Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாருக்கும் நன்மையளிக்கும் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம்

எல்லாருக்கும் நன்மையளிக்கும் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம்

“நீங்களோ . . . ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், . . . விசேஷ சொத்தாகவும்’ இருக்கிறீர்கள்.”—1 பே. 2:9.

1. ‘எஜமானரின் இரவு விருந்து’ ஏன் நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிறது, அது ஏன் அனுசரிக்கப்படுகிறது?

 இயேசு கிறிஸ்துவும் 12 அப்போஸ்தலர்களும் கி.பி. 33, நிசான் 14 மாலைவேளையில் கடைசி தடவையாக பஸ்கா பண்டிகையை அனுசரித்தனர். துரோகி யூதாஸ் இஸ்காரியோத்தை அனுப்பிவிட்ட பிறகு, இயேசு வேறொரு அனுசரிப்பை அறிமுகப்படுத்தினார்; அதுதான் ‘எஜமானரின் இரவு விருந்து’ என பிற்பாடு அழைக்கப்பட்டது. (1 கொ. 11:20) “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என இயேசு இருமுறை கூறினார். அது, அவரது மரணத்தை வலியுறுத்தும் விதத்தில் நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிறது. (1 கொ. 11:24, 25) அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யெகோவாவின் சாட்சிகள் அதை வருடாவருடம் உலகெங்கிலும் அனுசரிக்கிறார்கள். யூத காலண்டரில் வரும் நிசான் 14-ம் தேதி, 2012-ஆம் ஆண்டில், ஏப்ரல் 5 வியாழக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப்பின் ஆரம்பமாகிறது.

2. இயேசு தாம் பயன்படுத்திய அடையாளச் சின்னங்களைப் பற்றி என்ன குறிப்பிட்டார்?

2 அந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு செய்ததையும் சொன்னதையும் இரண்டே வசனங்களில் லூக்கா சொல்கிறார்: “அவர், ரொட்டியை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுத்து, ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்’ என்றார். உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் கொடுத்து, ‘இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது’” என்றார். (லூக். 22:19, 20) இந்த வார்த்தைகளை அப்போஸ்தலர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?

3. அந்த அடையாளச் சின்னங்களின் அர்த்தத்தை அப்போஸ்தலர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?

3 அப்போஸ்தலர்கள் யூதர்களாய் இருந்ததால் எருசலேம் ஆலயத்தில் குருமார்கள் செலுத்திய மிருக பலிகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். யெகோவாவின் தயவைப் பெற இந்தப் பலிகள் செலுத்தப்பட்டன; இவற்றில் பல, பாவத்தைப் போக்குவதற்கு அடையாளமாக இருந்தன. (லேவி. 1:4; 22:17-29) ஆகவே, ‘உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடல்’ என்றும் ‘உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தம்’ என்றும் இயேசு சொன்னபோது தமது பரிபூரண உயிரையே பலியாகக் கொடுக்கவிருந்ததை அர்த்தப்படுத்தினார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டார்கள். அவரது பலி மிருக பலிகளைவிட மிகவும் மதிப்புவாய்ந்த பலி.

4. “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்று இயேசு சொன்னது எதை அர்த்தப்படுத்தியது?

4 “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்று இயேசு சொன்னது எதை அர்த்தப்படுத்தியது? புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தார்கள். (எரேமியா 31:31-33-ஐ வாசியுங்கள்.) மோசேயின் மூலம் இஸ்ரவேலருடன் யெகோவா செய்திருந்த திருச்சட்ட ஒப்பந்தத்திற்குப் பதிலாக இந்தப் புதிய ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டதை இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டின. இந்த இரு ஒப்பந்தங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருந்தனவா?

5. திருச்சட்ட ஒப்பந்தம் இஸ்ரவேலருக்கு என்ன எதிர்பார்ப்பை அளித்தது?

5 ஆம், அவற்றின் நோக்கங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய சம்பந்தமுடையவை. திருச்சட்ட ஒப்பந்தத்தை அறிமுகம் செய்தபோது இஸ்ரவேலரிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் [அதாவது, விசேஷ சொத்தாயிருப்பீர்கள்]; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய [அதாவது, குருமார்] ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத். 19:5, 6) இந்த வார்த்தைகள் இஸ்ரவேலருக்கு எதை அர்த்தப்படுத்தியிருக்கும்?

ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தைப் பற்றிய வாக்குறுதி

6. எந்த வாக்குறுதியை நிறைவேற்ற திருச்சட்ட ஒப்பந்தம் உதவியது?

6 ஒப்பந்தம் (அல்லது உடன்படிக்கை) என்ற வார்த்தையை இஸ்ரவேலர் புரிந்துகொண்டார்கள்; ஏனென்றால், ஏற்கெனவே அவர்களுடைய முன்னோர்களான நோவா மற்றும் ஆபிரகாமிடம் யெகோவா ஒப்பந்தங்கள் செய்திருந்தார். (ஆதி. 6:18; 9:8-17; 15:18; 17:1-9) ஆபிரகாமுடன் செய்த ஒப்பந்தத்தில், “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். (ஆதி. 22:18) இந்த வாக்குறுதியை நிறைவேற்ற யெகோவா திருச்சட்ட ஒப்பந்தத்தைச் செய்தார். இதன் அடிப்படையில், இஸ்ரவேலர் யெகோவாவுக்கு ‘சகல ஜனங்களிலும் விசேஷ சொத்தாய்’ ஆவதற்கு வாய்ப்பிருந்தது. என்ன நோக்கத்திற்காக? யெகோவாவுக்கு... ‘குருமார் ராஜ்யமாக இருப்பதற்காக.’

7. ‘குருமார் ராஜ்யம்’ என்பது எதை அர்த்தப்படுத்தியது?

7 ராஜாக்களைப் பற்றியும் குருமார்களைப் பற்றியும் இஸ்ரவேலர் அறிந்திருந்தார்கள், ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த மெல்கிசேதேக் மட்டும்தான் யெகோவாவின் அங்கீகாரத்துடன் ஒரேசமயத்தில் இந்த இரண்டு பொறுப்புகளையும் வகித்தார். (ஆதி. 14:18) பின்பு, ‘குருமார் ராஜ்யத்தை’ பிறப்பிக்கும் வாய்ப்பை இஸ்ரவேலருக்கு யெகோவா அளித்தார். அதாவது, பிற்பாடு வேதவசனங்கள் சுட்டிக்காட்டியபடி, ‘ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தை’... ஒரேசமயத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யும் கூட்டத்தை... பிறப்பிக்கும் வாய்ப்பை அளித்தார்.—1 பே. 2:9.

8. கடவுளால் நியமிக்கப்பட்ட குருமார்கள் என்ன சேவை செய்கிறார்கள்?

8 ராஜாக்கள் ஆட்சி செய்வார்கள் என்பது உண்மைதான். ஆனால், குருமார்கள் என்ன செய்வார்கள்? எபிரெயர் 5:1 இவ்வாறு விளக்குகிறது: “மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்; பாவங்களுக்காக அவர் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துகிறார்.” ஆகவே, யெகோவாவால் நியமிக்கப்பட்ட குருமார்கள் கடவுளின் முன்னிலையில் பாவமுள்ள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்; அந்த மக்களுக்காகப் பலிகள் செலுத்தி கடவுளிடம் மன்றாடுகிறார்கள். அதேசமயத்தில், மக்களின் முன்னிலையில் யெகோவாவை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்; கடவுளுடைய சட்டங்களை மக்களுக்குப் போதிக்கிறார்கள். (லேவி. 10:8-11; மல். 2:7) இவ்வாறு, கடவுளோடு மக்கள் சமரசமாவதற்குக் குருமார்கள் துணைபுரிகிறார்கள்.

9. (அ) எந்த நிபந்தனையின்கீழ் இஸ்ரவேலர் ‘குருமார் ராஜ்யமாக’ ஆக முடிந்தது? (ஆ) இஸ்ரவேலர் மத்தியிலேயே சிலரை ஏன் யெகோவா குருமார்களாக நியமித்தார்? (இ) திருச்சட்ட ஒப்பந்தத்தின்கீழ் ஏன் இஸ்ரவேலரால் ‘குருமார் ராஜ்யமாக’ சேவை செய்ய முடியவில்லை?

9 ‘சகல ஜனங்களுக்கும்’ நன்மை அளிக்கப்போகும் குருமார் ராஜ்யத்தைப் பிறப்பிக்கிற வாய்ப்பை இஸ்ரவேலருக்குத் திருச்சட்டம் அளித்தது. ஆனால், இந்த அற்புதமான வாய்ப்பு ஒரு நிபந்தனையுடன் கொடுக்கப்பட்டது; அதாவது, “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால்” இந்த வாய்ப்பைப் பெறுவீர்கள் என கடவுள் சொன்னார். இஸ்ரவேலரால் யெகோவா சொன்னதையெல்லாம் ‘உள்ளபடியே கேட்டு’ நடக்க முடிந்ததா? ஓரளவுக்கு முடிந்தது. ஆனால், முழுமையாகக் கேட்டு நடக்க முடியவில்லை. (ரோ. 3:19, 20) அதனால்தான், இஸ்ரவேலர் மத்தியிலேயே சிலரைக் குருமார்களாக யெகோவா நியமித்தார்; அவர்கள் ராஜாக்களாகச் சேவிக்கவில்லை; இஸ்ரவேலர் செய்த பாவங்களுக்கு அவர்கள் மிருக பலிகளைச் செலுத்தினார்கள். (லேவி. 4:1–6:7) இந்தப் பாவங்களில் குருமார்கள் செய்த பாவங்களும் அடங்கின. (எபி. 5:1-3; 8:3) செலுத்தப்பட்ட பலிகளை யெகோவா ஏற்றுக்கொண்டார், ஆனால் இஸ்ரவேலரின் பாவங்களை இவை முழுமையாகப் போக்க முடியவில்லை. திருச்சட்டத்தின்கீழ் சேவைசெய்த குருமார்களால் உண்மையுள்ள இஸ்ரவேலரையும்கூட கடவுளிடம் முழுமையாகச் சமரசமாக்க முடியவில்லை. அதனால்தான், “காளை, வெள்ளாடு ஆகியவற்றின் இரத்தம் பாவங்களை நீக்க முடியாது” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபி. 10:1-4) இஸ்ரவேலர் திருச்சட்டத்தை மீறியதால், சாபத்திற்குள்ளானார்கள். (கலா. 3:10) இப்படிப்பட்ட நிலையில் அவர்களால் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாக மக்களுக்குச் சேவை செய்ய முடியவில்லை.

10. திருச்சட்ட ஒப்பந்தம் என்ன நோக்கத்தை நிறைவேற்றியது?

10 அப்படியானால், அவர்கள் ‘குருமார் ராஜ்யமாக’ ஆவார்கள் என்று யெகோவா கொடுத்த வாக்குறுதி பொய்யானதா? இல்லவே இல்லை. அவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படிந்து நடக்க முயன்றிருந்தால் இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள், ஆனால் திருச்சட்டத்தின்கீழ் அல்ல. ஏன்? (கலாத்தியர் 3:19-25-ஐ வாசியுங்கள்.) இதைப் புரிந்துகொள்ள திருச்சட்டத்தின் நோக்கத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். திருச்சட்டம், கீழ்ப்படிதலுள்ள இஸ்ரவேலரைப் பொய் வணக்கத்திலிருந்து பாதுகாத்தது. அதோடு, அவர்களுடைய மீறுதல்களை உணர்த்தியது; தலைமைக் குரு செலுத்திய பலியைவிட மேம்பட்ட பலியைச் செலுத்துவதன் அவசியத்தையும் உணர்த்தியது. மேசியாவிடம் (அபிஷேகம் செய்யப்பட்டவரிடம்) வழிநடத்திச் செல்லும் ஆசானாக அது இருந்தது. என்றாலும், மேசியா வந்தபோது, எரேமியா முன்னறிவித்த புதிய ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தினார். அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அந்தப் புதிய ஒப்பந்தத்திற்குள் வரும் அழைப்பைப் பெற்றார்கள், அவர்கள் பிற்பாடு ‘குருமார் ராஜ்யமாக’ ஆகவிருந்தார்கள். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

புதிய ஒப்பந்தம் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தைப் பிறப்பிக்கிறது

11. ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம் உருவாவதற்கு இயேசு எப்படி வழிவகுத்தார்?

11 கி.பி. 29-ல், நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசு மேசியாவாக ஆனார். சுமார் 30 வயதில், அவருக்காக யெகோவா வைத்திருந்த விசேஷ நோக்கத்தைச் செய்ய தம்மையே அர்ப்பணித்தார்; அதை ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் காட்டினார். யெகோவா அவரை “என் அன்பு மகன்” என்று சொல்லி அபிஷேகம் செய்தார்; எண்ணெய்யால் அல்ல, தமது சக்தியால் அபிஷேகம் செய்தார். (மத். 3:13-17; அப். 10:38) இவ்வாறு, விசுவாசம் வைக்கிற முழு மனிதகுலத்திற்கும் தலைமைக் குருவாகவும் வருங்கால ராஜாவாகவும் இயேசு நியமிக்கப்பட்டார். (எபி. 1:8, 9; 5:5, 6) அவரே உண்மையான ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம் உருவாவதற்கு வழிவகுத்தார்.

12. இயேசுவின் பலி எதைச் சாத்தியமாக்கியது?

12 மனிதர் வழிவழியாய்ப் பெற்றிருக்கிற பாவத்தை அடியோடு ஒழிப்பதற்கு என்ன பலியைத் தலைமைக் குருவான இயேசு செலுத்தினார்? தமது நினைவுநாள் அனுசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது சுட்டிக்காட்டியபடி, தமது பரிபூரண மானிட உயிரையே பலியாகச் செலுத்தினார். (எபிரெயர் 9:11, 12-ஐ வாசியுங்கள்.) கி.பி. 29-ல் ஞானஸ்நானம் எடுத்ததுமுதல் மரணம்வரை, தலைமைக் குருவான இயேசு சோதனைகளுக்கும் பயிற்சிகளுக்கும் தம்மைக் கீழ்ப்படுத்தினார். (எபி. 4:15; 5:7-10) உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, பரலோகத்திற்குச் சென்று யெகோவாவிடம் தமது பலியின் மதிப்பைச் சமர்ப்பித்தார். (எபி. 9:24) அதன் பின்பு, தமது பலியில் விசுவாசம் வைப்பவர்களின் சார்பாக யெகோவாவிடம் அவரால் மன்றாட முடிந்தது; அதோடு, முடிவில்லா வாழ்வைப் பெறும் நம்பிக்கையோடு கடவுளுக்குச் சேவை செய்ய அவர்களுக்கு உதவி அளிக்கவும் முடிந்தது. (எபி. 7:25) அவரது பலி புதிய ஒப்பந்தத்தைச் சட்டப்படி செல்லத்தக்கதாய் ஆக்கியது.—எபி. 8:6; 9:15.

13. புதிய ஒப்பந்தத்திற்குள் வரும் அழைப்பைப் பெற்றவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருந்தன?

13 புதிய ஒப்பந்தத்திற்குள் வரும் அழைப்பைப் பெற்றவர்களும் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படவிருந்தார்கள். (2 கொ. 1:21) உண்மையுள்ள யூதர்களும் பிற்பாடு புறதேசத்தாரும் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (எபே. 3:5, 6) அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருந்தன? அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு முழுமையான மன்னிப்பைப் பெறவிருந்தார்கள். “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” என்று யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். (எரே. 31:34) அவர்களுடைய பாவங்கள் சட்டப்படி ரத்து செய்யப்படவிருந்ததால் ‘குருமார் ராஜ்யமாகும்’ வாய்ப்பைப் பெறவிருந்தார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்களோ இருளிலிருந்து தமது அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருடைய விசேஷ சொத்தாகவும்’ இருக்கிறீர்கள்.” (1 பே. 2:9) திருச்சட்டத்தை அறிமுகம் செய்தபோது யெகோவா இஸ்ரவேலருக்குச் சொன்ன வார்த்தைகளை பேதுரு இங்கே மேற்கோள் காட்டி, புதிய ஒப்பந்தத்திற்குள் வரும் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தினார்.—யாத். 19:5, 6.

எல்லாருக்கும் நன்மையளிக்கும் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம்

14. ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் எங்கே சேவை செய்வார்கள்?

14 புதிய ஒப்பந்தத்திற்குள் வருபவர்கள் எங்கே சேவை செய்வார்கள்? பூமியில், ஒரு தொகுதியாக, குருமார் கூட்டமாய்ச் சேவை செய்வார்கள்; யெகோவாவின் ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதன்’ மூலமும் ஆன்மீக உணவை வழங்குவதன் மூலமும் மக்கள் முன்னிலையில் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். (மத். 24:45; 1 பே. 2:4, 5) அவர்கள் இறந்து உயிர்த்தெழுந்த பின்பு, பரலோகத்தில் இயேசுவுடன் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்வார்கள்; ஆம், இந்த இரு பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்றுவார்கள். (லூக். 22:29; 1 பே. 1:3-5; வெளி. 1:6) இதை உறுதிப்படுத்தும் விதமாக, பரலோகத்தில் யெகோவாவின் சிம்மாசனத்திற்கு அருகே எண்ணற்ற ஜீவன்கள் இருப்பதை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். “ஆட்டுக்குட்டியானவருக்கு” பாடப்பட்ட “புதுப்பாட்டை” அவர்கள் இவ்வாறு பாடினார்கள்: “உங்களுடைய இரத்தத்தினால் எல்லாக் கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்களிலிருந்து ஆட்களைக் கடவுளுக்காக விலைகொடுத்து வாங்கினீர்கள். அவர்களை ராஜாக்களாகவும் நம்முடைய கடவுளுக்குச் சேவை செய்கிற குருமார்களாகவும் நியமித்தீர்கள்; அவர்கள் ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்.” (வெளி. 5:8-10) பிற்பாடு கண்ட தரிசனத்தில், இந்த ராஜாக்களைப் பற்றி யோவான் இவ்வாறு கூறுகிறார்: “இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாயிருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.” (வெளி. 20:6) கிறிஸ்துவோடு சேர்ந்து முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்க அவர்கள் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகச் சேவை செய்வார்கள்.

15, 16. ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் மனிதகுலத்திற்கு என்னென்ன நன்மைகளை வழங்குவார்கள்?

15 பூமியில் இருப்பவர்களுக்கு அந்த 1,44,000 பேர் என்னென்ன நன்மைகளை வழங்குவார்கள்? வெளிப்படுத்துதல் 21-ஆம் அதிகாரம் அவர்களைப் பரலோக நகரமாகிய புதிய எருசலேமாகச் சித்தரிக்கிறது, “ஆட்டுக்குட்டியானவரின் மனைவி” என அழைக்கிறது. (வெளி. 21:9) 2 முதல் 4 வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன: “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்; அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது. அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, ‘இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்’ என்று சொல்வதைக் கேட்டேன்.” எப்பேர்ப்பட்ட அருமையான ஆசீர்வாதங்கள்! கண்ணீருக்கும் துக்கத்திற்கும் அழுகைக்கும் வேதனைக்கும் முக்கியக் காரணமாய் விளங்கும் மரணம் ஒழிக்கப்படும். உண்மையுள்ள மனிதர்கள் பரிபூரணத்தை அடைந்து கடவுளோடு முழுமையாய்ச் சமரசமாவார்கள்.

16 ராஜ அதிகாரமுள்ள இந்தக் குருமார் கூட்டத்தார் பொழியப்போகும் ஆசிகளைப் பற்றி வெளிப்படுத்துதல் 22:1, 2 கூடுதலாக இவ்வாறு விவரிக்கிறது: “வாழ்வளிக்கும் தண்ணீருள்ள நதியை அவர் எனக்குக் காண்பித்தார்; அது பளிங்குபோல் பளபளத்தது; கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவருடைய சிம்மாசனத்திலிருந்தும் அது புறப்பட்டு, [புதிய எருசலேம்] நகரத்துப் பெருவீதியின் மத்தியில் பாய்ந்தோடியது; நதியின் இரு பக்கங்களிலும் வாழ்வளிக்கும் மரங்கள் இருந்தன; அவை மாதத்திற்கு ஒருமுறை என வருடத்திற்குப் பன்னிரண்டு முறை கனி கொடுத்தன; அவற்றின் இலைகள் தேசத்தார் குணமாவதற்கு உதவின.” அடையாள அர்த்தமுடைய இந்த ஏற்பாடுகளால் “தேசத்தார்,” அதாவது மனித குடும்பத்தார், ஆதாமிடமிருந்து பெற்ற அபூரணத்திலிருந்து முழுமையாய்க் குணமடைவார்கள். உண்மையிலேயே, “முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”

ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் தங்கள் வேலையை முடிக்கிறார்கள்

17. ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் கடைசியில் எதை நிறைவேற்றியிருப்பார்கள்?

17 நன்மை பயக்கும் ஆயிரவருட சேவையின் முடிவில், ராஜ அதிகாரமுள்ள அந்தக் குருமார் கூட்டத்தார் பூமிக்குரிய குடிமக்களைப் பரிபூரண நிலைக்கு உயர்த்தியிருப்பார்கள். தலைமைக் குருவாகவும் ராஜாவாகவும் சேவை செய்யும் கிறிஸ்து, முழுக்க முழுக்கப் பரிபூரணத்தை அடைந்த மனித குடும்பத்தாரை யெகோவாவிடம் சமர்ப்பிப்பார். (1 கொரிந்தியர் 15:22-26-ஐ வாசியுங்கள்.) ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் தங்கள் வேலையை முழுமையாக நிறைவேற்றியிருப்பார்கள்.

18. ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் தங்கள் வேலையை முடித்தபின், யெகோவா அவர்களை எப்படிப் பயன்படுத்துவார்?

18 அதன் பின்பு, உன்னதமான பாக்கியத்தைப் பெற்ற கிறிஸ்துவின் இந்தத் தோழர்களை யெகோவா எப்படிப் பயன்படுத்துவார்? “அவர்கள் என்றென்றும் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்” என்று வெளிப்படுத்துதல் 22:5 கூறுகிறது. யார்மீது ஆட்சி செய்வார்கள்? பைபிள் இதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஆனால், அவர்கள் அனுபவிக்கும் மேன்மையான வாழ்வும் அபூரண மக்களுக்கு உதவிய அனுபவமும், யெகோவாவின் நோக்கத்தில் என்றென்றும் ராஜரீக ஸ்தானத்தை வகிக்க அவர்களுக்குத் தகுதியளிக்கும்.

19. நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொள்வோருக்கு எது நினைப்பூட்டப்படும்?

19 நாம் 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 5, வியாழக்கிழமை அன்று இயேசுவின் நினைவுநாளை அனுசரிக்க ஒன்றுகூடி வரும்போது இந்த பைபிள் போதனைகள் நம் மனதில் இருக்கும். இப்போது பூமியில் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், அடையாளச் சின்னங்களான புளிப்பில்லா ரொட்டியிலும் சிகப்பு திராட்சைமதுவிலும் பங்கெடுப்பார்கள்; அதன் மூலம், புதிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதை அடையாளப்படுத்திக் காட்டுவார்கள். கிறிஸ்துவின் பலியைக் குறித்துக்காட்டுகிற இந்தச் சின்னங்கள் கடவுளுடைய நித்திய நோக்கத்தில் அவர்கள் அனுபவிக்கப்போகும் அருமையான பாக்கியங்களையும், வகிக்கப்போகும் பொறுப்புகளையும் அவர்களுக்கு நினைப்பூட்டும். முழு மனிதகுலமும் பயனடைய ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தாரை யெகோவா ஏற்பாடு செய்திருப்பதற்காக ஆழ்ந்த நன்றியைக் காட்ட நாம் அனைவரும் நினைவுநாளன்று ஒன்றுகூடி வருவோமாக.

[கேள்விகள்]

[பக்கம் 29-ன் படம்]

ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் மனிதகுலத்திற்கு நிரந்தர நன்மைகளை வழங்குவார்கள்