Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளிடம் நீங்கள் எப்படி நெருங்கி வரலாம்?

கடவுளிடம் நீங்கள் எப்படி நெருங்கி வரலாம்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுளிடம் நீங்கள் எப்படி நெருங்கி வரலாம்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை நீங்களும் கேட்டிருக்கலாம். பைபிள் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். அதைப் பற்றி உங்களுக்கு விளக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்கிறாரா?

தம்மிடம் ஜெபம் செய்யும்படி, நெருங்கி வரும்படி, எல்லா மக்களையும் யெகோவா அழைக்கிறார். (சங்கீதம் 65:2) ஆனால், எல்லா ஜெபங்களையும் அவர் கேட்பதில்லை. உதாரணத்திற்கு, இஸ்ரவேல் மக்கள் கெட்ட காரியங்களைத் தொடர்ந்து செய்தபோது அவர்களுடைய ஜெபங்களைக் கேட்க கடவுள் மறுத்து விட்டார். (ஏசாயா 1:15) மனைவியை மோசமாக நடத்துகிற ஒருவருடைய ஜெபத்தை அவர் கேட்பதில்லை. (1 பேதுரு 3:7) அதேசமயம், படுமோசமான பாவங்களைச் செய்தவர்கள்கூட, மனந்திரும்பினால் அவர்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்பார்.2 நாளாகமம் 33:9-13-ஐ வாசியுங்கள்.

2. நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

கடவுளிடம் ஜெபம் செய்வது நமக்குக் கிடைத்த ஒரு பாக்கியம்; அது நம் வழிபாட்டின் ஓர் அம்சம். ஆகவே, யெகோவாவிடம் மட்டுமே நாம் ஜெபம் செய்ய வேண்டும். (மத்தேயு 4:10; 6:9) நாம் குறையுள்ளவர்களாக இருப்பதால் இயேசுவின் மூலமாக ஜெபம் செய்ய வேண்டும். ஏனென்றால், அவரே கடவுளிடம் பேசுவதற்கு ‘வழியாக’ இருக்கிறார். (யோவான் 14:6) மனப்பாடம் செய்துவைத்து அல்லது எழுதிவைத்து திரும்பத் திரும்பச் சொல்லும் ஜெபங்களை யெகோவா கேட்க மாட்டார். அதற்குப் பதிலாக, சொந்த வார்த்தைகளில் மனதிலிருந்து பேச வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்.மத்தேயு 6:7-ஐயும் பிலிப்பியர் 4:6, 7-ஐயும் வாசியுங்கள்.

மௌனமாக ஜெபம் செய்தால்கூட அவரால் கேட்க முடியும். (1 சாமுவேல் 1:12, 13) எப்போது வேண்டுமானாலும் நாம் அவரிடம் ஜெபம் செய்யலாம். காலையில் எழுந்திருக்கும்போது... இரவு தூங்கப்போகும்போது... சாப்பிடும்போது... பிரச்சினைகளை எதிர்ப்படும்போது... அவரிடம் ஜெபம் செய்யும்படி சொல்கிறார்.சங்கீதம் 55:22-ஐயும் மத்தேயு 15:36-ஐயும் வாசியுங்கள்.

3. கிறிஸ்தவர்கள் ஏன் ஒன்றுகூடி கடவுளை வணங்குகிறார்கள்?

கடவுளிடம் நெருங்கி வருவது இன்று நமக்குக் கஷ்டமாக இருக்கிறது; ஏனென்றால் நம்மைச் சுற்றிலும் கடவுள் நம்பிக்கையற்ற மக்கள் வாழ்கிறார்கள்; சமாதான பூமி வரும் என்று கடவுள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் கேலி செய்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 4; 2 பேதுரு 3:3, 13) எனவே, நாம் யெகோவாவை வணங்குகிறவர்களோடு ஒன்றுகூடி வந்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.

கடவுளோடு நீங்கள் நெருங்கி வர வேண்டுமென்றால், அவரை நேசிப்பவர்களோடு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டால், அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து உங்கள் விசுவாசம் பலமடையும்.ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.

4. கடவுளிடம் எப்படி நெருங்கி வர முடியும்?

பைபிளிலிருந்து கற்றுக்கொண்டவற்றைத் தியானிப்பதன் மூலம், அதாவது ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம், நீங்கள் யெகோவாவிடம் நெருங்கி வர முடியும். அவருடைய செயல்களை... வழிநடத்துதல்களை... வாக்குறுதிகளை... பற்றி யோசித்துப் பாருங்கள். ஜெபம் செய்துவிட்டு இவற்றை யோசித்துப் பார்த்தால் கடவுளுடைய அன்பையும், ஞானத்தையும் பார்த்து மலைத்துப்போவோம்.யோசுவா 1:8-ஐயும் சங்கீதம் 1:1-3-ஐயும் வாசியுங்கள்.

யெகோவாவிடம் நெருங்கி வர வேண்டுமென்றால் அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும், விசுவாசம் வைக்க வேண்டும். விசுவாசத்தை நம் உடலுக்கு ஒப்பிடலாம். நாம் உயிரோடு வாழ வேண்டுமானால் தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். அதேபோல், நம் விசுவாசம் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு தொடர்ந்து ஊட்டமளிக்க வேண்டும். அதாவது, நாம் எதை நம்புகிறோம்... ஏன் நம்புகிறோம்... என்பதை எப்போதும் யோசித்துப் பார்ப்பது அவசியம்.1 தெசலோனிக்கேயர் 5:21-ஐயும் எபிரெயர் 11:1, 6-ஐயும் வாசியுங்கள்.

5. கடவுளிடம் நெருங்கி வருவதால் என்ன நன்மைகள்?

யெகோவா தம்மிடம் அண்டி வருபவர்களை அரவணைக்கிறார். அவர்களுடைய எதிர்கால நம்பிக்கையையும் விசுவாசத்தையும் குலைத்துப்போடுகிற எந்தவொரு பிரச்சினையிலிருந்தும் பாதுகாக்கிறார். (சங்கீதம் 91:1, 2, 7-10) நம்முடைய சந்தோஷத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் விஷயங்களைக் குறித்தும் எச்சரிக்கிறார். ஆம், மிகச் சிறந்த வாழ்க்கை வாழ யெகோவா நமக்கு வழிகாட்டுகிறார்.சங்கீதம் 73:27, 28-ஐயும் யாக்கோபு 4:4, 8-ஐயும் வாசியுங்கள். (w11-E 09/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.