையில் நான் சந்தோஷமாகவே இல்லை. நிறைய ஏமாற்றங்கள்தான் இருந்தன. எதையோ இழந்தது போல் உணர்ந்தேன்.

பைபிள் எப்படி என்னுடைய வாழ்க்கையை மாற்றியது: நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது யெகோவா ஒரு அன்பான கடவுள் என்பதைப் புரிந்துகொண்டேன். அவருடைய வார்த்தையான பைபிளை நமக்குக் கொடுத்திருப்பதன் மூலம் அந்த அன்பை காட்டியிருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். நாம் எப்படி வாழ வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகக் கடவுள் நமக்குக் கொடுத்த கடிதத்தைப் போன்றதுதான் பைபிள்! (ஏசாயா 48:17, 18) கடவுள் சொல்வதுபோல் வாழ்ந்தால் நமக்கு சந்தோஷம் கிடைக்கும். என்னுடைய வாழ்க்கையிலும் சந்தோஷம் வேண்டுமென்றால், நானும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும் என நினைத்தேன். நீதிமொழிகள் 13:20 இப்படிச் சொல்கிறது: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.” இந்த நியமம் என் மனதைத் தொட்டது. அதனால், என்னுடைய பழைய நண்பர்களை விட்டுவிட்டு யெகோவாவின் சாட்சிகளுக்குள் புதிய நண்பர்களைத் தேடினேன்.

அடுத்ததாக, எனக்கு இருந்த பெரிய சவால் புகைபிடிப்பதை நிறுத்துவதுதான். அதற்கு நான் ரொம்ப அடிமையாகியிருந்தேன். அந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தபோது எனக்கு இன்னொரு பிரச்சினை வந்தது. அதை நிறுத்தியதால் என்னுடைய உடல் எடை சுமார் 13 கிலோ அதிகமாகிவிட்டது. அதனால், என்னுடைய சுயமரியாதை போய்விட்டதுபோல் நினைத்தேன். உடல் எடையைக் குறைப்பதற்கு 10 வருஷங்கள் ஆனது. புகைபிடிப்பதை நிறுத்துவதுதான் சரியான விஷயம் என்பது எனக்குத் தெரியும். அதனால், யெகோவாவிடம் தினமும் ஜெபம் செய்தேன். இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கு யெகோவாவும் எனக்கு உதவி செய்தார்.

எனக்கு கிடைத்த நன்மைகள்: இப்போது நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். ரொம்ப திருப்தியாகவும் இருக்கிறேன். முன்பெல்லாம் வேலை... பணம்... அந்தஸ்து... என இவற்றுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால், சந்தோஷமே கிடைக்கவில்லை. இப்போது, மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது. என்னோடும் என் கணவரோடும் சேர்ந்து என்கூட வேலை செய்தவர்களில் மூன்று பேர் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். சீக்கிரத்தில் இந்தப் பூமியில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று என்னைத் தத்தெடுத்த அப்பா அம்மாவிடம் அவர்கள் இறப்பதற்கு முன்பே சொல்லியிருந்தேன்.

யெகோவாவிடம் நெருக்கமான நட்பு வைத்திருப்பதால், கைவிடப்பட்டது போன்ற உணர்வு இப்போது எனக்கு இல்லை. யெகோவா எனக்கு பெரிய குடும்பத்தைக் கொடுத்திருக்கிறார். அதில், நிறைய அப்பாக்கள், அம்மாக்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.—மாற்கு 10:29, 30.

[படம்]

உண்மையான அன்பை யெகோவாவின் சாட்சிகளிடம்தான் பார்த்தேன்

[படம்]

ஒருகாலத்தில் நான் வேலை செய்த ஷின்டோ புனித ஸ்தலம்