Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க என்ன செய்யலாம்?

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க என்ன செய்யலாம்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க என்ன செய்யலாம்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை நீங்களும் கேட்டிருக்கலாம். பைபிள் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். அதைப் பற்றி உங்களுக்கு விளக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. குடும்ப சந்தோஷத்திற்கு ஏன் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்?

சந்தோஷமான கடவுளாகிய யெகோவா திருமணத்தை ஆரம்பித்து வைத்தார். சட்டப்படி திருமணம் செய்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். அப்படிச் செய்யும்போது ஓர் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியும், பாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வளர்க்கவும் முடியும். திருமண பந்தம் எப்படி இருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்? அது ஒரு நிரந்தர பந்தமாக இருக்க வேண்டும், சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (லூக்கா 2:1-5) கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். (எபிரெயர் 13:4) கணவனோ மனைவியோ வேறொருவரோடு கள்ள உறவு வைத்திருந்தால் மட்டுமே அவரை விவாகரத்து செய்துவிட்டு, விரும்பினால் மறுமணம் செய்துகொள்ள யெகோவா அனுமதிக்கிறார்.மத்தேயு 19:3-6, 9-ஐ வாசியுங்கள்.

2. கணவனும் மனைவியும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?

மணவாழ்வில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காகவே ஆணையும் பெண்ணையும் யெகோவா படைத்தார். (ஆதியாகமம் 2:18) ஒரு குடும்பத்திற்கு கணவன்தான் தலைவர். எனவே, கணவன் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும், கடவுளைப் பற்றியும் கற்றுக்கொடுக்க வேண்டும், மனைவியை உயிருக்கு உயிராய் நேசிக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும். கணவனும் மனைவியும் தவறு செய்பவர்கள்தான், அதனால் அவர்கள் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு ஆரம்பப் புள்ளி.எபேசியர் 4:31, 32; 5:22-25, 33-ஐயும் 1 பேதுரு 3:7-ஐயும் வாசியுங்கள்.

3. பிரச்சினை வந்தால் பிரிந்துவிட வேண்டுமா?

கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் முளைத்தால், ஒருவருக்கொருவர் அன்பாக நடந்துகொள்ள முயல வேண்டும். (1 கொரிந்தியர் 13:4, 5) பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரிந்து போவதுதான் ஒரே வழி என பைபிள் சொல்வதில்லை. ஆனால், பிரச்சினை கைமீறி போகும்போது, பிரிவதா வேண்டாமா என்பதை பைபிளின் அடிப்படையில் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.1 கொரிந்தியர் 7:10-13-ஐ வாசியுங்கள்.

4. பிள்ளைகளே, நீங்கள் எப்படி இருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்?

நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். உங்கள் இளமைக் காலத்தை சந்தோஷமாக அனுபவிப்பதற்குத் தேவையான மிகச்சிறந்த ஆலோசனைகளைத் தருகிறார். உங்கள் பெற்றோருக்கு அறிவும் அனுபவமும் அதிகம் இருப்பதால், நீங்கள் அவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். (கொலோசெயர் 3:20) தமக்குப் பிரியமான எதைச் செய்தாலும் யெகோவா சந்தோஷப்படுகிறார்.பிரசங்கி 11:9–12:1-ஐயும் மத்தேயு 19:13-15; 21:15, 16-ஐயும் வாசியுங்கள்.

5. பெற்றோரே, பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பிள்ளைகளுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைக் கொடுக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். (1 தீமோத்தேயு 5:8) ஆனால் உங்கள் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதற்கு, கடவுள் மீது அன்பு காட்டவும் அவருடைய போதனைகளைத் தெரிந்துகொள்ளவும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். (எபேசியர் 6:4) அதற்கு உங்கள் முன்மாதிரி முக்கியம். கடவுள் மேல் நீங்கள் எந்தளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து அவர்களும் கடவுள் மேல் அன்பு காட்ட ஆரம்பிப்பார்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர்களுக்குப் புத்திமதி கொடுத்தால் அவர்கள் நன்கு சிந்தித்து செயல்படுவார்கள்.உபாகமம் 6:4-7-ஐயும் நீதிமொழிகள் 22:6-ஐயும் வாசியுங்கள்.

பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினால் அவர்கள் இன்னும் கெட்டிக்காரர்களாய் வளருவார்கள். அதேசமயம் அவர்களைக் கண்டித்து, தண்டித்து வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். (நீதிமொழிகள் 22:15) ஆனால், நீங்கள் கொடுக்கும் தண்டனை மூர்க்கத்தனமாக இருக்கக் கூடாது.கொலோசெயர் 3:21-ஐ வாசியுங்கள்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உதவும் பல புத்தகங்களை யெகோவாவின் சாட்சிகள் பிரசுரிக்கிறார்கள். இந்தப் புத்தகங்கள் பைபிளை அடிப்படையாகக் கொண்டவை.சங்கீதம் 19:7, 11-ஐ வாசியுங்கள். (w11-E 10/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் 14-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.