Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பாக்களே—உங்கள் மகனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக முடியுமா?

அப்பாக்களே—உங்கள் மகனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக முடியுமா?

அப்பாக்களே—உங்கள் மகனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக முடியுமா?

“அப்பா, உங்களுக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்கு!” உங்கள் மகன் எப்போதாவது இப்படிக் கேட்டு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறானா? அப்போது, ஒரு அப்பாவாக உங்கள் முகத்தில் ஆயிரம் ‘வாட்ஸ்’ பெருமிதம் பளிச்சிட்டிருக்கும்! ஆனால், உங்கள் மகன் இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் கொடுத்த ஆலோசனைபடி நடந்து பயனடைந்திருந்தால்? சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றிருப்பீர்கள்தானே! *நீதிமொழிகள் 23:15, 24.

ஆனால் வருடங்கள் உருண்டோடிய பிறகும், உங்கள் மகன் உங்கள்மீது மதிப்பு மரியாதை வைத்திருக்கிறானா? அல்லது வளர வளர அதெல்லாம் குறைந்துபோயிருக்கிறதா? பிஞ்சு பருவத்திலிருந்து பெரியவனாகும்வரை நீங்கள் அவனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக இருப்பது எப்படி? சரி, அப்பாக்கள் பொதுவாகச் சந்திக்கிற சில சவால்களை இப்போது சிந்திக்கலாம்.

மூன்று சவால்கள்

1. நேரமே இல்லை: பல நாடுகளில், அப்பாவுடைய சம்பாத்தியத்தில்தான் முழு குடும்பமும் ஓடுகிறது. அதனால், ஒருநாளில் முக்கால்வாசி நேரத்தை அவர் வேலைக்கே செலவிட வேண்டியிருக்கிறது. சில நாடுகளில், அப்பாக்கள் தங்களுடைய பிள்ளைகளோடு செலவிடும் நேரம் ரொம்ப ரொம்பக் குறைவு. உதாரணமாக, சமீபத்தில் பிரான்சு நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறபடி, அப்பாக்கள் பிள்ளைகளோடு ஒரு நாளில் 12 நிமிடங்கள்கூட செலவிடுவதில்லை.

யோசித்துப் பாருங்கள்: உங்கள் மகனோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? அடுத்து வருகிற ஓரிரு வாரங்களில், அவனோடு தினமும் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று எழுதி வைத்துப் பாருங்கள். அதைப் பார்த்து நீங்கள் ‘ஷாக்’ ஆகிவிடலாம்.

2. என் அப்பா அப்படி இல்லை: சில அப்பாக்களுக்கு தங்களுடைய அப்பாவோடு அந்தளவு பேசிப் பழக்கம் இருந்திருக்காது. பிரான்சைச் சேர்ந்த ஸான்-மாரி சொல்கிறார்: “என் அப்பாகிட்ட நான் அவ்வளவா பேசினதே இல்லை. இது என்னை பாதிக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. ஏன்னா, இப்போ என் பசங்களோட உட்கார்ந்து நல்லா பேசறது எனக்கு கஷ்டமா இருக்குது.” இன்னும் சில அப்பாக்களோ, தங்கள் அப்பாவுடன் பேசியிருந்தாலும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்திருக்காது. 43 வயது ஃபிலிப் இப்படிச் சொல்கிறார்: “நான் சின்ன வயசுல இருந்தப்போ என் அப்பாவுக்கு என் மேல இருக்கிற பாசத்த எப்படிக் காட்டணும்னு தெரியல. அதனால என் பையன் மேல இருக்கிற பாசத்த வெளிக்காட்றதுக்கு நானும் ரொம்பவே முயற்சி செய்ய வேண்டியிருக்கு.”

யோசித்துப் பாருங்கள்: உங்கள் அப்பாவோடு நெருங்கிப் பழகாததால்தான் உங்கள் மகனிடம் பாசம் காட்ட முடியவில்லையா? உங்கள் அப்பாவுடைய நல்ல பழக்கம்/கெட்ட பழக்கம் உங்களிடமும் இருக்கிறதா? எந்தெந்த விஷயங்களில் அவரைப் போல் இருக்கிறீர்கள்?

3. என் ஊரில் அந்தப் பழக்கம் இல்லை: சில ஊர்களில் அப்பாக்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் தலையிட மாட்டார்கள். மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த லூக்கா சொல்கிறார்: “எங்க ஊர்ல பிள்ளைகள பார்த்துக்கறது எல்லாம் அம்மாவோட வேலைனுதான் சொல்வாங்க.” இன்னும் சில நாடுகளில், பிள்ளைகளைக் கண்டிப்பது மட்டுமே அப்பாவின் வேலை என நினைக்கிறார்கள். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சொல்கிறார்: “எங்க ஊர்ல எல்லாம் அப்பா பிள்ளைகளோட விளையாட மாட்டார். அப்படி விளையாடினா பிள்ளைகளுக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு மரியாதையெல்லாம் போயிடும்னு நினைப்பாங்க. அதனால என் பையனோடு விளையாடுறது எனக்கு எப்பவுமே கஷ்டமா இருந்துச்சு.”

யோசித்துப் பாருங்கள்: ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டுமென்று உங்களுடைய ஊரில் எதிர்பார்க்கிறார்கள்? பிள்ளைகளை வளர்ப்பது எல்லாம் பெண்களின் வேலை என்று சொல்கிறார்களா? அப்பாக்கள் தங்களுடைய மகன்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிய வேண்டுமென்று சொல்கிறார்களா, அல்லது கறாராக இருக்க வேண்டுமென்று சொல்கிறார்களா?

ஒரு அப்பாவாக நீங்களும் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருக்கலாம். அதை எப்படிச் சமாளிக்கலாம்? உங்களுக்காக இதோ சில டிப்ஸ்.

பிஞ்சிலேயே ஆரம்பித்துவிடுங்கள்

பொதுவாக, பையன்கள் பிஞ்சு வயதிலிருந்தே அப்பாவை அப்படியே காப்பியடிக்க ஆசைப்படுவார்கள். அதனால், சின்ன வயதிலேயே உங்கள் மகனுக்கு இருக்கும் அந்த ஆசைக்கு அஸ்திவாரம் போடுங்கள். அதை எப்படிச் செய்யலாம்? அதற்காக, அவனோடு எப்போதெல்லாம் நேரம் செலவிடலாம்?

முடிந்தபோதெல்லாம் உங்களுடைய அன்றாட வேலைகளில் அவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, வீட்டு வேலைகளில் அவனையும் கூடமாட உதவி செய்யும்படி சொல்லலாம். வீட்டைச் சுத்தம் செய்யும்போது அவனிடமும் ஒரு சின்ன துடைப்பத்தைக் கொடுக்கலாம்; அல்லது தோட்ட வேலை செய்யும்போது ஒரு சின்ன மண்வெட்டியைக் கொடுக்கலாம். அப்போது அவன் எவ்வளவு குஷியாகி விடுவான் தெரியுமா? இருக்காதா என்ன, அவனுக்குப் பிடித்த ஹூரோவோடு, ஆம் உங்களோடு, வேலை செய்ய அவனுக்குக் கசக்குமா? இப்படிச் சேர்ந்து செய்யும்போது வேலையை முடிப்பதற்கு அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகும். கஷ்டப்பட்டு உழைப்பது எப்படியென்று அவனுக்கு கற்றுக்கொடுக்கவும் முடியும். அன்றாட வேலைகளில் பிள்ளைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல காலத்திற்கு முன்பே அப்பாக்களுக்கு பைபிள் ஆலோசனை கொடுத்துள்ளது; பிள்ளைகளிடம் பேசுவதற்கும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் அது நல்ல வாய்ப்பாக இருக்கும். (உபாகமம் 6:6-9) இந்த பைபிள் ஆலோசனை இன்றைய அப்பாக்களுக்கும் பொருந்தும்.

உங்கள் மகனோடு சேர்ந்து வேலை செய்வதோடு, அவனோடு விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள். அப்படி விளையாடும்போது மகனோடு ஜாலியாக இருக்க முடியும், அவனும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வான். ஒரு ஆய்வு சொல்கிறபடி, அப்பா-மகன் சேர்ந்து விளையாடும்போது சாதனையாளனாக, தைரியசாலியாக ஆவதற்கான ஊக்கத்தை மகன் பெற்றுக்கொள்கிறான்.

அப்பாவும் மகனும் சேர்ந்து விளையாடுவதால் மற்றொரு முக்கியமான பயனும் உண்டு. “விளையாடும்போதுதான் ஒரு பையன் தன் அப்பாவோடு ரொம்ப சகஜமாகப் பேசுகிறான்” என்று சொல்கிறார் ஆய்வாளர் மிஷல் ஃபிஸ். விளையாடும்போது, ஒரு அப்பாவால் தன் மகனிடம் சொல்லிலும் செயலிலும் பாசத்தைக் காட்ட முடியும். அப்படிச் செய்யும்போது பாசத்தை எப்படி வெளிக்காட்டுவதென தன் பையனுக்கு அவர் கற்றுக்கொடுக்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரே சொல்கிறார்: “என் பையன் சின்னவனா இருந்தப்போ நாங்க அடிக்கடி ஒன்னா சேர்ந்து விளையாடுவோம். நான் அவனை கட்டி அணைப்பேன், அவனும் பதிலுக்கு பாசம் காட்ட பழகிகிட்டான்.”

மகனோடு உள்ள நட்பைப் பலப்படுத்துவதற்கு இன்னொரு வழி: தினமும் அவன் தூங்குவதற்கு முன் ஒரு கதையை வாசித்துக் காட்டுங்கள்; அவனுடைய சந்தோஷங்களை, சங்கடங்களை சொல்லும்போது காதுகொடுத்து கேளுங்கள். இப்படிச் செய்து வந்தால், அவன் பெரியவனானாலும் உங்களுக்கிடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கும்.

வளைந்து கொடுங்கள்

டீனேஜ் பிள்ளைகள் சிலருக்கு அப்பா பேசும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்காது. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு உங்கள் மகன் பட்டும் படாமல் பதில் சொன்னால், அவனுக்கு உங்களோடு பேசவே இஷ்டமில்லை என்று முடிவுகட்டி விடாதீர்கள். நீங்கள் பேசும் விதத்தை கொஞ்சம் மாற்றினால் அவன் தாராளமாகப் பேசுவான்.

பிரான்சில் வசிக்கும் ஸாக் என்பவருக்குத் தன் மகன் ஸரோமுடன் பேசுவது கஷ்டமாக இருந்தது. அவனைக் கட்டாயப்படுத்தி பேச வைப்பதற்குப் பதிலாக, அவனுடைய நட்பைச் சம்பாதிக்க வேறு வழியில் முயற்சி செய்தார். அவனோடு கால்பந்து விளையாடினார். “விளையாடி முடிச்ச பிறகு, நாங்க புல் தரைல உட்கார்ந்து கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுப்போம். அப்போ அவன் மனசு திறந்து பேசுவான். அப்புறம்தான் புரிஞ்சுது, அவன் என்னோட தனியா நேரம் செலவிட விரும்புறான்னு. இப்படி செஞ்சதால நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஃபிரெண்ட் ஆயிட்டோம்” என்கிறார் ஸாக்.

விளையாட்டில் உங்கள் மகனுக்கு ஆர்வம் இல்லையென்றால்? ஆன்ட்ரே தன் மகனுடன் உட்கார்ந்து நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்ததை ஆசை ஆசையாய் நினைத்துப் பார்க்கிறார். “ஜில்லுனு இருக்கும் ராத்திரி நேரத்துல நாங்க வெளில சேர்ல உட்கார்ந்து, நல்லா போர்த்திக்கிட்டு, அப்படியே டீ குடிச்சுகிட்டு வானத்த பார்த்து ரசிப்போம். நட்சத்திரங்கள கடவுள் படைச்சதைப் பற்றி பேசுவோம், சொந்த விஷயங்கள பேசுவோம். சொல்லப்போனா, உப்பு சப்பில்லாத விஷயத்திலிருந்து காரசாரமான விஷயம்வரை எல்லாத்தையுமே பேசுவோம்” என்கிறார் ஆன்ட்ரே.—ஏசாயா 40:25, 26.

உங்கள் மகனுக்குப் பிடித்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? உங்களுடைய ஆசைகள், விருப்பங்கள் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டியதுதான். (பிலிப்பியர் 2:4) தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் ஈயன் சொல்கிறார்: “ஸ்போர்ட்ஸ்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்; ஆனா, என் பையன் வானுக்கு சுத்தமா பிடிக்காது. ஃப்ளைட், கம்ப்யூட்டர் எல்லாம்தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுக்காக நானும் அந்த விஷயங்கள்ல ஆர்வம் காட்டினேன்; விமான சாகசங்கள பார்க்க அவனை கூட்டிட்டு போனேன், கம்ப்யூட்டர்ல ஃப்ளைட் ஓட்டுற மாதிரி அவனோட கேம்ஸ் விளையாடினேன். இப்படி அவனுக்குப் பிடிச்ச விஷயங்கள்ல நானும் கலந்துகிட்டதனாலதான் என்னோட அவன் ரொம்ப சகஜமா பேச ஆரம்பிச்சான்.”

தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்

“அப்பா, இத பாருங்களேன், எப்படி இருக்கு?” உங்கள் குட்டிப் பையன் புதிதாக எதையாவது செய்தபோது உங்களிடம் இப்படிக் கேட்டிருக்கிறானா? இப்போது, அவன் டீனேஜ் பையனாக வளர்ந்த பிறகும் இதே மாதிரி கேட்கிறானா? ஒருவேளை அப்படி வாயைத் திறந்து கேட்க மாட்டான். ஆனால் நீங்களாகவே அவனை பார்த்து மனதார பாராட்டினீர்கள் என்றால் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கிற மனப்பக்குவம் உள்ள ஆளாக அவன் வளருவான்.

இந்த விஷயத்தில் யெகோவா தேவன் வைத்த மாதிரியைக் கவனியுங்கள். தம்முடைய மகன் இயேசு, பூமியில் ஒரு முக்கியமான வேலையைத் தொடங்கவிருந்த சமயத்தில் அவர்மீதிருந்த பாசத்தை கடவுள் வெளிப்படையாகக் காட்டினார். “இவர் என் அன்பு மகன், இவரைக் குறித்துப் பூரிப்படைகிறேன்” என்று சொன்னார். (மத்தேயு 3:17, அடிக்குறிப்பு; 5:48) உங்கள் மகனைக் கண்டிப்பதும் அவனுக்குக் கற்றுக்கொடுப்பதும் முக்கியம்தான். (எபேசியர் 6:4) அதே சமயத்தில், அவன் நல்ல விஷயங்களை பேசும்போது, செய்யும்போது சபாஷ் சொல்லி தட்டிக்கொடுப்பதும் முக்கியம்.

சில அப்பாக்களுக்கு அப்படிப் பாராட்டுவதும் பாசத்தைக் காட்டுவதும் இயல்பாக வருவதில்லை. அதற்குக் காரணம், அவர்களுடைய பெற்றோர் அவர்களது திறமைகளைப் பாராட்டாமல் எப்போதும் குறைகளையே குத்திக்காட்டியிருக்கலாம். நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தவர் என்றால் உங்களுடைய மகனின் தன்னம்பிக்கையை வளர்க்க நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? முன்பு குறிப்பிடப்பட்ட லூக்கா, வீட்டு வேலைகளைச் செய்யும்போது எப்போதும் தன்னுடைய 15 வயது மகன் மான்வலுடன் சேர்ந்து செய்கிறார். “சில நேரங்கள்ல அவனுக்கு ஒரு வேலைய கொடுத்துட்டு அவனையே செய்யச் சொல்லிடுவேன், தேவைப்பட்டா மட்டும்தான் உதவி செய்வேன். நிறைய தடவை அவனே வேலைய முடிச்சுடுவான். அப்படி செய்யும்போது அவனுக்கு ஒரு திருப்தி கிடைக்குது, அவனோட தன்னம்பிக்கையும் அதிகமாகுது. நானும் அவனை தட்டிக்கொடுத்து பாராட்டுவேன். அவன் நினைச்ச அளவுக்கு செய்யலன்னாகூட அவனோட முயற்சிய பாராட்டுவேன்” என்கிறார் லூக்கா.

பெரிய பெரிய இலக்குகளை வைத்து அதை அடைய உங்கள் மகனுக்கு உதவலாம்; இதுவும்கூட தன்னம்பிக்கையை வளர்க்க அவனுக்கு உதவும். ஒருவேளை, நீங்கள் நினைக்கிற அளவுக்கு வேகமாக அந்த இலக்குகளை அவன் அடையவில்லை என்றால்? அல்லது நீங்கள் நினைப்பது போன்ற இலக்குகளை அவன் வைக்காமல் வேறு ஏதாவது நல்ல இலக்குகளை வைக்கிறான் என்றால்? அப்போது, உங்களுடைய எதிர்பார்ப்புகளை கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கும். முன்பு குறிப்பிடப்பட்ட ஸாக் இப்படிச் சொல்கிறார்: “அடைய முடிஞ்ச இலக்குகள மட்டும் வைக்க என் மகனுக்கு உதவுறேன். அதே சமயத்துல, அந்த இலக்குகள் எல்லாம் அவனாகவே வைக்கணும், நான் அவனுக்காக வைக்கக்கூடாதுன்றதுல ஜாக்கிரதையா இருக்கிறேன். அந்த இலக்குகளை அவன் சீக்கிரமா அடையணுங்கறதுக்காக நான் வீணா அதுல மூக்க நுழைக்கிறதில்ல.” உங்கள் மகன் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டால்... அவன் அடைந்த வெற்றியைப் பாராட்டினால்... தோல்வி ஏற்பட்டாலும் அவனைத் தூக்கி நிறுத்தினால்... அவன் வைத்த இலக்குகளை அடைய நீங்கள் உதவுகிறீர்கள் என்று அர்த்தம்.

அப்பா-மகன் உறவில் சில விரிசல்களும் சிக்கல்களும் ஏற்படும்தான். ஆனால், போகப்போக அவன் உங்களோடு நெருக்கமாக இருக்கவே விரும்புவான். வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பும் அன்புள்ள அப்பாவோடு நண்பராக இருக்க எந்த பிள்ளைக்குத்தான் பிடிக்காது? (w11-E 11/01)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 2 இந்தக் கட்டுரை, அப்பா-மகன் பந்தத்தைப் பற்றி விளக்கினாலும் இதிலுள்ள குறிப்புகள் அப்பா-மகள் பந்தத்திற்கும் பொருந்தும்.