Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை நீங்களும் கேட்டிருக்கலாம். பைபிள் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். அதைப் பற்றி உங்களுக்கு விளக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்திலிருந்து இந்தப் பூமியை ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கம். இது மனித அரசாங்கங்களை எல்லாம் நீக்கிவிடும். கடவுளுடைய சித்தத்தை, அதாவது விருப்பத்தை, பரலோகத்திலும் பூமியிலும் நிறைவேற்றும். கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே மனிதர்கள்மீது சிறந்த விதத்தில் ஆட்சி செய்ய முடியும்.தானியேல் 2:44-ஐயும் மத்தேயு 6:9, 10-ஐயும் வாசியுங்கள்.

அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் அதற்கு ஒரு ஆட்சியாளர் இருப்பார். யெகோவா தம்முடைய அரசாங்கத்திற்கு அரசராக தம் மகன் இயேசுவை நியமித்திருக்கிறார்.லூக்கா 1:30-33-ஐ வாசியுங்கள்.

2. இயேசு சிறப்பாக ஆட்சி செய்வார் என்று எப்படிச் சொல்லலாம்?

கடவுளுடைய மகனால்தான் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும். ஏனென்றால், இயேசு கனிவானவர், நீதியின் பக்கம் உறுதியாய் நிற்பவர்; மக்களுக்கு உதவி செய்ய அவருக்கு அதிக சக்தி இருக்கிறது. (மத்தேயு 11:28-30) அவர் உயிர்த்தெழுந்த பிறகு பரலோகத்திற்குச் சென்றார்; யெகோவாவின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து, அரசதிகாரத்திற்காகக் காத்திருந்தார். (எபிரெயர் 10:12, 13) இறுதியில், பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.தானியேல் 7:13, 14-ஐ வாசியுங்கள்.

3. இயேசு தனியாக ஆட்சி செய்வாரா?

இல்லை. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட “பரிசுத்தவான்கள்” இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள். (தானியேல் 7:27) அப்படி முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள். அன்றிலிருந்து இன்றுவரை விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் இயேசுவோடு ஆட்சி செய்வதற்காக யெகோவா தேர்ந்தெடுத்து வருகிறார். இயேசுவைப் போலவே அவர்களும் பரலோகத்திற்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.யோவான் 14:1-3-ஐயும் 1 கொரிந்தியர் 15:42-45-ஐயும் வாசியுங்கள்.

எத்தனை பேர் பரலோகத்திற்குப் போவார்கள்? அவர்களை “சிறுமந்தை” என்று இயேசு அழைத்தார். (லூக்கா 12:32) அவர்களுடைய மொத்த எண்ணிக்கை 1,44,000. அவர்கள் இயேசுவோடு சேர்ந்து பூமியின்மீது ஆட்சி செய்வார்கள்.வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-ஐ வாசியுங்கள்.

4. கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பித்தது?

இயேசு 1914-ல் ராஜாவானார். * பின்பு சாத்தானையும் அவனுடைய கெட்ட தூதர்களையும் பூமிக்குத் தள்ளினார். (வெளிப்படுத்துதல் 12:7-10, 12) அப்போதிருந்து மனிதர்களுக்கு நிறைய கஷ்டங்கள் வர ஆரம்பித்தன. போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், அக்கிரமச் செயல்கள் ஆகியவை நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கும் இந்தப் பொல்லாத உலகம் அழியப்போகிறது என்பதற்கும் அடையாளமாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) கடவுளுடைய அரசாங்கம் பொழியப்போகும் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறீர்களா? அப்படியானால், அதன் அரசராகிய இயேசுவைப் பின்பற்றுவது எப்படி எனக் கற்றுக்கொள்ளுங்கள்.லூக்கா 21:7, 10, 11, 31, 34, 35-ஐ வாசியுங்கள்.

5. கடவுளுடைய அரசாங்கம் எதையெல்லாம் செய்யும்?

கடவுளுடைய அரசாங்கம் உலகளாவிய பிரசங்க வேலையின் மூலமாக, லட்சக்கணக்கான ஆட்களுக்குக் கடவுளுடைய வழிகளைப் பற்றி ஏற்கெனவே கற்றுக்கொடுத்து வருகிறது. (மத்தேயு 24:14) விரைவில், அது இந்தப் பொல்லாத உலகத்தை அழிக்கும். ஆனால், இயேசுவுக்கு உண்மையோடு கீழ்ப்படியும் “திரள் கூட்டமான” ஜனங்களைப் பாதுகாக்கும்.வெளிப்படுத்துதல் 7:9, 10, 13-17-ஐ வாசியுங்கள்.

இந்த அரசாங்கம் 1,000 வருடம் ஆட்சிசெய்யும். அப்போது, படிப்படியாக இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும். முடிவில், இயேசு இந்த அரசாங்கத்தைத் தம் தகப்பனிடம் ஒப்படைப்பார். (1 கொரிந்தியர் 15:24-26) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி யாரிடமெல்லாம் சொல்ல நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?சங்கீதம் 37:10, 11, 29-ஐ வாசியுங்கள். (w11-E 07/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தின் 8, 9 அதிகாரங்களைப் பார்க்கவும்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 13 இயேசு 1914-ல் ராஜாவானார் என்பதைக் காட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 215-218-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.