Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரின் கேள்வி

மகனை பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் கடவுள் ஏன் கேட்டார்?

மகனை பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் கடவுள் ஏன் கேட்டார்?

▪ இந்தச் சம்பவத்தைப் பற்றி பைபிளில் ஆதியாகம புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 22:2) ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி யெகோவா தேவன் கேட்டதை சிலரால் ஜீரணிக்கவே முடிவதில்லை. பேராசிரியர் கேரல் சொல்கிறார்: “சின்ன வயசுல இந்தக் கதைய முதல் தடவ கேட்டப்போ எனக்கு கோபம் கோபமா வந்திச்சு. இப்படிக் கேட்கிறாரே, இவரெல்லாம் ஒரு கடவுளானு நெனச்சேன்.” மேலோட்டமாகப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றும். ஆனால், சில உண்மைகளை நாம் அலசிப் பார்க்க வேண்டும்.

முதலாவதாக, யெகோவா என்ன செய்யவில்லை என்று நாம் பார்க்கலாம். ஆபிரகாம் பலிகொடுக்கத் தயாராக இருந்தபோதிலும் யெகோவா அதைச் செய்ய விடவில்லை, அதற்குப் பின்பும்கூட யாரிடமும் அப்படிச் செய்யும்படி கேட்கவில்லை. தம்மை வழிபடுவோர் எல்லாரும், பிள்ளைகளும்கூட சந்தோஷமாக நீடூழி வாழ வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார்.

இரண்டாவதாக, ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் யெகோவா கேட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக பைபிள் சொல்கிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தம்முடைய சொந்த மகன் * இயேசுவை நமக்காகப் பலிகொடுக்கத் தீர்மானித்திருந்தார். (மத்தேயு 20:28) அது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்பினார். அதை நமக்குத் தத்ரூபமாக விளக்குவதற்காகவே ஆபிரகாமிடம் அப்படிக் கேட்டார். அதை எப்படி விளக்கினார்?

ஆபிரகாமிடம் யெகோவா சொன்னதைக் கவனியுங்கள்: “உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை . . . தகனபலியாகப் பலியிடு.” (ஆதியாகமம் 22:2) இங்கு ஈசாக்கை, ‘உன் நேச குமாரன்’ என்று யெகோவா குறிப்பிட்டதைப் பார்த்தீர்களா? ஈசாக்கின்மேல் ஆபிரகாம் உயிரையே வைத்திருந்தார் என்று யெகோவாவுக்குத் தெரியும். அதேபோல், தம் மகன் இயேசுமீதும் அவருக்கு அந்தளவு அன்பு இருந்தது. அதனால்தான், இயேசு பூமியில் இருந்தபோது, அவரை “என் அன்பு மகன்” என்று இரண்டு முறை பரலோகத்திலிருந்து சொன்னார்.—மாற்கு 1:11; 9:7.

ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி யெகோவா கேட்டபோது “தயவுசெய்து” என்ற அர்த்தத்தைத் தரும் ஓர் எபிரெய வார்த்தையைப் பயன்படுத்தினார். “பலிகொடுக்கும்படி கேட்பது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்துமென கடவுள் புரிந்திருந்தார்” என்பதை இந்த எபிரெய வார்த்தை காட்டுவதாக ஒரு பைபிள் அறிஞர் குறிப்பிடுகிறார். கடவுள் அப்படிக் கேட்டபோது ஆபிரகாம் எந்தளவு மன வேதனை அடைந்திருப்பார் என்று நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அது போலவே, தம்முடைய அன்பு மகன் துடிதுடித்து இறந்துபோவதைப் பார்த்து யெகோவாவின் மனம் எந்தளவு ரண வேதனைபட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்ய முடிகிறது, அல்லவா? அப்படியொரு ரண வேதனையை அதுவரை யெகோவா அனுபவித்திருக்க மாட்டார், இனியும் அனுபவிக்க மாட்டார்.

ஆகவே, ஆபிரகாமிடம் பலிகொடுக்கும்படி யெகோவா கேட்டது நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பலிகொடுக்க அவர் அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள். ஒரு அப்பாவாக, ஆபிரகாமுக்கு இது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை யெகோவா அறிந்திருந்தார். அதனால்தான், ஈசாக்கை பலியாகக் கொடுக்க அனுமதிக்கவில்லை. என்றாலும், தம் மகன் உயிரைக் கொடுக்க அனுமதித்தார்; ஆம், ‘தமது சொந்த மகனென்றும் பார்க்காமல் நம் எல்லாருக்காகவும் அவரைக் கொடுத்தார்.’ (ரோமர் 8:32) அது தமக்குத் தாங்க முடியாத வேதனையைத் தரும் என்று தெரிந்தபோதிலும் யெகோவா அதை ஏன் ஏற்றுக்கொண்டார்? ‘நாம் வாழ்வு பெறுவதற்காகவே.’ (1 யோவான் 4:9) இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போதெல்லாம் யெகோவா நம்மேல் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைத்துப் பார்க்கலாம். இதற்குக் கைமாறாக நாமும் அவருக்கு அன்பு காட்ட வேண்டாமா? * (w12-E 01/01)

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 5 தாம்பத்திய உறவின் மூலம் இயேசுவைக் கடவுள் பெற்றெடுத்ததாக பைபிள் சொல்வதில்லை. அவரைப் பரலோகத்தில் ஒரு தேவதூதராகப் படைத்தார். பிற்பாடு, பூமியில் கன்னியாக இருந்த மரியாளின் வயிற்றில் பிறக்கும்படி செய்தார். எனவே, இயேசுவைப் படைத்தவர் யெகோவா என்பதால் அவரைத் தம் மகன் என்று சொல்வதில் தவறில்லை.

^ பாரா. 8 இயேசுவின் மரணம் ஏன் மிக முக்கியம், அதற்கு நம் நன்றியை எப்படிக் காட்டலாம் என்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 5-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.