Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?

பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?

பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?

“நம் எஜமானருக்கு எது பிரியமானதென்று எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.” —எபே. 5:10.

1, 2. (அ) வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) பொழுதுபோக்குக்காக நாம் செலவிடும் நேரம் கடவுள் அளித்த நன்கொடை என்பதால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

 நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார் என பைபிள் தெளிவாகக் கூறுகிறது. உதாரணமாக, “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டு பண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்” என்று சங்கீதம் 104:14, 15 சொல்கிறது. நாம் உயிர் வாழத் தேவையான உணவை யெகோவா வழங்குகிறார். அவர் பயிர்களை விளையச் செய்கிறார், அதனால்தான் நமக்குத் தானியமும் எண்ணெயும் திராட்சமதுவும் கிடைக்கின்றன. உயிர் வாழ திராட்சமது அவசியமில்லை என்றாலும் ‘மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்குவதற்காக’ இதையும் அவர் தருகிறார். (பிர. 9:7; 10:19) ஆம், நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றும் நம் இதயம் ‘சந்தோஷத்தால் நிரம்பி’ வழிய வேண்டுமென்றும் யெகோவா விரும்புகிறார்.—அப். 14:16, 17.

2 ஆகவே, எப்போதாவது ‘வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனிப்பதற்கோ,’ “காட்டுப் பூக்கள் பூப்பதை” பார்ப்பதற்கோ நேரம் செலவிடுவதில் எந்தத் தவறுமில்லை. இவையெல்லாம் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கலாம், நம் வாழ்வுக்கு இனிமை சேர்க்கலாம். (மத். 6:26, 28; சங். 8:3, 4) ஆனந்தமும் ஆரோக்கியமுமான வாழ்வு “கடவுள் அளித்த நன்கொடை.” (பிர. 3:12, 13, பொது மொழிபெயர்ப்பு) பொழுதுபோக்கிற்காக நாம் செலவிடும் நேரமும் யெகோவா தந்த நன்கொடையின் ஓர் அம்சமே. ஆகவே, கடவுளுக்குப் பிரியமான விதத்தில் அதை நாம் பயன்படுத்த வேண்டும்.

பொழுதுபோக்குகள் பல, பயனுள்ளவை சில

3. ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

3 பொழுதுபோக்கு விஷயத்தில் சமநிலையான கண்ணோட்டம் உடையவர்கள் வித்தியாசமான பல பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். என்றாலும் அவற்றைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் உணர்ந்திருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? இதற்குப் பதில் தெரிந்துகொள்ள பொழுதுபோக்கையும் உணவையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். உலகில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு வகை உணவுகளைச் சாப்பிட விரும்புகிறார்கள். அதேபோல்தான், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வெவ்வேறு வகை பொழுதுபோக்குகளை ரசிக்கிறார்கள். ஏன், ஒரே பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியிலும்கூட, ஒருவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு மற்றவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, புத்தகங்கள் வாசிப்பது ஒருவருக்கு இன்பமாக இருக்கலாம், மற்றவருக்கு அது அலுப்பாக இருக்கலாம். சிலர் சைக்கிள் ஓட்ட விரும்பலாம், மற்றவர்களோ இதை விரும்பாமல் இருக்கலாம். என்றாலும், நமக்குப் பிடித்த உணவை நாம் தேர்ந்தெடுப்பதைப் போல, நமக்குப் பிடித்த பொழுதுபோக்கையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.—ரோ. 14:2-4.

4. நாம் ஏன் பொழுதுபோக்குகளைக் கவனமாய்த் தேர்ந்தெடுக்க வேண்டும்? உதாரணம் தருக.

4 தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்காகக் கண்டதையும் நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது. நாம் சிந்தித்த அந்த உதாரணத்தை மறுபடியும் கவனிப்போம். விதவிதமான உணவுகளைச் சாப்பிட நாம் விரும்பினாலும், கெட்டுப்போன உணவைச் சாப்பிட விரும்பவே மாட்டோம். அது நம் உடம்புக்கு நல்லதல்ல. அதேபோல், விதவிதமான பொழுதுபோக்குகளில் ஈடுபட நாம் விரும்பலாம்; என்றாலும், வன்முறையும் ஒழுக்கக்கேடும் நிறைந்த பொழுதுபோக்குகளை... நம் உயிருக்கு உலைவைக்கும் பொழுதுபோக்குகளை... நாம் விரும்ப மாட்டோம். அவையெல்லாம் பைபிள் நியமங்களுக்கு விரோதமானவை, உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நமக்கு ஆபத்தானவை. ஆகவே, நாம் பொழுதுபோக்குகளைக் கவனமாய்த் தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு ஆசை ஆசையாக இருக்கிற சில வகை பொழுதுபோக்குகள் பயனுள்ளவையா இல்லையா என்பதை நாம் முதலில் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். (எபே. 5:10) எப்படித் தீர்மானிக்கலாம்?

5. நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு கடவுளுக்குப் பிரியமானதா என்பதை எப்படித் தீர்மானிக்கலாம்?

5 பொழுதுபோக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால்... யெகோவாவுக்குப் பிரியமாக இருக்க வேண்டுமென்றால்... அது அவரது வார்த்தையிலுள்ள நெறிமுறைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். (சங். 86:11) நீங்கள் விரும்புகிற பொழுதுபோக்கு எப்படிப்பட்டது என்பதைத் தீர்மானிப்பதற்கு, என்ன? எப்போது? யார்? என்ற மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். அவற்றை இப்போது ஒவ்வொன்றாக ஆராயலாம்.

என்ன அம்சங்கள் அடங்கியுள்ளன?

6. என்ன வகை பொழுதுபோக்குகளை நாம் அடியோடு ஒதுக்கித்தள்ள வேண்டும், ஏன்?

6 ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கு முன்பு, உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய முதல் கேள்வி: என்ன? அதாவது, ‘என்ன வகையான பொழுதுபோக்கில் ஈடுபட எனக்கு அதிக ஆசை?’ பொழுதுபோக்குகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது. முதலாம் வகை பொழுதுபோக்குகளை, நாம் ஒருபோதும் அனுபவிக்கக் கூடாது. இரண்டாம் வகை பொழுதுபோக்குகளை, விரும்பினால் அனுபவிக்கலாம். முதலாம் வகை பொழுதுபோக்குகள் யாவை? இந்தப் பொல்லாத உலகில், பெரும்பாலான பொழுதுபோக்குகள் பைபிள் நியமங்களை அல்லது கடவுளுடைய சட்டங்களை அப்பட்டமாய் மீறுபவை. (1 யோ. 5:19) இந்த வகை பொழுதுபோக்குகளைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தேர்ந்தெடுக்கக் கூடாது. வக்கிரம், பேய்த்தனம், ஓரினச்சேர்க்கை, ஆபாசம், வன்முறை ஆகியவை நிறைந்த பொழுதுபோக்குகளும், ஒழுக்கங்கெட்ட செயல்களை நல்லவைபோல் காட்டுகிற பொழுதுபோக்குகளும் இதில் அடங்கும். (1 கொ. 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8-ஐ வாசியுங்கள்.) நாம் தனியாக இருந்தாலும்சரி மற்றவர்களுடன் இருந்தாலும்சரி, இப்படிப்பட்ட பொழுதுபோக்கை ஒதுக்கித் தள்ளிவிடுவோம். இவ்வாறு, நாம் ‘பொல்லாததை அறவே வெறுக்கிறோம்’ என்பதை யெகோவாவுக்கு நிரூபித்துக் காட்டுவோம்.—ரோ. 12:9; 1 யோ. 1:5, 6.

7, 8. ஒரு பொழுதுபோக்கின் தரத்தை நாம் எப்படிச் சீர்தூக்கிப் பார்க்கலாம்? உதாரணம் தருக.

7 கடவுளது வார்த்தை நேரடியாகக் கண்டனம் செய்யாத பொழுதுபோக்குகளே இரண்டாம் வகை பொழுதுபோக்குகள். இப்படிப்பட்ட பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவை யெகோவாவின் பார்வையில் தரமானவையா என்பதை பைபிள் நியமங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (நீதி. 4:10, 11) பின்பு, மனசாட்சியை உறுத்தாத தீர்மானத்தை எடுக்க வேண்டும். (கலா. 6:5; 1 தீ. 1:19) எப்படி? இதைச் சிந்தித்துப் பாருங்கள்: புது வகை உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு அதில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவோம். அதேபோல், ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடும் முன்பு, அதிலுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய வேண்டும்.—எபே. 5:17.

8 உதாரணமாக, உங்களுக்கு விளையாட்டுகள் பிடிக்கலாம்; அநேகருக்கும் அப்படித்தான். அவை ஜாலியாக இருக்கலாம், விறுவிறுப்பாகவும் இருக்கலாம். ஆனால், சில விளையாட்டுகள் போட்டி வெறியைத் தூண்டுபவையாக... ஆபத்தானவையாக... காயமேற்படுத்துபவையாக... இருக்கலாம். அல்லது, எல்லாரும் கத்தி கூச்சல்போட்டு ஆரவாரம் செய்பவையாக, தேசபக்தியைத் தூண்டுபவையாக இருக்கலாம். நீங்கள் இந்த மாதிரி விளையாட்டுகளை ரசிப்பவரா? அப்படியென்றால், அவற்றிலுள்ள அம்சங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; அப்போது, இப்படிப்பட்ட பொழுதுபோக்குகள் யெகோவாவின் சிந்தைக்கு... நாம் அறிவிக்கிற சமாதான செய்திக்கு... அன்பின் செய்திக்கு... முரணாக இருக்கின்றன என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். (ஏசா. 61:1; கலா. 5:19-21) மறுபட்சத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு யெகோவாவின் நெறிமுறைகளுக்கு இசைவாக இருந்தால், அது பயனுள்ளதாக, புத்துணர்ச்சி தருவதாக இருக்கலாம்.—கலா. 5:22, 23; பிலிப்பியர் 4:8-ஐ வாசியுங்கள்.

எப்போது பொழுதுபோக்கில் ஈடுபடுகிறேன்?

9. ‘எப்போது பொழுதுபோக்கில் ஈடுபடுவேன்?’ என்ற கேள்விக்கு நீங்கள் தரும் பதில் எதைச் சுட்டிக்காட்டும்?

9 என்ன? என்ற கேள்வியை நாம் ஏற்கெனவே சிந்தித்தோம். இந்தக் கேள்விக்கு நாம் சொல்லும் பதில், எதை ஏற்றுக்கொள்கிறோம், எதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும். சரி, இரண்டாவது கேள்வி: எப்போது? அதாவது, ‘எப்போது பொழுதுபோக்கில் ஈடுபடுவேன்? அதற்கு எவ்வளவு நேரம் செலவிடுவேன்?’ இந்தக் கேள்விக்கு நாம் தரும் பதில், எதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும். அப்படியானால், நம் வாழ்வில் பொழுதுபோக்கிற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எப்படித் தீர்மானிக்கலாம்?

10, 11. பொழுதுபோக்கிற்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க மத்தேயு 6:33-ல் உள்ள வார்த்தைகள் எப்படி உதவுகின்றன?

10 “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மாற். 12:30) ஆகவே, யெகோவா மீதுள்ள அன்பு நம் வாழ்வில் முதலிடம் வகிக்கிறது. இயேசு கொடுத்த பின்வரும் அறிவுரைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் இந்த அன்பை நாம் வெளிக்காட்டுகிறோம்: “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.” (மத். 6:33) பொழுதுபோக்கிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்... எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... என்பதைத் தீர்மானிக்க இயேசுவின் வார்த்தைகள் நமக்கு எப்படி உதவும்?

11 “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை . . . நாடிக்கொண்டே இருங்கள்” என்று இயேசு சொன்னதைக் கவனியுங்கள். கடவுளுடைய அரசாங்கத்தை மட்டும் நாடிக்கொண்டே இருங்கள் என்று அவர் சொல்லவில்லை. கடவுளுடைய அரசாங்கத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கையில் வேறு பல காரியங்களையும் நாட வேண்டியிருக்கிறது என்பதை இயேசு அறிந்திருந்தார். உணவு, உடை, உறைவிடம், அடிப்படைக் கல்வி, வேலை, பொழுதுபோக்கு போன்றவையெல்லாம் தேவைதான். இருந்தாலும், ஒரேவொரு காரியத்திற்குத்தான் நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டும், அதுதான் கடவுளுடைய அரசாங்கம். (1 கொ. 7:29-31) இந்த அடிப்படை உண்மையை மனதில் கொண்டிருந்தால், பொழுதுபோக்கையும் பிற காரியங்களையும் இரண்டாம் பட்சத்திற்குத் தள்ளிவிட்டு, கடவுளுடைய அரசாங்கத்தையே முதலில் நாடுவோம். அப்போது, பொழுதுபோக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

12. லூக்கா 14:28-ல் காணப்படும் நியமத்தை எப்படிப் பொழுதுபோக்கு அம்சத்திற்குப் பொருத்தலாம்?

12 அப்படியானால், பொழுதுபோக்கிற்கு நேரம் செலவிடும் விஷயத்தில், முன்கூட்டியே ‘செலவைக் கணக்கிட்டுப் பார்க்க’ வேண்டும். (லூக். 14:28) ஒரு பொழுதுபோக்கிற்கு எவ்வளவு நேரம் செலவாகும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். தனிப்பட்ட படிப்பு, குடும்ப வழிபாடு, கிறிஸ்தவக் கூட்டங்கள், ஊழியம் போன்ற மிக முக்கியமான காரியங்களுக்கு நேரம் இல்லாமல் போகுமளவுக்கு அதிக நேரத்தைப் பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்திவிடக் கூடாது. (மாற். 8:36) ஆனால், கடவுளுடைய சேவையைத் தொடர ஒரு பொழுதுபோக்கு நமக்குத் தெம்பூட்டுகிறதென்றால், அதற்காகச் செலவிடும் நேரம் பயனுள்ளது என நாம் தீர்மானிக்கலாம்.

என் நண்பர்கள் யார்?

13. யாருடன் சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம் என்பதைக் குறித்து ஏன் கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

13 நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய மூன்றாவது கேள்வி: யார்? அதாவது, ‘நான் யாருடன் பொழுதுபோக்கை அனுபவிக்க விரும்புகிறேன்?’ இதைச் சிந்தித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம். ஏன்? ஏனென்றால், நாம் அனுபவிக்கும் பொழுதுபோக்கின் தரம் நம்மோடு சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபடுகிற நண்பர்களின் தரத்தைப் பொறுத்தே இருக்கும். நல்ல நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவது அதிக இன்பமாய் இருப்பதைப் போலவே, நல்ல நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கை அனுபவிப்பது அதிக இன்பமாய் இருக்கும். நாம் எல்லாருமே, முக்கியமாய் இளைஞர்கள், மற்றவர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபட விரும்புவது இயல்பானதே. இருந்தாலும், நாம் அனுபவிக்கும் பொழுதுபோக்கு பயனுள்ளதாய் இருக்க வேண்டுமென்றால், எப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து அதில் ஈடுபட வேண்டும், எப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து ஈடுபடக் கூடாது என்பதை முன்னதாகவே தீர்மானிப்பது ஞானமான செயலாகும்.—2 நா. 19:2; நீதிமொழிகள் 13:20-ஐ வாசியுங்கள்; யாக். 4:4.

14, 15. (அ) நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரியை வைத்திருக்கிறார்? (ஆ) நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

14 நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது நல்லது. படைப்பின் ஆரம்பம் முதற்கொண்டே, மனிதர்மீது இயேசு அன்பு வைத்திருந்தார். (நீதி. 8:31) பூமியில் இருந்த சமயத்தில், எல்லா விதமான மக்களிடமும் அவர் அன்பும் மரியாதையும் காட்டினார். (மத். 15:29-37) என்றாலும், நட்புடன் பழகுவதற்கும் நெருங்கிய நண்பராய் இருப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை இயேசு அறிந்திருந்தார். பொதுவாக எல்லாருடனும் அவர் நட்புடன் பழகியபோதிலும், எல்லாரையும் நெருங்கிய நண்பர்களாய் ஆக்கிக்கொள்ளவில்லை. உண்மையுடன் இருந்த 11 அப்போஸ்தலர்களுடன் பேசியபோது, “நான் உங்களுக்குக் கட்டளையிடுவதைச் செய்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்” என்று குறிப்பிட்டார். (யோவா. 15:14; யோவான் 13:27, 30-ஐயும் காண்க.) தம்மைப் பின்பற்றி யெகோவாவுக்குச் சேவை செய்தவர்களை மாத்திரமே அவர் தமது நெருங்கிய நண்பர்களாய் ஆக்கிக்கொண்டார்.

15 ஆகவே, ஒருவரை நண்பராய்த் தேர்ந்தெடுப்பதா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பு, இயேசு சொன்ன அந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவின் கட்டளைகளுக்கும் இயேசுவின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதைச் சொல்லிலும் செயலிலும் இவர் காட்டுகிறாரா? நன்மையை நேசித்து தீமையை வெறுக்கிறாரா? யெகோவாவுக்கு உண்மை ஊழியராய் இருக்கவும் அவரது அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுக்கவும் அவர் எனக்கு உதவி செய்வாரா?’ இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் அளித்தீர்கள் என்றால், உங்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபட சிறந்த நண்பரைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.சங்கீதம் 119:63-ஐ வாசியுங்கள்; 2 கொ. 6:14; 2 தீ. 2:22.

நம் பொழுதுபோக்கு பரிசோதனையில் தேறுகிறதா?

16. பொழுதுபோக்கு சம்பந்தமாக நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

16 பொழுதுபோக்கு சம்பந்தமாக... என்ன? எப்போது? யார்? ஆகிய மூன்று கேள்விகளை நாம் சிந்தித்தோம். பொழுதுபோக்கிலிருந்து பயனடைய வேண்டுமென்றால், இந்த மூன்று அம்சங்களிலுமே அது பைபிள் நெறிமுறைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். ஆகவே, பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கு முன்பு அதைக் கவனமாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். பொழுதுபோக்கின் தரத்தைப் பற்றிச் சிந்திக்கையில், நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அதில் என்ன அம்சங்கள் அடங்கியுள்ளன? அது தரமானதா தரங்கெட்டதா?’ (நீதி. 4:20-27) நேரத்தைப் பற்றிச் சிந்திக்கையில், நாம் இதைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இதற்காக நான் எவ்வளவு நேரம் செலவிடுவேன்? இதற்காகச் செலவிடும் நேரம் பயனுள்ளதா?’ (1 தீ. 4:8) நண்பர்களைப் பற்றிய விஷயத்தில் நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யாருடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவேன்? அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா?’—பிர. 9:18; 1 கொ. 15:33.

17, 18. (அ) நாம் ஈடுபடும் பொழுதுபோக்கு பைபிள் நெறிமுறைகளுக்கு இசைவாக இருக்கிறதா என்பதை எப்படிப் பரிசோதித்துப் பார்க்கலாம்? (ஆ) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்?

17 ஒரு பொழுதுபோக்கு இந்த மூன்று அம்சங்களில் எதிலாவது பைபிள் நெறிமுறைகளுக்கு முரணாக இருந்தால், அது பரிசோதனையில் தேறவில்லை என்றே அர்த்தம். மறுபட்சத்தில், நாம் ஈடுபடும் பொழுதுபோக்கு இந்த மூன்று அம்சங்களிலும் பைபிள் நெறிமுறைகளுக்கு இசைவாக இருந்தால், யெகோவாவுக்கு மகிமையையும் நமக்கு நன்மையையும் கொண்டுவரும்.—சங். 119:33-35.

18 அப்படியானால், பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சரியான காரியத்தை... சரியான நேரத்தில்... சரியான ஆட்களுடன்... செய்ய முயற்சி செய்வோமாக. ஆம், “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் வேறெதைச் செய்தாலும், எல்லாக் காரியங்களையும் கடவுளுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள்” என்ற பைபிளின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டுமென்பதே நம் ஒவ்வொருவரின் இதயப்பூர்வ ஆசையாய் இருப்பதாக.—1 கொ. 10:31.

உங்களால் விளக்க முடியுமா?

பொழுதுபோக்கு சம்பந்தமாகப் பின்வரும் வசனங்களில் உள்ள நியமங்களை நீங்கள் எப்படிப் பொருத்தலாம்:

பிலிப்பியர் 4:8-ல்?

மத்தேயு 6:33-ல்?

நீதிமொழிகள் 13:20-ல்?

[கேள்விகள்]

[பக்கம் 9-ன் படம்]

என்ன?

[பக்கம் 10-ன் படம்]

எப்போது?

[பக்கம் 12-ன் படம்]

யார்?

[பக்கம் 10-ன் படம்]

நண்பர்களையும் பொழுதுபோக்குகளையும் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் எவ்வாறு இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?