Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபிரகாம் மனத்தாழ்மையில் மணிமகுடம்

ஆபிரகாம் மனத்தாழ்மையில் மணிமகுடம்

ஆபிரகாம் மனத்தாழ்மையில் மணிமகுடம்

கதிரவன் தகதகவென்று எரிந்துகொண்டிருக்கும் வேளை. ஆபிரகாம் தன் கூடார வாசலில், நிழலின் அருமையை ருசித்தபடி உட்கார்ந்திருக்கிறார். தூரத்தில் மூன்று பேர் நின்றுகொண்டிருப்பது அவருடைய கண்ணில் படுகிறது. * யார், எவர் என்றுகூட தெரியாமல் அவர்களைச் சந்திக்க சட்டென ஓடுகிறார். அவர்களிடம், சற்று ஓய்வெடுத்து, உணவருந்தி செல்லும்படி வேண்டுகிறார். முதலில், ‘கொஞ்சம் அப்பம் கொண்டுவருவதாக’ சொல்கிறார்; ஆனால், தடபுடலான ஒரு விருந்திற்கே ஏற்பாடு செய்கிறார். சுடச் சுட அப்பம், வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்றின் இறைச்சி என வித விதமாகப் பரிமாறுகிறார். இச்சம்பவம், அவர் உபசரிப்பதில் சிகரம் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. அதேசமயம், அவர் மனத்தாழ்மையில் மணிமகுடம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. எப்படி என்று இப்போது பார்க்கலாமா?—ஆதியாகமம் 18:1-8.

மனத்தாழ்மை என்றால் என்ன? மனத்தாழ்மை என்பது, அகந்தை அல்லது பெருமை இல்லாதிருப்பதைக் குறிக்கிறது. மனத்தாழ்மையுள்ள ஒருவர், தன்னைவிட மற்றவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் சிறந்து விளங்குவார்கள் என்பதை ஒத்துக்கொள்வார். (பிலிப்பியர் 2:3) மற்றவர்களுடைய கருத்துகளைக் கேட்பார், அவர்களுக்காக எந்தவொரு தாழ்வான வேலையையும் செய்யத் தயாராய் இருப்பார்.

ஆபிரகாம் எப்படி மனத்தாழ்மை காட்டினார்? அவர் மற்றவர்களுக்கு மனதார சேவை செய்தார். ஆரம்பத்தில் பார்த்தபடி, மூன்று பேர் நிற்பதை ஆபிரகாம் கண்ட உடனே ஓடிச் சென்று அவர்களை வரவேற்று உபசரித்தார். அவருடைய மனைவி சாராள், வேக வேகமாகச் சமைக்க ஆரம்பித்தாள். ஆனால், யாரும்கூட அதிகமான வேலைகளைச் செய்தார் என்று கவனியுங்கள்: அந்த விருந்தாளிகளைச் சந்திப்பதற்காக ஓடோடி சென்றது ஆபிரகாம்தான்; சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருவதாக அவர்களிடம் சொன்னது ஆபிரகாம்தான்; மாட்டுமந்தைக்கு ஓடி, சமைப்பதற்கு ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து வந்தது ஆபிரகாம்தான்; உணவு பதார்த்தங்களை அவர்கள்முன் வைத்தது ஆபிரகாம்தான். இந்த வேலைகளையெல்லாம் வேலைக்காரர்களின் தலையில் கட்டாமல் அவரே தாழ்மையோடு செய்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்வதைக் கௌரவக் குறைச்சலாக நினைக்கவே இல்லை.

ஆபிரகாம் தன் தலைமையின் கீழ் இருந்தவர்கள் கொடுத்த ஆலோசனைகளைக் கேட்டார். ஆபிரகாமும் சாராளும் பேசிக்கொண்டவற்றில் ஒருசில விஷயங்களே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும், இரண்டு முறை சாராள் சொன்ன ஆலோசனையை ஆபிரகாம் காதுகொடுத்து கேட்டு அதன்படி செய்ததாக பைபிளில் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 16:2; 21:8-14) அதில் ஒருமுறை, சாராள் சொன்ன ஆலோசனை “ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.” ஆனால், யெகோவா ஆபிரகாமிடம் அதைப் பற்றி பேசிய பிறகு, அவளுடைய ஆலோசனை ஆபிரகாமுக்கு நல்லதாகப் பட்டது. அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு அதன்படி செய்தார்.

நமக்கு என்ன பாடம்? நாம் உண்மையிலேயே மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருந்தால், மற்றவர்களுக்கு மனதார சேவை செய்வோம். அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு அதைச் சந்தோஷமாக செய்து கொடுப்போம்.

அதோடு, மற்றவர்களுடைய கருத்துகளைக் காதுகொடுத்து கேட்போம். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போது ‘அவர் சொல்றத நான் எதுக்கு கேட்கணும்’ என நினைத்துக்கொண்டு அதை அப்படியே ஒதுக்கிவிட மாட்டோம். மாறாக, மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை ஞானமாக ஏற்றுக்கொள்வோம். (நீதிமொழிகள் 15:22) முக்கியமாக, அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையைக் காட்டினால் நல்லது. சூப்பர்வைஸராக பல வருடங்கள் வேலைபார்க்கிற ஜான் சொல்கிறார்: “ஒரு நல்ல அதிகாரி மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை மரியாதையோடு கேட்பார். அவர்களும் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலைபார்க்கும் ஒருவர் ஒரு வேலையை உங்களைவிட நன்றாகச் செய்வார் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு மனத்தாழ்மை வேண்டும். அதனால், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று யாராலும், ஏன் ஒரு அதிகாரியாலும்கூட, சொல்ல முடியாது.”

ஆபிரகாமைப் போல, நாம் மற்றவர்களுடைய ஆலோசனைகளைக் காதுகொடுத்து கேட்டால், மற்றவர்களுக்காக தாழ்வான வேலைகளைச் செய்துகொடுத்தால் யெகோவாவின் ஆதரவைப் பெறுவோம். ஏனென்றால், “கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அளவற்ற கருணையை அருளுகிறார்.”—1 பேதுரு 5:5. (w12-E 01/01)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 2 இவர்கள் தேவதூதர்கள் என்று ஆபிரகாமுக்கு முதலில் தெரியாது.—எபிரெயர் 13:2.