Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது

பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது

அரசாங்கத்துக்கு எதிராகக் கலகத்தில் குதித்த ஒரு கோபக்கார இளைஞர் எப்படிக் கடவுளுக்குச் சேவை செய்யும் அமைதியான நபராக மாறினார்? நீங்களே படித்துப் பாருங்கள்.

“நிறைய கேள்விகள் என் மனதைக் குடைந்தன.”—ராவ்டல் ராத்ரிகெஸ் ராத்ரிகெஸ்

பிறந்த வருஷம்: 1959

பிறந்த நாடு: கியூபா

என்னைப் பற்றி: அரசாங்கத்துக்கு எதிராகக் கலகம் செய்தேன்

என் கடந்தகால வாழ்க்கை: கியூபாவில் இருக்கும் ஹவானா என்ற நகரத்தில்தான் நான் பிறந்தேன். ஏழ்மையான ஜனங்கள் வாழ்ந்த ஒரு பகுதியில் நான் வளர்ந்தேன். அங்கே அடிக்கடி தெருச் சண்டைகள் நடக்கும். வளரவளர, ஜூடோவிலும் மற்ற தற்காப்புக் கலைகளிலும் எனக்கு ரொம்ப ஆர்வம் வந்தது.

நான் ரொம்ப நன்றாகப் படிப்பேன். அதனால், காலேஜில் சேரச் சொல்லி என் அப்பா அம்மா சொன்னார்கள். காலேஜில் சேர்ந்த பிறகு, என் நாட்டின் ஆட்சிமுறை சரியில்லை என்று எனக்குப் பட்டது. அதை மாற்றுவதற்காக அரசாங்கத்துக்கு எதிராகக் கலகம் செய்ய முடிவெடுத்தேன். நானும் என்கூடப் படித்த இன்னொரு பையனும் ஒரு போலீஸ் அதிகாரியைத் தாக்கினோம். அவருடைய துப்பாக்கியைப் பறித்துக்கொள்ள முயற்சி செய்தோம். அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் எங்கள் இரண்டு பேரையும் ஜெயிலில் தள்ளினார்கள். எங்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யும்படி தீர்ப்பும் கொடுத்தார்கள். அப்போது எனக்கு 20 வயதுதான், சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தேன்!

நான் ஜெயிலில் தனியாக இருந்தபோது, என்னைத் துப்பாக்கியால் சுடப்போகிறவர்களுக்கு முன்னால் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஒத்திகை பார்த்தேன். பயத்தை வெளியில் காட்டவே கூடாதென்று நினைத்தேன். அதேசமயத்தில், நிறைய கேள்விகள் என் மனதைக் குடைந்தன. ‘இந்த உலகத்துல ஏன் இவ்ளோ அநியாயம் நடக்குது? இதுதான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் யோசித்தேன்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது: கடைசியில், எங்களுடைய மரண தண்டனையை 30 வருஷ சிறைத் தண்டனையாக மாற்றினார்கள். அந்தச் சமயத்தில்தான் நான் சில யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தேன். அவர்களுடைய மத நம்பிக்கையினால் அவர்களையும் ஜெயிலில் போட்டிருந்தார்கள். அவர்கள் நடந்துகொண்ட விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர்கள் தைரியமாக இருந்தார்கள், அதேசமயம் எல்லாரோடும் சமாதானமாக இருந்தார்கள். அநியாயமாக சிறையில் தள்ளப்பட்டிருந்தாலும் அவர்கள் கோபப்படவில்லை, ஆத்திரப்படவில்லை.

கடவுள் மனிதர்களை நல்லபடியாக வாழ வைக்கப் போகிறார் என்று யெகோவாவின் சாட்சிகள் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். குற்றங்களும் அநியாயங்களும் நடக்காத அழகான பூஞ்சோலையாக இந்தப் பூமியைக் கடவுள் மாற்றுவார் என்று பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினார்கள். நல்லவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் இருப்பார்கள், அதுவும் எந்தக் குறையும் இல்லாமல் என்றென்றும் வாழ்வார்கள் என்றெல்லாம் விளக்கினார்கள்.—சங்கீதம் 37:29.

யெகோவாவின் சாட்சிகள் சொல்லித்தந்த விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், ‘அவங்கள மாதிரியெல்லாம் என்னால வாழ முடியாது. அரசியல்ல தலையிடாம இருக்குறது… ஒரு கன்னத்துல அறைஞ்சா இன்னொரு கன்னத்த காட்டுறது… இதெல்லாம் எனக்கு ஒத்தே வராது’ என்று நினைத்தேன். அதனால், பைபிளை நானே படிக்க முடிவு செய்தேன். அதைப் படித்து முடித்த பிறகுதான், ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போல நடந்துகொள்ளும் ஒரே மக்கள் யெகோவாவின் சாட்சிகள்தான் என்று புரிந்தது!

பைபிளைப் படிக்கப் படிக்க, நிறைய விஷயங்களில் நான் அடியோடு மாற வேண்டும் என்று புரிந்துகொண்டேன். உதாரணத்துக்கு, கெட்ட வார்த்தை பேசுவதை விட வேண்டும், புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும், அரசியல் விஷயங்களில் இனி தலையிடாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் புரிந்துகொண்டேன். இதையெல்லாம் செய்வது ரொம்ப கஷ்டமாக இருந்தது, ஆனாலும் யெகோவாவின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னையே மாற்றிக்கொண்டேன்.

எனக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டமாக இருந்த ஒரு விஷயம் என் கோபத்தை அடக்குவதுதான். அதற்காக இப்போதும்கூட நான் ஜெபம் செய்துகொண்டுதான் இருக்கிறேன். என் கோபத்தைக் கட்டுப்படுத்த சில பைபிள் வசனங்கள் உதவியாக இருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான் நீதிமொழிகள் 16:32. “பலசாலியைவிட சட்டெனக் கோபப்படாதவனே மேலானவன். நகரத்தைக் கைப்பற்றுகிறவனைவிட கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனே மேலானவன்” அன்று அது சொல்கிறது.

1991-ல் நான் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக ஆனேன். ஜெயிலிலேயே ஒரு டிரம்மில் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அடுத்த வருஷம், என்னையும் இன்னும் சில கைதிகளையும் விடுதலை செய்து ஸ்பெயினுக்கு அனுப்பினார்கள். ஏனென்றால், அங்கே எங்களுடைய சொந்தக்காரர்கள் இருந்தார்கள். ஸ்பெயினுக்குப் போனதுமே யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொண்டேன். ஏதோ வருஷக்கணக்காக என்னைத் தெரிந்ததுபோல் என்னிடம் அவர்கள் அன்பாகப் பழகினார்கள். புது வாழ்க்கையை ஆரம்பிக்கவும் நிறைய உதவி செய்தார்கள்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்: இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் மனைவியோடும் மகள்களோடும் சேர்ந்து கடவுளுக்குச் சேவை செய்துவருகிறேன். மற்றவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க நிறைய நேரம் செலவிடுகிறேன். சிலசமயம், ஒரு இளைஞனாக சாவின் விளிம்பில் நான் நின்றுகொண்டிருந்த அந்த சமயத்தை யோசித்துப் பார்ப்பேன். இன்று என் வாழ்க்கை எவ்வளவு அருமையாக மாறியிருக்கிறது! இன்று நான் உயிரோடு மட்டும் இல்லை, ஒரு அழகான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடும் இருக்கிறேன். இந்தப் பூமி சீக்கிரத்தில் ஒரு பூஞ்சோலையாக மாறும்… அநியாயங்களே நடக்காத நீதியான ஒரு உலகமாக அது இருக்கும்… அங்கே ‘மரணம்கூட இருக்காது’! (வெளிப்படுத்துதல் 21:3, 4) அந்தக் காலத்துக்காகத்தான் நான் ஆசையோடு காத்திருக்கிறேன்.