Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“விழிப்புடன் இருங்கள்” ஏன் மிக முக்கியம்?

“விழிப்புடன் இருங்கள்” ஏன் மிக முக்கியம்?

“விழிப்புடன் இருங்கள்” ஏன் மிக முக்கியம்?

“உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?” என்று இயேசுவிடம் சீடர்கள் கேட்டார்கள். (மத். 24:3) இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், தெளிவான... விளக்கமான... பளிச்செனத் தெரியக்கூடிய... சந்தேகத்திற்கு இடமளிக்காத... ஓர் அடையாளத்தை அவர் கொடுத்தார்; அதை மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 21 அதிகாரங்களில் காணலாம். இயேசு அந்த அடையாளத்தைப் பற்றிப் பேசியபோது, “விழிப்புடன் இருங்கள்” என்றும் புத்திமதி சொன்னார்.—மத். 24:42.

அவர் கொடுத்த அடையாளமே தெள்ளத்தெளிவாக இருந்ததென்றால், கூடுதலாக எதற்கு இந்தப் புத்திமதி? இரண்டு சாத்தியங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். முதலாவதாக, கவனச்சிதறல்கள் காரணமாகச் சிலர் அந்த அடையாளத்தை அசட்டை செய்துவிடக்கூடும்; அதனால் அவர்கள் ஆன்மீக ரீதியில் பலவீனமடைந்து, விழிப்புணர்வுடன் இருக்கத் தவறிவிடக்கூடும். இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவர் அந்த அடையாளத்தைப் பார்த்தாலும் தான் நேரடியாய்ப் பாதிக்கப்படாததால் அதன் முக்கியத்துவத்தை உணராமல் போய்விடக்கூடும். “மிகுந்த உபத்திரவம்,” அதாவது இயேசு கூறிய தீர்க்கதரிசனத்தின் உச்சக்கட்டம், வருவதற்கு இன்னும் வெகு காலம் செல்லுமென எண்ணி, இப்போது ‘விழிப்புடன் இருக்க’ அவசியமில்லை என்று அவர் நினைத்துவிடக்கூடும்.—மத். 24:21.

“அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை”

நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி இயேசு தமது சீடர்களுக்கு நினைப்பூட்டினார். நோவா செய்த பிரசங்க வேலை, அவர் கட்டிய பிரம்மாண்டமான பேழை, அன்று தலைவிரித்தாடிய வன்முறை ஆகியவையெல்லாம் யாருடைய கண்ணிலும் படாமல் போயிருக்கவே முடியாது. இருந்தாலும், பெரும்பாலானோர் “கவனம் செலுத்தவே இல்லை.” (மத். 24:37-39) இன்றும் எச்சரிக்கைகள் கொடுக்கப்படும்போது அதேபோன்ற மனநிலையையே மக்கள் காட்டுகிறார்கள். உதாரணமாக, வாகனங்கள் எவ்வளவு வேகமாய்ச் செல்ல வேண்டும் என்பதற்குச் சாலையில் தெளிவான அடையாளங்கள் இருந்தாலும் பலர் அவற்றை அசட்டை செய்துவிடுகிறார்கள். அதனால் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சாலைகளில் அதிகாரிகள் வேகத் தடைகளைப் போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதேபோல், கடைசி நாட்களுக்கான அடையாளத்தை ஒரு கிறிஸ்தவர் தெரிந்திருந்தாலும் அவருடைய நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாக இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆரியெல் என்ற பருவவயதுப் பெண்ணின் அனுபவமும் இதுதான்.

டெலிவிஷனில் பெண்களுக்கான கைப்பந்தாட்டத்தை ஆரியெல் எப்போதும் ரசித்துப் பார்ப்பாள். அவளுடைய பள்ளி அந்த விளையாட்டிற்காக ஓர் அணியை ஏற்பாடு செய்தபோது, அவளும் அதில் சேர்ந்துகொள்ள ஆசைப்பட்டாள். அப்போது ஆன்மீக ரீதியில் வரவிருந்த ஆபத்துகளைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கத் தவறினாள். அவள் கோல்கீப்பராகச் சேர்ந்துகொண்டாள். பின்பு என்ன நடந்தது? அவள் கூறுகிறாள்: “என்னுடைய அணியிலிருந்த சிலருடைய பாய்பிரண்ட்ஸ் போதைப்பொருள்களைப் பயன்படுத்தினார்கள், புகைபிடித்தார்கள். நான் வித்தியாசமாக இருந்ததால் அந்தப் பெண்கள் என்னைக் கேலிகிண்டல் செய்தார்கள்; இதையெல்லாம் சமாளித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அந்த விளையாட்டே எனக்கு வினையானது; ஆன்மீக ரீதியில் பலவீனமடையச் செய்தது. சதா கைப்பந்தாட்டத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். ராஜ்ய மன்றத்தில் உட்கார்ந்திருந்த சமயங்களில்கூட என்னுடைய மனமெல்லாம் அந்த விளையாட்டு மைதானத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. என்னுடைய கிறிஸ்தவக் குணங்களும்கூட மாறிப்போனது. விளையாட்டின் மீதிருந்த ஆசை, போட்டியில் ஜெயிக்க வேண்டுமென்ற வெறியாக மாறியது. அந்த வெறியைத் தணிப்பதற்காகக் கடும் பயிற்சியில் இறங்கினேன். அதிக மன அழுத்தத்திற்கு ஆளானேன். விளையாட்டிற்காக நண்பர்களையும் தியாகம் செய்துவிட்டேன்.

“ஒருமுறை விளையாட்டில் எதிரணிக்கு ‘பெனால்டி ஷாட்’ கிடைத்தது; அதாவது, ‘கோல்’ போட அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த ‘கோலை’ தடுப்பதற்குத் தயாராய் நின்றுகொண்டிருந்தேன். அப்போது என்னையே அறியாமல், உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தேன்! நான் ஆன்மீக ரீதியில் எந்தளவு பலவீனமாகியிருந்தேன் என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது. மீண்டும் எப்படி ஆன்மீகப் பலத்தைப் பெற்றேன்?

“இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? என்ற டிவிடியை முன்பு பார்த்திருந்தேன். * அதை மீண்டும் பார்ப்பதற்குத் தீர்மானித்தேன், இந்தத் தடவை அதிலுள்ள விஷயங்களை இன்னும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். சொல்லப்போனால், அந்த நாடகத்தில் வரும் ஆன்ட்ரே என்ற இளைஞனைப் போல்தான் நானும் இக்கட்டான நிலையில் இருந்தேன். அந்த நாடகத்தில், பிலிப்பியர் 3:8-ஐ வாசித்து அதைப் பற்றிச் சிந்திக்கும்படி ஆன்ட்ரேக்கு ஒரு மூப்பர் ஆலோசனை கொடுத்தார்; அதை நான் எனக்குப் பொருத்தினேன். நல்ல பலன் கிடைத்தது. அந்த அணியைவிட்டு விலகினேன்.

“அது எவ்வளவு நல்லதாகிவிட்டது! போட்டி மனப்பான்மையும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் மறைந்துவிட்டன. நான் அதிக சந்தோஷத்தைப் பெற்றேன்; கிறிஸ்தவ நண்பர்களுடன் நெருங்கிப் பழகவும் ஆரம்பித்தேன். ஆன்மீகக் காரியங்களில் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டேன். கூட்டங்களில் கவனம் செலுத்தினேன், மீண்டும் அவற்றை அனுபவித்து மகிழ்ந்தேன். என்னுடைய ஊழியத்திலும் முன்னேற்றம் செய்தேன். இப்போது தொடர்ந்து துணைப் பயனியர் ஊழியம் செய்துவருகிறேன்.”

இயேசு கொடுத்த அடையாளத்திற்குக் கவனம் செலுத்தாதபடி ஏதாவதொரு விஷயம் உங்களைத் திசைதிருப்பினால், ஆரியெலைப் போல தீவிரமான நடவடிக்கைகள் எடுங்கள். பின்வரும் சில ஆலோசனைகளை நீங்கள் முயன்று பார்க்கலாம்: உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸை எடுத்துப் பாருங்கள்; புதையலைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு வரைபடம் என அது அழைக்கப்பட்டிருக்கிறது. அருமையான ஆலோசனைகளையும், சோதனைகளைச் சமாளித்தவர்களின் அனுபவங்களையும் கண்டுபிடிப்பதற்கு அது உதவும். கிறிஸ்தவக் கூட்டங்களிலிருந்து முழுமையாகப் பயனடைய நன்றாகத் தயாரியுங்கள், கூட்டங்களின்போது குறிப்புகளை எழுதிக்கொள்ளுங்கள். மன்றத்தில் முன்வரிசையில் உட்கார்ந்துகொள்வது பிரயோஜனமாய் இருப்பதாகச் சிலர் கண்டிருக்கிறார்கள். கேள்வி-பதில் கலந்தாலோசிப்பின்போது ஆரம்பத்திலேயே பதில் சொல்ல முயலுங்கள். அதோடு, உலக நடப்புகளை ‘கடைசி நாட்கள்’ பற்றிய அடையாளத்தோடும் மற்ற அம்சங்களோடும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருங்கள்.—2 தீ. 3:1-5; 2 பே. 3:3, 4; வெளி. 6:1-8.

“தயாராக இருங்கள்”

கடைசி நாட்களுக்கான அடையாளம் “உலகமெங்கும் உள்ள” அனைவரையும் பாதிக்கும் ஓர் அடையாளம். (மத். 24:7, 14) முன்னறிவிக்கப்பட்டபடி கொள்ளைநோய்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள் போன்ற சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கோடிக்கணக்கானோர் வாழ்கிறார்கள். மற்றவர்களோ ஓரளவு சமாதானமும் அமைதியும் நிலவும் பகுதிகளில் வசிக்கிறார்கள். அந்த அடையாளத்தின் சில அம்சங்கள் நேரடியாக உங்களைப் பாதித்ததே இல்லையென்றால், மிகுந்த உபத்திரவம் வருவதற்கு இன்னும் அதிக காலம் ஆகுமென்ற முடிவுக்கு வர வேண்டுமா? அது ஞானமானதாக இருக்காது.

உதாரணத்திற்கு, “கொள்ளைநோய்களும் பஞ்சங்களும்” பற்றி இயேசு முன்னறிவித்ததைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். (லூக். 21:11) முதலாவதாக, இவை எல்லா இடங்களையும் ஒரே சமயத்தில் அல்லது ஒரே அளவில் பாதிக்குமென அவர் சொல்லவில்லை. மாறாக, “அடுத்தடுத்து பல இடங்களில்” உண்டாகுமென்றே அவர் கூறினார். ஆகையால், இந்தச் சம்பவங்கள் எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் நடக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. இரண்டாவதாக, பஞ்சங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பின்பு, மிதமிஞ்சி சாப்பிடாமல் கவனமாக இருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை எச்சரித்தார். ‘பெருந்தீனியால் . . . உங்கள் இருதயம் பாரமடையாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்’ என்று சொன்னார். (லூக். 21:34) எனவே, அந்த அடையாளத்தின் ஒவ்வொரு அம்சமும் நம் எல்லாரையும் பாதிக்குமென நாம் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், “இவற்றை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள்” என்று இயேசு குறிப்பிட்டார். (லூக். 21:31) அந்த அடையாளத்தின் எல்லா அம்சங்களையும் நாம் வாழும் பகுதியில் நேரடியாக உணருகிறோமோ இல்லையோ அவற்றைப் பார்ப்பதற்குத் தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்கு உதவுகின்றன.

மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும் ‘நாளையும் நேரத்தையும்’ யெகோவா ஏற்கெனவே நிர்ணயித்துவிட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். (மத். 24:36) பூமியில் நடக்கும் சம்பவங்கள் இந்தத் தேதியை மாற்றிவிடாது.

“தயாராக இருங்கள்” என்று எங்குமுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு புத்திமதி கூறினார். (மத். 24:44) நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், 24 மணிநேரமும், ஆன்மீகக் காரியங்களில் நாம் ஈடுபட முடியாது என்பது உண்மைதான். அதோடு, மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும் அந்தத் தருணத்தில் நாம் என்ன செய்துகொண்டிருப்போம் என்பது நம் யாருக்குமே தெரியாது. சிலர் வெளியிலோ வீட்டிலோ வேலை செய்துகொண்டிருக்கலாம். (மத். 24:40, 41) ஆகவே, அந்த நாளுக்குத் தயாராயிருக்க இப்போது நாம் என்ன செய்யலாம்?

ஏமான்வெல் - விக்டோரின் என்ற தம்பதியர் தங்களுடைய ஆறு மகள்களுடன் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இயேசு சொன்ன அடையாளத்தின் எல்லா அம்சங்களுடைய பாதிப்பையும் அங்கு அவர்கள் நேரடியாய் உணருவதில்லை. அதனால், தயாராயிருப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிக் கலந்துபேசத் தீர்மானித்தார்கள். ஏமான்வெல் கூறுகிறார்: “எல்லாருக்கும் வசதியான ஒரு நேரத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், காலையில் ஆறு முதல் ஆறரை மணிவரை படிக்க நாங்கள் முடிவுசெய்தோம். தினவசனத்தைச் சிந்தித்த பிற்பாடு அந்த வாரம் சபையில் படிக்க வேண்டிய ஒரு பிரசுரத்திலிருந்து ஒருசில பாராக்களைத் தயாரித்தோம்.” விழிப்புடன் இருக்க இது அவர்களுக்கு உதவியதா? நிச்சயமாகவே! ஏமான்வெல் மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் சேவை செய்கிறார். விக்டோரின் அவ்வப்போது துணைப் பயனியராகச் சேவை செய்கிறார், சத்தியத்தை அறிந்துகொள்ள அநேகருக்கு உதவியிருக்கிறார். அவர்களது மகள்கள் எல்லாரும் ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேறி வருகிறார்கள்.

“எச்சரிக்கையுடன் இருங்கள், விழிப்புடன் இருங்கள்” என்று இயேசு நமக்கு அறிவுரை கூறுகிறார். (மாற். 13:33) நீங்கள் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருப்பதைத் தடைசெய்ய எந்தவொரு காரியத்தையும் அனுமதித்துவிடாதீர்கள். மாறாக, ஆரியெலைப் போல், நம்முடைய பிரசுரங்களிலும் சபைக் கூட்டங்களிலும் கொடுக்கப்படும் சிறந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்துங்கள். ஏமான்வெல் குடும்பத்தினரைப் போல், நீங்கள் தயாராய் இருப்பதற்கு, ஆம் ‘விழிப்புடன் இருப்பதற்கு,’ ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்யுங்கள்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 8 இது, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்வதற்குப் போராடுகிற ஒரு கிறிஸ்தவ இளைஞனைப் பற்றிய நவீனகால நாடகம் (ஆங்கிலம்).

[பக்கம் 4-ன் படம்]

ஏமான்வெலும் அவரது குடும்பத்தாரும் ‘விழிப்புடன் இருக்க’ தினமும் ஆன்மீகக் காரியங்களைக் கலந்துபேசுகிறார்கள்